பாகிஸ்தானின் பொருளாதாரத்தை முடக்க நினைத்தால் இந்தியாவில் அறுவை சிகிச்சைக்கான செலவு அதிகமாகும்!



காஷ்மீரில் இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ‘இது பாகிஸ்தானின் சதித் திட்டம்’ என்று பலரும் பலவிதமாக குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

இந்நிலையில் பாகிஸ்தானிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு விதிக்கும் சுங்க வரியை 200 சதவீதமாக உயர்த்தி தனது எதிர்ப்பைக் காட்டியிருக்கிறது மத்திய அரசு.‘‘வரியை உயர்த்துவதால் பாகிஸ்தானின் பொருளாதாரத்தை முடக்க முடியும். அதனால் தீவிரவாதத்துக்கு மூல காரணமான பாகிஸ்தானின் பொருளாதார வளம் சீர்குலையும் என்பது இந்தியாவின் நம்பிக்கை.

ஆனால், இந்தச் செயல் பாகிஸ்தானை அல்ல; இந்தியாவைத்தான் பொருளாதார ரீதியாக பாதிக்கும்...’’ என்று சொல்லி அதிர்ச்சியளிக்கின்ற பொருளாதார நிபுணர்கள், ‘‘கடந்த வருடம் பாகிஸ்தானிலிருந்து இந்தியா இறக்குமதி செய்த பொருட்களின் மதிப்பு சுமார் 2 பில்லியன் டாலர்கள்!

அதேநேரம், இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு ஏற்றுமதியான பொருட்களின் மதிப்போ வெறும் 0.5 பில்லியன் டாலர்கள் மட்டுமே! இந்நிலையில் இந்தியா மாதிரி பாகிஸ்தானும் சுங்க வரியை உயர்த்தினால் அதிகமாக பாதிக்கப்படப்போவது நாம்தான்...’’ என்ற புள்ளிவிவரத்தையும் சுட்டுகின்றனர்.

பிரிவினையை அடுத்து இரு நாடுகளும் சுதந்திரம் பெற்றதில் இருந்து இருவருக்குமே போதாத காலம்தான். என்றாலும் ‘காட்’ மற்றும் உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தங்களின்படி இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையேயான வர்த்தகத்தில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியது. வரிவிதிப்பு விகிதங்களில் நாடுகளுக்கிடையே நட்புறவு வளர்ந்தது. வர்த்தகத்தில் கூட நல்ல உறவுதான் கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வந்தது.

பாகிஸ்தானைச் சலுகைக்குரிய நாடாக இந்தியா அங்கீகரித்ததை இதற்கு ஒரு உதாரணமாகச் சொல்லலாம். ஆனாலும் கடந்த சில வருடங்களாக பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான வர்த்தகத்தில் பெரிய அளவில் மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. உதாரணத்துக்கு, பாகிஸ்தானிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு இந்தியா வரிச்சலுகைகளை வாரி வழங்கியது. ஆனால், இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு பாகிஸ்தான் வரிச்சலுகைகளைத் தரவில்லை.

இந்த விஷயங்களை எல்லாம் ‘காட்’ மற்றும் உலக வர்த்தக அமைப்பிடம் சட்டபூர்வமாக இந்தியா வலியுறுத்தியிருக்க வேண்டும். ஆனால், அப்படி எதையும் செய்யவில்லை. மாறாக இன்றைக்கு ‘பாகிஸ்தானைத் தண்டிக்கிறேன்’ என்று 200 சதவீத வரியை விதித்திருப்பது நமக்குத்தான் பெரிய பாதிப்பைக் கொண்டு வரும்...’’ என்கின்றனர் பொருளியல் ஆர்வலர்கள்.

இதை மெய்ப்பிக்கும் விதமாக சமூக ஆர்வலரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான அ.மார்க்ஸ், தன் முகநூலில் நண்பர் ஒருவர் இப்படிச் சொல்லியதாக ஒரு பதிவை சமீபத்தில் இட்டிருந்தார்.‘‘அறுவைச்சிகிச்சைக்கான பல உபகரணங்கள் பாகிஸ்தானில் உள்ள சியால்கோட் என்னும் இடத்தில்தான் தயாராகிறது. நம் சிவகாசி பட்டாசுத் தொழில்போல் குடிசைத் தொழிலாகவே அங்கே மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழில் நடக்கிறது.

