குட்டி ரேவதி IN Download மனசு



மீட்க விரும்பும் இழப்பு

என் தந்தைதான். மரணம் எல்லோர் வாழ்விலும் கலந்ததுதான். எனினும் இன்னும் சில வருடங்கள் என்னோடு இருந்திருக்கலாம். சிறந்த மருத்துவராவது என்ற லட்சியத்துடன் பாளையங்கோட்டையில் சித்த மருத்துவம் படித்தேன். நான் எழுத்துத் துறையில் ஈடுபடுவேன் என்பது என் தந்தை எதிர்பாராதது. என் முதல் கவிதை நூல் ‘பூனையைப் போல அலையும் வெளிச்சம்’.

வெளியீட்டு விழாவிற்கு ஏனோ என் தந்தையை அழைக்கவும் இல்லை, தெரிவிக்கவும் இல்லை. ஆனால் நான் சற்றும் எதிர்பாராதபடிக்கு,  நான் ஆச்சரியப்படும் வகையில் நிகழ்வு நடந்து கொண்டிருக்கும்போதே அவர் அரங்கிற்குள் நுழைவதைக் கவனித்தேன். என் வாழ்வு, மற்ற என் தேர்வுகள் மீது கடைசி வரை எல்ைலயற்ற ஈடுபாட்டோடு இருந்தார்.

சமீபத்தில் அதிர்ந்தது

சென்னை காவல் நிலையம் முன்பு திருநங்கை தாரா கொலை செய்யப்பட்டது. இப்படியான சம்பவங்கள் காட்டுமிராண்டித்தனமான, அநாகரிகம் நிறைந்த சமூகத்தில்தான் நிகழும். கடந்த பத்து வருடங்களில் திருநங்கைகள் தங்கள் வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்ள மேற்கொண்டிருக்கும் போராட்டங்களும், உணர்வெழுச்சியும் கொஞ்ச நஞ்சமல்ல.

மனிதர்களுக்கு சக மனிதர்கள் மீது மூளும் வெறுப்பு நாளுக்கு நாள் அதிகமாகிறது. சமூக வலைத்தளங்கள், நமது கருத்துக்களை பதிவிட சம உரிமை அளித்துள்ளதை நம் எதிர் உணர்வுகளைக் காட்டிக்கொள்ளும் வாய்ப்பாக மாற்றிவிட்டோம். இதிலிருந்துதான் இந்த வன்முறையுணர்வும், மனிதத்தன்மையற்ற நடவடிக்கைகளும் பெருகு கின்றன. வெறுப்பிற்கு காரணமே தேவையில்லை. அது நிறம், பால், சாதி, மதம் என எதுவாகவும் இருந்துவிடுகிறது.

மறக்கமுடியாத மனிதர்கள்

என் வாழ்க்கையில் மூன்று முக்கியமான மனிதர்களுடன் பணியாற்றியதை என்னால் மறக்க முடியாது. என் எழுத்தின் தொடக்க காலக்கட்டத்தில் பேராசிரியர் கல்யாணி அவர்களுடன் களப்பணிக்காக இருளர் பகுதியில் பயணித்ததும், அவர் வழியாக இருளர் வாழ்முறையை அறிந்து கொண்டதும் முக்கியமானது. பேராசிரியர் கல்யாணியைப் போல, அறிவின் கூர்மை கண்ட நோக்கும், வெள்ளைக் கைகளும் கொண்ட மனிதர்கள் யாரும் இல்லை.

அதற்குப் பின் எழுத்தாளர் - ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவகாமி. அவர்களுடன் தமிழகமெங்கும் பெண்கள் இயக்கத்தைக் கட்டமைக்கும் பொருட்டு பயணித்து வந்தேன். சாதி மறுப்பு பெண்ணியத்தை அவர் போல ஒருமையுணர்வுடன் புரிந்துகொண்ட பெண் என வேறு ஆளுமையை சொல்ல முடியவில்லை.

மூன்றாவது, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். தீவிரமான இலக்கியத் தளத்தில் இயங்கி வருபவள் நான். அவரோ மெயின்ஸ்ட்ரீம், ஆஸ்கர் மனிதர். என் கவிதை, சிந்தனை, கொ்ள்கைகளைப் புரிந்து என்னை பணிகளில் ஈடுபடுத்துபவர். பத்து வருடங்களுக்கும் மேலாக அவருடன் தொடர்ந்து பணியாற்றுகிறேன். மெயின்ஸ்ட்ரீமில் இயங்கும் பிரபலங்கள் இவர் மாதிரி திறந்த மனதுடன், ஆழமான சர்வதேசப் புரிதலுடன் இயங்குவதில்லை. ரஹ்மானது வெற்றிகளுக்கும், சாதனைகளுக்கும் அவரின் திறமைகள் மட்டுமே இல்லை; அவரது நயமான ஆளுமையும்தான் காரணம்.

