ஸ்கெட்ச்



‘‘ரவுண்ட்ஸ்ல இருக்கிற ஆறு செக்யூரிட்டிகளையும் மயக்க வைக்க வேண்டியது  உன் பொறுப்பு, ரத்னம்!’’ என்றான் நாகராஜ். ‘‘யெஸ் பாஸ்!’’ ‘‘பத்து நிமிஷத்துல பூட்டைத் திறக்கிறது, கன்னையா உன்னோட வேலை!’’ ‘‘சரிங்க பாஸ்!’’ நாகராஜிடம் லேசான பதற்றம் தெரிந்தது. இருபது வருடத் தொழில் அனுபவம்... பிளாக் டிக்கெட், பிக் பாக்கெட், பைக் திருட்டு, வழிப்பறி, கடைகளை உடைத்துத் திருடுவது என்று படிப்படியாக முன்னேறி இப்போது சிட்டியிலேயே மிகப் பெரிய தனியார் வங்கிக் கொள்ளைக்கு ரெடி!

ஸ்கெட்ச் போட்ட கையோடு கூட்டாளிகளுக்கு திட்டத்தை விளக்கினான் நாகராஜ். ‘‘என்ட்ரன்ஸ்ல நாலு சிசிடிவி கேமராக்கள் இருக்கு... மேனேஜர் ரூம்ல இரண்டு... அசிஸ்டென்ட் மேனேஜர் ரூம்ல இரண்டு... கஸ்டமர் வெயிட்டிங் ஹால்ல எட்டு... பத்து கேஷ் கவுன்டர் கேபின்லயும் ஒவ்வொரு கேமரா இருக்கு... கேஷ் லாக்கர் ரூம்ல பன்னிரண்டு... ஜுவல்ஸ் லாக்கர் ரூம்ல பதினைந்துன்னு மொத்தம் 53 கேமரா. எட்டு ஃப்ளோர்லயும் சேர்த்து தோராயமா 250க்கும் மேல இருக்கும்!’’

இந்த எண்ணிக்கை, கூட்டாளிகளையும் மிரட்சியடைய வைத்தது. ஆனால் அரை மணி நேர விளக்கத்திற்குப் பிறகு திட்டம் தெளிவானதும், அன்றிரவே செயலிலும் இறங்கி ஸ்கெட்ச் போட்டபடி முடித்தார்கள். மறுநாள் டி.வி. செய்தியில்... ‘பிரபல தனியார் வங்கியில் கொள்ளையர்கள் கைவரிசை... சுமார் 250க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி கேமராக்கள் திருடப்பட்டன...’  
                           

-யுவகிருஷ்ணா