மரங்களின் டாக்டர்!மனிதர்களுக்கான மருத்துவர்கள் தெரியும். விலங்குகளுக்கான டாக்டர்கள் இருப்பதையும் அறிவோம். மரங்களுக்கான டாக்டர் தெரியுமா..?தெரியும் என இனி அழுத்திச் சொல்லலாம்! காரணம், விஜய் நிஷாந்த். இவர்தான் இந்தியாவின் முதல் ட்ரீ டாக்டர்!மரங்களுக்காக தனியாக இணையதளம் அமைத்து ஒவ்வொரு மரத்துக்கும் தனி கவனம் செலுத்தி பராமரிக்கிறார் விஜய்.
‘‘அப்பா தன் சட்டைப் பையில் வைக்கிற காசை எண்ணிப் பார்த்துட்டு வைச்சாருனா திருடு போவதை ஈசியா கண்டுபிடிப்பார் இல்லையா? அதே கான்செப்ட்தான். ஒரு பகுதியை தேர்வு செஞ்சு அங்க இருக்கிற எல்லா மரங்களையும் எண்ணி மேப் வைச்சு டிராக் பண்ணிடுவோம். யாராவது வெட்டினாலோ அல்லது சேதமாக்கினாலோ எங்களுக்கு தகவல் வந்துடும்!’’ டெக்னிக்கலாக பேச ஆரம்பிக்கிறார் விஜய் நிஷாந்த்.

‘‘சொந்த ஊரு, பெங்களூரு. இன்ஜினியரிங் டிராப் அவுட். சொந்தமா பிஸினஸ் செய்துட்டு இருந்தேன். சின்ன வயசுல இருந்தே இயற்கைக்காக அதிகம் குரல் கொடுப்பேன். கல்லூரில ஏகப்பட்ட வாலன்டியரிங் பண்ணியிருக்கேன். விலங்குகளுக்காக சின்ன வயசுல குரல் கொடுத்து நியூஸ்ல கூட வந்திருக்கேன்!உங்களுக்கே தெரியும் பெங்களூரு கார்டன் சிட்டினு. ஆனா, சமீபகாலமா நிறைய மரங்கள் நகரமயமாக்குதல்ல வெட்டப்பட்டும், அழிக்கப்பட்டும் காணாமப் போக ஆரம்பிச்சது.

இதுல இன்னொரு கும்பல் ஆசிட் ஊற்றி அல்லது பாதி வெட்டி அந்த மரத்தை உயிருடன் இருக்கிறப்பவே அழிக்கிற வேலைகளை செய்தாங்க. அதை பெரிசா யாரும் கண்டுக்கவும் இல்ல.பக்குனு இருந்தது. என்னைப் பொறுத்தவரை நமக்கெல்லாம் உயிர் கொடுக்கறதே மரங்கள்தான். மரங்கள் கார்பன் - டை  ஆக்சைடை சுவாசிச்சு நமக்கு ஆக்ஸிஜனை கொடுக்குது. மரங்களுக்கும் உயிர் இருக்கு. நாம பேசினா, அதுவும் பேசும். அதனாலயே மரங்களைக் காக்க முடிவு செஞ்சேன்...’’ புன்னகைக்கும் விஜய், ஹைவேயில் மரங்களை கணக்கு எடுப்பதுபோல், தான் செய்வதில்லை என்கிறார்.

‘‘ஒவ்வொரு மரமும் உள்ேள எவ்வளவு வலிமையோடு இருக்கு... மண்ணுல இருந்து அதுக்கு சத்துகள் சரியா கிடைக்குதா... நோய் தாக்கப்பட்டிருந்தா எதனால தாக்கப்பட்டிருக்கு... இப்படி எல்லாத்தையும் ஆராய்ந்துதான் சிகிச்சை தர்றோம்!ஒருவேளை ஆசிட் ஊத்தி அழிக்கப் பார்த்திருந்தா ஆசிட் பகுதிகளை மட்டும் வெட்டி எடுத்து அந்த இடத்துக்கு சிகிச்சை கொடுப்போம். ‘vruksha.com’ தளம் வழியா பெங்களூரின் முக்கிய பகுதிகளை மேப்பால இணைச்சிருக்கோம்.

