தடம்



இருவரில் ஒருவர் குற்றவாளி. அவர் யார் எனக் கண்டுபிடிக்க போலீஸ் போராடுவதே ‘தடம்’.அருண் விஜய், துணைக்கு யோகிபாபுவை வைத்துக்கொண்டு சின்னச் சின்ன திருட்டுக்களாக செய்து வருகிறார். போலீசின் பிடியில் சிக்காமல் தப்பிக்கிறார். இன்னொரு அருண் விஜய், காதலி தன்யாவோடு செட்டிலாகி விடத் துடிக்கிறார். இதற்கிடையில் ஒரு கொலை விழ, அதற்கான ஆதார வடிவங்களில் இந்த இரண்டு பேரும் சிக்குகிறார்கள்.

இவர்களில் அசல் குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் வேலையில் போலீசுக்கு விழி பிதுங்குகிறது. கடைசியில் இந்த இருவரில் ஒருவரே கொலை செய்ததாக முடிவுக்கு வருகிறார்கள். அதிலும் விடை தெரியாத நிலை. அசல் குற்றவாளி பிடிபட்டாரா, அடுத்தடுத்து என்ன நடந்தது என்ற துல்லிய நடப்புகளே மீதி திரைக்கதை.புதிய களம், கணிக்க முடியாத திரைக்கதை என்ற அளவிலே இதுவரை வெளிவராத புதிய மாதிரியாக ‘துறுதுறு’ த்ரில்லரில் விளையாடியிருக்கிறார் இயக்குநர் மகிழ் திருமேனி.

அங்கே இங்கே அசையவிடாமல் லிப்ட்டில் வைத்தே காதல் சரசமாடும் அருண் விஜய்; காதலையும், தன்யாவைத் துரத்தும் இனிமையிலும் சொல்லி அடித்திருக்கிறார். அவரது பாத்திரத்தை வழி நெடுக லீடெடுத்து இறுதிக் காட்சியில் பொருத்துகிற விதம், பொருந்திய விதம் எல்லாமே வெல்டன். இனிமேலும் அருண் விஜய்யை வெயிட்டிங் லிஸ்ட்டில் வைக்கமுடியாது. கனஜோராகக் களம் இறக்கலாம்.

இவ்வளவு ஆக்‌ஷன் த்ரில்லரிலும் மகிழ் திருமேனியின் காதல் ஏரியா தனிப்பட்டு தெரிகிறது. தன்யா… இந்தப் பொண்ணை விட்டுடாதீங்க ப்ளீஸ்.. மணிபர்ஸ் உதட்டில் சரியான கிறக்கம்.மற்ற கதாபாத்திரங்கள் அனைத்தும் கொஞ்சம் சீரியஸாக உலா வர, யோகிபாபு சிரிக்க வைக்கிறார். அப்பாவி முகத்துடன் அடுத்த நாள் சிறையை நினைத்து கலங்குவதும் டைமிங் கமென்ட்டும் கலகல.

சோனியா அகர்வால், பெப்ஸி விஜயன் அளவாக நடித்து திரைக்கதைக்கு பலம் சேர்க்கிறார்கள். காஸ்டிங் அத்தனையும் கச்சிதம். அருண் விஜய்யின் காதலியாக அந்தப் பெரிய விழியில் ஸ்மிருதி வெங்கட் பிரமாதம்! அவரின் காதல், அளவில் சிறியதென்றாலும் கவித்துவம். சிக்கென போலீஸ் அதிகாரியாக வித்யா பிரதீப் கச்சிதம்.

புத்தாண்டு இரவுபோல கோபிநாத்தின் ஒளிப்பதிவு அவ்வளவு கலர்ஃபுல். அவரது ஒளிப்பதிவும் காந்த் எடிட்டிங்கும் டபுள் பேரல் கன் போல கூட்டணி போட்டு ஸ்கோர் செய்கின்றன. பின்னணியில் திகில் ட்விஸ்ட் ஏற்றுகிறது அருண்ராஜ் இசை! கார்க்கி, ஏக்நாத் பாடல்
களில் நயம்.

எல்லா முடிச்சுகளையும் அவிழ்க்கவே முடியாமல் திணறும்போதும் கடைசியில் நமக்காக அவை வெளிச்சம் பெறும்படியும் செய்திருப்பது மகிழ்திருமேனியின் ப்ளஸ்.வேகமும், பாய்ச்சலும், புத்திசாலித்தனமுமாக ஒரு த்ரில்லர்!             

குங்குமம் விமர்சனக் குழு