மயிலாப்பூர் வள்ளலார் மெஸ்
- திலீபன் புகழ்
உலகில் இதுவரை எத்தனையோ புனிதர்கள், தீர்க்கதரிசிகள், இறைத் தூதர்கள் தோன்றியிருக்கின்றனர். அநேகமாக எல்லோருமே எளியவர்களின் வயிற்றுப் பசியை அன்னமிடுவதன் மூலம் போக்குவதே ‘புண்ணியம்’ என வலியுறுத்தியுள்ளனர். ஆனால், ‘பிறர் பசி போக்குவதே கடவுளை அடையும் வழி’ என்று சொன்னவர் வள்ளலார்தான். 23.05.1867ல் வடலூரில் ‘சத்திய தர்ம சாலை’யில் வள்ளலார் மூட்டிய நெருப்பு இன்றுவரை அணையாமல் எரிகிறது. பசி என்னும் தீயை தீயினால் அடக்கினார் வள்ளலார். பசியாகப் பார்த்த தீ, அருட்பெரும் ஜோதியாக எரிந்து கொண்டிருக்கிறது. அந்த தீக்கு சரியாக இது 150வது வருடம்.
 விளக்கின் வழி பார்ப்பதும் ஒரே ஜோதி, அடுப்பின் வழி பார்ப்பதும் ஒரே ஜோதி. எது ஜீவகாருண்யத்தின் மூலாதாரத்தோடு பசியாற்றுதலில் கொண்டுபோய் வள்ளலாரை இணைக்கச் செய்தது... என்ற கேள்வியுடன் இருபது வருடங்களாக சென்னை மயிலாப்பூரில் காரணீஸ்வரர் கோயில் எதிரே ‘அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் சைவ உணவகம்’ நடத்தி வரும் சத்தியநாதன் அய்யாவைத் தேடிச் சென்றோம். பழைய கட்டடம். ஒருவர் மட்டுமே நுழையக் கூடிய மாடிப் படிக்கட்டுகள். ஐந்து பேர் மட்டுமே அமரும் அளவில் மிகச்சிறிய இடம். வாய் நிறையச் சிரிப்புடன் வரவேற்கிறார் சத்தியநாதன்.
நாற்புறச் சுவர்களிலும் வள்ளலார் படமும் பொன்மொழிகளும். மெல்லியதாக ஒலிக்கிறது அருட்பெரும் ஜோதி பாடல். ‘‘ஆச்சு தம்பி 64 வயசு. சொந்த ஊரு மாமல்லபுரம். பி.ஏ. பொருளாதாரம் முடிச்சதும் அறநிலையத்துறைல உத்தியோகம். சொந்த பந்தம்லாம் சேர்ந்து ஜெயந்திய கல்யாணம் செஞ்சு வச்சாங்க. ரெண்டு பசங்க. மணிகண்டன், குணசேகரன். நல்லபடியா குடும்பம் நகர்ந்துச்சு. எனக்குள்ள இருந்த கலை ஆர்வத்துல வேலையை விட்டுட்டு தஞ்சாவூர் பெயின்டிங், கிளாஸ் ஓவியம்னு பயணிக்க ஆரம்பிச்சேன். ஏற்ற இறக்கமா வாழ்க்கை போச்சு. அந்த நேரத்துல வள்ளலார் பக்தரா இருந்த ஒரு நண்பர் அறிமுகமானார்.
 வள்ளலாரின் வார்த்தைகள்ல நான் மூழ்கிப் போனது அவராலதான். அடிக்கடி அன்னதானம் செய்யும் திருப்பணிக்கும் என்னை அழைச்சுட்டுப் போவார். ஏழைக்கும் பசினு வர்றவங்களுக்கும் சோறு போடுற அந்த தொண்டு ரொம்ப ஈர்த்து சன்மார்க்கத்துல கொண்டுவந்தது ‘அன்னதானம் செய்யற அளவுக்கெல்லாம் வசதி இல்ல. நீங்க செய்ங்க. முடியும் போது நானும் பணம் தர்றேன்’னு அந்த நண்பரை ஊக்கப்படுத்தினேன். உறுதுணையா நானும் பயணிச்சேன். ஒரு முறை வியாபாரத்தை விரிவு பண்ண வங்கிக் கடன் வாங்கினார். அவருக்கு ஜாமீன் கையெழுத்து போட்டேன். ஆனா, நல்ல விஷயத்தை நமக்கு அறிமுகப்படுத்துறவங்க எல்லாம் நல்லவங்களா இருப்பாங்கனு சொல்ல முடியாதே!
அந்த நண்பர் அவ்வளவு பணத்தையும் ஏமாத்திட்டு தலைமறைவாகிட்டார். என் சக்திக்கு மீறின தொகை அது. இருபது வருஷங்களுக்கு முன்னால... ரூ.3 லட்சம்! சொத்தையெல்லாம் வித்து அந்த கடனை அடைச்சேன். அப்படியும் பத்தலை. எல்லா பக்கமும் கடன். சாகக் கூட நினைச்சேன். ஆனா, தற்கொலையை கடுமையா வள்ளலார் எதிர்க்கிறார். கடைசில நீங்கதான் வழினு மானசீகமா வள்ளலார் காலைப் பிடிச்சு அழுதேன். ‘வாழ வழி இல்லை, சாப்பாடு போட தகுதி இல்லைனு ஏன் கலங்குற..! நான் சொல்றேன்... போடு!’னு அவரே சொல்றா மாதிரி உள்மனசு சொல்லிச்சு. இருந்த வீட்டை நானும் என் மனைவி ஜெயந்தியும் சேர்ந்து மெஸ்ஸா மாத்திட்டோம்...’’ மென்மையாகப் பேசும் சத்தியநாதன், தன் மெஸ் மெனுவிலும் காரங்களுக்கு இடம் கொடுப்பதில்லை.
