ஊஞ்சல் தேநீர்



யுகபாரதி - 65

தாமிரபரணிக் கரையில் அமைந்திருந்த ஆட்சியர் அலுவலகத்தை தொழிலாளர்கள் நெருங்கக் கூட அனுமதிக்காத அன்றைய அரசு, பலரை படுகாயப்படுத்தியதுடன் பதினேழு பேரை சுட்டுக்கொன்றது. அந்தக் கோர சம்பவத்தை எதிர்த்து தமிழகமெங்கும் போராட்டங்கள் வெடித்தன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியோ இன்னும் ஒருபடி மேலே போய், கொடூரத்தைக் கண்டித்து ஒலிநாடா ஒன்றை வெளியிட விரும்பியது. பாடல்களை எழுதித்தரும்படி என்னிடமும் கேட்கப்பட்டது. ‘மனுநீதி சோழன் ஆட்சி / மக்கி மக்கி இத்துப்போச்சு / மனு கொடுக்கப் போன பசு / மணி விழுந்து செத்துப் போச்சு...’ என்று நான் எழுதிக்கொடுத்தேன். நண்பர் இலக்கியன் அப்பாடலுக்கான இசையை அமைத்திருந்தார்.

தேர்க் காலில் அடிபட்ட கன்றுக்காக  நீதிகேட்ட பசுவின் கதையைக் குறியீடாக வைத்து, நான் எழுதிய அப்பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. தேர்தல் சமயமென்பதால் பிரசாரக் கூட்டங்களில் தொடர்ந்து ஒலித்த அப்பாடலைக் கேட்ட நல்லகண்ணு, தனிப்பட்ட முறையில் என் எழுத்திலிருந்த கோபத்தை உணர்ந்து பாராட்டினார். அதுமுதல் என் எழுத்து முயற்சிகள் எதுவானாலும், கவனித்து கருத்துகளைச் சொல்லுவார். ஆழ்ந்த இலக்கியப் பரிச்சயமுடைய அவர், சொற்களுக்கு இடையேயுள்ள மெளனங்களையும் புரிந்துகொள்பவர். அதிகாலையிலேயே பத்திரிகைகளை வாசித்து, அதில் என் பெயர் வந்திருந்தால் தொலைபேசியில் அழைத்து வாழ்த்தைத் தெரிவிப்பார்.

எனக்கு மட்டுமல்ல, என்போன்ற பல இளம் படைப்பாளர்கள் அவருடைய வாழ்த்துகளால் வளர்ந்திருக்கிறார்கள். ‘வணக்கம் காம்ரேட்’ என்றொரு கவிதை. அக்கவிதையில் இடதுசாரிகளின் புரட்சிகர எண்ணங்களை எள்ளலுடன் எழுதிவிட்டேன்.‘புரட்சி வரும்’ என்கிற கம்யூனிஸ்ட்டுகளின் முழக்கத்திற்கும், ‘ஏசு வருகிறார்’ என்கிற கிறிஸ்தவர்களின் நம்பிக்கைக்கும் அதிக வித்தியாசமில்லை என்பதுபோல அமைந்த கவிதை அது. இடதுசாரிகளை விமர்சித்த அக்கவிதை, அப்போதைய என்னுடைய அரசியல் போதாமையினால் எழுதப்பட்டது. சொன்ன தேதியில் வருவதற்குப் புரட்சி ஒன்றும் பால்பாக்கெட் இல்லையென்பது அந்நாளில் எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

‘‘இருபத்தி இரண்டாவது நாள் அடை வைத்த முட்டை குஞ்சு பொறிக்கவில்லையென்றால், அது கூமுட்டை...’’ என்பதாக விமர்சித்த நான், எதார்த்தத்தை எழுதுகிறேன் என்னும் பேரில் எதை எதையோ எழுதியிருக்கிறேன். இடதுசாரி குடும்பப் பின்னணியுடைய நானே, கம்யூனிஸ்ட்டுகளை அவ்வாறு எழுதியது நல்லகண்ணுவுக்கு அதிருப்தியைத் தந்திருக்கிறது. ஆனால், அதை அவர் வெகுகாலம்வரை வெளிப்படுத்தவில்லை. ஆண்டுகள் செல்லச் செல்ல, சரியான தடத்தையும் புரிதலையும் நான் அடைந்த பிறகே, உள்ளத்தில் இருந்ததை மெலிதாக உணர்த்தினார்.

