M.S.நோயின் விபரீதங்கள்



சுடிதார் பேண்ட் கழண்டு விழறது கூடத் தெரியாது...

‘‘எப்ப என் சுடிதார் பேண்ட் இடுப்புல இருக்கற உணர்வே தெரியாம கழண்டு விழுந்துச்சோ அன்னைக்கு எனக்கிருக்கிற ‘எம்.எஸ்.’ நோய் எவ்வளவு பயங்கரமானதுனு புரிஞ்சுது. அதுல இருந்து பதினேழு வருஷங்களா சொல்ல முடியாத கஷ்டங்களை அனுபவிச்சிட்டு வரேன். இந்நோயைக் குணப்படுத்த மருந்தே இல்ல. இருந்தாலும் நம்பிக்கையை இழக்கல...’’ சொல்லும்போதே வார்த்தைகள் கம்பீரம் கொள்கின்றன மகேஸ்வரியின் குரலில். இந்திய எம்.எஸ். சொசைட்டியின் உறுப்பினர் இவர்.‘மல்டிபிள் ஸ்கிளெரோஸிஸ்’ என்னும் தண்டுவட மரப்பு நோயின் சுருக்கமே ‘எம்.எஸ்’. உடலை மரத்துப் போகச் செய்வதுடன், ஒவ்வொரு உறுப்பையும் பாதித்து இறுதியில் உடலை முற்றிலுமாக முடங்கச் செய்கிறது இந்த நோய்.

சமீபத்தில் இந்திய எம்.எஸ். தினத்தை முன்னிட்டு இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்றிணைந்து, சென்னை பெசன்ட் நகர் பீச்சில் ஊர்வலம் ஒன்றை நடத்தினர். குறிப்பிட வேண்டிய விஷயம், ‘மல்டிபிள் ஸ்கிளெரோஸிஸ் சொசைட்டி ஆஃப் இந்தியா (MSSI)’ என்ற அமைப்பு இந்த நோய் தாக்கியவர்களுக்காகச் செயல்பட்டு வருகிறது என்பது.‘‘எம்.எஸ். இருக்குனு எனக்கு 1999லதான் தெரிஞ்சது. ஆரம்பத்துல, கண் பார்வைல கோளாறு வந்துச்சு. டாக்டர்கிட்ட போனதும் ரெட்டினால பிரச்னையிருக்கும்னு டெஸ்ட் பண்ணினார். ஆனா, எதுவும் இல்லைனு ரிசல்ட் வந்துச்சு. அதுக்கப்புறம் உடல்ல நிறைய பிரச்னைகள் ஏற்பட்டுச்சு. மறுபடியும் டாக்டர்கிட்ட போனேன்.

அவங்க, ‘மல்டிபிள் ஸ்கிளெரோஸிஸ்’னு டெஸ்ட்ல கன்பார்ம் பண்ணினாங்க...’’ துரதிர்ஷ்டமான கணங்களைத் திரும்பிப் பார்த்த மகேஸ்வரி சிறிது நேரம் இடைவெளிவிட்டு தனது பேச்சைத் தொடர்ந்தார்.‘‘இந்நோய் முதுகுத் தண்டுவடத்துல இருந்து மூளைக்குச் செல்ற நரம்புகளைப் பாதிக்கிறதா சொல்றாங்க. குணப்படுத்த முடியாதுனு தெரிஞ்சதும் உடைஞ்சு போயிட்டேன். ‘மாத்திரைகள் வழியா கன்ட்ரோல் பண்ண முடியும்’னு டாக்டர்களும், நண்பர்களும் ஆறுதல் சொன்னாங்க. இது பரம்பரை வியாதி இல்ல. தொற்றுநோயும் கிடையாது. ஆனா, எப்படி வருதுனு இப்பவரை யாருக்கும் தெரியல. இதனோட ஆரம்ப அறிகுறியே மரத்துப் போறதுதான்.

உடல்ல எந்த இடம் வேணாலும் மரத்துப் போகலாம். அப்புறம், சில நேரங்கள்ல சிறுநீர் கன்ட்ரோல் இல்லாம போகும். அடுத்து, கண்பார்வை குறைஞ்சிட்டே வரும். நான் 5.8 அடி உயரம் இருந்தவ. இப்ப, 5.4 அடியா சுருங்கிட்டேன்...’’ தனது வலிகளை மறைத்துக்கொண்டு புன்னகைத்த மகேஸ்வரி, அருகிலிருந்த சண்முகநாதன் என்பவரிடம் அழைத்துப் போனார். கையில் ஸ்டிக்குடன் தள்ளாடியபடி நிற்கும் அவருக்கு வயது 68. உற்சாகம் பொங்க பேசினார் மனிதர். ‘‘இந்நோய்க்கு ட்ரீட்மென்ட் இல்லதான். அதுக்காக வருத்தப்படுறதுல எந்த அர்த்தமும் இல்ல. அதை அக்செப்ட் பண்ணிட்டு வாழ்க்கையைத் தைரியமா எதிர்கொள்ளணும்.

