செக்ஸ் வில்லன்கள்



பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குறிப்பாக பாலியல் தொல்லைகள் நிறைந்த நாடுகளின் பட்டியலில் நமக்கு நிரந்தரமான முன்னணி இடம் உள்ளது. இந்த அவப்பெயர் நீங்க இன்னும் எத்தனை காலம் ஆகுமோ தெரியவில்லை. இதோ இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருந்தபோது கூட சென்னையைச் சேர்ந்த லாவண்யா என்ற பெண்ணை நான்கு மிருகங்கள் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த செய்தி அதிர்ந்து கொண்டிருக்கிறது.

குழந்தைகள், சிறுமிகள், இளம் பெண்கள் மட்டுமல்ல... முதிய பெண்கள்கூட இந்தக் கொடுமையிலிருந்து தப்புவதில்லை. சினிமா நடிகைகள், சீரியல் நடிகைகள், மாடல்கள், விளையாட்டு வீராங்கனைகள் என செலிபிரிட்டிகள் முதல் சாதாரண பாமரப் பெண்கள் வரை அனைவருக்கும் இதே கதிதான். கடந்த வாரம்கூட நடிகை அமலா பால் தனக்கு நடந்த பாலியல் சீண்டல் பற்றி குமுறியிருந்தார்.

பாலியல் புயல்!
இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் பாலியல் சீண்டல் பிரச்னை உண்டு. இதை ‘நியூயார்க் டைம்ஸ்’ கடந்த ஆண்டு வெளிப்படுத்தியது. அப்பத்திரிகைக்கு பேட்டியளித்த நடிகை ஆஷ்லி ஜூட், ‘மிராமேக்ஸ்’ திரைப்படத் தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் தன்னை செக்ஸ் உறவுகொள்ள வற்புறுத்தினார் என முச்சந்தியில் தேங்காயைப் போட்டு உடைத்தார்.

அதன்பின் கேட் பெக்கின்சேல், குவைனீத் பால்ட்ரோ, சல்மா ஹெயக், ஆஞ்சலினா ஜோலி உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட செலிபிரிட்டிகள் வெய்ன்ஸ்டீன் மீது வரிசையாக பாலியல் குற்றம்சாட்டினர். ஆக, ஹாலிவுட் செலிபிரிட்டிகளே செக்ஸ் சீண்டல்களை பொதுவெளியில் பேசத் தயங்கும்போது - கலாசாரம், பண்பாடு என்ற பெயரில் ஒடுக்கப்படும் இந்தியப் பெண்கள் தங்கள் மீதான பாலியல் சீண்டல்களை எப்படி பகிரங்கமாகப் பேசுவார்கள்? பெண்களின் இந்த மவுனம்தான் சில கேடுகெட்ட ஆண்களின் கட்டற்ற தைரியத்துக்குக் காரணமாகிறது.

அநீதிக்கு எதிரான குரல்!
இந்திய அரசு கடந்த 2013ம் ஆண்டு ஒரு சட்டம் இயற்றியது. பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையைத் தடுப்பது தொடர்பான சட்டம் அது. அந்த சட்டத்தை மேம்படுத்த வேண்டும் என இன்குலேஷன் பவுண்டேஷன் என்ற என்.ஜி.ஓ. சமீபத்தில் குரல் கொடுத்துள்ளது. ஐடி மற்றும் வங்கி தொடர்பான பணிகளில் பெண்களுக்கு பாலியல் டார்ச்சர்கள் அதிகம் என இந்தியன் நேஷனல் பார் அசோசியேஷன் (INBA 2016) தெரிவிக்கிறது. கல்வியோ, பணமோ பாலியல் சீண்டல்களுக்குப் பொருட்டில்லை என்பது முதலீட்டாளரான மகேஷ் மூர்த்தி மீது எழுத்தாளர் ரேஷ்மி பன்சால் கொடுத்த பாலியல் புகார் மூலம் வெட்ட வெளிச்சமானது.

இதற்கடுத்து தொழிலதிபரான பூஜா சவுகான், வாமிகா ஐயர் ஆகியோரும் மூர்த்தி மீது அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவித்தது தொழில் வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தம் வேலை பறிபோய், தனிமைப்படுத்தப்படுவோம் என்று அஞ்சியே பாதிக்கப்பட்ட 69% பெண்கள் புகார் கூறுவதில்லை என ஐ.என்.பி.ஏ. ஆய்வு சொல்வது நெஞ்சம் சுடும் நிஜம்.

