தாரவி இன்று



தாராவி என்றால் உங்கள் மனதில் என்ன சித்திரம் எழும்? ஆசியாவின் மிகப்பெரிய சேரிகளில் ஒன்று. மும்பையின் ஒருபகுதி. புறக்கணிக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதி. இத்யாதி... இத்யாதிதானே? சினிமாக்களும் இப்படியான பிம்பத்தைத்தானே மக்களின் மனதில் பதிய வைத்திருக்கின்றன? மன்னிக்கவும். ரப்பரால் இந்த சித்திரத்தை அழியுங்கள். தாராவி நீங்கள் எண்ணுவது போல் இன்றில்லை. ஹைடெக்காக மாறியிருக்கிறது.  520 ஏக்கர் பரப்பில் விரிந்துள்ள தாராவியில் கொழிக்கும் தொழில்களின் மூலம் கிடைக்கும் ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா? ஒரு பில்லியன் டாலர்கள்! அதாவது தோராயமாக ரூபாய் 6 ஆயிரத்து ஐநூறு கோடி!

தாராவியில் சந்து பொந்தெங்கும் நிறைந்திருக்கும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பன்மொழி பேசும் மக்களின் கடின உழைப்பால்தான் இந்த மாற்றம் சாத்தியமாகி இருக்கிறது. ஒருகாலத்தில் தொழில்மயமாக்கலின் இருண்ட பகுதியாக, ஏழைகளின் வாழிடமாக, அரசுக்கு சங்கடம் கொடுக்கும் நிலப்பரப்பாகக் கருதப்பட்ட தாராவி இன்று தோல்தொழில், டெக்ஸ்டைல்துறை, உணவுத்துறை என சகலவிதங்களிலும் வணிகப்பேட்டையாக மாறியிருக்கிறது; மாறி வருகிறது.  பீகாரில் பிறந்த ஜமீல்ஷா, பதிமூன்று வயதில் சொந்த ஊரை விட்டு தில்லிக்கு வந்தார். சிறிதுகாலம் அங்கு வேலை செய்துவிட்டு மும்பை தாராவிக்கு இடம்பெயர்ந்தார்.

‘‘தாராவியின் பாதைகளில் வழிதெரியாமல் குழம்பி நின்றபோது, சிறிய பாதைகளில் எதில் சென்றாலும் மெயின்ரோட்டை அடையலாம் என பலரும் யோசனை சொன்னார்கள்...’’ என்கிறார் ஜமீல்ஷா. வாட்ச்மேன், பேக் விற்பனை என பல்வேறு தொழில்களைச் செய்தவர், இன்று ஆன்லைனில் ஆர்டர் வாங்கி ஷூக்களை தயாரித்து வெற்றிகரமாக விற்று வருகிறார். இவர் தயாரிப்பவை அனைத்தும் டான்ஸ் ஷூக்கள். ‘‘என் ஹாபியே டான்ஸ் ஆடுவதுதான். எனது ஃபேக்டரியில் நான் நடனமாடுவதைப் பார்த்து பலரும் என்னை கிண்டல் செய்வார்கள். அவர்களுக்குத் தெரியாது என் தொழில் ஐடியாவே இதுதான் என்று..!’’

என்கிற ஜமீல்ஷா, இந்தியர்களுக்காக ரூ.6 ஆயிரத்துக்குள் லைட் வெயிட்டில் டான்ஸர் ஷூக்களை உருவாக்கியிருக்கிறார். ‘‘அதிக வெயிட்டாக இருந்த ஷூக்களை லைட் வெயிட்டாக மாற்றியதுதான் என் பிசினஸ் வெற்றி. இங்கு வெறுங்கையுடன் வந்தேன். இன்று வசதியாக வாழ்கிறேன். இதையெல்லாம் கொடுத்தது தாராவிதான்...’’ என நெகிழும் ஜமீல்ஷாவுக்கு பாந்த்ராவில் ஷூ கடை உண்டு. ஆனால் ஃபேக்டரி, தாராவியில்தான்! ‘‘இங்கு பிழைக்க ஆயிரம் வழிகள் உண்டு. டாஸ்மாக் கடைக்கு வெளியே நிலக்கடலையை அவித்து விற்கும் அளவுக்கு புத்தி இருந்தால் போதும்.

டெய்லரிங் வேலையோடு டெலிபோன் பூத், நாளிதழ்கள் நடத்தியது என நான் என்ன வேலை செய்கிறேன் என்று சில சமயங்களில் எனக்கே புரியாது..!’’ என கண்கள் சிமிட்டும் ராஜு கோர்டே, தன் 19வது வயதில் மும்பைக்கு வந்திருக்கிறார். இன்று மாஹிம் நகரில் டபுள் பெட்ரூம் வீட்டுக்கு ஓனர். தாராவியில் மட்டும் பனிரெண்டு வீடுகளை வாடகைக்கு விட்டிருக்கும் மினி செல்வந்தர். ராஜு கோர்டே ஓர் உதாரணம்தான். மற்றபடி தாராவியில் தடுக்கி விழுந்தால் ஒரு ராஜு கோர்டேவைப் பார்க்கலாம். அனைவருமே தங்களை அரவணைக்கும் தாயாகத்தான் தாராவியைத் துதிக்கிறார்கள்.

