விவசாயிகள் தற்கொலை... துரத்தும் மரணம்..!



தமிழக விவசாயிகள் இனி விவசாயத்தை நம்பி உயிர் வாழ முடியுமா? - இந்த ஒற்றைக் கேள்வியைத்தான் எல்லோர் மனதிலும் எழுப்பியிருக்கிறது சமீபத்திய துயர சம்பவங்கள். பருவமழை பொய்த்ததாலும், காவிரியில் இருந்து  போதிய தண்ணீர் கிடைக்காததாலும், சம்பா பயிர் கருகியதாலும் மனம் வெதும்பி தற்கொலை செய்தும்,  மாரடைப்பாலும் 23 விவசாயிகள் காவிரி டெல்டா பகுதியில் மட்டும் இறந்திருக்கின்றனர்.

‘500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது’ என்ற அறிவிப்பால் எழுந்த களேபரத்துக்கு மத்தியில் புதைந்தே போய்விட்டன இந்த மரண ஓலங்கள். ‘வரலாற்றிலே இல்லாத மோசமான ஆண்டு இதுதான்’ என வேதனை பொங்கக் குறிப்பிடுகிறார்கள் விவசாயிகள். ஏன், இப்படியான நிலைமை? விவசாய சங்கங்களிடம் பேசினோம். ‘‘முன்னாடியெல்லாம் கதிரா விளைஞ்சு வரும்போது கருகிக் கஷ்டப்பட்டிருக்கோம்.  ஆனா, இப்போ பயிரே கருகிப் போச்சு. கடந்த அஞ்சு வருஷமா குறுவையை இழந்துட்டோம்.

இந்த வருஷம் சம்பாவும் போச்சு. இங்க, காவிரியை நம்பி பதினெட்டு லட்சம் ஏக்கர் இருக்கு. இதுல, நாலு லட்சம் ஏக்கர் போர்வெல் மூலமா விவசாயம் பண்ணியாச்சு. காவிரியை நம்பி விதைச்சவங்க துளியும் சாகுபடி பண்ணலை. பொதுவா, தமிழக விவசாயம் தென்மேற்குப் பருவமழையை நம்பித்தான் நடக்குது. காவிரியில தண்ணி வந்தா டெல்டா விவசாயிகளும், முல்லைப்பெரியாறுல தண்ணி வந்தா தேனி, மதுரை மாவட்ட விவசாயிகளும், தாமிரபரணியால நெல்லை, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளும் பயனடையறாங்க. இதுக்கு கர்நாடகா, கேரளாவுல நல்ல மழை பெய்ஞ்சு அணைகள் நிரம்பணும்.

ஆனா, நீர் இருந்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால பிரச்னை தொடர்ந்து நீடிக்குது. கடந்த 2012-13ம் வருஷம் ஒன்பது விவசாயிகள் தற்கொலை செஞ்சாங்க. அரசே இதை அறிவிச்சு நிதியுதவி கொடுத்துச்சு. இப்போ, 23 பேர் வாழ்க்ைக மீதான நம்பிக்கையை இழந்து முடிவை தேடிகிட்டாங்க. இனி, விவசாயம் செஞ்சு வாழ முடியுமானு தெரியலை’’ என வருத்தமாக பேசினார் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன்.

இதை இன்னும் விரிவாகத் தொடர்ந்தார், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு. ‘‘காவிரி பாசனத்துல முன்பு தமிழகம் 29 லட்சம் ஏக்கர் சாகுபடி பண்ணியிருக்கு. காவிரி நடுவர் மன்றம் 2007ல் வழங்கிய தீர்ப்புல தமிழகம் 24 லட்சம் ஏக்கரும், கர்நாடகா 19 லட்சம் ஏக்கரும் சாகுபடி பண்ணலாம்னு சொன்னாங்க. இதனால நமக்கு 5 லட்சம் ஏக்கர் குறைஞ்சு போச்சு. ஆனா, கர்நாடகாவுக்கு 11 லட்சம் ஏக்கரிலிருந்து 19 லட்சம் ஏக்கரா அதிகமாயிடுச்சு.

