உயிரமுது



தமிழர் உணவுகளின் உன்னத சுவை

ராஜமுருகன் - 8

நம் உடல் ஒரு கோயில். நல்ல உணவுதான் அதை அலங்கரிக்கும். உணவுமுறை  சரியாக இருந்தால் உடலும் மனசும்  நன்றாக இருக்கும். இன்று உணவுமுறை, வாழ்வியல், மருத்துவ முறை என அனைத்தும் எதிரும் புதிருமாக வாட்ஸ்அப் மெசேஜ் போல ஓடிக்கொண்டிருக்கின்றன. அதனால் இளம் வயதிலேயே நோய்களினால் மரணிப்பவர்களை தினந்தோறும் பார்க்கிறோம். நம் காலத்தின் சாபம் இது. 

நம்முடைய பாட்டனும், பூட்டனும் இப்படி இல்லை. அதனால்தான் அவர்கள்  தலைமுறை தாண்டி எள்ளுப்பேரன் காலம் வரை ஆரோக்கியமாக வாழ்ந்தனர். இதற்கு அவர்கள் கையாண்ட மருத்துவ முறையும் ஒரு காரணம்.  கைவைத்தியம் நோயின் வேரைப் பிடுங்கி அதை மீண்டும் உருவாகாமல் அழித்து விடுகிறது. அதனால்தான் அவர்களிடம் ஆரோக்கியம் நிரந்தரமாக இருந்தது. 

அஞ்சறைப் பெட்டியும், வீட்டைச் சுற்றியும் முளைக்கும் மூலிகைச் செடிகளும்தான் அவர்களுக்கு பயோ-கெமிஸ்ட்ரி லேப். அதிலிருந்துதான் மருந்துகளையும், உணவுகளையும் செய்து கொண்டனர். மழை நாட்களில் ஜலதோஷம் வந்தால், உடலில் உள்ள கழிவு வெளியேறுவதை உறுதி செய்து அப்படியே விட்டுவிடுவார்கள். எப்போது அந்த சளி தொல்லையாக மாறுகிறதோ அந்த நேரத்தில் மட்டும்தான் அதைக்  குணமாக்க முயற்சி எடுப்பார்கள். 

பசும்பாலில் மஞ்சள், மிளகுத் தூள், சுக்குத் தூள், பனங்கற்கண்டு கலந்து இரவு உணவுக்குப்பின் குடிப்பார்கள். இது சளியை இளக்கி வெளியேற்றி விடும். இந்தப் பாலுக்கும் பயப்படாத நெஞ்சு சளியை கொள்ளு ரசம், தூதுவளை ரசத்தைக் குடித்து விரட்டியடிப்பார்கள். அப்படியும் குணமாகவில்லை என்றால், கற்பூரவல்லி இலைச்சாறு, துளசி இலைச்சாறு, வெற்றிலைச்சாறு, தேன் இவற்றை  சம பங்காக எடுத்துக் கலந்து நான்கு தேக்கரண்டி குடிப்பார்கள். சளி இருந்த இடம் தெரியாமல் ஓடியே போய்விடும்.

ஜலதோஷத்தால் வரும் இருமலுக்கு முதல் கைவைத்தியம், சுடுதண்ணீர் குடிப்பதுதான். அப்படியும் இருமல் குறையவில்லையெனில் மிளகுத் தூளை தேனில் கலந்து சிறிது சிறிதாகக் குடிக்க, இருமல் சில நிமிடங்களில் நின்றுவிடும். நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக உள்ளவர்களுக்கு, ஜலதோஷத்துடன் கூடவே தலைவலியும் வருவது சர்வ சாதாரணம்.

அதற்கு தைலங்களைத் தொடர்ந்து தடவும்போது நெற்றி யில் உள்ள சிறு நரம்புகள் பாதிக்கப்படும், அதுமட்டுமல்லாமல் அதுவே ஒரு போதை போல நம்மை அடிமையாக்கிவிடும். வலி பொறுக்க முடியாமல் எடுத்துக்கொள்ளும்  வலி நிவாரண மாத்திரைகள் பக்க விளைவுகளைப் பக்கம் பக்கமாக ஏற்படுத்தும். சிறுநீர் எரிச்சல், சிறுநீர்ப்பை கல், வயிற்று எரிச்சல், வயிற்றுப்புண், உணவுக்குழாய் பாதிப்பு என வரிசையாக உடல் ஆரோக்கியம் பறிபோகும்.

