கெளதம் மேனன் படங்களின் லவ் போர்ஷன்ஸை நான் எழுதுகிறேனா?
பதில் சொல்கிறார் ரைட்டர் & புரொடியூசர் ரேஷ்மா கட்டாலா
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் தயாரிப்பு நிறுவனமான ‘போட்டான் கதாஸ்’ மற்றும் அவரது யூ டியூப் சேனலான ‘ஒன்றாக என்டர்டெயின்மென்ட்’ ஆகியவற்றின் தயாரிப்பாளர்களில் ஒருவர்... ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தின் கதை, திரைக்கதையை எழுதியவர்... செம வைரல் ஹிட்டுகளைக் குவித்த ‘லட்சுமி’, ‘மா’ குறும்படங்களின் கிரியேட்டிவ் புரொடியூசர்... என ரேஷ்மா கட்டாலாவிற்கு பல முகங்கள் உண்டு. இதையெல்லாம் விட இனிக்கும் தகவல், ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் எம்.ஜி.ஆரின் ஜோடிகளில் ஒருவரான நடிகை சந்திரகலாவின் மகள் இவர் என்பது!
 ‘‘பேஸிக்கா நான் தனிமை விரும்பி. எங்க போனாலும் ரொம்பவே பிரைவஸி விரும்புவேன். ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம்னு சோஷியல் மீடியா எதிலும் என்னைப் பார்க்க முடியாது. அதுல எல்லாம் வந்துடக் கூடாதுனு தெளிவா இருக்கேன். ஒரு ரைட்டரா, புரொடியூசரா என் ஒர்க்கை முழு கவனத்தோடு பண்ண இந்த பிரைவஸி ரொம்ப உதவியா இருக்கு...’’ வெட்கப் புன்னகையுடன் பேச ஆரம்பிக்கிறார் ரேஷ்மா கட்டாலா.‘‘எங்கம்மா கிட்டத்தட்ட 125 படங்கள் நடிச்சிருக்காங்க. ஆனா, அவங்களோட எந்த படப்பிடிப்பையும் நான் பார்த்ததில்ல. அவங்க கூட ஷூட்டிங் போனதில்ல.
எங்க பூர்வீகம் ஆந்திரா. இஸ்லாமிய குடும்பம். வீட்ல உருதும் பேசுவோம். கட்டாலாங்கறது எங்க ஃபேமிலி நேம். வைசாக்குல எங்க தாத்தாவுக்கு கிடைச்ச பட்டம் அது. அம்மாவோட அப்பா எம்.எஸ்.நாயக், படத் தயாரிப்பாளர். கர்னாடிக், கிளாசிகல்ல ஆர்வம் உள்ளவர். அம்மாவுக்கு ரெண்டு வயசு இருக்கும் போதே, ஃபேமிலி சென்னைக்கு ஷிஃப்ட் ஆகிடுச்சு. அம்மா மாம்பலத்துலதான் படிச்சு, வளர்ந்தாங்க. குச்சுப்புடி, பரதம்னு எல்லா நடனத்திலும் பிச்சு உதறுவாங்க. அவங்க திறமை பத்தி ‘இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி’ல கவர் ஸ்டோரி வந்திருக்கு.
 பாலிவுட்ல ஹேமமாலினி, வைஜெயந்திமாலாவுக்கு குச்சுப்புடில ஆர்வம் வந்ததுக்கு எங்க அம்மாவோட டான்ஸ்தான் காரணம்னு கேள்விப்பட்டிருக்கேன். தாத்தா தயாரிச்ச படத்துல அம்மா குழந்தை நட்சத்திரமா அறிமுகமானாங்க. ஹீரோயினா இன்ட்ரடியூஸ் ஆனது தெலுங்குல. இந்திலயும் நடிச்சிருக்காங்க. ஸ்ரீதர் சார் மாதிரி பெரிய இயக்குநர்களின் படங்களும் பண்ணியிருக்காங்க. இங்க அம்மா நடிச்ச பல படங்களை கன்னடத்திலும், இந்தியிலும் தாத்தா தயாரிச்சிருக்கார். எங்க குடும்பம், பெரிய குடும்பம். எல்லாருமே சென்னைலதான் இருக்காங்க. வாரக் கடைசில தாத்தா வீட்ல அசெம்பிள் ஆவாங்க.
பாட்டி, பிரியாணி நல்லா சமைப்பாங்க. யாருக்காவது பர்த்டேன்னா இன்னும் கொண்டாட்டமா மாறும். அத்தனை பேரும் ஃபேமிலி ட்ரிப்பா அவுட்டிங் கிளம்பிடுவோம். அம்மாகிட்ட இருந்து மியூசிக், டான்ஸ், நம்ம கல்ச்சர் எல்லாம் கத்துக்கிட்டேன். ஆனா, நடிக்கணும்னு தோணினதேயில்ல...’’ சிரித்தபடி குடும்ப வரலாற்றை முடித்துவிட்டு தன்னைப்பற்றிய இன்ட்ரோவுக்கு வந்தார் ரேஷ்மா.‘‘எனக்கு சினிமா ஆசை வந்துடக் கூடாதுனு அம்மா கவனமா வளர்த்தாங்க. படிப்பு முக்கியம்னு சொல்வாங்க. எனக்கு விபரம் தெரிய ஆரம்பிச்சப்ப அம்மா நடிக்கிறதை நிறுத்திட்டாங்க.
