சென்னை 600028 - II விமர்சனம்



உள்ளூர் கிரிக்கெட், அதே ‘சென்னை-600028’ பட ‘இளைஞர்கள்’(!), அவர்களின் அரட்டை, மேட்ச், காதல்... இவையே ‘சென்னை -600028 II’. தமிழ் சினிமாவின் வழக்கமான பயணத்தை சற்றே மாற்றிக் காட்டிய வெங்கட்பிரபு அண்ட் கோ மீண்டும் களமிறங்கியிருக்கிறார்கள். சார்க்ஸ் அணியினர்... அச்சு அசல் அதே குழுதான். ஆனால், அப்போது யூத் குருப்ஸ்.

இப்போது திருமணம் ஆகி அவ்வளவாக பொறுப்பில்லாத குடும்பஸ்தர்கள். அவ்வப்போது மனைவியிடம் திட்டு வாங்கிக்கொண்டு மிக அரிதாக கிரிக்கெட் விளையாடுகிறார்கள். அவர்களின் குழுவில் இன்னமும் ஜெய்யும், பிரேம்ஜியும்தான் பேச்சுலர்ஸ். ஜெய்யின் காதல் திருமணத்திற்கு இரண்டு தரப்பும் கடுமையான சமாதானத்திற்குப் பிறகு பச்சைக் கொடி காட்ட, தேனிக்கு கூட்டமாக கல்யாண நிச்சயத்திற்கு பயணம் ஆகிறார்கள். அங்கேயும் உள்ளூர் கிரிக்கெட். ஜெய் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம்.

திருமணத்தில் குளறுபடி. ‘சார்க்ஸ் அணி ெஜயிப்பார்களா, இல்லையா?’ என்பதுதான் ஜாலி கேலி கலந்த க்ளைமேக்ஸ். பத்து வருடங்களுக்கு முன்பிருந்த ஹீரோ, ஹீரோயின்களை அப்படியே சேர்த்து இறக்கி அதே குழுவை உண்டாக்கியதோடு, அதே கலாட்டா பேக்ரவுண்டை நிலை நிறுத்துவதே மிகப் பெரிய சவால். அந்த வகையில் வெங்கட்பிரபுவிற்கு வெரிகுட்! சின்னச் சின்ன டீடெய்ல்களில் கூட பார்த்துப் பார்த்துக் காட்சிப்படுத்திய அழகிற்கும் சபாஷ்.

மிர்ச்சி சிவா, ஜெய், வைபவ், நிதின் சத்யா, விஜய் வசந்த், அரவிந்த் ஆகாஷ், இனிகோ, மகத், விஜயலட்சுமி, மகேஸ்வரி (உஸ்... அப்பாடா!) என அனைவரையும் ஏற்ற விதத்தில் பயன்படுத்துவதே மாஸ். கதை ஒருவரிடமே தேங்கி நிற்காமல், உடனே அடுத்தடுத்து மற்றவர்களும் பார்வைக்கு வந்துவிடுகிறார்கள்.

சிவா வழக்கமான அலட்டலே இல்லாத அசால்ட் காமெடி. முகநூல், யூ டியூப் விமர்சனங்கள் பற்றிய ட்ரெண்டிங், டைமிங் காமெடிக்கு அரங்கம் அதிர்கிறது. ஒவ்வொரு படத்தையும் பழைய படங்களோடு ஒப்பிட்டு, ‘‘தெரிந்து போச்சு... இது ‘ஹேங்ஓவர்’ படம்தான். என்ன ெவங்கட் பிரபு... copy catஆ? ஓடிப்போய் கல்யாணமா, அப்போ ‘அலை பாயுதே’ காப்பியா?’’ என ஆங்காங்கே சிவா, தன்னையும் சேர்த்துக் கலாய்ப்பது எல்லாம் சிரிப்பு சரவெடி.

படத்தில் வருகிற மேட்ச்களுக்கெல்லாம் நிமிர்ந்து உட்கார வைக்கும் சாதுர்யம், சுவாரஸ்யம் களைகட்டுகிறது. மேட்ச்சில் ஒவ்வொரு அசைவிலும் ஜோக்கும், த்ரில்லும், பரபரப்பும் புதைந்து அசர அடிக்கிறது கிரிக்கெட் கூட்டணி. ஜெய்யை கொஞ்சம் முன்னிலைப்படுத்தினாலும், வந்த வரைக்கும் ஞாபகத்தில் நிற்கிறார். அவர் ஜோடி சனா சில கோணங்களில் பிரமிக்க வைக்கிறார். ‘முதல் பார்ட்’டில் குட்டிப் பசங்களிடம் ேதாற்று வைக்க, இதில் அதே பையன்கள் சிரித்து வளர்ந்தபடி வருவதெல்லாம் க்யூட்! சலூன் ைவத்திருக்கும் இளவரசு, இன்னமும் தொடர்வது சமூக அணுக்கம்! அடடே!

ஆனாலும் முதல் பாகத்தில் பார்த்த இன்னொசென்ஸ் சற்றே மிஸ்ஸிங். முடிந்தவரைக்கும் டபுள் மீனிங் தராதது நன்று. நண்பனை கிரவுண்டில் கழற்றிவிட்டுவிட்டு எஸ்கேப் ஆவது தர்மம்தானா! உள்ளூர் கிரிக்கெட்டுக்கு ஐ.பி.எல். பாணி ஷாட்கள், நண்பர்களின் குளோசப் டென்ஷன் என நிலவரத்தின் கலவரத்தை பார்வையாளர்களுக்கு அப்படியே கடத்துகிறது சக்தி சரவணனின் ஒளிப்பதிவு. யுவனின் ‘சொப்பன சுந்தரி’, ‘பாய்ஸ் ஆர் பேக்’ பாடல்கள் டெம்போ ஏற்றுகின்றன. காமெடி கலகலக்கும் மேட்ச்!

- குங்குமம் விமர்சனக்குழு