5வதா நான் இயக்கின படம்தான் முதல்ல ரிலீஸ் ஆச்சு!



லைஃப் டிராவல்

இயக்குநர் மகிழ் திருமேனியின் சக்சஸ் ஸ்டோரி


பரபரப்பும், விஷுவல் விறுவிறுப்புமாக ஆக்‌ஷன் த்ரில்லர் ஸ்கிரிப்ட்களில் கவனம் ஈர்த்தவர்; ஈர்ப்பவர் இயக்குநர் மகிழ் திருமேனி. தன் ஒன்பதாண்டு சினிமா பயணத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் மட்டுமே படங்களை இயக்கியவர். ‘தடையற தாக்க’, ‘மீகாமன்’,லேட்டஸ்ட்டாக ‘தடம்’ என கேங்ஸ்டர் ஸ்கிரிப்ட்களில் செமத்தியாக ஸ்கோர் அள்ளி வருகிறார்.

பூர்வீகம் தஞ்சை மண். ஆனா, பிறந்தது, வளர்ந்தது சென்னைலதான். அப்பா ஆசிரியர். அம்மா ஹவுஸ் வொய்ஃப். எனக்கு நாலு தம்பிங்க. ஒரிஜினல் பெயர் வேறு. தமிழ் மேல காதல் இருந்ததால அம்மாவின் ஆசியோடும் அனுமதியோடும் மகிழ்திருமேனினு பேரு வைச்சுக்கிட்டேன்.

திருமேனி என்பது பெருமாள் நாமம். இயக்குநர் சங்கத்துல என்னோட உறுப்பினர் எண் 786. எதேச்சையா அமைஞ்சதுனாலும் ஆச்சர்யமா இருக்கு.சினிமா ஆசை 18 வயசுல வந்தது. ஆனா, ஸ்கூல் படிக்கிறப்ப வழக்கறிஞர் ஆகணும்னுதான் விரும்பினேன். புத்தகங்கள் நிறைய படிப்பேன். குறிப்பா நாவல்கள். ரஷ்ய எழுத்தாளர் தாஸ்தாவஸ்கி நாவல்கள் இப்ப வரை என்னை பாதிச்சுக்கிட்டே இருக்கு. ஒரு கட்டத்துல நாமும் எழுத்தாளராகணும்னு கூட தோணியிருக்கு!

தொடர்ந்து படிச்சதாலயோ என்னவோ நானும் கவிதைகளும் சிறுகதைகளும் எழுத ஆரம்பிச்சேன். இப்படி எழுதி எழுதிப் பார்த்ததுல திரைக்கதை வடிவம் பிடிபட்டுது. ரசிகனா மட்டுமே படங்களை ரசிச்சவன் இதுக்கு அப்புறம் ஒரு சீன் எப்படி எழுதப்படுதுனு கவனிக்கத் தொடங்கினேன்.
எழுதின ஸ்கிரிப்ட், விஷுவலா மாறும் மேஜிக் என்னை பிரமிக்க வைச்சது. நிறைய படங்கள் பார்க்க ஆரம்பிச்சேன். எப்படி அவங்க எழுதியிருக்காங்க... எடுத்திருக்காங்கனு உள்வாங்கத் தொடங்கினேன்.

புரிஞ்சிருக்குமே... அதேதான். சினிமாதான் என் இடம்னு முடிவு செய்துட்டேன். இப்ப இயக்குநராவது சுலபம். ஆனா, சினிமாவுல நான் நுழைய ஆரம்பிச்ச காலகட்டம் அப்படியில்ல. ஓர் இயக்குநர்கிட்ட உதவியாளனா சேரவே பலத்த சிபாரிசு தேவை. எனக்கு சினிமால எந்த பின்புலமும் இல்ல. சிபாரிசு பண்ணவும் யாருமில்ல. உதவி இயக்குநரா சேரவே  கடுமையா போராடியிருக்கேன். என் குடும்பம் சென்னைல இருந்ததால சாப்பாடு, தங்குமிடப் பிரச்னைகள் ஏற்படல. மத்தபடி ஒவ்வொரு நொடியும் போராட்டம்தான்.

உதவி இயக்குநரா சேரவே சில வருஷங்களாச்சு. எங்க வீட்ல, ‘ஏன்டா நேரத்தை வீணாக்கறே’னு கேட்காம என் விருப்பத்தைப் புரிஞ்சு என்கரேஜ் பண்ணினாங்க. டைரக்டர்ஸை சந்திச்சு வாய்ப்பு கேட்பதே முழுநேர வேலை. அப்படி கஸ்தூரி ராஜா சார் ஆபீசுக்கு அடிக்கடி போனேன்.
அங்க செல்வராகவன் சாரை பார்ப்பேன். அவர் டைரக்டராகும் முயற்சில இருந்தார். பக்காவா ஒரு ஸ்கிரிப்ட்டையும் ரெடி பண்ணி வச்சிருந்தார். எனக்குத் தெரிஞ்சு அவர் எழுதின முதல் ஸ்கிரிப்ட் அதுதான்.