நான் இருபது வருஷங்களா பிசியோதெரபி மூலமா வாழ்க்கையைத் தொடர்றேன்...’’ என்றார் நம்பிக்கையாக. ஸ்மிதாவும் அப்படித்தான். 19 வயதில் இந்நோய் அவரைத் தாக்கியிருக்கிறது. இப்போது 36 வயதாகும் அவர் எம்.எஸ். தாக்கியவர்களை ஊனமுற்றோர் சிறப்புச் சட்டத்தில் சேர்க்க போராடி வெற்றியும் கண்டிருக்கிறார். ‘‘எம்.எஸ். தாக்கினப்ப என்ன செய்றதுனே தெரியலை. படுத்த படுக்கையாகிட்டேன். இன்னைக்கு வீல் சேர் துணையோடு வாழ்ந்துட்டிருக்கேன். ஆரம்பத்துல இந்நோயை ஊனமுற்றோர் சட்டத்துல சேர்க்கல. அதுக்காக போராடினோம்.

இப்ப, சட்டத்துக்குள்ள வர்றதால இனி படிப்பு, வேலைனு நிறைய சலுகைகள் கிடைக்கும்...’’ என்கிறவரைத் தொடரும் கென்சருக்கும் வயது முப்பதாறுதான்.‘‘இப்ப ஒரு நிறுவனத்துல பராமரிப்பு பிரிவுல வேலை பார்க்கறேன். நாலு மணி நேரம்தான் வேலை செய்வேன். மாத்திரைகள் எடுத்துக்கிறதால ஓரளவு நடமாட முடியுது...’’ என்கிறார் சோகமாக.‘‘எம்.எஸ். பத்தின விழிப்புணர்வு பரவலாக வேணும்...’’ என கோரிக்கை வைக்கிறார் ‘MSSI’ சென்னை சொசைட்டியின் தலைவர், ஆன் கோன்சால்வேஸ்.‘‘எம்.எஸ். தாக்கினவங்க எங்க அமைப்போட இணைஞ்சு நம்பிக்கையா வாழ முன்வரணும்.

அப்புறம், இந்நோய்க்கான ஒரு ஊசியோட விலை 9 ஆயிரத்திலிருந்து 80 ஆயிரம் ரூபா வரை ஆகும். இத, பணக்காரரா இருந்தா கூட சமாளிக்கறது கஷ்டம். அதனால தமிழகத்துல இருக்கிற எல்லா அரசு மருத்துவமனைகள்லயும் இந்நோய்க்கான மருந்துகள், ஊசி கிடைக்கிற மாதிரி ஆவன செய்ங்கனு அரசுகிட்ட கோரிக்கை வச்சிருக்கோம். இப்ப கூட தஞ்சாவூர், பொள்ளாச்சி பக்கமிருந்து மருந்து கிடைக்கலைனு போன் பண்ணி சொல்றாங்க. ரொம்ப வருத்தமா இருக்கு. இதைக் கொஞ்சம் சரி செய்தா நல்லாயிருக்கும்...’’ என்கிறார் ஆன் கோன்சால்வேஸ்.         


எம்.எஸ். டேட்டா

*இந்நோயை 1868ம் வருடம் கண்டறிந்தவர் ‘நரம்பியல் துறையின் தந்தை’ என்றழைக்கப்படும் ழான் மார்ட்டின் சர்கோட்.
*ஆனால், இவருக்கு முன்னரே பிரிட்டிஷ் நோயியல் பேராசிரியர் ராபர்ட் கார்ஸ்வெல் மற்றும் பிரான்ஸ் உடற்கூறு பேராசிரியர் ழான் க்ருவேலியர் இருவரும் இந்நோயின் மருத்துவ அறிகுறிகளைக் குறிப்பிட்டுள்ளனர்.
*இப்போது லண்டனிலிருந்து செயல்படும் ‘மல்டிபிள் ஸ்கிளெரோஸிஸ் இன்டர்நேஷனல் ஃபெடரேஷன்’ என்ற அமைப்பு உலகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இவர்கள் ஒவ்வொரு ஆண்டும்
மே மாதம் எம்.எஸ். தினத்தைக் கடைப்பிடிக்கிறார்கள்.
*உலகம் முழுவதும் சுமார் 20 லட்சம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
*பொதுவாக 20 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்களைத்தான்
இந்நோய் அதிகமாகத்  தாக்குகிறது.

