குழந்தைங்களை பள்ளிக்கு வரவைக்கும் திருநங்கைகள்!
‘‘பள்ளி என்பது வெறும் பாடம் படிக்கிற இடம் மட்டுமில்ல; அது சமூகத்தோட முகம். அதை எப்பவும் தூய்மையா, அழகா, புத்துணர்ச்சியோட வச்சிருக்கணும். அப்பதான் கொழந்தைங்க மகிழ்ச்சியா ஸ்கூலுக்கு வருவாங்க. விருப்பத்தோட படிப்பாங்க...’’ குழந்தைகளின் மீதான புரிந்துணர்வுடன் பேச ஆரம்பித்தார் கல்கி. திருநங்கைகளுக்கான போராளி, ஓவியர், எழுத்தாளர், பேச்சாளர் எனப் பன்முகங்களைக் கொண்ட இவர், பொள்ளாச்சியில் பிறந்தவர். இவரது ஓவியப் படைப்புகள் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் விரும்பப்பட்டு வாங்கப்படுகின்றன. தனது ‘சகோதரி’ அறக்கட்டளை மூலம் ‘அன்பின் சுவர்கள்’ என்ற பெயரில், புறக்கணிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் பள்ளிகளின் சுற்றுப்புறங்களை அழகுபடுத்தி, அவற்றின் சுவர்களை ஓவியங்களால் ஜொலிக்க வைக்கிறார்.
 ‘‘மத்தவங்க மாதிரி திருநங்கைகளான எங்களுக்குள்ளயும் படைப்பாற்றல் இயல்பாவே இருக்கு. அதை வெளிப்படுத்தத்தான் சரியான வாய்ப்புகளோ, ஊக்குவிப்புகளோ இல்ல. அப்படியே வெளிப்படுத்தினாலும் அதை உதாசீனம் செய்றவங்கதான் அதிகம். உண்மையைச் சொல்லணும்னா எங்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டு முடக்கப்பட்டிருக்கு. இதனாலேயே இன்னைக்கு திருநங்கைகளோட வாழ்வாதாரமே கேள்விக்குறியா இருக்கு. பல அவமானங்களுக்கு நடுவுலதான் அன்றாட வாழ்க்கையை நகர்த்திட்டு இருக்காங்க. தங்களோட படைப்பாற்றலை வெளிக்காட்ட ‘ஏதாவது ஒரு சந்தர்ப்பம் கிடைக்காதா’னு ஏங்கிக் கிடக்கிறாங்க.
இவ்வளவு தாகத்தோட இருக்குறவங்களை ஒருங்கிணைக்கவும், அவங்களோட படைப்பாற்றலை வெளிப்படுத்தவும் ஒரு தளம் வேணும்னு யோசிச்சப்பதான் ‘சகோதரி’ அறக்கட்டளை உருவாச்சு. இதன் ஒருபகுதியா போன வருஷம் ஓவியத்துக்காக ‘Trans/Hearts’னு ஒரு திட்டத்தை ஆரம்பிச்சேன். சென்னை, கோவை, புதுவை, காஞ்சிபுரம், மலப்புரம், திருவனந்தபுரம், பெங்களூரு, கொச்சினு வெவ்வேறு ஊர்களுக்குப் போய், அங்கிருக்கிற திருநங்கைகளுக்கு ஓவியம் சம்பந்தமான பயிற்சிப் பட்டறைகளை வழங்கினோம். நூத்துக்கும் மேலான திருநங்கைகள் ஆர்வத்தோட பங்கேற்று அழகான ஓவியங்களைப் படைச்சாங்க.
 அதை வைச்சு கோவையில ஒரு ஓவியக் கண்காட்சி நடத்தினோம். அதுல நிறைய ஓவியங்கள் விற்பனையாச்சு. அந்தத் தொகையை ஓவியம் வரைஞ்சவங்களுக்கே கொடுத்துட்டோம். இதைக் கேள்விப்பட்ட பல்வேறு பல்கலைக்கழகங்கள் எங்களுக்கு அழைப்பு விடுத்தாங்க. அங்கயும் போய் நாங்க வரைஞ்ச ஓவியங்களைக் காட்சிப்படுத்தினோம். மாணவர்களும், பேராசிரியர்களும் போட்டி போட்டு அதை வாங்கினாங்க. ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. இப்ப வெவ்வேறு தளங்கள்ல தொடர்ந்து ஓவியக் கண்காட்சியை நடத்திட்டு வர்றோம். இது மூலமா திருநங்கைகளோட பொருளாதாரத் தேவை ஓரளவுக்குப் பூர்த்தியாகுது...’’ கடந்த காலத்தை அசைபோட்ட கல்கி, பள்ளிகளை நோக்கி நகர்ந்ததற்கான காரணங்களையும் பகிர்ந்துகொண்டார்.
