முகமூடிகளின் காதலன்!
- ப்ரியா
‘மெட்ராஸ்’ படத்தில் பெருமாளாக; ‘கபாலி’யில் லோகாவாக, ‘மாரி’யில் பேர்ட் ரவியாக பல படங்களில் மைம் கோபியை பார்த்திருப்போம். இவரது நடிப்பைப் பார்த்து கைதட்டியிருப்போம். ஆனால், இவரது நிஜ முகம் வேறு! கடந்த 23 வருடங்களாக ‘ஜி மைம் ஸ்டூடியோ’ என்ற பெயரில் நடிப்பு மற்றும் மைம் குறித்த பயிற்சியை அளித்து வருகிறார். அதென்ன மைம்? முகத்துக்கு முகமூடி அணிந்து நாம் சொல்ல வரும் விஷயத்தை உடல் அசைவுகள் மூலம் வெளிப்படுத்தும் கலைதான் மைம். முகமே ஒரு முகமூடிதான் என்று சொல்லும் இவர், தன்னுடைய ஸ்டுடியோவை 80க்கும் மேற்பட்ட முகமூடிகளால் அலங்கரித்துள்ளார்‘‘வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் ஒவ்வொரு முகமூடியை அணிகிறோம்.
 அம்மாவுக்கு ஒரு முகம், அப்பா முன்னால் மற்றொரு முகம், ஏன்- மனைவிக்கும் ஒரு முகத்தைத்தான் வெளிப்படுத்துகிறோம். ஆக, நம் உண்மையான முகம் எதுவென்று யாருக்குமே தெரியாது. இயற்கை மரணம் நிகழும் போதுதான் நிஜ முகம் வெளிப்படும். அதுவரை இந்த செயற்கை முகமூடிகள்தான் வேலைபார்த்துக் கொண்டே இருக்கும். நம் முகத்தின் சூப்பர் மீடியம் கண்கள்தான். என்ன பார்க்கிறதோ அதற்கு ஏற்ப உடனே ரியாக்ட் செய்யும். பார்ப்பதை நம் மூளையில் அப்படியே பதிவு செய்து கொள்ளும். அதனால்தான் எவ்வளவு காலமானாலும் ஒருவரின் முகம் நமக்கு மறப்பதில்லை.
அவரை பார்த்த அடுத்த நொடியே அவரைப் பற்றிய விஷயங்களை நம் மூளை நமக்கு எடுத்துக் கொடுத்துவிடும். உதாரணத்துக்கு, நம் கையில் அழுத்தம் கொடுக்கும் போது அதை நாம் தாங்கிக் கொள்ள முடியும். அதுவே கண்ணுக்கு நேராக விரலைக் கொண்டு போனால், உடனே மூளை அதை செயல்படுத்த வேண்டாமென கட்டளையிடும். பிறப்பும் இறப்பும் ஆண்டவன் கொடுத்தது. இடைப்பட்ட காலத்தில் நம்மை யாரென்று அடையாளம் காட்டுவது முக மூடிகள்தான். என் அடையாளம் சினிமா. உங்கள் அடையாளம் பத்திரிகை. இப்படி ஒவ்வொருவருக்கும் ஓர் அடையாளத்தை இந்த முகம் கொடுத்திருக்கிறது. அழகு என்பது அகம்தான். முகமல்ல.
 எல்லோருக்கும் கண், மூக்கு, வாய் ஒன்றுதான். ஆனால், அதன் அமைப்பு மாறுபடும். ஒவ்வொரு மனிதனும் யூனிக். கடவுள் அப்படித்தான் டிசைன் செய்திருக்கிறார். ட்வின்ஸாக பிறந்தவர்களிடம் கூட சின்ன வித்தியாசம் இருக்கும். இவ்வளவு அழகானது மனிதப் படைப்பு. இதை இந்த முகமூடிகள்தான் உணர்த்துகின்றன. அதனால்தான் இதை சேகரிக்கிறேன்...’’தத்துவார்த்தமாகப் பேசும் கோபி... தவறு, மைம் கோபி... முகமூடியுடன் பேசிப் பாருங்கள், உங்களை நீங்கள் உணர்வீர்கள் என்கிறார்.‘‘பொழுது போகாத போது, வெறுப்பா இருக்கும்போது, மனசு பாரமா இருக்கும் போது இவைகள்தான் என் துணை. ஸ்டூடியோவுக்கு வந்து இவற்றையே பார்த்துக் கொண்டிருப்பேன்.