இந்தியாவில் பயன்படுத்தப்படும் மருத்துவ உபகரணங்களில் பெரும்பாலானவை இங்கிருந்துதான் வருகிறது. 200 சதவீத வரி உயர்ந்தால் இந்தியாவில் அறுவை  சிகிச்சைக்கான செலவு அதிகமாகலாம்...’’ என எச்சரிக்கிறார்.  உண்மையில் சியால்கோட்டில் உற்பத்தியாகும் உபகரணங்கள்தான் பிரபல கம்பெனிகளின் பிராண்ட் பெயர்களில் இங்கே உலாவிக் கொண்டிருந்தன. சுங்க வரியால் அவற்றின் விலை உயரும்போது பிராண்டட் பொருட்களையே வாங்கிவிடலாம் என்று மருத்துவமனைகள் ஒரு முடிவுக்கு வரலாம்.  

அதே நேரத்தில் சியால்கோட்டில் தயாராகும் பொருட்கள் அப்படியே தேங்கிவிடாது. அது கள்ளச்சந்தை வழியாக இந்தியாவுக்கு வந்தே தீரும். காரணம், பொருளாதாரத் தடை, போர், பஞ்சம், தட்டுப்பாடு, விலை அதிகரிப்பின்போது மட்டுமே கள்ளச்சந்தை சூடு பிடிக்கும்.

‘‘இந்தியா - பாகிஸ்தான் பொருளாதாரத்தில் சட்டத்துக்கு உட்பட்டு நடக்கும் வர்த்தகத்தைவிட சட்டத்துக்குப் புறம்பாக நடக்கும் வர்த்தகம்தான் அதிகம்...’’ என்கிறார்கள் கள்ளச்சந்தை நிபுணர்கள். அத்துடன் பக்கத்து நாடு எனும் பட்சத்தில் இந்த 200 சதவீத வரி உயர்வு என்பது கடத்தல், நடுக்கடல் சண்டை, மாஃபியா போன்ற பிரச்னைகளைப் புதிதாக உருவாக்கும்.

முக்கியமான விஷயம், சிமெண்ட்டையும் பாகிஸ்தானிலிருந்துதான் இந்தியா அதிகமாக இறக்குமதி செய்கிறது. இதுவும் ஏற்கனவே அதலபாதாளத்தில் இருக்கும் ரியல் எஸ்டேட் பிரச்னையை பூதாகரமாக்கும்.அத்தியாவசியமான பொருட்களுக்கு ஒரு நாட்டில் தடைவிதிக்கும்போது அதற்கு மாற்றான பொருட்கள் பற்றி அரசு கவனம் கொள்ளவேண்டும். பாகிஸ்தானிடம் இல்லை என்றால் வேறு நாடுகளிலிருந்து தருவிக்கலாம். ஆனால், நம் விலைக்கு மூன்றாம் உலக நாடுகளில் உற்பத்தியாகும் பொருட்களைத்தான் வாங்க முடியும்.

பாகிஸ்தான் இல்லை என்றால் சீனாவுக்குத்தான் போகவேண்டும். ஆனால், நமக்கு சீனாவையும் பிடிக்காது. பாகிஸ்தான் நமக்கு எதிரி என்றால் அந்த எதிரிக்கு நண்பனான சீனாவும் நமக்கு எதிரிதான். தவிர, சில அடிப்படையான தேவைகளின் பொருட்டு யோசிக்காமல் முடிவு செய்யும்போது சொந்த மக்களே அரசின் எதிரிகளாக மாறக்கூடிய அபாயம் கூட ஏற்படலாம்.

உள்ளூர் பொருளாதாரத்திலேயே இந்தியா ஒரு மோசமான நிலையில் இருக்கும்போது அந்நிய நாட்டின் பொருளாதாரத்தை முடக்க முனைவது எல்லாம் தேவையற்ற செயல். அத்துடன் பாகிஸ்தானும் இந்தியாவைப் போல பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில்தான் உள்ளது. இரண்டு மோசமான ஆட்கள் சேர்ந்து பிரகாசமான ஒரு எதிர்காலத்தைப் பற்றி யோசிக்காமல் வீழ்ச்சிக்கான பாதையை நோக்கிச்
செல்வது சரிதானா?      

டி.ரஞ்சித்