இந்தத் தீர்ப்பு வந்த உடனே ெகஜட்ல போட்டுருக்கணும். ஆனா, ஆறு வருஷம் கழிச்சுத்தான்  போட்டாங்க. இதற்கு தீர்வான மேலாண்மை வாரியம் அமைக்காததால  இப்போ வரை போராடிட்டு இருக்கோம். இன்னைக்கு கர்நாடகா 45 லட்சம் ஏக்கர் சாகுபடி பண்ணிட்டு இருக்கு. கர்நாடகாவுல காவிரி பாய்கிற பகுதி எல்லாம் மலைப்பகுதி. ஆனா, அவங்க மோட்டார்கள் மூலமா பம்ப் செய்து, ஒவ்வொரு அணையிலிருந்தும் மலைப்பகுதிக்கு நீர் அனுப்பி விவசாயம் பண்றாங்க.

கடந்த 1970ல் இருந்து இந்த ஆண்டு வரை ஆயிரக்கணக்கான ஏரிகள் வெட்டியிருக்காங்க. இங்க காவிரி நீர் பிரச்னை நடக்கும்போதே எல்லா நீரையும் திருப்பி விட்டுட்டாங்க. இதனால, நமக்கு நீர் தரமாட்டேன்னு ஒத்தக் கால்ல  நிற்கிறாங்க. முன்னாடி எனக்கு வருஷத்துல 2 லட்சம் ரூபாய் லாபம் கிடைச்சது. இப்போ, 2 லட்சம் ரூபாய் நஷ்டம் ஆகுது. இந்த நேரத்துல தமிழக அரசு, வறட்சி மாநிலம்னு அறிவிச்சா நஷ்ட ஈடு தரணும், கடன் தள்ளுபடி செய்யணும்னு பயப்படுது.

மத்திய அரசும் கர்நாடகா பக்கம் நின்னு எங்க கழுத்தை அறுத்திடுச்சு’’ எனக் கண்ணீர் சிந்தியவரிடம் ‘இதற்கு என்னதான் தீர்வு?’ என்றோம். ‘‘மேட்டூர் அணையில் இருந்து பூம்புகார் வரை 40 தடுப்பணைகள் கட்டினா நிலத்தடி நீரைப் பெருக்கலாம். அதோடு டெல்டா பகுதிகள்ல இருக்குற ஏரி, குளங்களைத் தூர் வாரணும். கடல்ல வீணா தண்ணீர் கலக்குறதை தடுக்கணும். இல்லைன்னா இங்க தினம் தினம் தற்கொலைதான். வேற வழியே இல்ல’’ என்கிறார் அய்யாக்கண்ணு வேதனையாக!

ஆனால், பி.ஆர்.பாண்டியன், ‘‘உடனடியாக, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கிறதுதான் இதற்கு ஒரே தீர்வு’’ என்கிறார். ‘‘அப்புறம், விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யணும். அடுத்து, கட்டுபடியான விலை நிர்ணயம் பண்ணணும். அதுக்கு, எம்.எஸ்.சுவாமிநாதன் குழு அளித்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தணும். இந்தக் குழு ‘உற்பத்தி செலவைக் கழிச்சிட்டு ஐம்பது சதவீதம் கூடுதலா விலை நிர்ணயம் பண்ணணும்’னு சொல்லியிருக்கு. ‘நாலு சதவீத அளவுல கடன் கொடுக்கணும்’னு நிறைய சலுகைகள் காட்டியிருக்கு.

இதையெல்லாம் நடைமுறைப்படுத்தினா மட்டும்தான் இனி இங்கே விவசாயிகள் உயிர் வாழ முடியும்’’ என்கிறார் அவர் ஆதங்கமாக! ஆனால், விவசாயப் பிரச்னைகளைத் தொடர்ந்து கவனித்து வரும் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் பொருளாதாரப் பேராசிரியர் கே.சிவசுப்ரமணியன், ‘‘விவசாயிகள் தொழில்நுட்பங்களுக்கு மாற வேண்டும்’’ என வலியுறுத்துகிறார்.

