யூத்புல் எடிட்டர்ஸ்



சினிமாவின் அச்சாணி படத்தொகுப்பில் இருக்கிறது. ஃபிலிம் கணக்கில் சொல்வதென்றால்... இரண்டரை லட்சம் அடி ஷூட் செய்யப்பட்டவைகளில் இருந்து இரண்டரை மணி நேர படத்திற்கு தேவையான பதிமூன்றாயிரம் அடி நீளத்தை க்ரிஸ்ப்பாக கொண்டு வருவது திறமையான எடிட்டர்களால் மட்டுமே சாத்தியப்படும். ஃபிலிமாக இருந்தாலும் டிஜிட்டலாக இருந்தாலும் எடிட்டிங்கை பொறுத்தவரை ஒரே ரகம்தான்.

சினிமா முழுமை பெறுவது இவர்களால் மட்டுமே! மிகப்பெரிய இயக்குநர்கள் பலரும் அவர்களின் ஆஸ்தான எடிட்டரை கையில் வைத்துக் கொண்டே தங்களது கனவுக்கு வடிவம் கொடுக்கிறார்கள். ‘ஒரு எடிட்டர் நினைத்தால் மொக்கை படத்தையும் பரபர விறுவிறு படமாக மாற்றிவிட முடியும்’ என்ற குரல் கோலிவுட்டில் அடிக்கடி ஒலிப்பதுண்டு. அந்தவகையில் சமீபத்தில் திரைக்கு வந்த படங்களில் கவனம் ஈர்த்த இளம் படத்தொகுப்பாளர்களின் மினி தொகுப்பு...

 
‘துருவங்கள் பதினாறு’ ஸ்ரீஜித் சரங்
‘‘பூர்வீகம் கேரளா. கொஞ்ச நாள் கோவைல இருந்தோம். அப்பா ஓவியர். அவரோட பெயின்ட்டிங்ஸ் பார்த்துப் பார்த்து, ரசனையும் பொறுமையும் கத்துக்கிட்டேன்.
சென்னைல மீடியா டெக்னாலஜி படிக்க வந்தேன். வந்த இடத்தில் எடிட்டிங்கோட DI கலரிஸ்ட் ஒர்க்கும் கத்துக்கிட்டேன்.  ஃப்ரீலான்ஸ் ஒர்க் நிறைய கிடைச்சது. ஷார்ட் ஃபிலிம்ஸ் வேலைகளின்போதுதான் ‘பண்ணையாரும் பத்மினியும்’ அருண்குமார், கார்த்திக் நரேன் நட்பெல்லாம் கிடைச்சது. எடிட்டரா அறிமுகமான படம் ‘தாக்க தாக்க’. அடுத்ததா ‘துருவங்கள் பதினாறு’. இப்ப ‘நரகாசூரன்’ தவிர தெலுங்கிலும் ரெண்டு படங்கள் எடிட் பண்ணிட்டிருக்கேன்...’’ என்கிறார் ஸ்ரீஜித். இவரது தம்பி சுஜித் சரங்தான், ‘துருவங்கள் பதினாறு’, ‘நரகாசூரன்’ படங்களின் ஒளிப்பதிவாளர் என்பது கூடுதல் தகவல். 

 ‘குரங்கு பொம்மை’ அபிநவ் சுந்தர் நாயக்
‘‘பூர்வீகம் கேரளா. கோவைல விஸ்காம் படிச்சேன். படிக்கும் போதே ஃப்ரீலான்ஸ் எடிட்டரா வேலை பார்க்க ஆரம்பிச்சுட்டேன். விளம்பரங்கள், கார்ப்பரேட் ஃபிலிம்னு நிறைய பண்ணினேன். நண்பர்களால சென்னை வந்தேன். ஷார்ட் ஃபிலிம்ஸ் டைம் அது. ஸோ, நானும் பிஸியானேன். டைரக்‌ஷன்ல ஆர்வம் வந்தது. மலையாள இயக்குநர் வினீத் சீனிவாசன்கிட்ட அசிஸ்டென்ட் டாக ஒரு படம் ஒர்க் பண்ணினேன்.

