பறந்து செல்ல வா விமர்சனம்



சிங்கப்பூருக்குச் சென்று கண்ணில் படுகிற பெண்ணையெல்லாம் காதலிக்கும் லுத்புதீன், இரண்டு பெண்களின் அன்பில் சிக்கிக்கொள்வதே ‘பறந்து செல்ல வா’. லுத்புதீனுக்கு சிங்கப்பூரில் வேலை கிடைத்து, எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுடன் பயணமாகிறார். மற்றவர்களின் ஆச்சர்ய பார்வைக்காவது அத்தனை பெண்களையும் கவர்ந்திழுக்கப் பார்ப்பது அவரது வழக்கம். தங்கும் இடத்தில் இருக்கும் பெண்கள் ஏற்கனவே ரிலேஷன்ஷிப்பில் இருக்க... தன்னையும் ஒரு பெண் காதலிப்பதாக காட்டிக்கொள்ள விரும்புகிறார்.

அதற்காக பார்த்த ஒரு பெண்ணை வைத்து ஃபேஸ்புக்கில் ஒரு போலி ஐ.டி. உருவாக்கி போஸ்ட் போடுகிறார். வெகுண்டு எழும் அந்த நரேல் கெங் இவரைப் பார்த்ததும் கூல் ஆகிறார். கோபம் போய் காதலுக்கு மனம் கைமாறுகிறது. இதற்கிடையே சிங்கப்பூர் தமிழ்ப் பெண்ணான ஐஸ்வர்யாவை வீட்டில் பெண் பார்க்க... அவரையும்(!) சந்திக்கிறார் லுத்புதீன். இருவரின் அன்பில் திளைத்து, அதுவே நெருக்கடியாகி, யாருக்கு லுத்புதீன் என்பதுதான் கடைசிச் செய்தி.

நாசரின் மகன் லுத்புதீன் இப்போ ஹீரோ. இளமை, சுறுசுறு, கொண்டாட்டம் எல்லாம் சரியே. ஆனால் கனிய இன்னும் காலமிருக்கிறது. ஆனாலும் தன் சக்திக்கு உட்பட்ட துள்ளல் நடிப்பு. இன்னும் ெகாஞ்சம் பக்குவப்பட்டால், மேனரிசங்களில் தெளிவு காட்டினால், ஒரு முழுமையான ஹீரோ தமிழ் சினிமாவிற்கு நிச்சயம். நெருக்க இறுக்கங்களில் சார் ரொம்ப ஸ்மார்ட். ‘நம்ம ஊரு சிங்காரி’ ரஜினியின் ரீமிக்ஸ் பாடலுக்கு அவரது ஆட்டமும் நைஸ்.

எட்டு முழ சேலை கட்டியே எப்போதும் பார்த்த கண்களுக்கு ஐஸ்வர்யா இதில் அதிரடி. பாத்திர வார்ப்பில் ரொம்பவே பொருந்துகிறார். படத்தின் இறுதியில் மாடர்ன் பெண்களுக்கு காதலின் மீது பாதுகாப்போடு இருக்கும் நம்பிக்கையைப் பற்றி அழுத்தம் திருத்தமாகப் பேசும்போது சிறப்பு. சிங்கப்பூர் நடிகை நரேல் கெங், நம்பவே முடியவில்லை. படு சுத்தமான நடிப்பு. வசீகர முகத்தில் காதலன் பிரிந்த வேதனையை தாராளமாக அள்ளிக் கொட்டுகிறார்.

‘ஆஹா நரேல்’ என்று சொல்ல வைக்கிறார். ரொமான்ஸில் சூடு பரப்புகிறார். ஆர்.ஜே. பாலாஜி, சதீஷ், கருணாகரன் என நகைச்சுவை பட்டாளமே இருக்கிறது. தமிழ் சினிமா ட்ரெண்ட், உலக சினிமாவிற்கான சீரியஸ் முயற்சி என்றெல்லாம் வருத்தப்பட்டுக் கொள்ளாமல் சீனுக்கு சீன் சிரிக்க வைத்தால் போதும் என்ற அளவிற்கு இறங்கி அடிக்கப் பார்க்கிறார் டைரக்டர் தனபால் பத்மநாபன். பழகிய திரைக்கதை ஆங்காங்கே தரை தட்டும்போதெல்லாம் காமெடியைத் தூவி கரை சேர்க்கிறார் வசனக்காரர் பேயோன்.

சிங்கப்பூரின் அழகை கொள்ளையாக கொட்டிக் கண்ணில் நிரப்புகிறார்கள் ஒளிப்பதிவாளர்கள் சந்தோஷ் விஜயகுமார், பிரபாகரன். ஜோஷ்வா ஸ்ரீதர் திரும்பி வந்திருக்கிறார். நன்றாக இருக்கிறது என்பதற்காக இவ்வளவு பாடல்களா! சுவாரசியமானது என்றாலும் லுத்புதீன் திரும்பத் திரும்பக் காதலித்துக் கொண்டே இருப்பது, அதை நீட்டி முழக்குவதில் கொஞ்சம் பிசிறு தட்டுகிறது. அவரது ஒவ்வொரு செயலுக்கும் நண்பர்கள் கோஷ்டி பின்தொடர்ந்து கமென்ட் போட்டுக் கொண்டே இருப்பது அசந்து போக வைக்கிறது! கருணாகரன், பொன்னம்பலம் எபிஸோட் வேண்டாத வேலை! கிளைமாக்ஸில் ரசனை வசனங்கள் படத்திற்கு தெம்பு. சிங்கப்பூரின் அழகிற்காகவே பறந்துசெல்லலாம்.

- குங்குமம் விமர்சனக்குழு