விக்ரம் சார், பிரபுதேவானு எல்லாருக்குமே அந்த ஸ்கிரிப்ட் பிடிச்சிருந்தது. ஆனா, அவங்களால நடிக்க முடியல. ஸோ, முரளி சாரை வச்சு அந்தப் படத்தை தொடங்கினாங்க. அதுதான் ‘காதல்கொண்டேன்’!செல்வா சார் தன் வயதுள்ளவங்களை உதவியாளரா சேர்த்துக்க விரும்பினார். அந்த அடிப்படைல அசிஸ்டென்ட் டைரக்டர் வாய்ப்பு எனக்குக் கிடைச்சது.

ஆனா, முரளி சாரை வச்சு அவர் பூஜை போட்ட படம் உடனடியா டேக் ஆஃப் ஆகல. அதனால கஸ்தூரிராஜா சாரின் ‘காதல் சாதி’ல ஒர்க் பண்ணப் போயிட்டேன். ஒரு ஷெட்யூல் ஷூட் போச்சு. ஒருநாள் கஸ்தூரிராஜா சார் என்கிட்ட ‘செல்வா உன்னைத்தான் கூப்பிடறார். அங்க போயிடுப்பா’னு அனுப்பினார். ஆனா, சில காரணங்களால ‘காதல் கொண்டேன்’ ஷூட் நடக்கல. இடைல ஒரு டீன் ஏஜ் ஸ்கிரிப்ட் வேணும்னு செல்வா சார்கிட்ட கஸ்தூரி ராஜா சார் கேட்டார்.

அப்படி செல்வா சார் எழுதிக் கொடுத்த ஸ்கிரிப்ட்தான் ‘துள்ளுவதோ இளமை’. பதின்பருவ காதலை, அழகா, நேர்த்தியா, உண்மையா சொன்ன விதத்துக்காகவே அந்தப் படம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.இந்த நேரத்துல ‘மின்னலே’ படம் வெளியாச்சு. அதுல இடம்பெற்ற சென்சிபுளான காதலும் மேக்கிங்கும் பிடிச்சிருந்தது. இந்த இயக்குநர்கிட்ட ஒர்க் பண்ணினா என்னனு தோணுச்சு.

அப்ப ‘துள்ளுவதோ இளமை’ எடிட்டிங் ஒர்க் சுரேஷ் அர்ஸ் சார் ஆபீஸ்ல போயிட்டிருந்தது. எடிட்டிங் ரூமை விட்டு வெளியே வர்றேன்... அங்க கவுதம் மேனன் சார் இருந்தார்! நேரா அவர்கிட்ட போய் ‘உங்ககிட்ட அசிஸ்டென்ட்டா சேர விரும்பறேன்’னு சொன்னேன்.
பொதுவா ஒரு டைரக்டர்கிட்ட இப்படி வாய்ப்பு கேட்டா, ‘நீ என்ன முடிச்சிருக்கே... உனக்கு என்ன தெரியும்... உன் ரசனை என்ன..?’னு அடுக்கடுக்கா கேட்பாங்க. என்கிட்ட வாய்ப்பு கேட்கறவங்ககிட்ட நானும் இப்படி கேட்கறேன்!

ஆனா, என் அதிர்ஷ்ட நேரமோ என்னவோ கவுதம் சார் இதுமாதிரி எதுவும் கேட்கலை. ‘இப்ப நான் ‘மின்னலே’ படத்தை இந்தில எடுத்துட்டு இருக்கேன். ரெண்டு மாசங்கள் கழிச்சு தமிழ்ல படம் தொடங்கறேன். அப்ப வந்து ஜாயின் பண்ணிக்குங்க’னு சொல்லிட்டார்!
அதேமாதிரி இரண்டு மாதங்கள் கழிச்சு அவரைப் போய்ப் பார்த்தேன். ‘காக்க காக்க’ல ஆரம்பிச்சது!

பொதுவா அவர் தமிழ்ல பாதி, ஆங்கிலத்துல பாதினு ஸ்கிரிப்ட் எழுதுவார். இது அவர் ஸ்டைல். தன் உதவியாளர்கள் அத்தனை பேர்கிட்டயும் ஸ்கிரிப்ட்டை கொடுத்து படிக்கச் சொல்லி கருத்து கேட்பார்.அப்படி என்கிட்ட அவர் கொடுத்த ‘காக்க காக்க’ ஸ்கிரிப்ட்டை படிச்சுட்டு அதுல ஆங்கிலத்தில் இருந்ததை தமிழ்ப்படுத்திக் கொடுத்தேன். இந்த ஒர்க் அவருக்குப் பிடிச்சிருந்தது.

‘காக்க காக்க’ல டைட்டில் கார்டுல கூடுதல் வசனம்னு என் பெயரையும் போட்டு என்னை கவுரவப்படுத்தினார்!
அப்புறம் ‘வேட்டையாடு விளையாடு’ல அவர் கூட ஒர்க் பண்ணினேன். இந்தப் படம் முடியறப்ப பெரிய நிறுவனத்துல இருந்து எனக்கு ஆஃபர் வந்தது. சில காரணங்களால அந்தப் படம் தொடங்கப்படல.

