பக்கோடா சுடு.. முன்னேறு!
செய்தி: ‘பக்கோடா தயாரிப்பது ஒரு கலை. அதை திறம்பட செய்தால், மூன்றே ஆண்டுகளில் ஹோட்டல் திறக்கும் அளவுக்கு முன்னேறலாம்!’ என மத்தியப் பிரதேச கவர்னர் ஆனந்திபென் படேல் கூறியுள்ளார். இதை வைத்து நம் கற்பனையை தட்டிவிட்டு கொதிக்கும் எண்ணெய்யில் பொறித்தோம். வந்து சேர்ந்த சில துகள்கள்!
P.E. இன்ஜினியர்! மென்பொருள் பொறியாளர்கள் என்ன செய்கிறார்கள்? மூளையை கசக்கிப் பிசைந்து பல ப்ரோக்ராம்களை வடிவமைக்கிறார்கள். பக்கோடா தயாரிப்பவர்கள் என்ன செய்கிறார்கள்? கடலை மாவுடன், காய்கறிகள், மசாலா போன்றவைகளை கலந்து பிசைந்து பக்கோடாவுக்கான ப்ரோக்ராமை வடிவமைக்கிறார்கள். ஆக, இரண்டும் ஒன்றுதான் என்பதால் பக்கோடா பொரிப்பவர்களுக்கு மென்பொருள் பொறியாளர்களுக்கான பயிற்சியை கொடுக்கலாம். ஏனெனில் பக்கோடாவும் ஒரு மென்பொருள் (வாயில் போட்டு, மென்று சாப்பிடும் பொருள்!)தான். இப்படி உருவாகும் மென்பொருள் பொறியாளர்களின் பெயருக்குப் பின்னால் B.E. என்பதற்கு பதிலாக P.E. (பக்கோடா இன்ஜினியர்) என போட்டுக்கொள்ள அரசாங்கம் அனுமதி வழங்கலாம்!
 பக்கோடா தயாரிப்பவர் சினிமா தயாரிப்பாளராகலாம்! பக்கோடா ப்ரொடியூசாக பலவித ஷெட்யூல்கள் தேவைப்படுகின்றன. கடலை மாவு, உருளை, வெங்காயம், கீரை உள்ளிட்டவற்றை தேடித் தேடி சகாய விலையில் வாங்குதல்; ஒவ்வொன்றின் அளவையும் நிர்ணயித்து சுவையான கலவையாக்குதல்; எண்ணெயில் பொறிப்பவரின் கால்ஷீட்டை பெறுதல்; கலவையை எண்ணெயில் இட்டு ஷூட் செய்தல் (அதாங்க ஃப்ரை செய்வது!); ஷூட் செய்ததை எடிட் செய்து ரிலீஸ் ஆவதற்கு முன்பு பலருடைய பார்வையில் படும்படியாக அடுக்கி வைத்தல்; ஃபர்ஸ்ட் லுக்காக தூள் பக்கோடோவை வழங்குதல்...
என ஷெட்யூல்கள் கழுத்தை நெரிக்கின்றன. தவிர கந்து வட்டி கதை; பக்கோடா சாப்பிட்டுவிட்டு கடன் வைத்தவர்கள் கதை; நேற்று ஷூட் செய்த பக்கோடா மீந்து போய் பஜ்ஜியான சோகக் கதை... என எண்ணற்ற கதைகளும் இதில் அடங்கும்!ஆக, இந்த அனுபவமும் சினிமா தயாரிப்பு போன்றதுதான் என்பதால் பக்கோடா தயாரிப்பாளர்கள் ஃபிலிம் ப்ரொடியூசராக உயரும் நிலையை அரசு உருவாக்க வேண்டும்!