இந்தியாவின் பிசினஸ் நகரமாக மும்பை இருப்பதால், இம்மாநகரத்தின் மையப் பகுதியான தாராவியும் செழித்தோங்கி வளர்கிறது. தாராவியை விட அந்தேரி கிழக்குப் பகுதியில் குழுக்களாக வாழும் குடிசைப்பகுதி மக்களின் எண்ணிக்கை எட்டு லட்சத்துக்கும் மேல் என்கிறது புள்ளிவிபரம். என்றாலும் தாராவி பேசப்படுவதற்குக் காரணம் அங்கு டஜன் கணக்கில் நடைபெறும் தொழில்கள்தான். டெக்ஸ்டைல் மற்றும் தோல் பொருட்களின் சொர்க்க புரியாகவும், தொழிலாளர்கள் சல்லீசாகக் கிடைக்கும் இடமாகவும் தாராவியே திகழ்கிறது. இங்கு பனிரெண்டு தொழிற்கூடங்களை 500 தொழிலாளர்களின் மூலம் இயக்கும் முகமது முஷ்டாக்யூமின் ஆண்டு வருமானம், ரூபாய் பத்து கோடிக்கும் அதிகம்.

‘‘இன்று நான் சாப்பிடும் சோறு தாராவி மண் தந்ததுதான். நான் இங்கிருந்து வெளியேற விரும்பவில்லை...’’ என அழுத்தம்திருத்தமாகச் சொல்லும் முஷ்டாக்யூம், அங்கேயே அபார்ட்மென்ட் கட்டி வாழ்கிறார். பதிமூன்று வயதில் ரேபரேலியில் இருந்து தாராவிக்கு வந்தவர், டெய்லர் கடையில் டீ பையனாக தன் வாழ்வைத் தொடங்கியிருக்கிறார். நான்கே ஆண்டுகளில் தனியாக டெய்லரை வேலைக்கு அமர்த்தி கடை போட்டுவிட்டார். இன்று பெண்கள், குழந்தைகளுக்கான உடைகளை அமெரிக்கா, பிரேசில், மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யுமளவு முன்னேறியிருக்கிறார்.

ரியல் எஸ்டேட் அதிபர்களும் அரசாங்கமும் தாராவியை கையகப்படுத்த பலமுறை முயற்சித்திருக்கின்றன. ஆனால், ஒருபோதும் அதில் அவர்கள் வெற்றி பெற்றதில்லை. மாநகரின் மையத்தில், இரு ரயில்வே ஸ்டேஷன்களை இணைக்கும் வகையில் தாராவி இருப்பதால் எப்போதும் இந்த இடத்துக்கு ஏக கிராக்கி. இப்போது அரசாங்கம் தன்னால் முயன்ற அளவுக்கு பல நலத்திட்டங்களை தாராவியில் செயல்படுத்தி வருகிறது.‘‘மேம்பாடு என்றால் கண்ணாடி கட்டடங்களும், மால்களும், ஆபீஸ்களும் மட்டுமல்ல. உயர்ந்த கட்டடங்களைக் கட்டினால் தொழிற்சாலைகளுக்கு எங்கு இடமிருக்கும்?

நாடெங்கிலும் இருந்து மும்பைக்கு பிழைக்க வருகிறவர்கள் தாராவியில்தான் அடைக்கலமாகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் வாழ்வளிக்கும் தாய், ஒருபோதும் ஷாப்பிங் மால், கண்ணாடிக் கட்டடங்களால் தன்னை அலங்கரித்துக் கொள்ள மாட்டார்...’’ என்று சொல்லும் பகுதிவாசிகள், போதுமான நீர்வசதிகளும் கழிவறைகளும் தாராவியில் இல்லை என வருத்தப்படுகிறார்கள். போலவே, குற்றச்செயல்களின் மையமாகவும், குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தரும் பகுதியாகவும் தாராவி இருப்பதை ஒப்புக் கொள்கிறார்கள். இங்கு தொழில்களுக்கு மட்டுமல்ல, செல்லுலாய்ட் கனவுகளுக்கும் குறைவில்லை.

திரைப்பட பயிற்சிப் பட்டறைகள் இங்கு ஏராளமாக இருக்கின்றன. நடிப்பு மற்றும் நடனப் பயிற்சி அளிக்கும் லாட்சாஹேப்பின் ஃபைவ் ஸ்டார் அகாடமி இருப்பது கூட தாராவியில்தான். சைன் போர்டு எழுத்தாளராக இருந்து சினிமா மற்றும் டிவி நடிகரானவர், லாட்சாகேப். மராத்தி, போஜ்புரி படங்களுக்கான ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளை அனுப்பி வைக்கும் ஏஜண்டாக செயல்படும் லாட்சாகேப், வார இறுதியில் இலவச நடிப்பு மற்றும் நடனப் பயிற்சிகளை அளித்து வருகிறார்.வெளிநாட்டு டூரிஸ்ட்டுகளுக்கு இடங்களை சுற்றிக்காட்டுவதும், டாகுமெண்டரி படங்கள் எடுக்க உதவுவதும் என கமிஷனுக்கான வழிகள் இங்கு அதிகம். ஆம். தாராவி மாறியிருக்கிறது.

டாப் 5 சேரிகள்
Khayelitsha, Cape Town, South Africa : மக்கள்தொகை - 4 லட்சம் (99% கருப்பர்கள்).
Kibera,Nairobi, Kenya : மக்கள்தொகை - 5 லட்சம்.
Dharavi, Mumbai, India : மக்கள்தொகை - 10 லட்சம்.
Ciudad Neza, Mexico City, Mexico : மக்கள்தொகை - 10 லட்சம்.
Ciudad Neza, Mexico City, Mexico : மக்கள்தொகை - 24 லட்சம்.

- ச.அன்பரசு