‘‘காவிரி நீர் பிரச்னை காலம் காலமா இருக்குனு எல்லோருக்கும் தெரியும். அதுக்கு மாற்றா என்ன பண்ணலாம்னு யாரும் யோசிக்கிறதில்ல. டெக்னாலஜியை பயன்படுத்தவும் முன் வர்றதில்ல. அல்லது வறட்சியில தாங்கி வளர்ற பயிர் கூட போட்டிருக்கலாம். எனக்குத் தெரிஞ்ச கரூர்காரர் ஒருத்தர், சொட்டு நீர் பாசனம் வழியா விவசாயம் பண்ணினார். வழக்கமான பாசனம் வழியா 30 முதல் நாற்பது கதிர்கள்தான் விளைச்சல் கிடைக்கும்.

ஆனா, இதுல 150 கதிர் வந்து 8,500 கிலோ வரை எடுத்தார். மூணு ஏக்கர்ல எடுக்கிறதை ஒரே ஏக்கர்ல செஞ்சிட்டார். இதுதான் டெக்னாலஜியோட பலம். இதை, நம் விவசாயிகள்கிட்ட புகுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கு. ஆனா, அவங்க விவசாயிகளைக் கண்டுக்கிறதே இல்ல. பருப்புத் தட்டுப்பாடு வந்தப்போ வெளியிலிருந்து இரண்டு மடங்கு அதிக விலைக்கு இறக்குமதி பண்றாங்க. ஆனா, இங்கு பருப்பு விளைவிக்கிற  விவசாயிகள் கிட்ட குறைஞ்ச விலைக்கு  பேரம் பேசுறாங்க.

சரி, தட்டுப்பாடு வர்ற வித்துகளைக்கு கண்டறிஞ்சு இங்குள்ள விவசாயிகளை ஊக்கப்படுத்தி பயிரிட வைக்கலாம். ஆனா, அதுவும் செய்றதில்ல. இப்போகூட மேட்டூர் நீர்மட்டம் 80 அடி வந்ததும் திறந்து விட்டாங்க. ஆனா, ‘நீர் குறைவா இருக்கு. அதுக்கு தகுந்த அளவுல பயிரிடுங்க’னு சொல்லி எந்த அறிவிப்பும் அரசு செய்யலை. நம்மகிட்ட தடுப்பணையும் கிடையாது. இதனால, நிறைய நீர் கடல்ல வீணானது. இப்படியிருந்தா எப்படி  நம்பிக்கையா விவசாயம் பண்ண முடியும்’’ என்கிறவர், சில புள்ளிவிவரங்களைத் தந்தார்.

‘‘உலகத்துல மகசூல் அதிகம் பெறுகிற நாடுகளோடு ஒப்பீடும்போது இந்தியா 61வது இடத்துல இருக்கு. எகிப்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா எல்லாம் ஒரு ஹெக்டேருக்கு சுமார் பத்தாயிரம் கிலோ வரை பண்றாங்க. இந்தியா 3,600 கிலோதான் பண்ணுது. 1950-51 ஆண்டுல 1068 கிலோ உற்பத்தியாயிருக்கு.

இதே 2012-13ம் ஆண்டு 2400 கிலோதான். அறுபது வருஷத்துல ஆயிரத்து 300 கிலோதான் கூடியிருக்கு. அதனாலதான் தொழில்நுட்ப ரீதியா வளரணும்னு சொல்றேன். அதுக்கு அரசு விவசாயிகளுக்கு உதவணும். விவசாயிகளும் பல்கலைக்கழகங்கள்கிட்ட பேசி தங்கள் விவசாய முறையை மேம்படுத்தலாம். இதற்கு மரணங்கள் கண்டிப்பாக தீர்வு அல்ல’’ என்கிறார் அவர் முடிவாக!

- பேராச்சி கண்ணன்