அடுத்து இன்னொரு நிறுவனம். இதுவும் சில காரணங்களால டேக் ஆஃப் ஆகல. இப்படியே கிட்டத்தட்ட நான்கு ப்ராஜெக்ட்ஸ் தொடங்கப்பட்டு கை நழுவினது. இதுல ஒரு படம் தொடங்கி பத்து நாட்கள் ஷூட்டும் போச்சு. ஆனா, 11வது நாள் நின்னுடுச்சு! வேறு இரண்டு படங்கள் அப்ப பிரபலமா இருந்த ஹீரோக்களை வைச்சு புக் ஆச்சு. ஆனா, டேக் ஆஃப் ஆகல.

சென்டிமென்ட் பார்க்கிற சினிமா உலகத்துல இப்படி நான்கு படங்கள் டிராப் ஆன இயக்குநருக்கு எப்படி மேற்கொண்டு வாய்ப்பு கிடைக்கும்? போராட்டம்தான். பொருளாதார பலமும் இல்லாம சினிமா பின்னணியும் இல்லாம ரொம்ப திண்டாடினேன். பஸ்ஸுக்கு காசு இல்லாம பல கிலோ மீட்டர் நடந்த நாட்கள் அதிகம்.

ஆனாலும் மனசை தளர விடலை. வாய்ப்பு கேட்பதையும் நிறுத்தலை. ஒருவழியா ‘முன்தினம் பார்த்தேனே’ படம் அமைஞ்சது. இது நான் 5வதா இயக்கின படம். ஆனா, இதுதான் முதல் படமா வெளியாச்சு! தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் சார் என் கதையை நம்பி வாய்ப்பு கொடுத்தார். பாடல் காட்சிகளுக்காக ஃபாரீனுக்கு அனுப்பினார். புதுமுகங்கள் நடிச்ச அந்தப் படத்துக்கு என்ன தேவையோ அதுக்கு மேலயே செலவழிச்சார்.
படம் ரிலீசாச்சு. அதேநேரம் முதன்முதலா ஐபிஎல் மேட்ச்சும் ஆரம்பமாச்சு.

அதுக்கு ஏகப்பட்ட விளம்பரங்கள் செய்திருந்தாங்க. மக்கள்கிட்டயும் ஒரு கிரேஸ் இருந்தது. ஸோ, யாருமே அப்ப தியேட்டருக்கு வரலை. புதுமுகங்கள் நடிச்ச படம் என்பதால் என் படத்துக்கு ஓபனிங்கும் இல்ல. ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோவுக்கு 20 பேர் வந்திருந்தது பெரிய விஷயமாச்சு. ஏற்கெனவே நாலு படங்கள் நின்னுபோன கவலையைவிட முதல்படம் தோல்வியா அமைஞ்சதுல ரொம்ப பாதிக்கப்பட்டேன்.

ஆனாலும் நம்பிக்கையையும் உறுதியையும் இழக்கலை. இது நான் ஆசைப்பட்டு தேர்ந்தெடுத்த துறை. இந்த சினிமாவை நாம நேசிச்சா அது எப்பவும் நம்மை கைவிடாதுனு உறுதியா நம்பினேன். ஸ்கிரிப்ட்டையும் ரெடி பண்ணினேன். நிறைய ஹீரோக்களுக்கு அந்தக் கதை பிடிச்சிருந்தது. இன்னும் டெவலப் பண்ணச் சொன்னாங்க. அவங்களுக்காக சில காலம் காத்திருக்க வேண்டிய சூழல்.

இந்த நேரத்துல அருண் விஜய்க்கு ஒரு எஸ்எம்எஸ் அனுப்பினேன். அப்ப அவர் ‘மலைமலை’, ‘மாஞ்சா வேலு’ பண்ணியிருந்தார். அடையார் கேட் ஹோட்டல்லதான் முதன்முதலா அவரைச் சந்திச்சேன். கதையை சொன்னேன்.இப்படித்தான் ‘தடையற தாக்க’ உருவாச்சு. அந்தப் படத்துக்கு பத்திரிகை நண்பர்கள் கொடுத்த ஆதரவும், ஊக்குவிப்பும்தான் என்னை பெரிய அளவுல கொண்டு போச்சு.

அடுத்து ‘மீகாமன்’. ‘கேங்ஸ்டர் படங்கள்ல இது க்ளாசிக்’னு மீடியாக்கள் எழுதிப் பாராட்டினதை வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டேன்.
இப்ப ‘தடம்’. ரசிகர்கள் ஆதரவோட படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கு. கவுதம் சார் கூப்பிட்டுப் பாராட்டினார். சந்தோஷமா இருக்கு.
‘இமைக்கா  நொடிகள்’ல அனுராக் காஷ்யப்புக்கு குரல் கொடுத்த பிறகு டப்பிங் பேசக்  கேட்டு நிறைய ஆஃபர்ஸ் வருது. ஆனா, டைரக்‌ஷன்தான் ஃபர்ஸ்ட். மத்ததெல்லாம்  நெக்ஸ்ட்!

மை.பாரதிராஜா

ஆ.வின்சென்ட் பால்