பகவான்-10



ஓஷோவைக் கொல்ல முயற்சி!

பூனா நகரிலிருந்து சுமார் முப்பது கிலோமீட்டர் தொலைவில் சஸ்வாத் என்றொரு ஊர். அங்கே ஓஷோவின் புதிய சன்னியாச இயக்கத்துக்காக நானூறு ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு இருந்தது. அதையே தலைமையகமாகக்கொண்டு இயங்குவதற்குத்தான் திட்டமிட்டிருந்தார்கள்.அன்று 11, டிசம்பர் 1979.
ஓஷோவின் 48வது பிறந்தநாள். பூனா ஆசிரமம் அதிகாரபூர்வமாக செயல்பட ஆரம்பித்தது. ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட சன்னியாசிகள் அந்த ஆசிரமத்தில் இணைந்தனர்.ஓஷோ ஆசிரமத்துக்கு புதியதாக கொடியும் அன்று அறிமுகம் செய்யப்பட்டது.

அந்த மையத்தில் தியான மையங்கள், பல்கலைக்கழகம், மருத்துவமனை, தொழில்நிலையங்கள் உட்பட கிட்டத்தட்ட ஐம்பது பிரிவுகள் செயல்பட ஆரம்பித்தன. திரைப்படங்கள் தயாரிப்பதற்காக பிரும்மாண்டமான ஸ்டுடியோ ஒன்றை தொடங்கப்போவதாகக் கூட சொன்னார்கள். மேலும், வெளியூர் பக்தர்கள் வந்து தங்கிச் செல்வதற்கு வசதியாக ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கும் அஸ்திவாரம் போட்டார்கள்.

இந்தியாவுக்குள்ளேயே ஓஷோவுக்கு தனி அரசாங்கமாக பூனா ஆசிரமத்தை அமைக்க புதிய சன்னியாசிகள் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் திட்டமிட்டிருந்தனர்.அரசாங்கம் மட்டுமின்றி மத அடிப்படைவாதிகளும் ஓஷோவைக் கண்டு அஞ்சினர். அவர் மரபுக்கு எதிரானவர் என்று குற்றம் சாட்டினர்.

இதற்கிடையே இந்தியாவில் ஜனதா அரசாங்கம் கவிழ்ந்து, மீண்டும் காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்டிருந்தது. ஜனதா ஆட்சியில் இருந்த நெருக்கடிகள் ஓரளவுக்கு விலகி இருந்தாலும், புதிய ஆட்சியோடும் ஓஷோவுக்கு ஒன்றும் நெருக்கமான தொடர்புகள் இல்லை. அவர்கள் தொந்தரவும் செய்யவில்லை, ஆதரவாக அருகில் வந்து நிற்கவும் இல்லை.1980 மே மாதம் 22ம் தேதி.அதிகாலையிலிருந்து பூனா ஆசிரமத்து வாசலில் ஓர் இளைஞன் காத்துக் கொண்டிருந்தான்.

அவனை ஆசிரமத்துக் காவலர்கள் விசாரித்தார்கள்.“என் பெயர் விலாஸ் விட்டல் தூபே. பகவானைப் பார்க்க நெடுந்தூரத்திலிருந்து வருகிறேன்...” என்று இந்தியில் பேசினான்.“எதற்காக பகவானை நீ பார்க்க வேண்டும்?”“அதை அவரிடம்தான் சொல்ல முடியும்!”மேலும் சிறிதுநேரம் அவனிடம் பேசிப் பார்த்தார்கள்.“எதுவாக இருந்தாலும் பகவானிடம்தான் சொல்ல முடியும்...” என்று பிடிவாதம் பிடித்தான்.
பார்வைக்கு அப்பாவியாக இருந்ததால், அவனை 8 மணி வாக்கில் ஆசிரமத்துக்குள் அனுமதித்தார்கள்.

அதிகாலை தியானத்தையெல்லாம் முடித்துவிட்டு, பக்தர்களுக்கு அப்போது பேருரை நிகழ்த்திக் கொண்டிருந்தார் ஓஷோ.பார்வையாளனாகக் கடைசி வரிசையில் அமர்ந்தான் தூபே.ஓஷோவின் பேச்சைக் கேட்டுக் கொண்டே ஒவ்வொரு வரிசையாக முன் நகர்ந்து வந்துகொண்டிருந்தான்.
திடீரென பார்வையாளர் கூட்டத்திலிருந்து எழுந்து, இந்தியில் கத்தினான்.“ஓஷோ, நீங்கள் இந்து மத எதிரியா?”

