தலபுராணம்-மெட்ராஸின் முதல் அச்சகம்!மெட்ராஸில் முதல் அச்சுக்கூடம் 1761ம் வருடம் வேப்பேரியில் அமைக்கப்பட்டது. ஆனால், இதற்கு இரு நூற்றாண்டுகள் முன்பே இந்தியாவிற்குள் அச்சகம் நுழைந்துவிட்டது. ஆம். கி.பி.1498ம் வருடம் கள்ளிக்கோட்டையில் போர்ச்சுகீசியர்கள் காலடி வைத்தபோதே அச்சுக் கலையும் இந்தியாவிற்குள் பரவிவிட்டது.

வாஸ்கோடகாமாவைப் பின்பற்றி வந்த போர்ச்சுகீசிய பாதிரியார்கள் இந்தியாவில் கிறிஸ்துவ மதத்தைப் பரப்பும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்குத் துணையாக இருந்தது அச்சடிப்பு முறை.1540களில் தரங்கம்பாடியில் பணியாற்றிக் கொண்டிருந்த துறவி பிரான்சிஸ் சேவியர் இந்தியாவிற்கு அச்சகம் தேவையென போர்ச்சுகலுக்கு வலியுறுத்தினார். இதேநேரம், எத்தியோப்பிய பேரரசில் இருந்த மிஷனரிகளும் அச்சு இயந்திரம் ஒன்றை அனுப்ப வேண்டி போர்ச்சுகலிடம் கேட்டிருந்தனர்.  

இதனால், முதலாவதாக போர்ச்சுகலில் இருந்து எத்தியோப்பியாவுக்கு அச்சுகளும், அச்சு இயந்திரமும் அனுப்பப்பட்டன. ஆனால், காலநிலை சரியில்லாது போனதால் அந்தக் கப்பல் எத்தியோப்பிய பேரரசுக்குச் செல்லாமல் நேராக கோவா வந்திறங்கியது!
இப்படியாக அச்சு இயந்திரம் 1557ம் வருடம் இந்தியாவுக்கு வந்தது.

கோவா மிஷனரிகளும் அச்சகம் தேவையென உணர்ந்ததால் அதை இங்கே தக்க வைத்துக் கொண்டனர். இருந்தும் அச்சுப் பணிகள் வேகமெடுக்கவில்லை. ஏனெனில், ‘‘புதிதாக கிறிஸ்துவ மதத்திற்கு மாறியவர்களுக்குப் பயன்படக்கூடிய அளவிற்குத் துண்டு வெளியீடுகளையும், நூல்களையும் அச்சிடப் பாதிரியார்கள் திட்டமிட்டனர்.

ஆனால், அச்சுக்கருவிகளுடன் வந்திறங்கிய மதபோதகர் திடீரென்று இறந்துவிட்டார். அச்சுக்கலை ெதரிந்தவர்கள் ஐரோப்பாவிலேயே இருந்ததால் இந்தியாவில் அதை அறிந்து கையாள்வதற்குப் பல நாட்கள் பிடித்தன...’’ என ‘அச்சும் பதிப்பும்’ நூலில் குறிப்பிடுகிறார் எழுத்தாளர் மா.சு.சம்பந்தன்.
கோவாவிற்குப் பின்னர், கேரளாவிலுள்ள கொல்லத்திலும், அம்பலக்காட்டிலும்; தமிழகத்தில் தூத்துக்குடி அருகே புன்னைக்காயலிலும் அச்சகங்கள் தோற்றுவிக்கப்பட்டன. எல்லாமே சமயப் பரப்புரைக்காகத்தான்.

இந்த அச்சு இயந்திரம் இந்தியாவிற்குள் வருவதற்கு மூன்று வருடங்கள் முன்பே 1554ம் வருடம் முதல் தமிழ் நூல் போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் வெளியாகிவிட்டது!அதன் பெயர் ‘லூசோ தமிழ் சமய வினாவிடை’ (Luso Tamil Catechism).ஆனால், இந்நூல் தமிழ் வரிவடிவைக் கையாளாது ரோமானிய எழுத்துகளைக் கொண்டதாக இருந்தது. பின்னர், துறவி பிரான்சிஸ் சேவியர் எழுதிய, ‘Doctrina Christam’ நூலை ஹென்றிக் ஹென்றிக்ஸ் என்ற பாதிரியார் தமிழில் மொழிபெயர்த்தார். இதன்பெயர் ‘தம்பிரான் வணக்கம்’.

