COFFEE TABLE



பிங்க் பியூட்டி

கிளாமர் குலுங்கும் பிங்க் காஸ்ட்யூமில் போட்டோ ஷூட் பண்ணியிருக்கிறார் அதிதி ராவ். அதில் சிலவற்றை தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு ‘Inner beauty is great, but a little lipstick never hurts... right...’ என தத்துவமும் உதிர்த்திருக்கிறார். அப்புறமென்ன... லட்சக்கணக்கில் லைக்குகளை அள்ளும் ராணியாகிவிட்டார் அதிதி.

காஸ்ட்லி போன்

ஸ்மார்ட்போன் பிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த ‘சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு’ வெளியாகிவிட்டது. 7.3 இன்ச் மற்றும் 4.6 இன்ச் என்று இரண்டு திரைகள். 12 ஜிபி ரேம், 512 ஜிபி ஸ்டோரேஜ். திரைகளை மடிக்கும்போது ஸ்மார்ட்போனாகவும், விரிக்கும்போது டேப்லெட்டாகவும் மாறிவிடுகிறது. இரண்டு பேட்டரிகள், ஆறு கேமராக்களுடன் அசத்தும் இந்த போனின் விலை ரூ.1,40,000.

ஷூ நடிகை

எல்லாருக்குள்ளும் ஒரு குழந்தை மனம் துள்ளும். அதிலும் புது ஷூ அணிந்தால் மனதிற்குள் தனி குதூகலம் பூக்கும். இது பாலிவுட் நடிகைகளுக்கும் பொருந்தும் போலிருக்கிறது. ஷூ கலெக்‌ஷனில் ஆர்வமுள்ள ஜாக்குலின், சமீபத்தில் புது ஷூ வாங்கியிருக்கிறார். அதை அணிந்த மகிழ்ச்சியை சின்னதொரு வீடியோவாக இன்ஸ்டாவில் தட்டிவிட, கோடி யை நெருங்கிவிட்டது லைக்குகள்.

அழிந்து வரும் பூச்சிகள்

‘‘இனி பூச்சிகளை மியூசியத்தில் மட்டுமே நாம் பார்க்க முடியும்...’’ என பயமுறுத்துகிறது ஓர் ஆய்வு.‘‘மக்கள் தொகையைவிட அதிக எண்ணிக்கை கொண்டவை பூச்சிகள். கடந்த 25 வருடங்களில் மட்டும் 40% பூச்சிகள் அழிந்துவிட்டன. இந்த நிலை தொடர்ந்தால் இன்னும் 100 வருடங்களில் பூச்சிகளே இருக்காது...’’ என்கிறது அந்த ஆய்வு.‘‘சுற்றுச்சூழல் ரீதியாகவும், உணவுச் சங்கிலியிலும் முக்கிய பங்காற்றுகின்ற பூச்சிகள் அழிவதற்கு முக்கிய காரணங்கள்: இரசாயன பூச்சிகொல்லி, வானிலை மாற்றங்கள் மற்றும் பூச்சிகளின் வாழிடங்களை அழித்தல்...’’ என்கின்றனர் நிபுணர்கள்.

வைரல்ஆம்லெட்!

முட்டையை இரண்டாக உடைத்து தோசைக்கல்லில் ஊற்றி சமைத்த ஆம்லெட்டை எல்லோரும் ருசித்திருப்போம். ஆனால், இது கொஞ்சம் வித்தியாசமான ஆம்லெட். ஆஸ்திரேலியாவின் சூடான ஒரு மணற்பகுதி. செருப்பில்லாமல் அந்த மணலில் கால்களை வைக்க முடியாது.

வித்தியாசமாக யோசித்த சுற்றுலாப் பயணி ஒருவர், அந்த சூடான மணலில் ஆம்லெட் போட்டு அசத்தியிருக்கிறார். இதை ஒருவர் வீடியோவாக்கி ஃபேஸ்புக்கில் தட்டிவிட, வைரலாகிவிட்டது ஆம்லெட் செய்முறை!