இது ஆர்ட் ஃபிலிம் இல்ல... தியாகராஜன் குமாரராஜா அதிரடி‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் டிரைலர் பரபரப்பு கூட்டியிருக்கிறது - படம் பாய்ச்சலுக்கு ரெடி!‘‘இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகம்னு தெரியும். ஒரு படத்தில் இயக்குநர் வேலை அதிகமானதுதான். அப்படிப் பார்த்தாலும் இந்த எதிர்பார்ப்புக்கு நான் மட்டும் காரணமில்லை. ‘சூப்பர் டீலக்ஸி’ல் பெரிய நடிகர்கள் இருக்காங்க. வித்தியாசமான காஸ்டிங். அதிலேயே ஒரு அட்வெஞ்சர் வருது. வளர்ச்சி நிகழ்ந்துகிட்டே இருக்கணும்னு விரும்புவேன். இதில் ஒத்திகை பார்த்திருக்கிறேனா அல்லது ஏதாவது நடந்திருக்கிறதா என்பதை நீங்கள் எல்லோரும் பார்த்திட்டுத்தான் சொல்லணும்.

ஆனால், அனேகமாக எல்லோரும் விரும்புகிற மாதிரிதான் படம் கொடுத்திருக்கேன்னு உறுதியாக நம்புகிறேன். இந்தப் படத்தில் நிறைய நிகழ்ந்திருக்கிறது என்றும் நினைக்கிறேன்...’’ நிதானமாகப் பேசுகிறார் நவீன இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா. ஒரே ஒரு படம்தான் ‘ஆரண்ய காண்டம்’… இன்னும் ஊர் சொல்லிக் கொண்டிருக்கிறது.எப்படி எதிர்பார்த்து படத்திற்கு வரணும்..?

படத்தை பார்க்க விரும்புகிறவர்கள் கொஞ்சம் திறந்த மனதோடு வந்தால் விரும்புவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. எதிர்பார்ப்பு வைத்துக்கொள்ளாமல் வந்தாலும் நல்லது. நாம் பொதுவாக ஓர் எண்ண ஓட்டத்தில் படம் இப்படி இருக்கும்னு நினைப்போம்ல… அதுக்குள்ள இந்தப்படம் இருக்கும்னு எதிர்பார்க்க முடியாது. முன்பே திட்டமிட்டபடி வந்தால் ஒர்க்அவுட் ஆகாமல் கூட போகலாம். பிடிவாதமான எதிர்பார்ப்பு இல்லாமல் வந்தாலே நன்று.

ரஜினிகாந்த் படமென்றால் ஃபைட் இருக்கும், வடிவேலு இருந்தால் காமெடி நிச்சயம்னு வருவோம் இல்லையா, அப்படிப்பட்ட அறுதியிட்ட நினைப்பு இல்லாமலும் வரலாம். நிச்சயம் பொழுதுபோக்காக இருக்கும். கேளிக்கை மிகுந்த படம். ஆரம்பிச்ச நிமிஷத்திலிருந்து உங்களை engage பண்ணும். முழுமையாக உங்கள் கவனிப்பைக் கோரும். நீங்க போனை தூக்கிட்டு கவனிக்கிற மாதிரி, போரடிக்கிற மாதிரி இருக்காது. நீங்கள் வெளிப்படையாக ரொம்பவும் ரசிக்கவும் செய்யலாம்.

பிற்போக்குத்தனம் இருந்தால் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். மனமுதிர்ச்சி இருந்தால் விரும்புவார்கள். படமே பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்களுக்குத்தான். மனம் கொஞ்சம் அகன்று, விசாலமாக இருந்தால் இவன் என்ன பண்றான்னு பார்க்கலாம்.
குறுகிய மனப்பான்மையோடு இருந்தால் ஏற்றுக்கொள்ள கஷ்டமாக இருக்கும்.

ஒரே படத்தில் விஜய் சேதுபதி, மிஷ்கின், சமந்தா, பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன்னு பட்டியலே பரபரப்பாக இருக்கு...
கிட்டத்தட்ட பனிரெண்டு கேரக்டர்களுக்கு மேலே முக்கியமாக இருக்கு. ஒருத்தரை மட்டும் பெரிய ஹீரோவாக எடுத்துக்கொண்டு மத்தவங்க அப்படியில்லைன்னா, அந்தப் பெரிய ஹீரோ இல்லாத நேரமெல்லாம் நமக்குதப்பாத் தெரியும்.

