ஸ்ரீவில்லிப்புத்தூர் கதிரவன் ஹோட்டல்!லன்ச் மேப்

ஆண்டாள் பாடிய பாசுரங்களைக் கேட்டு ரங்கநாதர் மயங்கியது போல் வில்லிப்புத்தூரைச் சுற்றி இருக்கும் மக்கள் கதிரவன் ஹோட்டலின் சுவைக்கு மயங்கி உள்ளனர்!106 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த ஹோட்டலின் சுவையும் தரமும் இன்றும் அப்படியே இருப்பதுதான் ஸ்பெஷல்.
பழமையான கட்டடத்தை தேக்கு மரத் தூண்கள் தாங்குகின்றன. வெளியிலிருந்து பார்த்தால் காறை வீடு போல் காட்சியளிக்கிறது.

 உள்ளே கடையும் அப்படித்தான். அந்தக் கால மர இருக்கைகள், மடப்பள்ளி வாசனை, பாரம்பரிய சுவையில் சமைத்துச் சமைத்து பழுப்பேறிய பாத்திரங்கள்... என எல்லாமும் நம்மை வேறொரு உலகுக்கு அழைத்துச் செல்கிறது.காலை டிபனுக்கு நான்கு வகையான சாம்பாரை பரிமாறுகிறார்கள். மதிய உணவில் மணக்கும் அவியல் கட்டாயம் உண்டு. இரவு கேழ்வரகு தோசை, வெந்தய தோசை... என தனி மெனு.

மதிய உணவை எடை போட்டுத்தான் பரிமாறுகிறார்கள். உணவை வீணாக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். அதேநேரம் உடலுக்குத் தேவையான சத்துக்கள் சம அளவில் இருக்க வேண்டும் என்றும் மெனக்கெடுகிறார்கள். விலை குறைவு என்பது மிகப்பெரிய ஆறுதல்.

‘‘1912ம் ஆண்டு எங்க தாத்தா சண்முகம் பிள்ளை இந்த ஹோட்டலை ஆரம்பிச்சார். அவருக்குப் பிறகு அப்பா கோதண்டம் இதை நடத்தினார். தொடக்கத்துல கூரைக் கட்டடம்தான். அப்புறம் காறை வீடா மாத்தினோம்.

எமர்ஜென்சி காலத்துலதான் அளவுச் சாப்பாடை அறிமுகப்படுத்தினோம். அரைக்கிலோ சாதத்துக்கு எவ்வளவு கிராம் பருப்போ அதைத்தான் கொடுப்போம். சாப்பிட்டு முடிச்சுட்டு எக்ஸ்ட்ரா தேவைனா சந்தோஷமா வழங்குவோம்.இதனாலதான் எங்களால குறைந்த விலைல உணவு தர முடியுது. அதேநேரம் உணவும் வீணாகறதில்லை...’’ உற்சாகத்துடன் பேசத் தொடங்குகிறார் மூன்றாம் தலைமுறையாக இந்த ஹோட்டலை நிர்வகித்து வருபவர்களில் மூத்தவரான பால சூரியன்.

இவர்கள் தயாரிக்கும் வத்தக் குழம்பை சப்புக் கொட்டி சாப்பிடாதவர்களே இல்லை! கெட்டிப் பதத்தில் நன்றாக சுண்டி, வீட்டு மசாலாவுடன் தருகின்றனர். பருப்பு, நெய், சாம்பார், ரசம்... என அனைத்தும் வீட்டு சமையல் ருசியில் மிதமான மசாலா வாசனையுடன் மணக்கிறது.
‘‘தாத்தா காலத்துல இருந்து இப்ப வரை செய்முறை அதேதான். எங்க சமையல்ல காரம் அதிகம் இருக்காது. உடலை சூடாக்கக் கூடிய உணவை தவிர்த்திடுவோம்.

