COFFEE TABLE
5000 பாடல்கள் இலவசம்! இசைக்காதலர்களின் கையில் ஆறாம் விரலாக மாறிவிட்டது ‘சரிகம’ கர்வான் ரேடியோ. பழைய மாடலைப் போல தோன்றினாலும் இப்போதுள்ள நவீன தொழில்நுட்பத்துடன் இதை உருவாக்கியிருக்கிறார்கள். எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்ல லைட் வெயிட், ப்ளூடுத் வசதி, யுஎஸ்பி போர்ட், ஐந்து மணி நேரம் தாங்கும் பேட்டரி என எல்லாவிதங்களிலும் தனித்து நிற்கிறது இந்த ரேடியோ. இன்பில்டாக இந்திய அளவில் ஹிட்டான 5000 பாடல்கள் இதில் உள்ளதுதான் ஹைலைட். ‘‘எல்லா பாடல்களையும் திரும்பத்திரும்ப கேட்கவே ஒரு ஆயுள் போதாது...’’ என்கின்றனர் இசைப்பிரியர்கள். விலை ரூ.5,990.
 ரிட்டர்ன் டு கோலிவுட் மகிழ்ச்சியில் பூரிக்கிறார் ராய்லட்சுமி. புது வருடத்தில் அவர் தமிழில் நடிக்கும் முதல் படமாக ‘நீயா 2’ உருவாகி வருகிறது. சமீபத்தில் அதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் இருந்தவர், தன் ஹேப்பியை செல்ஃபி எடுத்து ஃபேஸ்புக்கில் புன்னகைத்தார். ‘‘இது ‘நீயா’ படத்தின் இரண்டாம் பாகமா எனத் தெரியாது. ஆனா, ‘வாமனன்’ படத்திற்குப் பிறகு ஜெய்யுடன் நடிக்கறேன். காலம் ரொம்ப வேகமா பறக்குதுல்ல..!’’ என ஆச்சரியமாகிறார் ராய். சன்னி திருஷ்டி! ‘யார் கண்ணும் பட்றக்கூடாது’ என்று வயல் வெளிகளில் திருஷ்டி பொம்மையைக் கட்டி வைத்திருப்பதைப் பார்த்திருப்போம்.
ஆனால், ஆந்திராவில் உள்ள நெல்லூரைச் சேர்ந்த செஞ்சு ரெட்டி என்ற விவசாயி திருஷ்டி பொம்மைக்குப் பதிலாக ஒரு புது ஐடியாவைக் கண்டுபிடித்திருக்கிறார். அந்த ஐடியா இணையத்தையே திக்குமுக்காடாக வைத்திருக்கிறது. அவரது பத்து ஏக்கர் நிலத்தில் முட்டைக்கோஸும், காலிஃப்ளவரும் செழுமையாக விளைந்திருக்கிறது. தோட்டத்தின் முன் பிகினி உடையில் ஒய்யாரமாகக் காட்சியளிக்கும் சன்னி லியோனின் படத்தை வைத்திருக்கிறார். ‘‘இந்த வழியாக வரும் யாரும் என் தோட்டத்தைக் கண்டுகொள்வதே இல்லை. சன்னி லியோனையே வெறித்துப் பார்க்கிறார்கள். இந்த தந்திரம் நன்றாக செயல்படுகிறது. இனி திருஷ்டி பொம்மையே தேவையில்லை..!’’ என்கிறார் புன்னகையுடன்.
 மகிழ்ச்சி டிப்ஸ் ‘‘நூறு வருசம் சந்தோஷமா வாழ வேண்டுமா? ரொம்ப சிம்பிள். நாளைக்கு இந்த நோய் வந்துட்டா என்ன பண்றது? கிழவனாகிட்டா என்ன செய்றதுனு எதிர்காலத்தைப் பற்றிய தேவையில்லாத கவலைகளை முதல்ல தூக்கியெறிங்க...’’ என்று மகிழ்ச்சிக்கான எளிய ரகசியத்தை உடைக்கிறார் ஆராய்ச்சியாளரான டான் ப்யூட்னர். மட்டுமல்ல, ‘‘உங்களின் பழக்க வழக்கங்களை மாத்த தேவையில்லை. உங்களின் சூழலை மாத்தினாலே போதும்.
அதுதான் மகிழ்ச்சிக்கான வழி...’’ என்கிறது அவரின் சமீபத்திய ஆய்வு. ‘‘ஆசியாவிலேயே மகிழ்ச்சியான இடம் சிங்கப்பூர்தான். காரணம், மக்கள் பேசுகின்ற மொழி, குற்றங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் குறைவு, பாதுகாப்பு வசதி, இசைவான மனிதர்கள்...’’ என்கிற அவர் மேலும், ‘‘இந்த உலகத்தில் கோஸ்டா ரிக்கா மக்கள்தான் மகிழ்ச்சியோடு அதிக நாட்கள் வாழ்கிறார்கள். காரணம், அவர்கள் குடும்ப உறவுகளுக்கும், மத நம்பிக்கைகளுக்கும் அதிக முக்கியத்துவம் தருகின்றனர்...’’ என்கிறார்.
வறட்டி ரிக்கார்ட்! இன்றைக்கும் கூட வட இந்தியர்கள் சமையல் செய்ய, வெந்நீர் வைக்க வறட்டியைத்தான் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். ஆன்லைனில் ஆர்டர் செய்தாலே போதும் ‘வறட்டி’ வீடு தேடி வந்துவிடும். விஷயம் இதுவல்ல. ராஜஸ்தானைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் உருண்டை வடிவில் மாட்டுச் சாணத்தைத் தட்டி, சுவரை நோக்கி குறிபார்த்து வீச, அது ஒன்றுடன் ஒன்று மோதாமல், சிதறாமல் வரிசையாக சுவரில் பொருந்திவிடுகிறது. இந்த அரிய காட்சியை வீடியோவாக்கி ஃபேஸ்புக்கில் ‘Radha Padmini’ பக்கத்தில் ‘That’s What I Call Accuracy’ என்ற தலைப்பில் பதிவிட, இரண்டு லட்சம் பேர் பார்த்து வியப்படைந்திருக்கின்றனர்.
- குங்குமம் டீம்
|