இதற்கு மாற்றாக தண்ணீரில் இரண்டு சிட்டிகை பச்சை கற்பூரத்தைச் சேர்த்துக் கொதிக்க வைத்து, அதில் ஆவி பிடிக்கலாம். நொச்சி இலையைச் சேர்த்துக் கொதிக்க வைத்தும் ஆவி பிடிக்கலாம். இவையே எளிதாகத் தலைவலியை விரட்டியடிக்கும் மந்திரங்களாகும். சிலருக்கு முடி உதிர்ந்து நெற்றி ஏறிக்கொண்டே செல்லும். உடல் சூடு, ஹார்மோன் சுரப்புகளின் மாற்றம், அதிகமான மன அழுத்தம் போன்றவைதான் முடி கொட்ட முக்கியக் காரணம். 

எண்ணெய்க் குளியல், இரவு நல்ல தூக்கம், மன அமைதி இதெல்லாம் உடல் சூட்டைக் குறைக்கும். இதுபோக சுண்ணாம்புச்சத்து பற்றாக்குறை இருந்தாலும் முடி கொட்டும். கேழ்வரகு, பிரண்டை, கம்பு, கருவேப்பிலை, முடக்கத்தான் என உணவில் மாற்றம் செய்யலாம். மன அழுத்தத்தினாலும் உடலில் சுரக்கும் ஹார்மோன்கள் மாற்றம் அடையும். அதனாலும் முடி வேருடன் உதிரும். வேலை, பணம் இவை இரண்டையும் மட்டுமே வாழ்க்கையாகப் பாவிக்காமல், உடல் ஆரோக்கியம், குடும்பம், குழந்தை, சந்தோஷம் என வாழ்க்கையின் மற்றொரு பக்கத்தையும் பார்க்க வேண்டும்.

சிலருக்கு நடுத் தலையிலும், காது ஓரமாகவும் வட்டமாக முடி இருக்காது, தொட்டுப் பார்த்தால் மிக மென்மையாக இருக்கும். இதை ‘புழுவெட்டு’ என்பார்கள். இதைக் குறைக்க சின்ன வெங்காயச் சாற்றைத் தொடர்ந்து தடவி வந்தாலே போதும். அதற்கும் மாறாத புழுவெட்டை, சின்ன வெங்காயச் சாற்றுடன், கடுக்காய் தோலை உரசி வரும் விழுதைக் கலந்து அந்த இடத்தில் தடவ வேண்டும்.

கண்டதையும் தின்பது உடலைக் குழப்பும். எந்த எண்ணெயில் பொரிக்கிறோம் என்று சமைப்பவருக்கும் தெரியாது; எதில் வேகிறோம் என்று பலகாரத்திற்கும் தெரியாது. எதைச் சாப்பிடுகிறோம் என நமக்கும் தெரியாது. இப்படித்தான் நம் உணவுமுறை இருக்கிறது. இம்மாதிரியான எண்ணெய்கள்தான் இளநரைக்கு முக்கியக் காரணம். இதுபோன்ற தவறான வாழ்வியல் முறைகள்தான் இளமையிலேயே முதுமைத் தோற்றத்துக்கு ‘வெல்கம்’ சொல்கிறது.

காய்ச்சல் கணிசமாக எல்லோருக்கும் வரும் தொந்தரவுதான். உடல் சற்று வெதுவெதுப்பானதும்  ஆஸ்பத்திரிக்குப் போய் அரை டஜன் டெஸ்ட் எடுத்துக்கொண்டு ஆன்டிபயாடிக்கை குத்துவது என உடலில் போர்க்களமே நடக்கிறது. காய்ச்சல் என்பது நோய் இல்லை. உடலின் உட்புகுந்திருக்கும் கழிவுகளை நம் உடல் நீக்குகிறது. அதாவது தேவையற்ற கிருமியை நீக்குவதாகும். அப்போது ஏற்படும் உடல்சூட்டுக்கு நாம்  பயப்பட வேண்டியதில்லை.