சட்டங்கள் உதவுகிறதா?
1997ம் ஆண்டு பாலியல் பலாத்கார வழக்கு ஒன்றை விசாரித்த உச்ச நீதிமன்றம், பாலியல் தொல்லைகளைக் கையாள விசாகா விதிகளை வகுத்தளித்தனர். பணியிட பாலியல் தொல்லைகளைத் தீர்க்க 2013ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சட்டமாக இது பின்னாளில் மாற்றி அமைக்கப்பட்டது. SARDI, OXFAM, INBA, Sanhita, Sakshi, Yugantar, Lawyer Collective ILO, Center for Transforming India ஆகிய அமைப்புகள் செய்த ஆய்வில் (1996 - 2016), பெரும்பாலான பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை நிறுவனத்தின் மீதுள்ள அவநம்பிக்கையால் தெரிவிக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.

இச்சூழலில்தான் பாலியல் சீண்டல்களை சந்திக்கும் தனியார் மற்றும் அரசு நிறுவனத்தைச் சேர்ந்த பெண்கள் SHe-box என்ற அரசின் இணையதளத்தில் புகார்களை அளிக்கலாம் என்பது அமலுக்கு வந்திருக்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்தின் செயல்பாடு இது. மில்களில் பணியாற்றும் பதினைந்து வயதுக்கு உட்பட்ட பெண்கள் பாலியல்ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள் என்ற புகார் தமிழக உயர்நீதிமன்றத்தில் பதிவானது, கடந்த ஆண்டு நவம்பரில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் பற்றிய அறிக்கையைத் தயாரித்து அனுப்ப ஆட்சியர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். பாலிவுட்டில் பதிவான புகார்களை ஒட்டி பெண்கள் மற்றும் குழந்தைகள் நல்வாழ்வுத்துறை அமைச்சரான மேனகா காந்தி, 25 திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களுக்கு பாலியல் தொல்லை பற்றிய சட்ட அறிவுறுத்தல்கள் கொண்ட கடிதங்களை எழுதினார்.

குரலற்றவர்களின் குரல்!
இன்றைக்குப் பாலியல் தொல்லைகளுக்கு ஆளான பெண்களைத் திரட்ட பயன்படும் #METOO கோஷத்தை சமூக செயல்பாட்டாளரான தாரணா புர்கே 2006ம் ஆண்டு மைஸ்பேஸ் இணையதளத்தில் தொடங்கினார். நடிகை அலிசா மிலானோ, பாலியல் பிரச்னைகளுக்கு ஆளான பெண்கள் எல்லோரும் இணைவோம் என ட்வீட் போட, உடனே ஃபேஸ்புக், ட்விட்டர் முழுவதும் மீடூ ஹேஷ்டாக் பதிவுகள் சுனாமியாகப் பெருகின.

இந்தியாவில் டிஜிட்டல் மீடியாவான TVF நிறுவனர் அர்னாப் குமார் மீது பெயரின்றி பாலியல் புகார் முதலில் வர, பின்னர் வரிசையாக டஜன் கம்ப்ளைன்டுகள் குவிந்தன. இப்போது அர்னாப் குமார் மீது மும்பை போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கேரளாவில் பிரபல நடிகரின் பெண்களுக்கு எதிரான வசனங்களை விமர்சித்ததால் நடிகை பார்வதி சம்பந்தப்பட்ட நடிகரின் ரசிகர்களால் கடுமையாகக் கிண்டல் செய்யப்பட்டார்.

ரீமா கல்லிங்கல், அன்னா ராஜன், சஜிதா மதாதில் ஆகியோர் பார்வதிக்கு ஆதரவாகப் பேசியதால் அவர்கள் மீதும் ஆபாசத் தாக்குதல்கள் நடந்தன. இதனையடுத்து ‘வுமன் சினிமா கலெக்டிவ்’ (WCC) என்ற பெயரில் பெண்களுக்கு சினிமாவில் நேரும் பாலியல் தொல்லைகளைக் கண்காணிக்கும் அமைப்பை இந்தப் பெண் கலைஞர்கள் உருவாக்கியுள்ளனர். இதுபோன்ற செயல்கள்தான் எதிர்காலத்திற்கான நம்பிக்கை.

பாலியல் பலிகள்!
பாலியல் புகார்களின் அளவு - 714 (2015), 469 (2014).
பாலியல் தொல்லைகளின் வளர்ச்சி - 51%
புகார் அளிக்காத பெண்களின் சதவிகிதம் - 69%
பாதிக்கப்பட்டவர்களின் அளவு (INBA2017) - 38% (6,047 நபர்களிடம் செய்த ஆய்வுப்படி)
குழந்தைகள் மீதான பாலியல் வழக்குகள் - 8,800(2015).
(NCRB 2014 - 2015 தகவல்படி)

- ச.அன்பரசு