சைவ உணவுக்கு அடிப்படையே காய்கறிகளும் தானியங்களும்தான். சந்தைல குறைவா கிடைக்குதுனு பார்க்கிற காய்களை எல்லாம் வாங்க மாட்டோம். எங்க பக்குவம் என்னவோ... உடலுக்கு எது தேவையோ அந்தக் காய்களை மட்டும்தான் வாங்குவோம்.புதிய புதிய சுவைகளை அறிமுகப்படுத்தலாமேனு நிறைய பேர் கேட்கறாங்க. அதுல எங்களுக்கு உடன்பாடில்லை. உணவே மருந்துதான் எங்க பாலிசி. அதேநேரம் ருசிக்கும் சுவைக்கும் முக்கியத்துவமும் கொடுக்கறோம்...’’ என நீண்ட வருடங்களாக தாங்கள் இயங்கி வரும் ரகசியத்தைப் போட்டு உடைத்தார் பாலசூரியன்.

‘‘வெளியூர்ல இருந்து வர்றவங்க இங்க சாப்பிட்டு முடிச்சதும் செய்முறை என்னனு ஆவலா கேட்பாங்க. யார்கிட்டயும் நாங்க மறைக்கிறதில்ல. சொல்லுவோம். மசாலாக்களை நாங்களே தயாரிக்கிறோம்னு தெரிஞ்சதும் நீங்களே அந்த அயிட்டங்களை தனியா விற்கலாமேனு சிலர் கேட்டாங்க.
எங்களுக்கும் அது சரினு பட்டுச்சு. இப்ப எங்க ஹோட்டல்லயே வத்தக் குழம்பு பொடி, சாம்பார் பொடி, பருப்புப் பொடி, ரசப் பொடி... எல்லாம் விக்கிறோம். தேவைப்படுபவர்கள் வாங்கிக்கலாம்!’’

குடும்பமாகச் சேர்ந்துதான் ஹோட்டலை நடத்துகிறார்கள். பாலசூரியன், பாலசந்திரன், ராதாமோகன் ஆகிய மூன்று சகோதரர்களும் ஒற்றுமையுடன் தங்கள் தாத்தாவின் பெயரையும் புகழையும் கட்டிக் காப்பாற்றுகிறார்கள்.  

பச்சரிசியுடன் பாசிப்பருப்பும் நெய்யும் சரிவிகிதத்தில் கலந்து தயாரிக்கப்பட்ட பொங்கல், காலை உணவை ஸ்பெஷலாக்குகின்றது. பொங்கலை வெறுப்பவர்கள் கூட அல்வா பதத்தில் இருக்கும் இவர்களது பொங்கலைச் சாப்பிட்டால் அடிமையாகி விடுவார்கள்!l

கதிரவன் வத்தக் குழம்பு

சுண்டக்காய் - 100 கிராம்
புளி - 75 கிராம்
வெந்தயம் - 2 சிட்டிகை
உளுத்தம் பருப்பு - 2 மேஜைக்கரண்டி
துவரம் பருப்பு - 2 மேஜைக்கரண்டி
மல்லி - 2 மேஜைக்கரண்டி
மிளகு - 1 மேஜைக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
வரமிளகாய் - 4
சின்ன வெங்காயம் - 10
வெல்லம் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
தாளிப்பதற்கு: கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு.
பக்குவம்:  புளியைக் கரைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து வெந்தயத்தை வறுத்து பொடியாக்கவும். அதே வாணலியில் வரமிளகாய், மிளகு, அரிசி, மல்லி, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ளவும். இதுதான் கதிரவன் ஹோட்டலின் தனிப் பக்குவம்.
மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிப்பதகு கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்நிறமாக வதக்கவும். பின்னர் சுண்டக்காய் சேர்த்து நன்கு பிரட்டி, அத்துடன் வெந்தயப் பொடி சேர்த்துக் கிளறவும். பிறகு இதில் கரைத்து வைத்த புளியைச் சேர்த்துக் கிளறவும்.

குழம்பு கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் அரைத்து வைத்துள்ள பொடியைச் சேர்த்து மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், வெல்லம், கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க விடவும். நல்லெண்ணெய் பயன்படுத்தினால் சுவையாக இருக்கும். இறுதியாக, குறைவான சூட்டில் அப்படியே அடுப்பில் வைத்தால் நன்றாக சுண்டும்.

திலீபன் புகழ்

மீ.நிவேதன்