எனக்கு பதினஞ்சு வயசிருக்கிறப்ப அவங்க காலமாகிட்டாங்க. நல்ல தோழியை இழந்ததா உணர்ந்தேன். படிப்புல முழுமையா கவனம் செலுத்தினேன். சர்ச் பார்க்ல ஸ்கூல் பீப்புள் லீடரா இருந்தேன். ஸ்டெல்லா மேரீஸ்ல பி.ஏ. சோஷியாலஜில கோல்டு மெடல் வாங்கினேன். அப்புறம் மெட்ராஸ் யூனிவர்சிட்டில ஜர்னலிசம், ஃபிலிம் ஸ்டடீஸ்ல மாஸ்டர் டிகிரினு பயணமானேன்.காலேஜ் டேஸ்ல நிறைய படம் பார்ப்பேன். முன்னாடியே சொன்னா மாதிரி நடிப்புல ஆர்வமில்ல. கூச்ச சுபாவம். போட்டோவுக்கு போஸ் கொடுக்கக் கூட தயங்குவேன்.
 அதனாலதான் இன்டர்வியூ முடிச்சுட்டு நானே போட்டோஸ் தரேன்... உங்க போட்டோகிராஃபரை கூட்டிட்டு வராதீங்கனு சொன்னேன்...’’ சற்றே மன்னிப்பு கேட்கும் விதத்தில் சொல்லிவிட்டு தொடர்ந்தார். ‘‘பிசினஸ் தொடங்கணும்னு கனவு. காலை 9க்கு ஆபீஸ் போயிட்டு மாலை 6க்கு திரும்பற ரொட்டீன் ஒர்க் கூடாதுனு பிடிவாதமா இருந்தேன். இப்படி வாழ்ந்து என் கலர்ஃபுல் கனவுகளைத் தொலைக்க விரும்பலை. காலேஜ் ஃபைனல் இயர்ல ‘த ஹாலிடே’ ஆங்கிலப் படம் பார்த்தேன். என் வாழ்க்கையை மாத்தின படம் அது. இப்ப நான் பண்ற விஷயங்கள் எல்லாம் அதுல செய்திருப்பாங்க.
டிரெயிலர் கட் பண்ணுவாங்க. ஷார்ட் ஃபிலிம் எடுப்பாங்க. புரொடக்ஷன் டிசைன் பண்ணுவாங்க. மார்க்கெட்டிங் பண்ணுவாங்க. அப்பவே அவங்களை மாதிரி ஆகணும்னு விரும்பினேன். 2008ல ‘இ.எம்.&சி.’ கம்பெனியை ஆரம்பிச்சேன். அதன் மூலமா கிட்டத்தட்ட நூறு படங்கள் ஒர்க் பண்ணியிருப்பேன். எல்லா வேலைகளையும் நான் ஒருத்தியே இழுத்துப் போட்டு செஞ்சேன். புரொடியூசர் ஆனதும் என் ஃப்ரெண்ட் கிட்ட அதை ஒப்படைச்சிட்டேன்...’’ என்ற ரேஷ்மாவின் பேச்சு, கௌதம் மேனன் பக்கம் திரும்பியது.‘‘கௌதம் சார்கிட்ட ஒரு ரைட்டரா ஒர்க் பண்ற வாய்ப்பு கிடைச்சது.
அப்புறம் நான், வெங்கி, கௌதம் மூணு பேரும் சேர்ந்து தயாரிப்பு நிறுவனம் தொடங்கினோம்...’’ என்ற ரேஷ்மாவிடம் ‘கெளதம் படங்களின் லவ் போர்ஷன்ஸை நீங்கள் எழுதுவதாக பேச்சு அடிபடுகிறதே...’ என்று கேட்டு முடிப்பதற்குள் பலமாகத் தலையசைத்து மறுக்கிறார்.‘‘நீங்க வேற. லவ் போர்ஷன்ஸ்ல கெளதமுக்கு யார் ஹெல்ப்பும் தேவையில்லை. ஒண்ணு தெரியுமா... நான் ஸ்கூல் படிக்கிறப்பவே ‘மின்னலே’ வந்துடுச்சு. அப்பவே அவரோட லவ் சீன்ஸ் பேசப்பட்டது! லவ்வுனு இல்ல... எந்த ஜானர்லயும் யார் உதவியும் அவருக்கு தேவைப்பட்டதில்ல. பெண்களின் உணர்வுகளை அவர் அளவுக்கு புரிஞ்சு வைச்சிருக்கிறவங்க கம்மி.