‘‘சமூகத்துக்காக ஏதாவது செய்யணும்னு தோணுச்சு. எங்களை மாதிரியே புறக்கணிக்கப்பட்ட ஒரு சமூகத்துக்குச் சேவை செய்யணும்னு முடிவு பண்ணினோம். அப்ப உருவானதுதான் இந்த ‘அன்பின் சுவர்கள்’. பெரும்பாலான மலைக்கிராமங்கள், பின்தங்கிய கிராமங்கள்ல இருக்குற கொழந்தைகள் ஸ்கூலுக்குச் சரியா வர்றதில்ல. பசங்கள ஸ்கூலுக்குக் கொண்டு வர்றதே அங்கிருக்குற டீச்சர்களுக்கு பெரிய சவாலா இருக்கு. இந்த மாதிரியான பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து, அதன் சுவர்களுக்கு வெள்ளை அடிச்சோம். அதுல பல்வேறு விதமான ஓவியங்களை வரைஞ்சோம்.
 சமூகத்துக்கு நம்மாலும் நல்ல பங்களிப்பைக் கொடுக்க முடியும்ங்கிற ஒரு நம்பிக்கையை இந்தச் சேவை திருநங்கைகளுக்குள்ள விதைச்சிருக்கு...’’ நம்பிக்கை மொழி பேசுகிற கல்கி, பள்ளிகளின் சுவர்களில் ஓவியம் தீட்டச் சென்றபோது கிடைத்த அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.‘‘கேரளாவுல வைக்கம் பக்கத்துல டி.வி.புரம்ங்கிற ஊர்ல உள்ள ஒரு கவர்மென்ட் ஸ்கூல்ல இருந்துதான் இதை முதன் முதல்ல ஆரம்பிச்சோம். நாங்க செஞ்சதைப் பார்த்து கேரள கல்வித்துறை அமைச்சரே நேரடியா அந்த ஸ்கூலுக்கு வந்து எங்களைப் பாராட்டினார். அப்புறம் கூடலூர் பக்கத்துல கொடசனகொல்லி, குடமூலாங்கிற இரண்டு மலைக்கிராமங்கள்ல ‘பாம்2’ங்கிற என்.ஜி.ஓ நடத்துற பள்ளி, அந்தியூர் பக்கத்துல இருக்குற கொங்காடை, அக்னிபாவி மலைக்கிராமங்கள்ல ‘சுடர்’ அமைப்பு நடத்துற பள்ளினு எங்க பயணம் நல்லபடியா போய்ட்டிருக்கு.
 ஒவ்வொரு ஸ்கூலுக்கும் அஞ்சு பேரை கூட்டிட்டுப் போவேன். ஒவ்வொரு ஊருக்குப் போகும்போதும் அற்புதமா இருக்கும். பலவிதமான மக்களோட நிலையைப் புரிஞ்சுக்கிறதுக்கும் இந்தப் பயணம் உதவுது. நேரடி மனிதத் தொடர்புகள், அவங்களோட உறவு பெரிய வரமா கிடைக்குது. இதுல ஈடுபடுற திருநங்கைகளுக்கு அறக்கட்டளை மூலமா ஒரு ஊக்கத் தொகையைத் தரேன். ஸ்கூல்ல பணம் வாங்காம இலவசமா இந்தச் சேவையைசெய்யறோம். ஓவியம் வரையத் தேவையான மூலப்பொருட்களை யாராவது ஸ்பான்சர் செஞ்சா உதவியா இருக்கும் அல்லது வேறு ஏதாவது வழியில எங்களுக்குப் பொருளாதாரம் சார்ந்து உதவினா இதை தொடர்ந்து செய்ய ஊக்கமளிக்கும்...’’ என்கிற கல்கியின் அடுத்த திட்டம், தனது அன்பின் சுவர்களால் அரசு மருத்துவமனைச் சுவர்களையும், அதன் சுற்றுப்புறங்களையும் அழகோவியங்களால் அலங்கரிப்பதாகும்.
- த.சக்திவேல்
|