அப்ப ‘வாயை மூடி பேசவும்’ படத்தை எடிட் பண்ணச் சொல்லி பாலாஜி மோகன் கேட்டார். அப்புறம் மலையாளத்தில் ‘ஆனந்தம்’, ‘கோதா’னு ரெண்டு படங்கள் எடிட் பண்ணினேன். ‘உறியடி’ல நல்ல பெயர் கிடைச்சது. ‘குரங்கு பொம்மை’க்குப் பிறகு இனி எடிட் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன். நல்ல ஸ்கிரிப்ட்டும் ரெடி பண்ணியிருக்கேன். சீக்கிரமே இயக்குநரா பெயரெடுப்பேன்...’’ என்கிறார் அபிநவ்.

 ‘விக்ரம் வேதா’ ரிச்சர்ட் கெவின்
‘‘சொந்த ஊர் திருச்சி. லயோலால விஸ்காம் படிக்கறப்ப எடிட்டர் ஆண்டனி சார் அறிமுகமானார். நிஜமாகவே அவர் ஒரு ஃப்ரெண்ட்லி குரு. ‘போடா போடி’ வரை அவர்கிட்ட வேலை பார்த்தேன். அப்பதான் ‘வா குவாட்டர் கட்டிங்’ ஒர்க் வந்தது. புஷ்கர், காயத்ரி அறிமுகமானாங்க. நான் எடிட்டரா அறிமுகமான படம் ‘பாகன்’. ‘விக்ரம் வேதா’க்கு முன்னாடி பத்து படங்கள் எடிட் பண்ணியிருக்கேன். ஒரு எடிட்டருக்கு ஷூட்டிங் எக்ஸ்பீரியன்ஸும் வேணும்னு ‘விக்ரம் வேதா’ல அசிஸ்டென்ட் டைரக்டரா வேலை பார்த்தேன். புஷ்கரும் காயத்ரியும் என் காலேஜ் சீனியர்ஸ். முழுச் சுதந்திரம் கொடுத்தாங்க...’’ என சிலிர்க்கும் ரிச்சர்ட், இப்போது பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தை எடிட் செய்கிறார்.

‘மாநகரம்’ பிலோமின் ராஜ்    
‘‘தஞ்சாவூர்ல விஸ்காம் படிச்சுட்டு சென்னை வந்தேன். ஏவி.எம். உட்பட பல எடிட் ஷூட்ல வேலை பார்த்திருக்கேன்.  பிறகு சொந்தமா, சின்னதா ஒரு எடிட் ஷூட் தொடங்கினேன். கமர்ஷியல் விளம்பரங்கள் நிறைய கிடைச்சது. குறும்படங்களும் வந்தது. ‘மாநகரம்’ அசோசியேட் சந்துரு, என் நண்பர். அவரும் ஒரு ஷார்ட் ஃபிலிம் மேக்கர்தான். அவரோட குறும்படத்துல ஒர்க் பண்ணும்போதுதான் ‘மாநகரம்’ இயக்குநர் நட்பு கிடைச்சது. விளம்பரப் படங்களுக்கு எடிட் ஒர்க் பண்ண அதிகபட்சம் ரெண்டு நாட்கள் போதும். ஆனா, சினிமா அப்படியில்ல. ஒரு படம் முடிக்கவே நாலு மாசம் கூட ஆகும். பிரஷரும் எகிறும். அந்த டென்ஷனும் வேகமும் பிடிச்சதால ரசிச்சு வேலை பார்த்திட்டிருக்கேன்...’’ என்கிறார் பிலோமின்.

