தேங்க்ஸ் பாலா



நெகிழும் ராக்லைன் வெங்கடேஷ்

பெங்களூர் அலுவலக அறை முழுவதும் வாழ்த்து பூங்கொத்துகள் குவிந்து கிடக்கின்றன. வரும் அழைப்புகள் அத்தனைக்கும் சளைக்காமல் நன்றி சொல்கிறார் ராக்லைன் வெங்கடேஷ். ‘நாச்சியார்’ படத்தில் ஜோதிகாவின் சீனியர் அண்ட் ஃப்ரெண்ட்லி போலீஸ் ஆபீஸராக நடித்தவர் இவர்.‘‘கன்னடம், தெலுங்குனு இதுவரை பதினைஞ்சு படங்கள் நடிச்சிருக்கேன். தமிழ்ல இதுதான் முதல் படம். இப்படி ஒரு அழகான வாய்ப்பை கொடுத்த பாலா சாருக்கு தேங்க்ஸ்!

ரஜினி சாரோட ‘லிங்கா’ உட்பட இதுவரை 47 படங்கள் தயாரிச்சிருக்கேன். ஆனா, ஷூட்டிங் ஸ்பாட்டுல இப்படியொரு பின் ட்ராப் சைலன்ஸ் வேற எங்கயும் பார்த்ததில்ல. ஸ்பாட்டுல பாலா சாரும் ஒளிப்பதிவாளர் ஈஸ்வரும் டிஸ்கஸ் பண்ணிக்கறது பக்கத்துல நிக்கறவங்களுக்குக் கூட கேட்காது! அந்தளவு அமைதி...’’ ஆச்சர்யம் மாறாமல் பேசுகிறார் ராக்லைன் வெங்கடேஷ்.

நடிகரா அசத்தறீங்க...
தேங்க்ஸ்! இந்த இண்டஸ்ட்ரீக்கு நடிகனாதான் வந்தேன். ஆக்டிங் ரொம்ப பிடிச்ச விஷயம். ராம் கோபால் வர்மாவின்‘கில்லிங் வீரப்பன்’ல நடிச்சிருந்தேன். அந்தப் படம் பார்த்துத்தான் பாலா சார் என்னைக் கூப்பிட்டார். ஒரு பக்கம் சந்தோஷம். இன்னொரு பக்கம் பயம். பாலா சார் படமாச்சே! கம்ஃபர்டபிளா ஃபீல் பண்ண முடியுமானு யோசிச்சேன். ஆனா, முதநாளே அந்த டவுட் தேவையே இல்லாததுனு புரிஞ்சுடுச்சு. படம் பார்த்துட்டு என் நண்பர்கள், உறவினர்கள்னு அத்தனை பேரும் பாராட்டினாங்க. ‘எங்க படத்திலும் ஒரு நல்ல கேரக்டர் இருக்கு. பண்றீங்களா’னு புது ஆஃபர்ஸ் வந்துக்கிட்டிருக்கு!

என்ன சொல்றார் இயக்குநர் பாலா..?
நல்ல நண்பர். தன் ஃபேமிலில ஒருத்தரா என்னை ட்ரீட் பண்ணினார். நான் தினமும் நான்வெஜ் சாப்பிடறவன். இதை தெரிஞ்சு தினமும் தன் வீட்டுலேந்து கறி சோறு எனக்காக கொண்டு வருவார். படப்பிடிப்பு அனுபவமும் நல்ல பாடம். நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன். ஒரு பெரிய சீன்ல ஸ்மோக் பண்ணிக்கிட்டே பேசணும். நான் புகை ஒழுங்கா பிடிச்சா, டயலாக்கை கோட்டை விட்டுடுவேன். ரெண்டும் சேர்ந்து கரெக்ட்டா பண்ண பல டேக் வாங்குச்சு.

பாலா சாரே அந்த சீனை நடிச்சு ஸ்மோக் பண்ணி செஞ்சு காட்டினார். இப்படி எனக்குனு இல்ல... படத்துல நடிச்சிருந்த சின்னச் சின்ன கேரக்டர்களுக்குக் கூட அவர் நடிச்சுக் காட்டினார். இதுவரை அதிகபட்சம் ஒரு வாரம்தான் ஒரு படத்துல நடிச்சிருக்கேன். ஆனா, இந்தப் படத்துக்கு மட்டும் பாலா சார் 45 நாட்கள் கால்ஷீட் வாங்கினார். சுதந்திரமா, வசதியா ஃபீல் பண்ண வச்சு, ஒர்க் வாங்கினார்.

ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே ‘ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி’னு சொல்லியிருந்தீங்க..?
ஆமா! ரஜினி சாரை பல வருஷங்களா தெரியும். நெருங்கிப் பழகியிருக்கேன். அந்த கணிப்புலதான் அப்படி சொன்னேன். அவர் அரசியலுக்கு வரணும்னு ரசிகர்களும் இருபது வருஷங்களா விரும்பறாங்க. அரசியல் தகுதி அவருக்கு இருக்கு. சாதாரண கண்டக்டரா இருந்து இன்னிக்கி இவ்ளோ பெரிய உயரத்துக்கு வந்திருக்கார். பசியோட வலி, வேதனை எல்லாத்தையும் உணர்ந்தவர். அப்புறம் முக்கியமான ஒரு விஷயம், பாலா சார் படங்கள்னா ரஜினிக்கு பிடிக்கும். ‘நாச்சியார்’ பார்த்துட்டு பாராட்டுவார். சாரோட பாராட்டுக்காக காத்திருக்கேன்!    

- மை.பாரதிராஜா