இந்நூல் 1578ம் வருடம் பதினாறு பக்கத் துண்டு வௌியீடாக கொல்லத்தில் அச்சடிக்கப்பட்டது. இதுவே இந்தியாவில் தமிழ் வரிவடிவில் அச்சு கண்ட முதல் தமிழ் நூல். இதன் நகல் சென்னை கன்னிமாரா நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து அடுத்த வருடமே ‘கிரிசித்தியானி வணக்கம்’ என்ற நூல் வெளிவந்தது. இது, கத்தோலிக்க மதத்தின் அடிப்படைப் பிரார்த்தனைகளையும், சமயம் சார்ந்த கேள்வி பதில்களையும் உள்ளடக்கியதாக இருந்தது.

இதன்பிறகு, டச்சுக்காரர்களும், ஆங்கிலேயர்களும், டேனிஷ்காரர்களும், பிரஞ்சுக்காரர்களும் இந்தியாவிற்கு வந்து சேர்ந்தனர். இதனால், போர்ச்சுகீசியர்களின் தமிழ் அச்சுப் பணி வலுவிழந்து போனது. காரணம், இவர்களிடையே இருந்த மதவேற்றுமையும், வணிகப் போட்டியும்தான்.
17ம் நூற்றாண்டின் முற்பகுதியில் எந்தத் தமிழ் நூலும் அச்சாகவில்லை. போர்ச்சுகீசிய அரசின் ஆணைப்படி இந்திய மொழிகளில் அச்சிடுவதும் நிறுத்தப்பட்டது. இதன்பிறகு, 18ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தரங்கம்பாடியில் பார்த்தலோமியோ சீகன்பால்க் அமைத்த அச்சகத்திலிருந்து தமிழின் அச்சு வரலாறு தொடங்கியது.

1706ம் வருடம் முதல் புரட்டஸ்டன்ட் மிஷனரியை தரங்கம்பாடியில் டேனிஷ் மிஷன் அமைத்தது. இந்த மிஷன் ஜெர்மானியரான சீகன்பால்க் என்பவரின் தலைமையில் இயங்கியது. இவர்களுக்கு பிரிட்டனைச் சேர்ந்த கிறிஸ்துவ மத அறிவைப் பரப்பும் சங்கம் (SPCK) அச்சகமும், பணமும், காகிதமும், புத்தகங்களும் கொடுத்து உதவியது.   

பிறகு, 1713ல் சீகன்பால்க் தமிழ் எழுத்து மாதிரியை தன் ஜெர்மனி நண்பர்களுக்கு அனுப்பி வைத்து அதேபோல் வேண்டுமென கடிதம் எழுதினார். நண்பர்களும் அவ்வெழுத்துகளுடன் அச்சுப்பொறியையும் அனுப்பி வைத்தனர். இப்படியாக தமிழ் அச்சுப் பணி தரங்கம்பாடியில் தொடங்கப்பட்டது.
ஆனால், ஜெர்மனியிலிருந்து வந்த தமிழ் அச்சு எழுத்துகள் பெரிய உருவில் இருந்தன. தவிர, சில எழுத்துகளும் இல்லை. இவற்றைக் கொண்டு அச்சடித்ததால் காகிதமும் போதவில்லை.

 இதனால், சிறிய வடிவில் எழுத்துகளைச் செதுக்கியதுடன் Type Foundry ஒன்றையும் அமைத்தார் சீகன்பால்க். இதனுடன் காகிதப் பற்றாக்குறையைத் தீர்க்க பேப்பர் மில்ைலயும் ஏற்படுத்தினார். இதுவேஇந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட முதல் காகித ஆலை. இவர், தனது முப்பத்தாறு வயதிலேயே இறந்துவிட்டார். இதற்கிடையே கிறிஸ்துவ மத அறிவைப் பரப்பும் சங்கம், தரங்கம்பாடி மிஷனரிகளுடன் இணைந்து 1717ல் மெட்ராஸில் இரண்டு பள்ளிகளை நிர்மாணித்தது. இதில் ஒன்று வெள்ளையர் நகரில் வசித்த போர்ச்சுகீசியர்களுக்கும், மற்றொன்று கருப்பர் நகரிலிருந்த தமிழர்களுக்கும் ஆரம்பிக்கப்பட்டது.

கூடவே, கிறிஸ்துவ பணிக்கான மிஷன் ஒன்றையும் தொடங்கினர். இந்த மிஷன் இப்போதைய உயர்நீதிமன்றம் அருகே உள்ள பழைய கலங்கரை விளக்கம் பகுதியிலிருந்து செயல்பட்டு வந்தது. இதை ஜெர்மானிய பாதிரியார்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
சீகன்பால்க் மறைவிற்குப் பின்னர் கிரண்டலர், பெஞ்சமின் சூல்சே என பல ஜெர்மன் பாதிரியார்கள் தரங்கம்பாடியிலிருந்து அச்சுப் பணியை மேற்கொண்டனர்.

