கவிதை வனம்



பெயரெச்சம்

குடியரசு தினத்தன்று
கூடவே கூட்டிவந்த
கோமதி டீச்சரின்
செல்ல மகளின்
புரியாத சமஸ்கிருதப் பெயரை
சொல்ல முயற்சித்து தோற்ற
ஐந்தாம் வகுப்பு அஞ்சலை
அன்புடனே
கொடுத்தனுப்பினாள்
பக்கத்து நிலத்திலிருந்து
காம்பு நீண்டதொரு
சூரியகாந்திப்பூவை
உயர் ரக கம்பளிக்குள்
அயர்ந்துறங்கும்
அச்சிறுமியினருகில் மெல்ல
உதிர்ந்து கொண்டிருக்கும்
அப்பூவின் இதழ்கள்
அகாலத்தில்
சொல்கின்றன
அஞ்சலை அஞ்சலையென.

- கே.ஸ்டாலின்



பரிணாமம்


இழவு வீடுகளில்
பாட்டிகள்
மாரடித்து அழுதனர்
அம்மாக்கள்
கட்டிப்பிடித்து அழுதனர்
நாம் தொட்டு
வணங்கிச் செல்கிறோம்.

- மகிழை.சிவகார்த்தி