காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்
யுவகிருஷ்ணா - 46
“கொலம்பிய மக்களை அமெரிக்காவுக்கு அடிமைப் பத்திரம் எழுதித் தரும் சட்டங்களை அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும்...” ரேடியோவில் எம்-19 கொரில்லாக்கள், சுப்ரீம் கோர்ட் கட்டிடத்தை ஆக்கிரமித்ததுமே விடுத்த அறைகூவல் இதுதான். “புனிதமான சுப்ரீம் கோர்ட் வளாகத்தில் ஒரே ஒரு துளிகூட ரத்தம் சிந்தக்கூடாது...” என்று அதிபர் ஆணையிட்டிருப்பதாக அரசாங்கம் அலறிக்கொண்டே இருந்தது. ஆனால் - பின்னணியில் இராணுவ நடவடிக்கைக்கு திட்டங்கள் தீட்டப்பட்டுக் கொண்டிருந்தன. சட்டத்தின் ஆட்சியை கொலம்பியாவில் உறுதி செய்ய நீங்கள் ‘என்ன வேண்டுமானாலும்’ செய்துகொள்ளலாம் என்று அதிபரே நேரடியாக இராணுவத் தளபதிகளிடம் சொன்னதாகக் கேள்வி.
 இதற்கிடையே பிணைக்கைதியாக வைக்கப்பட்டிருந்த சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி, அதிபருடன் தொலைபேசியில் பேச முன்னெடுத்த முயற்சிகள் வீணானது. ஒருவேளை அந்த போன் அழைப்பை தான் எடுத்துவிட்டால், ஒருவகையில் கொரில்லாக்களோடு சமரசமாகப் போக வேண்டிய இக்கட்டு ஏற்பட்டு விடுமோ என்றுகூட அதிபர் அஞ்சியிருக்கலாம். ஐந்து மாடி பிரும்மாண்ட கட்டிடம். முன்னூறுக்கும் மேற்பட்டவர்கள் கொரில்லாக்களின் பிடியில் சிக்கியிருக்கிறார்கள். இவர்களில் பொதுமக்கள் மட்டுமின்றி வக்கீல்களும், நீதிபதிகளும்கூட கணிசமாக அடங்கியிருந்தார்கள். கட்டிடத்தில் ஆங்காங்கே குண்டுகள் வைக்கப்பட்டிருக்கின்றன.
கட்டிடத்தை இராணுவம் முற்றுகையிட்டு, உறுதியான நடவடிக்கைகளுக்கான ஆணையை எதிர்பார்த்து வில்லில் பூட்டப்பட்ட நாணை போல தயாராக இருக்கிறது. இதற்கிடையே கட்டிடத்தின் இரண்டாம் தளத்தில் இருந்து திடீரென்று கரும்புகை சூழ சுற்றி வளைத்திருந்த இராணுவ அதிகாரிகள் பதைபதைத்துப் போனார்கள். ஆணை வருவதற்கு முன்பே அவசரப்பட்டு சில வீரர்கள் புகை வந்துகொண்டிருந்த தளத்தை நோக்கி சுடத்தொடங்கினார்கள். அவர்களை அடக்கிய அதிகாரி ஒருவர், மெகாபோனில் கொரில்லாக்களோடு பேசத்தொடங்கினார்.“அங்கே என்ன எழவுதான் நடக்கிறது? ஏன் இவ்வளவு புகை மூட்டம்? ஒரே ஒரு உயிர் பறிபோனால்கூட கொலம்பிய மக்களுக்கு பதில் சொல்ல நீங்கள் கடமைப்பட்டவர்கள் ஆவீர்கள்...”
