இளைப்பது சுலபம் - வெஜ் பேலியோவில் எடை குறைப்பது எப்படி?
பா.ராகவன் - 35
‘தெனாலி’ படத்தில் கமல் ஒரு பத்துப் பதினைந்து பயங்களைப் பட்டியலிடுவார். அது அவருக்கு மட்டுமான பிரத்தியேக பயங்கள். ஒரு மாறுதலுக்கு, உலக மக்கள் அத்தனை பேருக்குமான பொதுவான பயங்கள் என்று பட்டியலிட்டுப் பார்த்தால், கொழுப்பு சாப்பிட்டால் மாரடைப்பு வந்துவிடும் என்பது அதில் முதல் மூன்று இடங்களுக்குள் வந்துவிடும். இதில் மிகவும் வருத்தத்துக்குரிய விஷயம் என்னவென்றால் பல மருத்துவர்களே இதைச் சொல்லுவார்கள். ‘இட்லி சாப்பிடுங்கள், தோசை சாப்பிடுங்கள், அளவோடு பூரி சப்பாத்தி சாப்பிடுங்கள், ஒரு வடை சாப்பிட்டால் தப்பில்லை’
 என்றெல்லாம் சொல்லும் மருத்துவர்கள் யாரும் ‘பாதாம் சாப்பிடுங்கள், வால்நட் சாப்பிடுங்கள், வெண்ணெய் சாப்பிடுங்கள்’ என்று சொல்லுவதில்லை. டாக்டர்களுக்குத் தெரியாதா, இந்த நல்ல கொழுப்பு உணவுகள் எதுவும் இதயத்தை பாதிக்காது என்பது? எச்டிஎல் அறுபது அறுபத்தி ஐந்துக்குப் போனால் ஆயுசு அபிவிருத்திக்கு அது ஆரம்பப்புள்ளி என்பதை அவர்கள் அறியமாட்டார்களா? டிரை கிளிசிரைட் என்னும் கெட்ட கொலஸ்டிராலும் சிறிய எல்டிஎல் அணுக்களும் மட்டும்தான் இதய நோய்களுக்கான காரணி என்பது அவர்களுக்கு நிச்சயம் தெரியும். மேற்சொன்ன பாதாம் உள்ளிட்ட நட்ஸிலோ வெண்ணெய், பனீர் போன்ற பால் பொருள்களிலோ இந்த கெட்ட சங்காத்தமே கிடையாதே.
இருந்தாலும் மருத்துவர்கள் ஏன் இந்த உணவு முறையைப் பரிந்துரைப்பதில்லை என்றால் அதற்கு ஒரே ஒரு காரணம்தான்! நாம் இதை மட்டும் சாப்பிட்டுக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம். ஒரு பக்கம் பாதாம், பனீர், வெண்ணெய் என்று வளைத்துக் கட்டிவிட்டு மறுபக்கம் பரோட்டா, பானிபூரி கசுமாலங்களையும் கபளீகரம் செய்வோம். ஒருவேளை வழக்கமான சாப்பாடு, மறுவேளை பேலியோ என்று நமக்கு நாமே ஒரு நூதன டயட் அமைத்துக்கொண்டுவிடுவோம். இப்படிக் கலந்து அடித்தால் கண்டிப்பாக சிக்கல் வரும். எதற்கு ரிஸ்க் என்பதால்தான் மருத்துவர்கள் குறை மாவு நிறை கொழுப்பு டயட்டை யாருக்கும் பரிந்துரைப்பதில்லை.
 கொலஸ்டிரால் எண்ணிக்கை அதிகம் என்று உங்கள் ரிப்போர்ட் காட்டினால் இதனாலேயேதான் கண்ணை மூடிக்கொண்டு கொழுப்பு ஐட்டங்களைச் சாப்பிடாதீர்கள் என்கிறார்கள். உண்மையில், உங்கள் கொலஸ்டிரால் பிரச்னை தீரவேண்டுமானால் பேலியோதான் தலைசிறந்த வழி! நல்ல கொழுப்பை அதிகரித்து, கெட்டதை அழித்தொழிக்கிற சூத்திரம் இது. இன்னொன்றையும் நீங்கள் டாக்டர்களிடம் கவனித்திருக்கலாம். யாராவது உடம்பு இளைக்க வேண்டும் என்று கேட்டால் காய்கறி நிறைய சாப்பிட்டு, சாப்பாட்டைக் குறைத்துக்கொள்ளுங்கள் என்று மட்டும் சொல்லிவிடுவார்கள். சர்க்கரை வியாதியஸ்தர்கள் என்றாலும் இதேதான். சாப்பிடுகிற அனைத்தையும் அளவு குறைக்கச் சொல்வதோடு நிறுத்திக்கொள்வார்கள்.