எதிர்பார்ப்புகள்

ஏனோ இந்தியாவில் பேசப்படும் பெண்ணுரிமை கருத்துக்கள் எல்லாமே எப்பொழுதுமே ஆண்களுக்கு எதிரானதாக இருக்கிறது. அதனால் பெண்ணும் ஆணும் ஒருவருக்கொருவர் வெறுப்பையும், வன்மத்தையும் கொட்டும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். உண்மையில் பெண்ணுரிமைக்கு பெண்கள் எதிர்த்துப் போராட வேண்டியவை, சாதியமைப்பையும், மத அமைப்புகளையுமே; ஆண்களை அல்ல. ஆண் - பெண் உறவுகள் நட்பாகப் பார்க்கப்படும் காலமும், காலநேரமும் கவனத்தில் இல்லாமல் மனத்தடை, தயக்கம், அச்சமில்லாமல் எந்த நேரத்திலும் பெண்கள் விடுதலையாக இயல்பாகப் பயணிக்கும் சமூகச் சூழலே என் ஆசை, எதிர்பார்ப்பு.

கேட்க விரும்பும் கேள்வி

‘நாம் எல்லோரும் இவ்வளவு வேகமாக ஏன் இருக்கிறோம்? எப்பொழுதும் இவ்வளவு வேகமாக எங்கே சென்று கொண்டிருக்கிறோம்’ என்பதுதான் என் கேள்வி. காலத்தை முந்துவதுபோல், வேகத்தால் சாதித்து விடுவதுபோல், எல்லோருடனும் போட்டி போட்டுக் கொண்டு, எல்லோரையும் முந்திக் கொண்டு எல்லா செயல்களிலும் ஈடுபடுகிறோம். உண்மையில், ஒவ்வொருவரின் வாழ்வும் தினச்சிறப்பானதே!

ஒவ்வொருவருக்கும் இந்த ஒரே ஒரு வாழ்வுதான் கையளிக்கப்பட்டிருக்கிறது என்ற நிலையில், அவரவர் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் கவனமாக, நிதானமாக ரசித்து வாழ்ந்தால் என்ன! வேகம் பதற்றத்தைக் கொண்டு வருகிறது. பதற்றம் குழப்பத்தை... குழப்பம் சஞ்சலத்தை... முடிவெடுக்கும் நிதானமின்மையை, வன்முறையை, கோபத்தை, நோயை, இழப்புகளைக் கொண்டு வந்து சேர்க்கிறது. இதற்குப் பிறகும் ஏன் வேகம்?

சமீபத்தில் படித்த புத்தகம்

கோபி எழுதிய ‘நத்தைகளைக் கொன்ற பீரங்கிகள்’, சமகால இலக்கியத்தின் மிக முக்கிய படைப்பு. தலித் தன்வரலாற்று நூல்கள், விடுதலைப் போராட்ட நூல்களின் வீச்சினைத் தாண்டி முன் சென்று எழுதப்பட்டிருக்கிறது. ஆதிக்க சாதி, இடைநிலைச் சாதி, ஒடுக்கப்பட்ட சாதி என சாதி அடுக்குகளுக்கு இடையே என்னென்ன மாதிரியான சமன்பாடுகள் உள்ளன என்பதையும், ஒடுக்குமுறை எந்த அளவிற்கு மனித நடவடிக்கைகளில் - அதுவும் பெண்களின் அன்றாட வாழ்க்கைச் செயல்பாடுகளில் ஆழமாயும் இறங்கிச் செயல்படக் கூடியது என்பதை ஒரே ஓட்டத்தில் விவரிக்கிறார்.

பயணம்

பயணம் இல்லையென்றால் படைப்பு வெளிப்பாடுகளில் சிறக்க முடியாது என்பது என் எண்ணம். அதுவும் ஆர்.ஆர்.சீனிவாசனுடன் பயணிப்பது அலாதி அனுபவம். தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் இருபது வருடங்களாக இருவரும் பயணித்திருக்கிறோம். வசீகரமான நிலக் காட்சிகளை நோக்கி, மனதை சிறகாக்கிச் செல்கிறோம். இப்போதும் இந்தியாவின் திசைகளில் எல்லாம் பறக்கிறோம். சமீபத்தில் வடகிழக்கு மாநிலங்களுக்குப் போய் இரோம் சர்மிளாவை சந்தித்தோம். வரும் சில மாதங்களில் எங்கெங்கு ெசல்ல வேண்டும் என்ற அட்டவணைகளும், வரைபடங்களும் கூட தயார் செய்துவிட்டோம்.

கற்ற பாடம்

‘Bulleh Shah’ என்ற பஞ்சாபி சூஃபி கவிஞரின் நூலைக் கண்டடைந்தேன். தத்துவஞானியாகவும் கவிஞராகவும் வணங்கப்படுகிறவர் அவர். அவரின் ஒரு கவிதை ‘திரைக்குப் பின்னே மறைத்துக் கொண்டு ஏன் எட்டி எட்டிப் பார்க்கிறாய்? உன்னை வெளிப்படுத்திக் கொண்டு செயல்படு’ என்று தொடங்குகிறது. ‘சிந்தனையில் என்ன இருக்கிறது. அதை செயல்படுத்துவதில்தான் இருக்கிறது’ என நாம் முன் வந்து செயல்பட வேண்டும். எதிர்ப்பை அல்லது ஒருமையுணர்வைக் காட்டவேண்டும் என்று தோன்றினால் ஒளிந்ேதா மறைந்ேதா இருக்கக்கூடாது என்பதுதான் நான் கற்ற பாடம்.

- நா.கதிர்வேலன்