ஸ்கிரிப்ட்டுல நான்னு இல்ல... யார் ஒர்க் பண்ணியிருந்தாலும் கண்டிப்பா டைட்டில் க்ரெடிட் கொடுப்பார். ‘நீதானே என் பொன்வசந்தம்’ கதையை கேஷுவலா ஒருநாள் அவர்கிட்ட சொன்னேன். இம்ப்ரஸ் ஆனவர், இதையே படமா பண்ணலாம்னு சொன்னார். அப்படித்தான் அந்தப் படம் உருவாச்சு. இளையராஜா சார் மியூசிக்கை பக்கத்துல இருந்து பார்த்தேன். வாழ்க்கைல மறக்க முடியாத தருணம் அது. ஆக்சுவலா ‘நீ.எ.பொ.வ.’ என் ரெண்டாவது ஸ்கிரிப்ட். முதல் ஸ்கிரிப்ட் இன்னும் படமாகலை...’’ என்றவர், யூ டியூப் சேனல் பற்றி விளக்கினார். ‘‘இப்ப எல்லார் கைலயும் மொபைல் வந்துடுச்சு. நெட்ல நிறைய விஷயங்கள் தேடிப் பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க.
அதிலும் நம்ம பங்களிப்பு இருக்கணும்னு கௌதம் ஒருநாள் யோசிச்சார். ‘ஒன்றாக என்டர்டெயின்ட்’ யூ டியூப் சேனல் இப்படித்தான் உருவாச்சு. ஷார்ட் ஃபிலிம்ஸ், இண்டிபெண்டன்ட் மியூசிக் ஆல்பம் எல்லாம் தயாரிக்க ஆரம்பிச்சது திடீர்னுதான். மதன் கார்க்கி, கார்த்திக்னு எல்லாருமே ஃப்ரெண்ட்ஸ். ஒருநாள் பேச்சுவாக்குல ஒரு டாபிக் வந்தது. பாடல்களை ரெடி பண்ணி நம்ம லேப்டாப்புல மட்டும் வைச்சுக்கிட்டா எப்படி... எல்லாரும் இதை ரசிச்சா நல்லா இருக்குமே...இதுக்கு அப்புறமாதான் சிங்கிள் ஸாங்ஸ் பண்ண ஆரம்பிச்சோம். இன்னொரு பார்ட்னரான வெங்கி மூலமா சர்ஜூன் அறிமுகமானார்.
‘லட்சுமி’ குறும்படம் பண்ணினோம். அடுத்து ‘மா’. ரெண்டுமே வைரல். இன்னும் பல அதிரடிகளை அடுத்தடுத்து ‘ஒன்றாக...’ வழியா கொடுக்கப் போறோம். நான் ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகை. அவரை முதல்முறை மீட் பண்ணினப்ப அவருக்கு என்னை தெரிஞ்சிருந்தது. விசாரிச்சார். சர்ப்ரைஸா இருந்தது.‘துருவ நட்சத்திரம்’ ஷூட்டுக்காக துருக்கி போயிருந்தோம். அங்க ஒரு பெரிய பில்லியனருக்கு சொந்தமான ஒரு பிரைவேட் ஏர்கிராஃப்ட்ல ஷூட் பண்ணினோம். நானும் அந்த ஏர்கிராஃப்ட்ல ட்ராவல் பண்ணினேன்! இப்படி ஒரு தயாரிப்பாளரா இருக்கறதால சின்னச் சின்ன சந்தோஷங்கள் நிறைய கிடைக்குது. அதேநேரம் போராட்டங்களும் அதிகம். ஒரு படம் தயாரிக்கறது சிரமமான வேலை.
ரிலீஸ் ஆகுற வரை நிறைய தடைகளைத் தாண்டணும். ஒவ்வொரு நிமிஷமும் சவால்தான். சினிமாவை நேசிக்கறதால இதெல்லாம் பெருசா தெரியலை...’’ என்று சொல்லும் ரேஷ்மாவின் மூன்றாவது ஸ்கிரிப்ட் விரைவில் படமாகப் போகிறது. ‘‘முதல் ஸ்கிரிப்ட் பெரிய ஹீரோவுக்கானது. அதனால அது வெயிட்டிங்குல இருக்கு. மூணாவது ஸ்கிரிப்ட்டை எங்க ஃபேவரெட் கௌதம் வாசுதேவ் மேனன்தான் இயக்கறார். அனுஷ்கா, தமன்னா, கல்கி கோஷ்னு மூணு ஹீரோயின்ஸ். ஒவ்வொரு லாங்குவேஜ்ல ஒவ்வொரு ஹீரோ. ரஹ்மான் சார் மியூசிக். முழுக்க அமெரிக்கால நடக்கற கதை. லைஃப் ஹேப்பியா போயிட்டிருக்கு. வேலை திருப்தியா இருக்கு. ஐ லவ் மை ஜாப்!’’ நிறைவுடன் சொல்கிறார் ரேஷ்மா கட்டாலா.
- மை.பாரதிராஜா
|