உயிரோடு விளையாடக்கூடாதல்லவா? அந்த பயம்தான். தவிரவும் மருத்துவத் துறை என்பது மருந்து மாத்திரை பிசினசுடன் தொடர்புடையது. எல்லோரும் பேலியோவுக்கு வந்து சர்க்கரை வியாதியே இல்லாது போய்விட்டால் மருந்துக் கம்பெனிகள் என்னாகும்? அதை நம்பிய டாக்டர் பிழைப்புதான் என்னாகும்? ஒன்று தெரிந்துகொள்ளுங்கள். சாப்பிடுகிற உணவில் (ஒருநாளில்) முப்பது முதல் நாற்பது கிராம் அளவுக்குள் கார்போஹைடிரேட்டை சுருக்கிவிட முடியுமானால் வாழ்நாள் முழுதும் உங்களுக்கு சர்க்கரை நோய் வராது. ஏற்கெனவே இருந்தாலும் காணாமல் போய்விடும். மருந்தில்லாமல் சௌக்கியமாக வாழலாம்.
ஃபேஸ்புக்கில் இயங்கி வரும் ‘ஆரோக்கியம் நல்வாழ்வு’ என்னும் பேலியோ குழுமம் இதை ஆயிரக்கணக்கான சர்க்கரை நோயாளிகளுக்குப் பரிந்துரைத்து வெற்றியும் கண்டிருக்கிறது. ராஜா ஏகாம்பரம், ஹரிஹரன், அருண்குமார், தயானந்த் சக்ரவர்த்தி, ஃபரூக் அப்துல்லா, பிரகாஷ், சுமதி ராஜா, தரங்கிணி, ப்ரூனோ, கார்த்திக் ராஜா என்று இந்தக் குழுமத்துக்குள் இயங்கும் தொழில்முறை மருத்துவர்களும் சரி; நியாண்டர் செல்வன், சிவராம் ஜெகதீசன், சங்கர்ஜி போன்ற தன்னார்வலர்களும் சரி; பேலியோவால் தாங்கள் பலனடைந்ததைக் கண்டபின்பே மக்களுக்கு இதைப் பரிந்துரை செய்ய ஆரம்பித்தார்கள்.
உலகில் எத்தனையோ எடைக்குறைப்பு டயட்கள் உள்ளன. பேலியோவுக்கும் அவற்றுக்கும் உள்ள வித்தியாசம் ஒன்றுதான். பேலியோ என்பது எடைக்குறைப்புக்கானது மட்டுமல்ல. ஒரு முழுமையான ஆரோக்கிய வாழ்வுக்கு அஸ்திவாரம் இடக்கூடிய உணவு முறை இது. சர்க்கரை நோய் இல்லாமல், ரத்த அழுத்த நோய் இல்லாமல், கொலஸ்டிரால் பிரச்னை இல்லாமல், இதர பல இம்சைகள் எதுவும் இல்லாமல் நிம்மதியாக வாழலாம். பொள்ளாச்சியில் வசிக்கும் டாக்டர் சுமதி ராஜா இந்த உணவு முறையைப் பயன்படுத்தி, உடல் பருமனாலும் பிசிஓடி பிரச்னையாலும் பாதிக்கப்பட்டு, நீண்ட நாள் குழந்தைப் பேறில்லாமல் இருக்கும் பெண்களுக்கு, குழந்தை பிறக்கவே வழி செய்திருக்கிறார்.
 பேலியோவின் சாத்தியங்கள் இன்னமும்கூட முழுமையாகக் கண்டறியப்படவில்லை என்றபோதிலும் இந்தளவு பலன் தருகிற இன்னொரு உணவு முறை வேறு கிடையாது என்பேன். கச்சாமுச்சாவென்று கண்டதைத் தின்று உடல் பருத்து, ஆரம்பக்கட்ட சர்க்கரை வியாதியும், உயர் ரத்த அழுத்தப் பிரச்னையும் சேர்ந்து படாதபாடு பட்டுக்கொண்டிருந்தேன். ஒரு தீர்மானத்தோடு பேலியோ பழக ஆரம்பித்து கார்ப் உணவுகளை அறவே தவிர்த்து, வெறும் கொழுப்பாகச் சாப்பிட ஆரம்பித்ததன் விளைவு, இன்றைக்கு வியாதிகளிடம் இருந்து விடுதலை கண்டு சௌக்கியமாக இருக்கிறேன்!