சமூகத்தில் நிகழும் எந்தப் பிரச்னைக்கும் குரல் கொடுக்காமல், எல்லாப் பிரச்னைகளுக்கும் களத்தில் நின்று போராடுபவர்களைக் கிண்டலடித்துக் கவிதை எழுதியது இரக்கமற்ற செயலென்று இப்போது படுகிறது. மாற்றுக்கருத்தே ஆனாலும், அதை அக்கறையுடன் எதிர்கொள்பவர்களைக் காயப்படுத்திய என்செயல் கண்டிக்கத்தக்கது. தோழர் நல்லகண்ணு ஒரே வார்த்தையில் என் கவிதைக்கும் அறியாமைக்கும் பதிலடியைத் தந்திருக்க முடியும். ஆனால், அவர் அப்படியெல்லாம் செய்யவில்லை. எதிர் முகாமிற்குப் போன எனக்கு எப்போது முதிர்ச்சி வருகிறதோ, அப்போது சொல்லிக் கொள்ளலாம் என்றே இருந்திருக்கிறார். காலம் சிலவற்றை மாற்றும்.

மாற்றாத பட்சத்தில் பார்த்துக்கொள்ளலாம் எனவும் எண்ணியிருக்கலாம். மார்க்சியம் என்பது படிப்பல்ல. படிப்பினால் வரும் அறிவுமல்ல. அது ஒரு பக்குவம். அந்தப் பக்குவத்தைப் பெற, இருப்பதை எல்லாம் இழக்கவேண்டும். இல்லாதவர்களின் கண்களிலிருந்து உலகத்தை அளக்க வேண்டும். வயதினால் வருவதே பக்குவமென்று பலபேர் நினைத்திருக்கிறோம். உண்மையில், கொள்கையாலும் கொண்டிருக்கும் நம்பிக்கையாலும் விளைவதே அது.‘வணக்கம் காம்ரேட்’ கவிதைக்கு மறுப்புக் கட்டுரை எழுத எத்தனையோ முறை நினைத்ததாகவும், ‘‘நாமே நம்முடைய பிள்ளைக்கு மறுப்பு எழுதுவதா..?’’எனத் தயங்கியதாகவும் பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு, என் நூல் வெளியீட்டில் நெகிழ்வுடன் பகிர்ந்துகொண்டார்.

நீண்ட காத்திருப்பு. ஆனாலும், அவருடைய நம்பிக்கை என் விஷயத்திலும் நல்ல பலனையே தந்திருக்கிறது. உடனே அவர் தன்னுடைய மறுப்பையோ விமர்சனத்தையோ தெரிவித்திருந்தால், அப்போதிருந்த என் மனநிலை அதை ஏற்றிருக்க வாய்ப்பில்லை. நூல் வெளியீட்டில் பேசிய அவர் “இனி மறுப்பே எழுதவேண்டியதில்லை. சரியான திசைக்கு வந்துவிட்டீர்கள்...” என மகிழ்ச்சியைத் தெரிவித்தார். பதினேழு ஆண்டுகள் கழித்து அவரிடமிருந்து அப்படி ஒரு வார்த்தை வருமென்று நான் எதிர்பார்க்கவில்லை. அரங்கே கைதட்டி ஆரவாரம் செய்த நொடியில், குற்றமிழைத்த நான் குறுகுறுப்பை அடைய நேர்ந்தது.

என்மீது அவருக்கிருந்த மெல்லிய அதிருப்தியைக்கூட வெளிப்படுத்தாமல், அதே புன்னகையுடனும் அதே அன்புடனும் அவரால் எப்படி பழக முடிந்தது என்பதுதான் ஆச்சர்யம். கருப்பு அவர் வண்ணமானாலும், சிவப்பே சித்தாந்தமென பல சந்தர்ப்பங்களில் உணர்த்தியிருக்கிறார். ‘கணையாழி’யில் பணியாற்றிக்கொண்டே அவரிடம் தினமும் பாடம் கேட்கப் போய்விடுவேன். ஒருநாள் இருநாள் அல்ல, ஆறு ஆண்டுகள். ஒவ்வொரு நாளும் பாலன் இல்லத்தில் அமைந்திருந்த நூலகத்தில் கழிந்த தருணங்கள் மறக்கமுடியாதவை. கட்சித் தோழர்களுக்கு பாலன் இல்லத்திலேயே மதிய உணவைச் சமைப்பார்கள்.

வரிசையாக ஒவ்வொருவரும் நின்று, உணவைத் தாமே எடுத்துத் தட்டில் போட்டுக்கொள்ள வேண்டும். பல நாள் அந்த வரிசையில்  கடைசி ஆளாக தோழர் நல்லகண்ணு நிற்பதைப் பார்த்திருக்கிறேன். ஓர் அகில இந்தியக் கட்சியின் மாநிலச் செயலாளர் என்னும் எண்ணமே அவரிடம் இருந்ததில்லை. அதே வரிசையில் தோழர் கே.டி.கே.தங்கமணியும், சி.மகேந்திரனும், ஏ.கே.கோபுவும் இன்ன பிறரும் நின்றிருக்கிறார்கள். ‘இலட்சியவாதம் பொய்த்துவிட்டது, இனி இடதுசாரிகள் எழவே வாய்ப்பில்லை...’ என்பவர்களுக்கு இந்தக் காட்சியைக் காணும் சந்தர்ப்பம் கிடைத்திருக்காது.