‘பக்... பக்...’ ஆசிரமம் பக்கோடா சுடும்போது எழும் மூக்கைத் துளைக்கும் வாசனையில் மெய் மறந்து தியான நிலைக்கு செல்பவர்கள் ஏராளம். எனவே மற்றவர்களை தியான நிலைக்கு தள்ளி பக்கோடாவை விற்று பணம் வசூல் செய்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பவரை மூக்கு துறந்த துறவி என்றழைப்பதே சாலப் பொருத்தம்! இப்படிப்பட்ட துறவற(!) அனுபவம் உள்ளவர் வரும்காலத்தில் ஆசிரமம் அமைத்து ஆண்டுதோறும் மகாசிவராத்திரி அன்று வசூல் சாதனை நிகழ்த்த வாய்ப்புகள் அதிகம்! ஆசிரமத்தில் பிரசாதமாக பக்கோடா வழங்கினால் ஆரம்ப நிலை பக்கோடா தயாரிப்பாளர்களுக்கு வேலை வாய்ப்புகள் பெருகும்.
இயற்கைச் சூழலில் பக்கோடாவை ஆசிரமமே தயாரிக்கும் என்று அருள்பாலித்து(!) சுற்றியிருக்கும் மரங்களை அழித்து, அவற்றை பக்கோடா சுடும் அடுப்புகளுக்கு விறகாக பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்! சுற்றுச்சூழல் பாதிப்புகளை விளைவிக்கும் ஆசிரமத்திற்கு, ‘பக்... பக்...’ ஆசிரமம் (பக்கோடா ஹாஃப் பாயில்!) என்று புதுவித பெயர் சூட்டி ரெய்டு பயத்தில் வலம் வரும் அரசியல்வாதிகளைக் கவரலாம். போலவே, மரங்களை வெட்டி மழையைத் தடுக்கும் சாமியார், பக்கோடா மென்று மழையை வரவழைப்பதாக கிளப்பி விடப்படும் புரளியில் பக்த கோடிகள் பெருகி, பக்... பக்... சாமியார் கபக்.. கபக் என்று கோடிகளை விழுங்கலாம்!
 பக்கோடா சுடுபவர்தான் சிற்பியாகும் தகுதி படைத்தவர்! சரியான அளவில் கடலை மாவுடன் வெங்காயம், உப்பு, மிளகாய், மசாலா தூள் கலந்து, ரசனைக்கு ஏற்ப இக்கலவையின் உருவத்தை பலவிதமாக மாற்றி எண்ணெய்யில் தீய்ந்து விடாமல் பொரிக்கும் திறமை தேவைப்படுகிறது! இப்படி ‘செதுக்கப்படும் சிலைகள்’ முரடாகவும் இருக்கலாம்; உதிரியாகவும் காட்சி தரலாம். எப்படியாயினும் அவற்றில் ‘உருவங்கள்’ இருக்க வேண்டியது முக்கியம்! ஏனெனில் கடலை மாவிலிருந்து பக்கோடா தயாரிக்கலாம். ஆனால், பக்கோடாவிலிருந்து கடலை மாவை உருவாக்க முடியாது! ஆக, கல்லிலிருந்து சிற்பத்தை வடிப்பதற்கு சமமான காரியம் பக்கோடா பொரிப்பது.
எனவே பக்கோடா வித்தகர்கள் வருங்காலத்தில் கணபதி ஸ்தபதி போல் சிற்பக்கலை வல்லுனராக வாய்ப்பிருக்கிறது! இப்படிப்பட்டவர்களிடம் ஒவ்வொரு ஆதார்தாரரின் உருவத்தை சிற்பங்களாக வடிக்கும் பணியை ஒப்படைக்கலாம். வேலி வாய்ப்புகளை அரசாங்கம் உருவாக்கலாம். வடிக்கப்படும் இச்சிற்பங்களை ரேஷன் கடைகள் மூலமாக கட்டாய விற்பனைக்கு உட்படுத்தி மக்களைத் தெறிக்க விடலாம். ரேஷன் கடைகளில் விற்கப்படும் பொருள்களில் மலிந்திருக்கும் கற்களை இம்மாதிரி சிற்பங்கள் வடிக்க மூலப்பொருளாகப் பயன்படுத்தினால் அரசாங்கத்துக்கு செலவு மிச்சமாகும்!
- எஸ்.ராமன்
|