ஓஷோ, கனிவுடன் அவனைப் பார்த்தார். கூட்டத்திலிருந்தவர்கள் அவனைப் பிடித்து வெளியேற்ற முயற்சித்தார்கள். ஓஷோ சாடை காட்டி அவர்களைத் தடுத்தார்.“இந்து மதத்தின் கொள்கைகளுக்கு எதிராகப் பேசுகிறீர்கள். செயல்படுகிறீர்கள். நீங்களெல்லாம் அன்னியநாட்டு கைக்கூலிகள்!” என்று கத்திக் கொண்டு மேடையை நோக்கி ஓடிவந்தான்.

மேடையில் ஓஷோவுக்குப் பின்னால் நின்றிருந்த சன்னியாசிகள் பதறிப்போய் அவனைத் தடுக்க வந்தனர்.பாதுகாவலர்களிடமிருந்து திமிறிக்கொண்டு ஓஷோவை நோக்கி கொலைவெறியோடு பாய்ந்தான் தூபே. அவனது கையில் ஒரு குறுவாள் வேறு திடீரென முளைத்தது!
ஓஷோவைக் கொலை செய்யும் நோக்கத்தோடுதான் விலாஸ் விட்டல் தூபே வந்திருக்கிறான் என்பதை நொடியில் புரிந்து கொண்டார்கள்.
காவலர்கள் ஓடிவந்து தூபேவை மடக்கி கட்டிப் போட்டார்கள்.

பேருரை நிகழ்த்திக் கொண்டிருந்த ஓஷோவை அவரது அறைக்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்றார்கள்.பூனா காவல் நிலையத்துக்கு தொலைபேசியில் விவரம் தெரிவிக்கப்பட்டது.காவலர்கள் உடனே வந்து தூபேவைக் கைது செய்து ஜீப்பில் ஏற்றி அழைத்துப் போனார்கள்.இதற்கிடையே விஷயம் கேள்விப்பட்டு, பம்பாயில் இருந்து பத்திரிகையாளர்கள் படைதிரண்டு வந்து ஆசிரமத்தில் குழும ஆரம்பித்தார்கள். ஓஷோவைப் பார்க்க வேண்டும், பேச வேண்டும் என்று அவர்கள் நிர்வாகிகளிடம் வற்புறுத்தத் தொடங்கினர்.

ஓஷோவின் சார்பாக மா லட்சுமி நிருபர்களைச் சந்தித்துப் பேசினார்.“பகவான் என்கிறீர்கள். அவர் மீதே தாக்குதல் நடந்திருக்கிறதே?”

“மகாத்மா என்கிறோம். அவரையே மக்களில் ஒருவன்தான் சுட்டுக் கொன்றான். மக்களுக்கு அறிவுப்பால் புகட்ட முற்பட்ட புத்தர், இயேசு, மகாவீரர் போன்றோரும் இதுபோல தாக்குதலை எதிர்கொண்டிருக்கிறார்கள்...” என்று லட்சுமி விளக்கம் அளித்தார்.காவல்துறையால் கைது செய்யப்பட்ட விலாஸ் விட்டல் தூபே, ஒரு இந்துமதத் தீவிரவாதி என்பது விசாரணையில் வெளிப்பட்டது.

ஆனால் - பம்பாயிலிருந்து பூனா காவல்நிலையத்துக்கு மகாராஷ்டிராவில் அப்போது மதம் பேசி செல்வாக்கோடு வளர்ந்துகொண்டிருந்த ஒரு தலைவர் பேசியதாகவும், அதன் அடிப்படையில் அவன் விடுதலை செய்யப்பட்டதாகவும் தகவல்.