பாலன் இல்ல நூலகத்தில், பழந்தமிழ் இலக்கிய நூல்கள் இருந்தன. தொ.மு.சி.ரகுநாதனின் ‘பாரதி காலமும் கருத்தும்’ என்ற நூலை அங்கிருந்தே நான் வாசித்தேன். வானமாமலை தொகுத்த ‘நாட்டார் பாடல் தொகுப்பு’, ‘மார்ச்சிய, பெளத்த தத்துவ நூல்கள்’ என எண்ணிக்கையில் அடங்காத எத்தனையோ நூல்கள் அங்கிருந்தன. வாசித்த நூல்களில் எழும் சந்தேகங்களைத் தீர்க்க முன்னறையில் தோழர் நல்லகண்ணு அமர்ந்திருப்பார். எது குறித்தும் அவரிடம் இயல்பாகக் கேட்கலாம். இளவயது முதலே பாரதி என்றால் அவருக்கு உயிர். பாரதி மணி மண்டபம் கட்ட நிதி திரட்டிக் கொடுத்தவர்களில் அவர் முக்கியமானவர்.

பொதுவாக கம்யூனிஸ்ட் கட்சியில் முழுநேர ஊழியர்களாக இருப்பவர்கள், கட்சி தரும் சொற்ப பணத்தில்தான் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளவேண்டும். வருமானத்திற்கு வேறு வழியில்லை. ஊர்தோறும் கட்சித் தோழர்கள் வசூலித்துத் தரும் பணத்தில்தான் அவர்கள் வண்டி ஓடும். அதிலும் மிச்சம் பிடித்து, வெளியூரிலிருந்து வரும் கட்சித் தோழர் களின் வழிச்செலவுக்கு பணம் கொடுப்பவரே நல்லகண்ணு. ஒருமுறை மணப்பாறையில், ஆர்வமுடைய கட்சித் தோழர்கள் பொதுக்கூட்டத்திற்கு நல்லகண்ணுவை அழைத்திருக்கிறார்கள். போனால், ஊரே திருவிழாக் கோலம் பூண்டிருக்கிறது. வீதியெங்கும் குழல் விளக்குகள். அலங்கரிக்கப்பட்ட மேடை, தர்பார் நாற்காலி என தடபுடலாக ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

தலைவரை மகிழ்விக்க கட்சித் தொண்டர்கள் இப்படியெல்லாம் செய்வது வழக்கம்தான். ஆனால், தோழருக்கோ முகம் சுருங்கிவிட்டது. “நாட்டுக் கஷ்டத்தை இத்தனை விளக்குப் போட்டா விளக்குவது...” எனக் கேட்டிருக்கிறார். “ஆதாயத்துக்காக செய்யப்படும் அரசியலுக்குத்தான் விளம்பரம் தேவை. நாமோ, அன்றாடங் காய்ச்சிகளின் வாழ்வுக்குப் போராடுபவர்கள். இதற்கு செலவழித்த காசை கட்சி நிதியாகக் கொடுத்திருந்தால் தேர்தல் செலவுக்கு ஆகியிருக்குமே...” எனவும் சொல்லியிருக்கிறார். பட்டினப்பாக்கத்தில் இருந்து ‘பாலன் இல்லம்’ அமைந்திருந்த தியாகராய நகருக்கு, கட்சி கொடுத்த வாகனத்தில் வந்துகொண்டிருந்த அவர், திருமுல்லைவாயிலுக்கு குடிபெயர்ந்ததும் பெட்ரோல் செலவு அதிகமாகும் எனச்சொல்லி,

மாநகரப் பேருந்தைப் பயன்படுத்தியதை நானறிவேன். கட்சிதானே பெட்ரோலுக்குச் செலவழிக்கிறது, நமக்கென்ன கவலை? என அவர் இருந்துவிடவில்லை. ஏழை எளிய மக்கள் வசூலித்துத் தரும் பணத்தின் மதிப்பையும், அதன் வியர்வை வாசத்தையும் விளங்கிக்கொண்டவரே நல்லகண்ணு. அகில இந்தியாவிலும் நல்லகண்ணுவைத் தவிர, மகளின் திருமணத்திற்கு ஐநூறு ரூபாயோடு போன ஒரு கட்சித் தலைவரைக் காட்டுவதற்கு வழியில்லை. கூட்டம் நடத்திய கட்சித் தோழர்களின் சிரமத்தை உணர்ந்து, விடுதிகளில் தங்காமல், பேருந்து நிலையத்திலேயே படுத்துறங்கிய அவரையே, வியாபார ஊடகங்கள் தோற்ற அரசியல் ஆளுமையாகச் சித்திரிக்கின்றன.

(பேசலாம்...)

ஓவியங்கள்: மனோகர்