திருமணம்



காதலர்கள் இணைய கைகொடுக்கும் குடும்பத்தினர், கல்யாணத்தை நடத்தி வைக்க திணறுவதே ‘திருமணம்’.உமாபதியும், காவ்யா சுரேஷும் காதலர்கள். மனம் கலந்த பின் அவர்கள் வாழ்வில் ஒன்றிணைய தீர்மானிக்கிறார்கள்.
தங்கள் குடும்பத்தினரிடம் அவரவர் காதலைச் சொல்லி வைக்க, விசாரணைகளுக்குப் பிறகு திருமணத்திற்கு இரண்டு பக்கமும் பச்சைக் கொடி காட்டப்படுகிறது. உமாபதியின் அக்கா சுகன்யாவும், காவ்யா சுரேஷின் அண்ணன் சேரனும் அவர்களின் திருமணத்தை நடத்தி வைப்பதில் ஈகோ உரச, திருமண ஏற்பாடுகள் அப்படியே நிற்கின்றன.

ஈகோ மோதல் சரியானதா, உமாபதியும், காவ்யா சுரேஷும்  வாழ்க்கையில் இணைந்தார்களா என்பதுதான் க்ளைமாக்ஸ்!அருமைப்பட்டு சம்பாதிக்கிற ஒவ்வொரு பைசாவும் பொறுப்பாக செலவழிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை ஏற்றிச் சொல்கிறார் சேரன். கொஞ்சம் பழகிய கதையே என்றாலும், சின்னச் சின்ன கலகல வசனங்களால் ரசிக்க வைக்கிறார்.

சேரனும், ஜமீன் பரம்பரையில் வந்த சுகன்யாவும் ஈகோவில் வெடிக்கும் தருணங்கள் எல்லாமே ரசனை அத்தியாயங்கள். பொறுப்பு உணர்ந்த அண்ணனாக சேரன் இயல்பாக நடிக்கிறார். காரண காரியங்களோடு சேரன் முரண்படும்போது அவருடன் நாம் உடன்பட முடிகிறது.

படம் முழுக்கவே உமாபதி க்யூட். காவ்யாவிடம் காதலின் போதும், அக்காவிடம் செல்லம் கொஞ்சும்போதும், அங்கிள் எம்.எஸ்.பாஸ்கரிடம் மனம் விட்டு பேசும்போதெல்லாம் அசத்துகிறார். நல்ல உயரமும், காதலில் உருகுவதிலுமாக பொண்ணு காவ்யா நடிப்பிலும் ஓகே. அவருக்கு பரத நாட்டியமும் வரும் என நிரூபிக்கிறார்.

தங்கள் பழைய குடும்ப நினைவுகளை மீட்டெடுக்கும் காட்சியில் எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமய்யா இருவரும் அனுபவத்தில் உயர்ந்து நிற்கிறார்கள். அதிலும் வார்த்தைகளை விழுங்கி, பின் தேடும் இறுக்கக் காட்சியில் உயர்ந்து நிற்கிறார் பாஸ்கர். பிறகான சின்னச் சின்ன காமெடிகளிலும் களை
கட்டுகிறார்கள்.

அம்மா கேரக்டரில் சீமா பாந்தம். டிரைவராக பால சரவணன் கலகலப்பு. மனோபாலா, ஜெயப் பிரகாஷ் என எல்லா கதாபாத்திரங்களும் சிறப்பு. பல இடங்களில் மனிதர்களின் வீணான ஆடம்பரத்திற்கு சரியான சூடு. சுகன்யா தன் கதாபாத்திரத்தில் கம்பீரத்தில் நிலைக்கிறார். தன் தம்பிக்காக மொத்த வாழ்க்கையையும் விட்டுத்தரும் கணங்களில் அவரின் மேல் பிரியமெடுக்கிறது.

பின்பகுதியில் சற்றே தலை காட்டும் சீரியல் தன்மையை குறைத்திருக்கலாம். சில பாடல்கள் படத்தின் வேகத்திற்கு தடை. சுகன்யா திருமணத்திற்கு வராமல் இருப்பதற்கான காரணங்களில் வலு இல்லை.ராஜேஷ் யாதவின் காமிரா இடைஞ்சல் இல்லாமல் வீட்டிற்குள் சுழல்கிறது. சித்தார்த் விபின் பின்னணியில் பொருத்தமான சாந்தம் காட்டுகிறார்.வன்முறையின் சாயல் இல்லாத கருத்துச்செறிவான படம்.

குங்குமம் விமர்சனக் குழு