இந்தத் தளம் வழியா ஒரு மரம் காணாமல் போனா அதைக் கண்டுபிடிச்சு அங்க திரும்பவும் வைப்போம். கூடவே யார் அந்த மரம் இருப்பதை விரும்பாம வெட்டவோ சேதப்படுத்தவோ செய்யறாங்க என்பதையும் கண்காணிக்கறோம். எந்த பாதிப்பும் இல்லாதபடி பார்த்துக்கறோம்.
தவிர எந்த மரம் எந்த ஏரியா மண்ணுல வளரும், என்ன ஊட்டச்சத்து அந்த மண்ணுக்கு வேணும்... இப்படி எல்லாத்தையும் கணக்கெடுப்போம்...’’ என்று சொல்லும் விஜய்யின் மேப்பிங் சாஃப்ட்வேர் மற்றும் ஐடியாவுக்கு ஏகப்பட்ட விருதுகள் கிடைத்துள்ளன.

‘‘வெளிநாடுகள்ல இருந்தும் அழைப்பு வருது. எனக்குத்தான் போக விருப்பமில்ல. நாம் பொறந்த மண்ணுலயும் என் நாட்டுலயும் இதைச் செய்யணும்னுதான் ஆசை. பெங்களூர்ல இப்ப நாங்க செய்யற மாதிரியே இந்தியா முழுக்க செஞ்சு மரங்களைப் பாதுகாக்கணும்.
கொஞ்ச நாளைக்கு முன்னாடி மணல் கொள்ளையை எதிர்த்து குரல் கொடுத்தேன். ஒரு குழுவா போலிஸோடு போய் கையும் களவுமா பிடிச்சோம். இதே வேலைய தமிழ் நாட்லயும் செய்யணும்னு ஆசை!

தண்ணி பொதுச்சொத்து. அதை யாரும் யாருக்கும் தர மாட்டேன்னு சொல்ல முடியாது. இங்க தண்ணீர் நிற்காம இருக்கக் காரணம் மணல் கொள்ளைதான். இதைத் தடுத்துட்டா இரண்டு மாநிலங்களுக்கும் போதுமான நீர் கிடைக்கும். டெல்டா பகுதிகள்ல உள்ள கிராம மக்களை ஒண்ணு சேர்த்து அங்க மணல் அள்ளும் கும்பலை அடக்கி போதுமான மரங்களை வெச்சாலே போதும். தமிழ் நாட்டுக்கும் தண்ணீர் கிடைக்கும்.

இப்ப வட இந்தியால சில பகுதிகளைத் தேர்வு செய்திருக்கேன். அங்க மேப் திட்டத்தை ஆரம்பிக்கப் போறோம். தமிழகம் உள்ளிட்ட பகுதிகள்ல அரசும் பொதுமக்களும் ஆதரிச்சா இந்தத் திட்டத்தை பரவலா கொண்டு போகலாம்...’’ நம்பிக்கையுடன் சொல்லும் விஜய், ஒட்டுச் செடிகள் வழியாக கலப்பின மரங்களையும் உருவாக்குகிறார்.

‘‘இந்த பூமிதான் நம்ம எல்லாருக்கும் சோறு போடுது. அதை காப்பாத்த வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கு. மரங்களை பராமரிக்க ஆசையுள்ளவங்க vruksha.com வழியா எங்களைத் தொடர்பு கொள்ளலாம். உங்க பகுதிக்கே வந்து மரங்கள் நடவும், அதை கண்காணிக்கவும் பயிற்சி  கொடுக்கத் தயாரா இருக்கோம்...’’ என்கிறார்
விஜய்.                  

ஷாலினி நியூட்டன்