பின்னர், 1740ம் வருடம் ஜான் பிலிப் ஃெபப்ரிசியஸ் தரங்கம்பாடி வந்து சேர்ந்தார். இவரை மெட்ராஸில் சமயப் பணி ஆற்று
வதற்காக அனுப்பி வைத்தனர். இவர் கோட்டையின் அருகே செயல்பட்டு வந்த மிஷனிற்குத் தலைமையேற்றார்.
1746ல் மெட்ராஸை பிரஞ்சுப்படையினர் பிடித்ததால் ஃெபப்ரிசியஸ் தனது குழுவுடன் பழவேற்காடு தப்பிச் சென்றார். மீண்டும் கிழக்கிந்தியக் கம்பெனி
யினர் வசம் மெட்ராஸ் வந்தபிறகே ஃபெப்ரிசியஸ் இங்கே வந்தார்.

ஆனால், பிரஞ்சுப்படை இவர்கள் நடத்தி வந்த பள்ளியையும், தேவாலயத்தையும், மிஷனையும் அழித்து விட்டது. இதனால் மனவேதனை அடைந்தவர்களுக்கு ஆங்கிலேயர்கள் ஆறுதல் தந்தனர். உடனே, அட்மிரல் பொஸ்கவன் இந்த மிஷனிற்காக வேப்பேரியில் ஒரு சிறிய இடத்தை இழப்பீடாக அளித்தார். இந்த இடத்தில் மிஷனிற்கென ஒரு வீடும், சர்ச்சும் இருந்தது. இதை ஆர்மேனிய வணிகர் ஒருவர் பிரஞ்சுத் தளபதி டூப்ளேவின் அனுமதியுடன் கட்டியிருந்தார்.

பிரஞ்சுக்கு இணக்கமானவர் என இந்த வணிகர் மீது சந்தேகம் கொண்ட ஆங்கிலேயர்கள், அவரிடம் இருந்து இந்தச் சர்ச்சினையும், வீட்டையும் பறித்தனர். இதுவே கிறிஸ்துவ மத அறிவைப் பரப்பும் குழுவின் கீழ் இயங்கிய ஃபெப்ரிசியஸின் மிஷனிற்கு அளிக்கப்பட்டது.
மீண்டும் பிரஞ்சுப்படை 1758ல் மெட்ராஸை முற்றுகையிட்டபோது இந்த வீட்டிலும், சர்ச்சிலும் கொள்ளையடித்தனர். இந்நேரம் ஃபெப்ரிசியஸ் மீண்டும் தன் குழுவுடன் பழவேற்காடு சென்றுவிட்டார்.

பின்னர், 1760ல் சர் ஐரே கூட் தலைமையில் பிரிட்டிஷ் படை பதிலுக்கு பாண்டிச்சேரியை சூறையாடியது. அப்போது அங்கிருந்து அச்சு இயந்திரத்தையும், அச்சுகளையும் எடுத்து வந்தது. இப்படி கொண்டு வரப்பட்ட அச்சு இயந்திரம் வேப்பேரியில் இருந்த ஃபெப்ரிசியஸின் மிஷனிடம் வழங்கப்பட்டது. இதுவே, மெட்ராஸில் அமைந்த முதல் அச்சுக் கூடம்.

இதை எஸ்.பி.சி.கே பிரஸ் என்றும், வேப்பேரி பிரஸ் என்றும் அழைத்தனர். பின்னாளில் இது டயோசீசன் பிரஸ் எனப் பெயர் மாறியது குறிப்பிடத்தக்கது. இந்த அச்சுக் கூடம் பற்றி இன்னொரு கருத்தும் முன்வைக்கப்படுகிறது. பிரஞ்சுப்படை மெட்ராஸை 1758ல் முற்றுகையிட்டு கொள்ளையடித்தபோது இங்கிருந்த அச்சு இயந்திரத்தை கொண்டு சென்றுவிட்டதாகவும், அதுவே பின்னர் ஐரே கூட் தலைமையிலான ஆங்கிலேயப் படையால் எடுத்து வரப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இதிலிருந்து மெட்ராஸில் 1740களிலேயே அச்சு இயந்திரம் இருந்ததாகத் தெரிந்து கொள்ளலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.  இந்த அச்சு இயந்திரத்தை வேப்பேரி மிஷனரியிடம் கொடுத்தாலும், கவர்னர் பிகாட் கிழக்கிந்தியக் கம்பெனிக்குத்தான் அச்சடிக்க முதல் முன்னுரிமை தர வேண்டும் என்றார். முக்கியமான ஆணைகள் எல்லாம் இங்கே அச்சடிக்கப்பட்டன.