‘மேயாத மான்’ ஷஃபிக் முகமது அலி
‘‘விவேக் ஹர்சன் சார்கிட்ட அசோசியேட் எடிட்டரா அஞ்சு வருஷங்கள் ஒர்க் பண்ணியிருக்கேன். பூர்வீகம் குருவாயூர். விஷுவல் எஃபெக்ட்ஸ் முடிச்சிருக்கேன். அசிஸ்டென்ட் எடிட்டரா கேரியர் தொடங்குச்சு. கார்த்திக் சுப்புராஜின் ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’ல அசோசியேட் எடிட்டரா ஒர்க் பண்ணினேன். என் ஒர்க்குல இம்ப்ரஸ் ஆனவர், தான் தயாரிச்ச ‘மேயாத மான்’ல என்னை எடிட்டரா அறிமுகப்படுத்தினார். இயக்குநர் ரத்னகுமார் சார் என்னை ரொம்பவே என்கரேஜ் பண்ணினார். இப்ப தரணீதரன் இயக்கற படத்தை எடிட் செய்றேன்...’’ என்கிறார் ஷஃபிக் முகமது அலி.

‘தீரன் அதிகாரம் ஒன்று’ டி.சிவாநந்தீஸ்வரன்
‘சன் டிவில சாதாரண எடிட்டரா வேலை பார்த்தேன். அங்க சன் பிக்சர்ஸ் தொடங்கினதும் அந்தப் படங்களோட புரொமோ டீஸர், டிரெய்லர்ஸ் கட் பண்ற வாய்ப்பு கிடைச்சது. ‘சிங்கம்’ டீஸரை பார்த்து இம்ப்ரஸ் ஆன ஞானவேல் ராஜா சார், தன்னோட ஸ்டூடியோ க்ரீன் எடிட்டிங் டிபார்ட்மென்ட்ல சேர்த்துக்கிட்டார். ‘பையா’ தெலுங்கு வெர்ஷன் ப்ரொமோ டீஸர்ல ஆரம்பிச்சு ‘மாஸ்’, ‘மாயா’, ‘ஜோக்கர்’ பட ப்ரொமோ கட் வரை நிறைய செய்தேன்.‘மிருதன்’ உட்பட ஒருசில வெளி கம்பெனி படங்களுக்கும் ப்ரொமோ ஒர்க் பண்ணியிருக்கேன். எடிட்டரா அறிமுகமானது ‘தீரன் அதிகாரம் ஒன்று’ல. டீஸர் கட் பண்ணச் சொல்லப் போறாங்கனு நினைச்சேன். ஆனா, இயக்குநர் வினோத், ‘நீங்கதான் படத்தோட எடிட்டர்’னு சொன்னப்ப இன்ப அதிர்ச்சியா இருந்தது...’’ என்கிறார் சிவாநந்தீஸ்வரன்.


‘துப்பறிவாளன்’ என்.அருண்குமார்
‘‘சொந்த ஊர் சென்னைதான். விஸ்காம் முடிச்சுட்டு எடிட்டர் டி.எஸ்.சுரேஷ் சார்கிட்ட ரெண்டு படங்கள் ஒர்க் பண்ணினேன். வி.இசட்.துரை இயக்கிய ‘6 மெழுகுவர்த்திகள்’ல எடிட்டரா அறிமுகமானேன். ‘துப்பறிவாளன்’ நான் எடிட் செஞ்ச இரண்டாவது படம். மறக்க முடியாத அனுபவம். வெறும் டேபிள் எடிட் பண்ணிட்டிருந்த என்னை ஷூட்டிங் ஸ்பாட் எடிட் டெக்னிக்ஸையும் தெரிஞ்சுக்க வைச்சவர் மிஷ்கின் சார்தான். ‘துப்பறிவாளன்’ல அசிஸ்டெண்ட் டைரக்டராவே மாறி வேலைப் பார்த்தேன். அதனாலதான் அந்தப் படத்தை நச்சுனு எடிட் பண்ண முடிஞ்சுது...’’ என்கிறார் என்.அருண்குமார்!

தொகுப்பு: மை.பாரதிராஜா