‘அப்போ சிக்குன் குன்யா, மட்டன் குன்யா, டைஃபாய்டு என வரும் காய்ச்சல்களுக்கு என்ன செய்வது?’ எனக் கேட்பவர்களுக்கு பதில்... ‘நம் உடலில் நோய் எதிர்ப்பாற்றல் இல்லாமைதான் இந்த எல்லா பிரச்னைகளுக்கும் ஆதாரமான காரணம்’. இம்மாதிரியான தொற்றுக் காய்ச்சல் அனைவருக்கும் வருவதில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

மன அழுத்தம் இல்லாமல்... ஆரோக்கியமான, கலப்படமற்ற, நஞ்சற்ற உணவைப் பசி நேரத்தில் நன்கு மென்று தின்று... இரவு நேரத்தில் நன்கு தூங்கி... தினமும் கழிவுகளை வெளியேற்றும் கடன்களை இயல்பாகச் செய்து வாழ்கிறவர்களுக்கு நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும். இவர்களை எந்த நோயும் நெருங்குவதில்லை. நமக்குப் புதிதாக எந்த நோயும் வருவதில்லை. நாம்தான் புதிதாக நோய்களை உருவாக்கிக்கொள்கிறோம்.

(பருகுவோம்...)

ஆப்பிளில் மெழுகு தடவியுள்ளது, கெமிக்கலில் முட்டைக்கோஸ் செய்கிறார்கள், குளிர்பானத்தில் தேள், பழச்சாற்றில் கரப்பான் பூச்சி, சிக்கனில் புழு எனப் பல வீடியோக்கள் இப்போது வாட்ஸ்அப்பில்  உலவிக் கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் பார்த்து ஆச்சரிய ரீயாக்‌ஷன் கொடுக்கிறோம். ஆனால், அவற்றையே விரும்பிச் சாப்பிடுகிறோம். விளாம்பழத்தில் மெழுகு கிடையாது. இலந்தையில் பிளாஸ்டிக் கிடையாது. இளநீரில் கெமிக்கல் கிடையாது. இருந்தும், தெரிந்தும் நாம் மாறுவதில்லை.

முருங்கைப் பூ குழம்பு

தேவையானவை:

உலர்ந்த முருங்கைப் பூ - 1 கைப்பிடி
இஞ்சி - 30 கிராம்
பூண்டு - 1 பல்
பச்சைப் பயறு - 30 கிராம்
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
பெருங்காயம் - 1 சிட்டிகை
கொத்தமல்லி விதை - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
நெய் - 4 தேக்கரண்டி

செய்முறை:

பச்சைப் பயறை மிதமான சூட்டில் மணம் வரும் வரை வறுக்கவும். தோல் நீக்கிய இஞ்சி, பூண்டு, சீரகம், மிளகு, மஞ்சள் தூள், பெருங்காயம், உப்பு, கொத்தமல்லி விதை, வறுத்த பச்சைப் பயறு என அனைத்தையும் அரைத்துத் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பச்சை வாசனை போன பிறகு முருங்கைப் பூவை நெய்யில் பொன்னிறமாக வறுத்துக் குழம்பில் சேர்த்துக் கொதிக்க விடவும். 

தேவையெனில் சிறிதளவு எலுமிச்சை சாறும் வெல்லமும் சேர்க்கலாம். உடல் வலிமையைத் தரும்  முருங்கைப் பூ குழம்பு ரெடி. இதில் இரும்புச்சத்தும், புரதச்சத்தும் நிறைந்துள்ளது.  உடலுக்கு குளிர்ச்சி தரும். இதனால் தலைவலி, முடி உதிர்வு சரியாகும். குழந்தைகள் முதல்  பெரியவர்கள் வரை  அனைவரும் விரும்பிச் சாப்பிடலாம்.