நாச்சியார்



அபலைப் பெண்ணின் வாழ்க்கையைச் சூறையாடிய பெரிய மனிதனுக்கு அதிரடி முடிவு சொல்கிறாள் ‘நாச்சியார்’. எளிய மனிதர்களின் பிரியங்களை பண பலமும், வக்கிரமும், அதிகாரமும் எப்படி குதறிப் போடுகின்றன என்பதை நேர்த்தியுடன் சொன்ன விதத்தில் பாலா இன்னும் கவனம் பெறுகிறார். மிகவும் நேர்மையான, அதே நேரம் அதிரடியாகப் பணிபுரியும் போலீஸ் அதிகாரி ஜோதிகா. குற்றவாளிகளைக் ‘கவனித்த’ பிறகே விசாரிக்கும் கண்டிப்புக்காரர். மைனர் பெண் இவானா கருவுற்ற வழக்கை விசாரிக்கிறார். அவரின் காதலன் ஜீ.வி.பிரகாஷ்தான் காரணம் என யூகித்து அவரையும் விசாரணைக்கு அழைக்க, அங்கே ஒரு திருப்பம்.

அவரும் அதற்குக் காரணம் இல்லை என்றாக, விசாரணை தொடர்கிறது. ஒவ்வொரு முடிச்சாக அவிழ, குற்றவாளியை நெருங்குகிறார் ஜோ. இறுதியில் குற்றவாளியைக் கைது செய்ய முடியாமல், அந்தஸ்து, பணம், அதிகாரம் தடுக்கிறது. இதை எப்படி உடைத்து ஜோதிகா காக்கிக்கு பெருமை சேர்க்கிறார்... ஜீ.வி., இவானாவின் நிலை என்னவென்பதே பரபரப்பு க்ளைமேக்ஸ். ஜோதிகாவின் வேகமும், எரிச்சலும், ஆவேசமும், போலீஸ் அதிகாரிக்கு பொருந்துகிறது. குற்றவாளிகளையே அனுதினமும் சந்திக்கிற எரிச்சல், தன்னையும் மீறி அவர்களிடம் மோதும் விதம் ரொம்பவும் ரியல்.

காவல் நிலையத்தில் தலைகீழாகக் கட்டி முரட்டுத்தனம் காட்டிவிட்டு, வீட்டிற்கு வந்து அவரே இவானாவின் குழந்தையைக் காலில் போட்டுக் குளிப்பாட்டுவது அற்புதக்காட்சி! பாலாவின் பட்டறைக்கு வந்து தேர்ச்சி அடைந்திருக்கிறார் ஜீ.வி. கொஞ்சம் அப்பாவித்தனம் கலந்து காதலில் உருகியதில் கேரக்டருக்கு கிடைக்கிறது கூடுதல் அந்தஸ்து! புதுமுகம் இவானா நம்ப முடியவில்லை. மிகுந்த கரிசனத்துடன் வீட்டு வேலைகளை கவனிக்கிற அழகும், ஜீ.வி.யிடம் காதல் கொண்ட பிறகு அவரைத் திரும்பித் திரும்பிப் பார்க்கும் தவிப்பும்,

வாயைத் திறந்தபடி அவரை ரசித்துக் கொண்டே ஆச்சர்யப்படும் விடலை வெட்கமும், அவரை ஒவ்வொரு தடவையும் கலாய்க்கும் கிறக்கம்... என நடிப்பில் டீன்-ஏஜ் அழகு மிளிர்கிறது! ஜோதிகாவுடன் சக போலீஸ் அதிகாரியாக வரும் ராக்லைன் வெங்கடேஷ் அருமைத் தேர்வு. ஜோவின் டாக்டர் கணவர், அரசு வக்கீல் மை.பா.நாராயணன் என துணை பாத்திரங்களிலும் கவனம் தெரிகிறது. ஓர் உதவிக் கமிஷனரால் ஹோட்டலுக்குள் நுழைந்து பெரும்புள்ளியை அடித்து துவைத்து இழுத்து வர முடியுமா? அப்படியே வந்தாலும் இப்படி ஒரு ‘தண்டனை’ அவரே தர முடியுமா?

எளிய மக்களின் அன்பு, பணக்கார சூது, டீன் ஏஜ் பெண்களின் பருவ ஈர்ப்பு, பணக்காரத்தனத்தின் உச்சம், அது பாதாளம் வரை பாயும் வீதம் எல்லாம் உண்மைக்கு நெருக்கமாக ஊர்வலம் வருவதில் இயக்குநரின் அக்கறை தெரிகிறது. இளையராஜா உழைப்பு பின்னணியில் தெரிகிறது. பக்கத்து வீட்டில் நடப்பது போன்ற நெருக்க உணர்வை அள்ளித் தருகிறது தேனி ஈஸ்வரின் கேமரா. எளிய இதயங்களின் பேரன்பைக் காட்டுவதாலும், தவறான மனிதர்களின் மேல் பெருங்கோபத்தைக் கிளறுவதாலும் ‘நாச்சியார்’ முக்கியமான படமாகிறது. 

- குங்குமம் விமர்சனக்குழு