இதன்பின்னர் வேப்பேரி மிஷனரி மத சம்பந்தமான அச்சுப் பணிகளுக்கு தரங்கம்பாடியிலிருந்து ஓர் அச்சு இயந்திரத்தை வாங்கி வந்தது. ‘‘1772ம் வருடம் இவர்கள் மதராசபட்டினத்தில் ‘மலபார் புதிய ஏற்பாடு’ என்ற நூலைத் தயாரித்தனர்...’’ என ‘மதராசபட்டினம்’ நூலில் குறிப்பிடுகிறார் ஆய்வாளர் நரசய்யா. தொடர்ந்து ஃபெப்ரிசியஸ் உருவாக்கிய தமிழ் அகராதி, ஜெர்மன் துதிப்பாடல்கள் எல்லாம் அச்சடிக்கப்பட்டன. இருந்தும் 19ம் நூற்றாண்டில் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்தது இந்த அச்சகம்.

இதனால் மிஷன் மூடப்பட்டு 1850களில் அச்சகப் பிரிவு மட்டும் சிந்தாதிரிப்பேட்டையிலிருந்த அமெரிக்க போர்டிடம் ஒப்படைக்கப்பட்டது. அமெரிக்கன் மிஷன் பிரஸ், பி.ஆர்.ஹன்ட் என்பவர் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வந்தது. முதலில் பெத்தநாயக்கன்பேட்டையிலும், பின்னர் பிராட்வேயிலும் செயல்பட்டு வந்தது இந்த அமெரிக்கன் மிஷன் அச்சகம்.

பி.ஆர்.ஹன்ட் தமிழ் எழுத்துருக்களை இந்தியர்களைக் கொண்டு அழகாக வடிவமைத்து அதன் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றினார். ஆனால், இந்த அச்சகம் நெடுநாட்களுக்கு நீடிக்கவில்லை. 1866ம் வருடம் அமெரிக்கன் மிஷன் மெட்ராஸை விட்டு வெளியேறியது.இந்நேரம்  ஹன்ட் இந்த அச்சகத்தை கிறிஸ்துவ மத அறிவைப் பரப்பும் சங்கத்திடமே ரூ.40 ஆயிரத்துக்கு விற்றார். இதனால், மீண்டும் அச்சகம் வேப்பேரிக்கே வந்து சேர்ந்தது.

1899ம் வருடம் இங்கிலாந்திலிருந்து ஒரு அச்சு இயந்திரம் தருவிக்கப்பட்டது. அச்சகமும் விரிவாக்கம் செய்யப்பட்டது. கல்வி மற்றும் மிஷனரி சம்பந்தமான பணிகள் அச்சகத்தில் விறுவிறுப்படைந்தன. நல்ல லாபமும் கிடைத்தது.

பிறகு, ‘‘கிறிஸ்துவ மத அறிவைப் பரப்பும் சங்கம் தன் அலுவலகத்தை மெட்ராஸிலிருந்து மாற்ற நினைத்தது. இதனால், அச்சகத்தை ஆங்லிக்கன் டயோசீஸிடம் ஒப்படைத்தது. ஆனால், அங்கே அச்சகம் செழிப்பாக நடக்கவில்லை. இதனால், 1930ம் வருடம் இந்த அச்சகத்தையும் மற்ற சொத்துகளையும் கிறிஸ்துவ லிட்ரரி சொசைட்டி (CLS) வாங்கிக் கொண்டது...’’ என ‘Icons of Madras’ நூலில் குறிப்பிடுகிறார் கமலா ராமகிருஷ்ணன்.
இந்த கிறிஸ்துவ லிட்ரரி சொசைட்டி தன் சிறிய அச்சகத்தை இந்த டயோசீசன் பிரஸ்ஸுடன் இணைத்து நவீனமாக்கியது.

இந்த சொசைட்டியின் செயலராக இருந்த டபிள்யூ.ஹெச்.வாரன் வழிகாட்டலில் அச்சகம் விரிவாக்கம் செய்யப்பட்டு போட்டோ ஆஃப்செட் துறை எல்லாம் சேர்க்கப்பட்டது. 1990களில் அச்சகத் தொழில்நுட்பம் நவீனமானபோது டயோசீசன் அச்சகம் மந்தமாகவே சென்றது. இதற்கு, விற்பனை குறைவு, ஊழியர்கள் பிரச்னை என சில காரணங்கள் இருந்தன. மெல்ல மெல்ல தன் பொலிவை இழந்த மெட்ராஸின் முதல் அச்சுக்கூடம் நிறைவாக 2000ம் வருடம் மூடப்பட்டது.இன்று வேப்பேரி சாலையில் இந்த அச்சகம் இருந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் வானுயர்ந்து நிற்கின்றன.      

பேராச்சி கண்ணன்

ராஜா