இ வேஸ்ட்டில் கலைவண்ணம் கண்டார்!



ஒவ்வொரு முடிவிலும் ஒரு தொடக்கம் உண்டு என்று சொன்னவர் யாரோ... அவர் வாயில் சர்க்கரைதான் போடவேண்டும். ஏனெனில் ஹரிபாபு நடேசனின் வாழ்க்கைத் தத்துவமே அந்த வாக்கியமாகத்தான் மாறியிருக்கிறது!

யெஸ். இனி இது பயனில்லை என தூக்கி எறியப்படும் கழிவுப் பொருட்களில் இருந்து அசத்தலான சிலைகளையும், 3டி ஓவியங்களையும் இவர் உருவாக்கி வருகிறார். ‘‘பிறந்தது கேரளா. படிச்சது சென்னை கவர்மென்ட் ஆர்ட்ஸ் கல்லூரில ஃபைன் ஆர்ட்ஸ். ஹைதராபாத் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் கல்லூரில முதுகலை முடிச்சேன். அனிமேஷன் டிசைன் படிச்சேன்.

அங்க கிராபிக்ஸ், விஷுவல் கம்யூனிகேஷன் கோர்ஸ் இல்ல. அதனால அனிமேஷன் எடுக்க வேண்டியதாகிடுச்சு. அங்க அட்மிஷன் கிடைக்கறது ரொம்ப கஷ்டம். வருஷத்துக்கு நாலு பேருக்கு சீட்டு கிடைக்கறதே பெரிய விஷயம். என் அனிமேஷன் மூளையையும், சிலை வடிவமைப்பையும் வெச்சு லைவ்வா ஒரு நண்டு, அப்பறம் ஒரு சிலந்தி அப்படியே நகர்ந்து போற மாதிரி இரண்டையும் செஞ்சு அட்மிஷனுக்கான இன்டர்வியூல காட்டினேன். அதைப் பார்த்துட்டுதான் சீட்டே கொடுத்தாங்க...’’ சிரிக்கும் ஹரிபாபு நடேசன், இதை முடித்துவிட்டு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் கிராஃபிக் டிசைன் வேலையில் சேர்ந்திருக்கிறார்.

‘‘இப்ப அந்த சேனல் இல்ல. ஆனா, அது இயங்கின காலத்துல அப்டேட் லெவல் கிராஃபிக்ஸ் செய்திருப்பேன். நல்ல வருமானம். வாழ்க்கைல செட்டிலானேன்.ஆனாலும் மனசுக்கு திருப்தி இல்ல. தவிர அப்ப கிராஃபிக் டிசைனுக்கு பெருசா ஸ்கோப் இல்லாத காலம். ஏன்னா, கிராஃபிக் டிசைன்னா என்னனு அப்பதான் மக்களுக்கு புரியவே தொடங்கியிருந்தது.

இந்த நேரத்துல நண்பர் ஒருத்தர் மும்பைக்கு வரச் சொன்னார். போனேன். ஒரு கம்பெனில சேர்ந்தேன். அங்கயும் வருமானம் இருந்துச்சு. அதேநேரம் அங்கயும் மனநிறைவு இல்ல. நாமதான் கிரியேட்டிவ் மைண்ட் உள்ளவங்களாச்சே! மத்தவங்ககிட்ட கைகட்டி வேலை பார்க்கணுமானு தோணிச்சு. அந்த வேலையையும் விட்டுட்டேன்...’’ என்று சொல்லும் ஹரிபாபு இதன்பிறகு வீட்டில் சும்மா இருக்கப் பிடிக்காமல் ஏதாவது செய்ய வேண்டும் என யோசிக்கத் தொடங்கியிருக்கிறார்.

‘‘அப்பதான் கோர்ஸ்ல சேர இன்டர்வியூவுல நான் செய்து காட்டின நண்டும், சிலந்தியும் நினைவுக்கு வந்தது. இதுமாதிரி கிரியேட்டிவ்வா ஏதாவது செய்யலாம்னு மண்டையைப் பிச்சுக்கிட்டப்ப மின்கழிவுகள் நினைவு வந்தது.பழைய மொபைல் வேஸ்ட், எலக்ட்ரானிக் பொருட்கள், கம்ப்யூட்டர் பகுதிகள், இரும்பு வளையங்கள்... இதையெல்லாம் சேகரிச்சு சிலைகளா செய்யத் தொடங்கினேன். நேர்ல பார்க்கற அளவுக்கு தத்ரூபமா இருந்ததால எல்லாரும் ஆச்சர்யமா பார்த்துப் பாராட்டினாங்க.

நான் செஞ்சதை எல்லாம் வைச்சு கண்காட்சி ஒண்ணு நடத்தினோம். ஆனா, அதையெல்லாம் வாங்க யாரும் முன்வரலை.நானும் மனம் தளரலை. 3டி புகைப்படங்கள் பாணில போட்டோ பிரேமுக்குள்ள இருந்து வெளிய எம்போஸ் ஆகி தெரியற மாதிரியான புகைப்பட சிலைகளை அடுத்த கட்டமா செய்ய ஆரம்பிச்சேன்.

இப்ப மால்களுக்கும், பெரிய பெரிய நிகழ்ச்சிகளுக்கும், கம்பெனிகளுடைய வரவேற்பறைகளை அலங்கரிக்கவும் பெரிய பெரிய சிலைகளைச் செய்து தரச் சொல்லி ஆர்டர்கள் குவியுது. அதே மாதிரி போட்டோ பிரேம்களையும் வீட்ல அலங்காரத்துக்குப் பயன்படுத்த ஆரம்பிச்சுட்டாங்க. சில சிலைகளை நகர்வது மாதிரி வேணும்னு கேட்டு வாங்கறாங்க!’’ புன்னகைக்கும் ஹரிபாபு நடேசன், தேசிய விருதும் பெற்றிருக்கிறார்.

‘‘இ வேஸ்ட்டை பயன்படுத்தி கலைப்பொருட்களை செஞ்சு சுற்றுச்சூழலைப் பாதுகாக்கறதுக்காக இந்த விருதைக் கொடுத்தாங்க. இதுதவிர ஏராளமான விருதுகளை உலக அளவுல வாங்கியிருக்கேன்.பிடிச்ச வேலையை பிடிச்ச மாதிரி செய்யறேன். பிடித்தமா வாழறேன்!’’ என கண் சிமிட்டுகிறார் ஹரிபாபு நடேசன்.     

ஷாலினி நியூட்டன்

குங்குமம் டீம்