அதே சமயம் சம பலம் பொருந்தியவர்கள் முக்கியமான நடிகர்களாகவும் இருக்கிற பட்சத்தில், ஒவ்வொரு நடிகர்களாகப் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கும். அப்படித் தெரியும்போது அது திருவிழா மாதிரியும் இருக்கும். ஒரு நடிகரை இதில் வைச்சுக்கிட்டு ஒண்ணும் செய்ய முடியாது. அல்லது எல்லோரும் புதுசாக இருக்கணும். ஒரு பெரிய நடிகர் சரின்னு சொல்லிட்ட பிறகு, படிப்படியாக கேள்விப்பட்டு எல்லோரும் சேர்ந்திட்டாங்க. எனக்கே தேர்ந்த நடிகர்களை வைச்சு இயக்கும்போது ஒரு சந்தோஷம் இருக்கு.

ஒரு விஷயம் சொல்றோம், அதை முயற்சி பண்ணி அவங்களே திரையில் ெகாண்டு வர வைக்கிறோம். இதுஒரு கூட்டு முயற்சி. இவன் ஒண்ணு சொல்றான்னு அந்த முயற்சியில் இறங்கும்போது, அந்தப் பணியே செம்மையாக அமைந்துவிடுகிறது. ஒரு கச்சேரியில் பாருங்க… ஒரு சமயம் பாடுகிறவர் வர்ணிக்க முடியாத சுத்தத்தோட பாடி, வசியப்படுத்தி, மனசை இழுத்துப் பிடிச்சால், மேடையில் இருக்கிற தபேலா, வயலின் எல்லாம் அப்படியே கொடி பிடிச்ச மாதிரி ஒரு அலைவரிசையில் இணைந்தால், ஒரு இடம் தொடுமில்லையா, அப்படி நடந்திருக்கு.

இந்த ஸ்கிரிப்ட்டில் உங்களோடு நலன் குமரசாமி, நீலன், மிஷ்கின்னு இத்தனை பேர் இருக்காங்க...நம்ம ஊரில் இன்னும் திரைக்கதை ஆசிரியர்கள் இருந்தால் நல்லாயிருக்கும். இந்தியில் கூட இப்ப இருக்காங்க. நம்மூரில் முன்னாடி சிறப்பாக இருந்திருக்காங்க. ஒரு விளம்பரப்படம் செய்திட்டு இருந்தேன். அது 100 வருட பழைய உத்தியில் செய்கிற stop motion film. அதுக்கு கொஞ்சம் டைம் பிடிக்கும். ஏற்கனவே படம் செய்யாமல் பல வருஷம் ஓடிப்போயிருச்சு. அதனால் இந்த ஸ்கிரிப்ட்டை பிரிச்சுக் கொடுத்திட்டேன்.

மறுபடியும் அதை ஒண்ணா சேர்த்து, அதிலிருந்து நானும் ஒண்ணு எழுதிப் பார்த்தபோது ஒரு பரிமாணம் கிடைச்சது. இது தொகுப்பு இல்லை. ஒரே நேரத்தில் நடக்கிற பல விஷயங்களின் சேர்மானம். ஒரு மரத்தின் சில கிளைகள் மாதிரி… எல்லாம் சேர்ந்ததுதானே ஒரு மரம்…
மூன்று கதை நான்காகி, ஐந்தாகி பின்பு நான்கான கதை. அவங்க எழுதினதில் என்னென்ன மாற்றங்கள் நடந்திருக்குன்னு திரையில் பார்த்தால், அவர்கள் ஆச்சர்யப்படலாம், அதிர்ச்சியடையலாம். ஏன், கோபம் கூட வரலாம்.

உங்க படத்தில் நடிக்க எல்லோரும் ஆசைப்பட்டு வந்திருக்காங்க...நான் ஒரு அளவுகோல் வைச்சிருக்கேன். அதற்கான நடிப்பை எதிர்பார்க்கிறேன். அதற்கு கம்மியாக போச்சுன்னா, பக்கத்தில் நடிக்கிறவங்களுக்கு நல்லா நடிக்கிறாங்கன்னு பெயர் வந்திடும்.