ஒவ்வொரு முகமூடியும் ஒவ்வொரு கதை சொல்லும். ஒவ்வொன்றும் ஒரு கதாபாத்திரத்தை நமக்கு உணர்த்தும். நாம் எல்லாரும் ஒரே இன மக்கள்தான். பாலினங்களால் படைக்கப்பட்டதுதான் உலகம். ஏதோவொரு வகையில் ஏதோவொரு பயணத்தை மேற்கொண்டிருக்கிறோம். அதன் காரணமாக பிரிந்திருக்கிறோம். அமெரிக்கன், ஆசியன், ஆப்பிரிக்கன், வெள்ளையன், கறுப்பன்... என உலக ரீதியாக நம்மை நாமே பிரித்துக் கொண்டிருக்கிறோம். நம் தேவைக்காக, வசதிக்காக நம்மையே மாற்றி அமைத்திருக்கிறோம். இதுதான் ஒவ்வொரு இனத்துக்கும் ஒரு முகத்தைக் கொடுத்திருக்கிறது. உயர்ந்தவர், தாழ்ந்தவர் என யாருமில்லை. மண்ணுக்குள் மக்கும் உடல் வெளியில் இருக்கும் வரைதான் போராட்டங்கள்.
 எனவே, இருக்கும் காலம் வரை மற்றவருக்கு துரோகம் நினைக்காமல் சந்தோஷமாக வாழ்ந்துவிட்டு போகலாமே?! நம் உண்மையான முகமூடியை வெளிப்படுத்தத் தயங்குகிறோம். காரணம் சமூகம். மனிதனுக்கு அழகே சிரிப்புதான். அந்த சிரிப்பை தொலைத்துவிட்டு ஓடிக் கொண்டிருக்கிறோம். மகனுக்காக நான் ஏன் சொத்து சேர்க்க வேண்டும்? அவனுக்குத் தேவையானதை அவன் சம்பாதித்துக் கொள்வான். அவன் வாழ்க்கையை அவன் வாழ கற்றுக் கொடுப்போமே... சிரிப்பை யாருக்காகவும் நாம் தியாகம் செய்ய வேண்டாம். சுற்றி இருப்பவர்களுடன் சேர்ந்து பழகுவோம். இப்படி இருந்தாலே வாழ்க்கை இனிமையாக இருக்கும். அதற்கு உதாரணம் இந்த தாத்தா பாட்டி முகமூடி.
பல்லு போன காலத்திலும் அவர்கள் முகத்தின் சிரிப்பு பல அர்த்தங்களை வெளிப்படுத்தும். நமக்குத் தேவையான தண்ணீர், உணவு, நிழல்... என எல்லாவற்றையும் அழித்து வருகிறோம். இந்த முகமூடி மாற வேண்டும். நாம் நாமாக இருப்பதுதான் அழகு. இதையெல்லாம் எனக்கு கற்றுக் கொடுத்தவை இந்த முக மூடிகளே...’’ என்று சிரிக்கும் மைம் கோபி எந்த ஊருக்குச் சென்றாலும் முகமூடிகளை எடுத்துச் செல்கிறார். ‘சினிமாவுக்காகவும் மைம் நிகழ்ச்சிகளுக்காகவும் பல ஊர்களுக்கும் நாடுகளுக்கும் சென்றிருக்கிறேன். எங்கு போனாலும் முதலில் முகமூடிகள் எங்கு விற்பனையாகின்றன என்றுதான் தேடுவேன்.