பதிலுக்கு கொரில்லாக்களும் சத்தமாக கொக்கரித்தனர். “ஹலோ ஆபீஸர். உங்கள் இராணுவம் கொலம்பிய மக்களுக்கு விசுவாசம் காட்டுகிறதா, அமெரிக்காவுக்கு அடிவருடுகிறதா என்று மக்களுக்குத் தெரியும். உங்களைக் காட்டிலும் கொலம்பியர்கள் மீது உயிராய் இருப்பவர்கள் நாங்கள்தான். எங்களால் இங்கே ஒரே ஒரு உயிர்கூட போகாது...”“அப்புறம் ஏன் அங்கே தீ? குளிர் காய்ந்துகொண்டிருக்கிறீர்களா?”“இல்லை. தீபாவளி கொண்டாடுகிறோம்...” சொல்லிவிட்டு ‘ஆட்டம் ஆரம்பமாகட்டும்’ வீரப்பன் மாதிரி சிரிக்கத் தொடங்கினார்கள். கடுப்பான இராணுவ வீரர்கள் வானத்தை நோக்கி சுட்டு, கொரில்லாக்களை வெறுப்பேற்றத் தொடங்கினார்கள்.
 கொரில்லாக்களோ இவர்களைப் போல துப்பாக்கிக் குண்டுகளை வீணடிக்கவில்லை. சுப்ரீம் கோர்ட் கைப்பற்றப்பட்ட அன்று இரவு, இராணுவம் ஏதேனும் மீட்பு நடவடிக்கையை எடுக்குமென்று உள்ளே இருந்த பிணைக்கைதிகள் எதிர்பார்த்தார்கள். மாறாக இராணுவமோ கட்டிடத்தின் மின்சாரம், தண்ணீர் இணைப்பு போன்றவற்றை முடக்குவதிலேயே காலம் செலுத்திக் கொண்டிருந்தது. அன்றைய இரவு முழுக்கவே கொரில்லாக்களுக்கும், இராணுவத்துக்கும் ஆடுபுலி ஆட்டம்தான். இரு தரப்புமே ஒரு நொடி கூட கண்ணசரவில்லை. மறுநாள் விடிந்தது. தங்களுக்கு ஏதேனும் விடியல் பிறக்காதோ என்று பிணைக்கைதிகள் ஆவலாக ரேடியோவை கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
“அரசாங்கம் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறது...” என்றுதான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்களே தவிர, உருப்படியான நடவடிக்கையோ பேச்சுவார்த்தையோ நடப்பதற்கு அறிகுறியே இல்லை. எம்-19 கொரில்லாக்களும் கொஞ்சம் மிரண்டுதான் போயிருந்தார்கள். உலகமே மூக்கின் மீது விரல் வைக்குமளவுக்கு ஒரு சம்பவத்தை நிகழ்த்திக் காட்டியிருக்கிறோம். இந்த சுண்டைக்காய் கொலம்பியா அரசாங்கம், எருமைத் தோலில் கொசு கடித்தது மாதிரி நடந்துகொள்கிறதே என்று நினைத்தார்கள். காலை 8.30 மணியளவில் கட்டிடத்தின் வாயிலில் ஒருவர் தள்ளாடித் தள்ளாடி நடந்து வந்தார்.
இராணுவத் துப்பாக்கிகள் குறிவைத்திருந்த நிலையில் அவர் கை இரண்டையும் தூக்கிக் கொண்டே வெளியே வந்தார். அவரிடம் கொரில்லாக்களின் செய்தி இருந்தது. கட்டிடத்துக்கு உள்ளே மருத்துவக் குழுவினரை அனுப்புவது தொடர்பான அனுமதி, பேச்சுவார்த்தையைத் தொடங்க யார் நேரில் வரவேண்டும் என்பதைப் போன்ற குறிப்புகளை கொரில்லாக்கள் கொடுத்திருந்தனர். இராணுவ அதிகாரிகள் அவரிடம் கட்டிடத்துக்குள் என்ன நிலைமை என்று பல்வேறு கேள்விகளால் துளைத்தெடுத்துக் கொண்டிருந்தனர். முந்தைய நாள் மாலை திடீரென கரும்புகை கட்டிடத்தில் இருந்து வெளிவந்தது குறித்துதான் அவர்களது அக்கறை இருந்தது.