அவங்க என்னை நம்பும்போது அவங்களை டெலிவரி பண்ண வைக்க வேண்டியது என்னோட கடமை. அவங்க அதை மனப்பூர்வமாக ஏத்துக்கிட்டு உடன்பட்டு பண்றது பெரிய விஷயம். அப்படிச் செய்கிற moment இன்னும் அழகானது. ‘சரியா இருந்துச்சே, என்ன பிரச்னை’ன்னு எந்த நேரத்தில் கேட்டாலும், ‘இந்த இடத்தில்தான் பிரச்னை’னு சுட்டிக் காட்ட முடியும். அவங்களுக்கும் புரியும்.

இதை என் படம்னு சொல்ற அளவுக்கு இது மிஷ்கினோட படம், விஜய் சேதுபதியோட படம், சமந்தாவோட படம், நலன் குமரசாமியோட படம்னு சொல்லிக்க முடியும். எல்லோருக்கும் ஒரே அளவு உரிமை இருக்கு. தெரிஞ்சுதான் அவங்க வந்தாங்க. சில நேரங்களில், ‘நம்ம வீட்டுக் கல்யாணம் மாதிரி இழுத்துப் போட்டு செய்றாங்க’னு சொல்வோம் இல்லையா… அது மாதிரி காரியம்தான் இது. அவங்க வேலைகள் நிறைந்ததுதான் இந்தப்படம். பேரை மட்டும் நான் போட்டுக்கிறேன்.

சமந்தாவை நான் இவ்வளவு தூரம் எதிர்பார்க்கலை. எல்லோரும் செய்யத் தயங்கின கேரக்டர். அவங்களுக்கே நாம நல்லா செய்திட்டோம்னு தெரியும். பார்க்கும்போது அதன் தாக்கம் அப்படியிருக்கும். ஆனால், இன்னிக்கு வரைக்கும் அதை வெளியே தெரிய அவங்க காட்டிக்கிட்டதே கிடையாது. பகத், ராத்திரி ெரண்டு, மூணு மணிக்கெல்லாம் இந்த வார்த்தையை இப்படி உச்சரிக்கலாமான்னு வாய்ஸ் மெசேஜ் அனுப்புவார். இதெல்லாம் நடந்தது.

எல்லோரும் இருக்கட்டும்னு நினைச்ச விஜய் சேதுபதியின் பெரிய மனசும் ஒரு காரணம். ஒரு திரைப்படம் வழியாக வாழ்க்கையின் வெவ்வேறு பகுதிகள் சிறுகுறிப்பு மாதிரி, அஞ்சறைப் பெட்டியிலிருக்கிற வெவ்வேறு சுவைகள் மாதிரி இதிலும் இருக்கு.

இதில் ஓரளவு சினிமாத்தனம் இருக்கு. நிச்சயம் ஆர்ட் ஃபிலிம் கிடையாது. சில அழகியல் இருக்கு. அது ஒப்பனை கலக்காமல் இருக்கு. இதயம் சரியாகத் துடிக்குது. பேசுபொருள் விட்டுப்போகவே இல்லை. அதுல நேர்மை இருக்கிறதை உஷாராக பார்த்துக்கிட்டே இருந்தேன்.சீக்கிரம் அணுக முடியாதவர்னு பெயர் எடுத்திருக்கீங்க...தனியாக என் போக்கில் இருக்கிறதை விரும்புவேன். அந்தப்ளானை யாரும் கெடுத்திடக் கூடாதுன்னு நினைப்பேன். அந்த ப்ளானை வைச்சுக்கிட்டு நான் பெரிசா எதையும் செய்யப் போவதும் இல்லை.

ஒண்ணுமே செய்யவேண்டாம் என்பதுகூட அன்றைக்கான திட்டமா இருக்கும். அன்று என்னை மீட் பண்ண முடியுமான்னு கேட்டால் ‘முடியாது’னு சொல்வேன். முடியாத அளவுக்கு என்ன வேலைன்னு கேட்டால். ‘சும்மாதாங்க இருக்கேன்’னு சொல்வேன். அவங்களுக்கு அது புரியாது. அன்றைக்கு சும்மா இருந்து அன்றைய நாளை செழுமைப்படுத்திக்கலாம். இந்த உலகத்தில் எனக்குத் தெரிந்த அத்தனை பேர் எதிர்பார்ப்புகளுக்கும் தகுந்த மாதிரி என்னை வச்சுக்க முடியாது. சில பேர் ஐந்து விதமா, எட்டு விதமா இருக்கலாம். எனக்கு ஒரேவிதமாகத்தான் இருக்க வருது. இருக்கேன். இதில் யாருக்கும் கஷ்டம் கிடையாது. அவமரியாதையும் கிடையாது.        
       
நா.கதிர்வேலன்