சில முகமூடிகள் அவர்களின் கலாசாரத்தை வெளிப்படுத்தும். சில நம் உள்ளுணர்வை பிரதிபலிக்கும். வேறு சில முகமூடிகள்- மரத்தின் கூட்டில் சிப்பிகள் பொறிக்கப்பட்டு, இயற்கை சாயம் பூசி அழகுக்காக வைத்திருப்பார்கள். என் சேகரிப்பில் இருக்கும் ஒவ்வொரு முகமூடியும் ஒரு வெளிப்பாடு. எனது மைம் துறைக்கு இந்த முகமூடிகள் பெரிய பலம். நம் உடல் மொழியால், மொழி தெரியாத ஊரிலும் வாழ முடியும். அதற்கு வெளிப்பாடு அவசியம். நாட்டுக்கு நாடு முக வெளிப்பாடு மாறுபடும். ஜப்பானில் உள்ளவர்களின் முகம் தட்டையாக இருக்கும். நைஜீரியாவில் உள்ளவர்கள் கரு கரு என சுருள் முடியுடன் இருப்பார்கள்.
 இப்படி பெரும்பாலும் ஒன்று போல் காணப்பட்டாலும் அவர்களது முகத்தின் வெளிப்பாடுதான் மற்றவர்களிடம் இருந்து அவர்களை வேறுபடுத்திக் காட்டுகிறது. சிரிப்பு, அழுகை, சோகம், துக்கம், சந்தோஷம் என நம் முகத்தின் வெளிப்பாட்டை வைத்தே எதிரில் இருப்பவர்கள் எந்த உணர்வில் நாமிருக்கிறோம் என்பதை புரிந்து கொள்கிறார்கள்...’’ என்றபடி ஒரு முகமூடியை எடுத்தார். அது ஒருபக்கம் சிரித்தபடியும் மறுபக்கம் அழுதபடியும் இருந்தது. ‘‘இதுதான் எதார்த்தம். முகத்திலுள்ள கீழ்த்தாடையை எடுத்துவிட்டால் முகம் எதையுமே பிரதிபலிக்காது. சிரிப்பு, அழுகை, கோகம் எல்லாமே இந்த கீழ்த்தாடைதான். இங்குள்ள முகமூடிகளில் பல, வாய் திறந்திருக்கும், சிரித்தபடி காட்சியளிக்கும். சில வாய் மூடி மவுனமாக இருக்கும்.
எண்ணத்தின் வெளிப்பாடே வாழ்க்கை. ஒவ்வொருவரைப் பற்றிய எண்ண பிரதிபலிப்பும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். எனவேதான் எண்ணங்களால் யாரையும் பார்க்காதீர்கள் என்கிறார்கள். ஒன்று தெரியுமா? சினிமா பிரபலம் என்மீது ஏறாமல் இருக்க இந்த முகமூடிகள்தான் காரணம்...’’ என்றவர் புதிதாக தன் அறையை ஆக்கிரமித்திருக்கும் ஆஸ்திரேலிய முகமூடியைத் தடவியபடி தொடர்ந்தார். ‘ஆஸ்திரேலியா சென்றபோது என் மகள் இதை வாங்கி வந்தாள். என்னைப் பற்றி அறிந்தவர்கள் அனைவருமே முதலில் எனக்காக வாங்குவது முகமூடிகளைத்தான்.
 பிறகுதான் மற்ற பொருட்களை வாங்குவார்கள். ஒரு கடையில் 100 மாஸ்க் இருக்கும். அதில் ஒன்றுதான் நம்மை ஈர்க்கும். ‘என்னை எடுத்துக்கோ’ என அது அழைப்பதை நம் உள்ளுணர்வு சொல்லும். அந்த முகமூடி என்ன விலையாக இருந்தாலும் வாங்கி விடுவேன். மற்றவர்கள் வாங்கித் தரும் போது, அது அவர்களுக்குப் பிடித்த முகமாக இருந்தாலும் அவர்களுக்காக அதை ஏற்றுக் கொள்வேன். அப்போது கிடைக்கும் சந்தோஷமே தனி...’’ கண்களை மூடி தன்னிடமிருக்கும் முகமூடியை முத்தமிடுகிறார் மைம் கோபி.
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
|