“கோர்ட் ஃபைலை எல்லாம் எடுத்துப் போட்டு எரிக்கறானுங்க. எனக்குத் தெரிஞ்சு எப்படியும் ஐயாயிரம், ஆறாயிரம் ஃபைல் எரிஞ்சிருக்கும். குறிப்பா எஸ்கோபார் சம்பந்தப்பட்ட ஃபைல் ஒண்ணுகூட இருக்கக்கூடாதுன்னு அவனுங்க பேசிக்கிட்டது என் காதுலே விழுந்துச்சி...” நிலைமை என்னவென்பது மேலிடத்துக்கு உடனுக்கு உடனடியாக எடுத்துச் சொல்லப்பட்டது. அதுவரை எம்-19 கொரில்லாக்களின் நடவடிக்கை மட்டுமே என்று கருதிக் கொண்டிருந்த அரசாங்கம், இதில் பாப்லோ எஸ்கோபாரின் கையும் பின்னணியில் இருக்கிறது என்று அறிந்ததுமே வெறியானது. “யாரு பிழைச்சாலும் சரி, யாரு செத்தாலும் சரி, போட்டுருங்க...” என்று அதிரடியாக ஆர்டர் வந்தது.
 கொலைவெறியோடு இராணுவம் பாய்ந்தது. கையெறி குண்டுகளை வீசியவாறே வீரர்கள் முன்னேறினர். அவர்களுக்கு பாதுகாப்பாக கவச வண்டிகளும் அந்த கம்பீரமான கட்டிடத்தைச் சிதைக்கும் நோக்கத்துடன் முன்னேறியது. இராணுவத்தின் திடீர் தாக்குதலை எதிர்பார்க்காத கொரில்லாக்கள், சுதாரிப்பதற்கு முன்பாகவே கட்டிடத்தின் கீழ்த்தளம் கண்ணிமைக்கும் நேரத்தில் இராணுவ வசமானது. கட்டிடத்தைச் சுற்றிலும் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் ராக்கெட் குண்டுகளை வீசி மேல் மாடிகளில் இருந்த கொரில்லாக்களை சின்னாபின்னப் படுத்தத் தொடங்கினர். எங்கும் உயிர் ஓலம். மாட்சிமை தங்கிய உச்சநீதிமன்றத்தின் சுவர்களும், தரையும் இரத்தமயமானது.
மரணிப்பவர்கள் கொரில்லாக்களா அல்லது பிணைக் கைதிகளா என்றெல்லாம் இராணுவம் பரிசீலிக்கவில்லை. ஒரே நாளில் அந்த கட்டிடத்தை மொத்தமாக தரைமட்டமாக்கி விடும் வெறிதான் அவர்களுக்கு இருந்தது. இராணுவப் புயல் ஓய்ந்தபிறகு சேதாரங்களை கணக்கிடும் பணி நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருந்தனர். அவர்களில் எம்-19 கொரில்லாக்கள், இராணுவ வீரர்கள், பொதுமக்கள் மட்டுமின்றி பன்னிரெண்டு சுப்ரீம் கோர்ட் மாஜிஸ்திரேட்டுகளும் அடக்கம். எம்-19 ஆபரேஷனுக்கு தலைமை தாங்கியவர் மட்டுமின்றி, நான்கு தளபதிகளும் உயிரிழந்தனர் என்றாலும்,
ஒட்டுமொத்தமாக அப்போதிருந்த இருபத்தைந்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளில் பன்னிரெண்டு பேர் இந்த தாக்குதலில் மட்டுமே கொல்லப்பட்டது கொலம்பிய அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. மேலும் ஒரு நீதிபதி குற்றுயிரும் குலையுயிருமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நான்கு நாட்களுக்குப் பிறகு உயிரிழந்தார். கொலம்பியா மட்டுமின்றி ஒட்டுமொத்த உலக நாடுகளுமே இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டித்தன. எம்-19 கொரில்லாக்களின் ஆக்கிரமிப்பை கொலம்பியா கையாண்டவிதம் சரியல்ல என்று சுட்டிக் காட்டின.இந்தச் சம்பவம் டிரைலர்தான். அடுத்த ஒரு வாரத்தில் கொலம்பியா, அதுவரை கண்டிராத மிகப்பெரிய ஆபத்தை சந்தித்தது.ஆனால் - அதற்கு பாப்லோ எஸ்கோபார் காரணமல்ல.
(மிரட்டுவோம்)
ஓவியம் : அரஸ்
|