 சாத்வீக உணவு முறைதான். காரம், உப்பு குறைவாகத்தான் இருக்கும். மதிய உணவுடன் கரிசலாங்கண்ணி, தூதுவளை, அரைக்கீரை, சிறுகீரை, முருங்கைக் கீரை, புளிச்ச கீரை என அரிதான் உணவு இங்கே கிடைக்கும்! இரவு இட்லி தோசை. ‘‘ஊரே 30 ரூபாய்க்கு அளவுச் சாப்பாடு தரும்போது, இவர் பத்து ரூபாய்க்கு அன்லிமிட்டட் மீல்ஸ் தந்தார். கேட்டா, ‘சாப்பாட்டுக்குக் காசு வாங்கறதே பாவம். ஜீவகாருண்யத்துக்கு எதிரானது. நாம தொடர்ந்து மக்களுக்கு சாப்பாடு போடணும். அடுத்த நாள் மளிகைப் பொருள் வாங்க இந்தக் காச வாங்கறேன்’பார். பிழைக்கத் தெரியாத ஆளுனு நாலு பேரு திட்டும்போது மனசு கொதிக்கும்.
ஆனா, வயிறு நிறைய சாப்பிட்டு, ‘ரொம்ப நல்லா இருக்கும்மா’னு கையெடுத்து கும்புட்டு மத்தவங்க சொல்றப்ப மனசு அப்படியே பூரிச்சுப் போகுது. எம் புள்ளைங்களுக்கு பெருசா சொத்து சேர்த்து வைக்கலை. ஆனா நிறைய புண்ணியத்தைச் சேர்த்து வெச்சிருக்கோம்...’’ கண்ணீருடன் சிரிக்கிறார் ஜெயந்தி அம்மாள்.‘‘இப்ப ஒரு சாப்பாட்டுக்கு 70 ரூபா வாங்கறேன். அன்லிமிடட் மீல்ஸ்தான். வேலைக்கு ஆள் வைச்சுக்கறதில்ல. கடனை எல்லாம் அடைச்சுட்டோம். எம் பசங்களும் வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டாங்க. இப்ப ஞாயிற்றுக்கிழமை காலைல அன்னதானம் செய்யறேன். என் பசங்களும் விருப்பத்தோட இதை செய்யறாங்க. வாழையடி வாழையா இந்த சோறு போடற ஜீவகாருண்யப் பணி தொடர்ந்து நடத்தா போதும்...’’ கைகூப்புகிறார் சத்தியநாதன்.

கரிசலாங்கண்ணி கீரை துவையல் வெள்ளை கரிசலாங்கண்ணி கீரை - ஒரு கட்டு. காய்ந்த மிளகாய் - 8. உளுத்தம் பருப்பு - சிறிதளவு. மிளகு - ஒரு தேக்கரண்டி. பூண்டு - 8 பல். கொத்தமல்லி விதை - ஒரு தேக்கரண்டி. நல்லெண்ணெய் - சிறிதளவு. உப்பு - சிறிதளவு. புளி - சிறு உருண்டை. பக்குவம்: கீரையை ஐந்து முறைக்கும் மேல் சுத்தமாகக் கழுவி வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பை சிவக்க வறுத்து, மிளகு மற்றும் மல்லியை வறுத்துக் கொள்ளவும். இதனை தனியே எடுத்து வைத்து, அதே பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு கீரையை வதக்கி, ஆறியபின் லேசான சூட்டில் மத்தினால் கடைந்தால் கரிசலாங்கண்ணி கீரை துவையல் தயார். தூதுவளை ரசம் தூதுவளை கீரை - அரைக் கட்டு. மிளகு - 3 தேக்கரண்டி. சீரகம் - 3 தேக்கரண்டி. பூண்டு - 15 பல். தக்காளி - இரண்டு. புளி - எலுமிச்சம்பழ அளவு. காய்ந்த மிளகாய் - 8. கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு. பெருங்காயம் - சிறிதளவு. பக்குவம்: மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றை அம்மியில் தட்டி தனியாக வைக்கவும். புளியை தண்ணீரில் ஊறவைத்து சக்கையை நீக்கி புளிக்கரைச்சலாக எடுத்து தக்காளிப் பழத்தை மசித்து புளிக்கரைச்சலோடு சேர்த்து குறைவான தீயில் சுடவைத்து, தட்டிவைத்த மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து கொதிக்க விடவும். தூதுவளை இலை, கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கொதிக்கும் முன் இறக்கவும். தனியாக எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து ரசத்தை அதில் கொட்டி இறக்கினால் தூதுவளை ரசம் ரெடி.
படங்கள்: ஆ.வின்சென்ட் பால், ஆர்.சி.எஸ்.
|