ஒரு நடமாடும் பூதமாக இருந்தவன் நாளை நயன்தாராவுடன் போட்டியிடலாமா என்று யோசிக்கும் அளவுக்கு இளைக்கவும் முடிந்திருக்கிறது. ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். நான் முட்டையைத் தொட்டுக்கூடப் பார்த்திராத முழுச் சைவ சாப்பாட்டாளன். சைவ பேலியோவில் இளைப்பது கொஞ்சம் மெதுவாகத்தான் நடக்கும். மட்டுமல்லாமல், அதிகபட்சம் இதில் முப்பது கிலோ வரைதான் எளிதாக உடல் எடை குறைக்க முடியும். அதற்குமேலும் இளைக்க வேண்டுமானால், நடை, ஓட்டம், நீச்சல், உடற்பயிற்சி என்று கொஞ்சம் மெனக்கெட வேண்டும். ஆனால், முப்பது வரை குறைப்பதற்குப் பெரிய பிரயத்தனங்கள் வேண்டாம்.
அது தானாகவே நிகழ்ந்துவிடும். இதுவே அசைவம் என்றால் கண்ணை மூடிக்கொண்டு நூறு கிலோ வரையிலும்கூட எடைக் குறைப்பு சாத்தியம் என்பேன். அப்படிச் செய்து சாதித்தவர்கள் இருக்கிறார்கள். நூற்றைம்பது கிலோக்காரர்கள், நூற்றுத் தொண்ணூறு கிலோக்காரர்கள் எத்தனையோ பேர் இன்று எழுபதிலும் எண்பதிலும் உலவிக் கொண்டிருக்கிறார்கள். விஷயம் எளிது. காய்கறிகளில் உள்ள குறைந்தபட்ச கார்போஹைடிரேட்கூட முட்டை மற்றும் மாமிசங்களில் கிடையாது. கார்பைக் குறைத்தால் எடை குறைந்துவிடும். அவ்வளவுதான். ஒரு முறையான, முழுமையான ரத்தப் பரிசோதனை.
பேலியோவும் அறிந்த டாக்டர்களிடம் அதைக் காட்டி உங்கள் உடலுக்கு, அதன் தன்மைக்கு, உங்களுக்கு ஏதேனும் சிக்கல் இருக்குமானால் அதற்கேற்ற தேவைகள் - மாறுதல்களுடன் கூடிய உணவுப் பரிந்துரையைப் பெற்று ஆரம்பித்தால் போதுமானது. சும்மா இந்தத் தொடரைப் படித்ததே போதும் என்று முடிவு செய்து நாளையே பாதாம், பனீர், வெண்ணெய் என்று இறங்கிவிடக் கூடாது என்பதால் இதைச் சொல்லுகிறேன்.
நானெல்லாம் எக்காலத்திலும் இளைத்து ஸ்லிம் ஆக வாய்ப்பே இல்லை என்று என் நண்பர்கள் சொல்லுவார்கள். நானேகூட அப்படித்தான் நினைத்திருந்தேன். ஆனால், முடிந்தது. ஒரு கடைந்தெடுத்த முழுச் சோம்பேறியும், வக்கணையிலும் ருசியிலும் ஒரு இம்மியும் குறையாமல் மட்டுமே உண்ண விரும்புகிறவனும் எதைச் சாப்பிட்டாலும் ஏராளமாக மட்டுமே சாப்பிடுகிறவனுமாக இருந்த என்னாலேயே இது முடிந்திருக்கிறது என்றால் உங்களாலா முடியாது? கண்டிப்பாக முடியும். வாழ்த்துகள்.
சில தகவல்கள்
* ஃபேஸ்புக்கில் இயங்கும் பேலியோ குழும முகவரி: http://www.facebook.com/group/tamilhealth * பேலியோவுக்கு வரும்முன் அவசியம் படித்து அறியவேண்டிய புத்தகங்கள்: 1.பேலியோ டயட் - நியாண்டர் செல்வன் 2.உன்னை வெல்வேன் நீரிழிவே - சிவராம் ஜகதீசன் 3.பேலியோ சந்தேக நிவாரணி - சங்கர்ஜி 4.பேலியோ - சர்க்கரை நோயிலிருந்து நிரந்தர விடுதலை - சவடன் பாலசுந்தரன் 5.வெஜ் பேலியோ அனுபவக் குறிப்புகள் - பா.ராகவன் 6.பேலியோ வழி ஆரோக்கியம் 2.0 - டாக்டர் ஃபரூக் அப்துல்லா ஆங்கிலத்தில் நூற்றுக்கணக்கான பேலியோ தொடர்பான புத்தகங்கள் உள்ளன. அமேசானில் தேடுங்கள்.
(முற்றும்)
|