அமைதியில் நிம்மதி

வழக்கம்போல தன் சீடர்களுக்கு 1981, மார்ச் மாதம் ஓஷோ தரிசனம் கொடுத்தார். அந்நாளுக்குப் பிறகு ஓஷோ, யாரையும் சந்திக்காமல் தவிர்க்க ஆரம்பித்தார்.ஓஷோ, இனி அமைதியைத்தான் நாடுவார். அதற்காக யாரும் கவலைப்பட வேண்டாம் என்று மா ஆனந்தலட்சுமி அறிவித்தார்.
ஆசிரமத்தில் நடைபெற்ற கூட்டங்களில் ஓஷோ கலந்துகொண்டு, பேசுவதைத் தவிர்த்து அமைதியாக கவனித்தார். ஆசிரமத்தின் வழக்கமான தியானம், ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் சொற்பொழிவு ஆற்றுவதை நிறுத்தினார்.

புதிதாக ஆசிரமத்தில் சேரும் சன்னியாசிகளுக்கு தீட்சை வழங்குவதையும் நிறுத்தினார். சன்னியாசம் பெறுவதற்காக மேற்கத்திய நாடுகளில் இருந்து வரும் பக்தர்களுக்கு சுவாமி ஆனந்தகீர்த்தாவும், உள்ளூர் பக்தர்களுக்கு சுவாமி சத்தியவேதாந்தாவும் தீட்சை வழங்கத் தொடங்கினர்.1981, மே 1ஆம் தேதி சுமார் பத்தாயிரம் சீடர்கள் ஓஷோவுக்கு முன்பாக அமர்ந்து அமைதி பயின்றனர்.

அப்போது புத்தரின் ‘புத்தம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி, தர்மம் சரணம் கச்சாமி’ ஆகிய வாசகங்கள் மட்டுமே உச்சரிக்கப்பட்டன.உலகின் தொடக்கத்தில் அமைதி இருந்தது, முடிவிலும் அதே அமைதிதான் இருக்குமென்று ஓஷோ கணித்தார்.

வன்முறை ஏவப்பட்டது!

ஓஷோவின் மீது 80களின் தொடக்கத்தில் கொலைமுயற்சி மட்டுமின்றி, ஆசிரமத்தை முடக்குவதற்கான மிரட்டல்களும் பல்வேறு நாடுகளில் இருந்து மதவெறியர்களால் விடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது.ஓஷோவைக் கொல்வதற்கு இலங்கையில் இருந்த தொழில்முறை கொலையாளி ஒருவரோடு ஒப்பந்தம் செய்து பெரும் பணம் கைமாறி இருந்தது குறித்த தகவல் வெளிவந்தது.

பம்பாய் மற்றும் பூனா நகரங்களில் இருந்த ஆசிரமங்களை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாகவும் தொலைபேசி மிரட்டல்கள் வெளிவந்தன.பூனாவில் ஒருமுறை தீவிபத்தும் ஏற்பட்டது. அது சதிவேலையாக இருக்கலாம் என்றும் சந்தேகம் கிளம்பியது. ஏனெனில் அடுத்தடுத்த நாட்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தேறின. ஆசிரமத்தில் இருந்த புத்தகக் கிடங்கு முழுமையாக எரிக்கப்பட்டது. மருத்துவமையத்தில் வெடிகுண்டு ஒன்றும் வெடித்தது.

தான் உயிரோடு இருப்பதற்காக மகிழ்ச்சியோ, இல்லாமல் போவது குறித்து வருத்தமோ தனக்கு இல்லை என்று அறிவித்தார் ஓஷோ.ஞானிகள் அவதரித்த இந்தியாவை விட்டு வெளியே செல்ல தனக்கு விருப்பமில்லை. ஆனாலும், அத்தகைய நெருக்கடிகள் உருவாகி வருகின்றன என்றும் சூட்சுமமாகத் தெரிவித்தார்.

அதற்கு முன்பாக வெளிநாட்டு அழைப்புகளைத் தவிர்த்துக் கொண்டிருந்தவர், முதன்முறையாக உடல்நலிவுக்கு சிகிச்சை பெற வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு ஒப்புக்கொண்டார். 1981, ஜூன் மாதம் முதுகில் தண்டுவட அறுவை சிகிச்சைக்காக அவர் தன்னுடைய நெருங்கிய சீடர்களை மட்டும் அழைத்துக்கொண்டு அமெரிக்கா சென்றார்.

(தரிசனம் தருவார்)

- யுவகிருஷ்ணா

ஓவியம்: அரஸ்