பயம் தேவையில்லை!
‘‘மூளையில லட்சக்கணக்கான எலக்ட்ரிக்கல் சர்க்கியூட் இருக்கு. இதுல, நரம்பிழைகளைப் பாதுகாக்குற ‘மைலீன்’ முக்கியமானது. இந்த மைலீன் பாதிப்படையும்போது ஒரு நரம்பு செல்லுல இருந்து இன்னொரு நரம்பு செல்லுக்கு போகிற தொடர்பு அறுந்துடும். அப்ப, பல விதமான பிரச்னைகள் ஏற்படும். இந்த மைலீனை பாதிக்கிற வியாதிதான் ‘மல்டிபிள் ஸ்கிளெரோஸிஸ்’.இது மூளை மற்றும் தண்டுவட நரம்புகளை மட்டும்தான் பாதிக்கும். மற்ற எந்த நரம்புகளையும் பாதிக்காது. அடுத்து, உங்க நோய் எதிர்ப்பு சக்தியே உங்க உடலைத் தாக்கும். இதை ‘Auto Immune Disease’னு சொல்வோம்.  பொதுவா வைரஸ், பாக்டீரியா தாக்கும்போது அதை எதிர்த்துப் போராடுறது நம் நோய் எதிர்ப்பு சக்திதான்.

ஆனா, இங்க நண்பனே உங்க எதிரியா மாறும்போது பாதிப்புகள் நிறைய இருக்கும். அப்புறம் இந்நோய்,  மையத்துல பாதிப்பை ஏற்படுத்துறதால பக்கவாதம் மாதிரியான நோய்கள் வரும். ஒரு காலோ, கையோ அல்லது இரண்டுமே முடங்கலாம் அல்லது ஒரு கண்ணிலோ அல்லது இரண்டிலுமோ பார்வை மங்கும்.  இதெல்லாம் ஆரம்பகட்ட அறிகுறிகள். இந்த மாதிரி ஏதாவது தெரிஞ்சா உடனடியா மருத்துவரை அணுகுறது நல்லது. இந்நோயில மூணு வகை இருக்கு. முதல் நிலைய ஆரம்பகட்டம்னு சொல்றோம். இதுல, எல்லா மைலீனும் பாதிச்சிட்டே இருக்கும். இதுக்கு மருத்துவம் பெரிசா பண்ண முடியாது. அடுத்தது, அப்பப்ப வந்திட்டு போற ‘Relapsing-Remitting M.S’.

இந்நோய்தான் இப்ப இங்க நிறைய பேருக்கு இருக்கு. இது எப்படின்னா, கொஞ்சநாள் நல்லாயிருக்கும். அப்புறம், அட்டாக் பண்ணும். பிறகு, மறுபடியும் நல்லாயிருக்கும். அப்புறம் மீண்டும் அட்டாக் பண்ணும். இப்படியே தொடர்ந்து அட்டாக் பண்றதை மூணாவது வகையா பிரிக்கிறோம். இந்நோய் ஏன் வருது எப்படி வருதுனு இதுவரை கண்டுப்பிடிக்கப்படலை. இப்போதைக்கு, பாதிப்புக்கு மருந்தும், திருப்பித் தாக்காமல் இருக்க ஊசியும் இருக்கு. இது சம்பந்தமா கோடிக்கணக்கான ஆய்வுகள் உலகம் முழுதும் நடந்திட்டு இருக்கு. இதுல புரியாத ஒரு விஷயம் காலநிலை ப்ளே பண்றதுதான். சூரிய வெளிச்சம் குறைவா இருக்கிற நாடுகள்ல இந்த வியாதி அதிகமாவும், வெப்பம் அதிகமா இருக்கிற நாடுகள்ல நோய் தாக்கம் குறைவாவும் இருக்கு.

வைட்டமின் ‘டி’ இந்நோய் வராமல் தடுக்குதுனு ஒரு கருத்து இருக்கு. இப்போதைக்கு ஒரே ஆறுதல், 80 ஆயிரம் ரூபா வரைக்குமான மருந்துகளை அரசு மருத்துவமனைகள்லயே இலவசமா பெறமுடியும் என்பதுதான். இந்நோய் தாக்கினதுக்கு சிகிச்சை எடுப்பதோடு அடுத்து அட்டாக் வராம தடுக்கவும் தொடர்ந்து சிகிச்சை எடுக்கணும். இப்ப, இந்த இரண்டு சிகிச்சையுமே அரசு மருத்துவமனைகள்ல தரப்படுது. அதனால, இந்நோய் பத்தின பயம் தேவையில்லை...’’ என்கிறார் சென்னை மருத்துவக் கல்லூரி நரம்பியல் துறைப் பேராசிரியரும், எம்.எஸ். நோய் சிறப்பு மருத்துவருமான லட்சுமி நரசிம்மன்.

- பேராச்சி கண்ணன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால், ஆர்.சி.எஸ்.