மனைவியைத் தேடி



பீகாரின் ஜார்க்கண்டைச் சேர்ந்த கூலித்தொழிலாளி 600 கி.மீ.க்கு மேல் சைக்கிளில் பயணித்திருக்கிறார், தன் மனைவிக்காக! பலிகோடா கிராமத்தைச் சேர்ந்த மனோகர் நாயக், பொங்கல் பண்டிகைக்காக தன் மனைவி அனிதாவை கம்ரசோல் கிராமத்திலுள்ள பெற்றோர் வீட்டுக்கு அனுப்பினார். இரண்டு நாளாகியும் மனைவி திரும்பி வராததால், சைக்கிளில் தினசரி 25 கி.மீ. என 24 நாட்களில் 65 கிராமங்களைக் கடந்து மனநிலை பிரச்னையுள்ள மனைவியை கரக்பூரில் தேடிப்பிடித்துள்ளார்.

‘‘துருப்பிடித்த சைக்கிளை எடுத்துக்கொண்டு தேடத் தொடங்கியதுதான் தெரியும். எவ்வளவு தூரம் என கணக்குப் போடவில்லை!’’ என்று சொல்லும் மனோகர், உள்ளூர் பத்திரிகையில் ‘காணவில்லை’ விளம்பரமும் கொடுத்தார். அதைப்பார்த்தவர்கள், கரக்பூர் ஹோட்டல் அருகே அனிதா இருப்பதாக தகவல் கொடுத்தனர். கரக்பூர் மற்றும் முசாபனி போலீசாரின் முயற்சியில் மனோகர், அனிதாவை அழைத்துக்கொண்டு வீடு திரும்பியுள்ளார்.

- ரோனி