கஷ்டங்கள் தீர்க்கும் ஆலயங்கள்



புதிய தொடர்-1
 
கோயிலுக்குச் சென்றால் எப்படி பிரச்னைகள் தீரும்?
‘‘ஈஸ்வரா...’’சத்தம் கேட்டதும் கண்ணன் ஓடி வந்தான்.எதிர்பார்த்தது போலவே எதிர்வீட்டு நாகராஜ தாத்தாதான் பூட்டைத் திறந்துகொண்டிருந்தார். அருகில் ஆனந்தவல்லி பாட்டி.

‘‘எங்க தாத்தா போயிட்டு வர்றீங்க?’’ ஆவலுடன் கண்ணன் கேட்டான். ‘‘கோயிலுக்கு கண்ணா! பாட்டிக்கும் எனக்கும் மனசெல்லாம் லேசாகிடுச்சு. எல்லாம் அவன் கருணை...’’ மேலே பார்த்து தன் கைகளை உயர்த்திவிட்டு அவனைப் பார்த்துப் புன்னகைத்தார். ‘‘வா கண்ணா...’’ ஆனந்தம் பாட்டி அவனை அழைத்தாள்.இதற்காகவே காத்திருந்தவன் போல் அவர்களுடன் வீட்டுக்குள் நுழைந்தான்.இருவரும் செருப்பைக் கழற்றிவிட்டு பூஜையறைக்குச் சென்று நமஸ்கரித்துவிட்டு ஹாலுக்கு வந்தனர்.

‘‘தாத்தா... உங்ககிட்ட ஒண்ணு கேட்கணும்...’’‘‘தாராளமா கேளு! ஆனந்தம், நைட்டுக்கு உன்னோட ஸ்பெஷல் மாவு உப்புமா பண்ணிடு. கண்ணாவும் நம்மகூட சாப்பிடுவான். இவன் அம்மாகிட்ட சொல்லிடு ஈஸ்வரா...’’ சோபாவில் அமர்ந்தார். ‘‘உட்காரு கண்ணா...’’கண்ணன் அவர் அருகில் அமர்ந்து மரியாதையுடனும் பக்தியுடனும் அவரை ஏறிட்டான். பக்திப்பழம். எப்போதும் ‘சிவ சிவா’ என்றபடியே இருப்பார். தினமும் யாராவது வருவார்கள். நாகராஜ தாத்தாவுடனும் ஆனந்தவல்லி பாட்டியுடனும் பேசிவிட்டுச் செல்வார்கள். சாதாரணமான குசல விசாரிப்புதான் என முதலில் கண்ணன் நினைத்தான்.

ஆனால், வருபவர்கள் தங்கள் கஷ்டங்களை தாத்தாவிடம் சொல்கிறார்கள் என்பதும், பதிலுக்கு ஒரு கோயிலின் பெயரைச் சொல்லி அங்கு செல்லும்படி தாத்தா சொல்வதையும், பாட்டி அதை ஆமோதிப்பதையும் கண்டதும் அவனுக்கு ஆச்சர்யம் ஏற்பட்டது.கோயிலுக்குச் சென்றால் எப்படி பிரச்னைகளும் கஷ்டங்களும் தீரும்? நீண்ட நாட்களாக அவனுக்குள் இந்தக் கேள்வி குடைந்து கொண்டிருந்தது. இன்று எப்படியும் அதற்கு விடை காண வேண்டும்.
‘‘ஏதோ கேட்கணும்னு சொன்னியே கண்ணா..?’’ புன்னகையுடன் கேட்ட நாகராஜ தாத்தா, சொம்பில் ஆனந்தவல்லி பாட்டி கொண்டு வந்து கொடுத்த நீரைப் பருகினார்.

‘‘கேட்பேன்... நீங்க கோச்சுக்கக் கூடாது...’’‘‘இதென்ன பெரிய மனுஷன் மாதிரி... சும்மா கேளுடா...’’ பாட்டி அவன் தலையைக்
கோதினாள். “அது எப்படி தாத்தா கோயிலுக்குப் போய் வேண்டிக்கிட்டா பிரச்னை எல்லாம் தீரும்? அங்க வெறும் கல்லுதானே இருக்கு?”
சட்டென நாகராஜன் தாத்தா சிரித்தார். “சாதா கல்லும் சாமியும் ஒண்ணா?”
‘‘இல்லையா பின்ன?”
“சரி... அது என்ன உன் சட்டைப் பைல?”

‘‘நூறு ரூபா தாத்தா...” என்றபடி தன் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து தாத்தாவிடம் காண்பித்தான்.அதை வாங்கிக் கொண்டவர், பாட்டியைப் பார்த்து கண்சிமிட்டினார்.உடனே டீப்பாய் மீதிருந்த நோட்டிலிருந்து ஒரு காகிதத்தைக் கிழித்து தாத்தாவிடம் கொடுத்த பாட்டி ‘‘பேசிட்டிருங்க...’’ என்றபடி சமையலறைக்குச் சென்றாள்.பாட்டி கொடுத்த காகிதத்தை அப்படியே கண்ணாவிடம் கொடுத்தார். ‘‘இதை வைச்சுக்கிட்டு அந்த ரூபா நோட்டை என்கிட்ட கொடு!’’ ‘‘அஸ்குபுஸ்கு... நான் மாட்டேன்...’’

‘‘ஏன் கண்ணா? இதுவும் காகிதம் உன்கிட்ட இருக்கறதும் காகிதம்தானே?’’
‘‘இல்லையே... எங்கிட்ட இருக்கறது நூறு ரூபாய் ஆச்சே!’’

‘‘அரசாங்கத்தால அங்கீகரிக்கப்பட்டதால உன்கிட்ட இருக்கிற காகிதத்தின் மதிப்பு நூறு ரூபா. என்கிட்ட இருக்கிற காகிதத்தை அரசாங்கம் அங்கீகரிக்கலை. அதனால இதுக்கு எந்த மதிப்பும் இல்ல. அப்படித்தானே?’’‘‘ஆமாம் தாத்தா...’’ ‘‘அதேதான் கண்ணா! பக்தியாலயும் மந்திரத்தாலயும் கோயில்ல இருக்கிற கல்லு சாமியாகுது! ‘கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்’னு அதனாலதான் சொல்றோம்...’’ நாகராஜ தாத்தா சிரித்தார்.

கண்ணனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ‘ம்...’ என்று யோசித்தவன், “சரி தாத்தா... சாமிதான் எல்லா எடத்துலயும் இருக்கே... அப்புறம் ஏன் கோயிலுக்குப் போகணும்?’’ என்று கேட்டான். ‘‘அடாடா... உனக்கு எப்படி வேர்த்திருக்கு பாரு... கொஞ்சம் ஃபேன் போடு!’’
துள்ளிக் குதித்தபடி எழுந்த கண்ணன், ஃபேன் ஸ்விட்சை போட்டுவிட்டு மீண்டும் தாத்தாவின் அருகில் அமர்ந்தான். ‘‘சொல்லு தாத்தா...’’
‘‘அதான் சொல்லிட்டனே!’’ தாத்தா சிரித்தார்.

‘‘புரியலை..?’’
‘‘காற்றுதான் எல்லா இடத்துலயும் இருக்கே... அப்புறம் ஏன் ஃபேன் போட்ட?’’
கண்ணன் திகைத்தான். என்ன சொல்வதென்று அவனுக்குத் தெரியவில்லை.நாகராஜ தாத்தாவே தொடர்ந்தார். ‘‘காற்றை பரிபூரணமா உணரவும் அனுபவிக்கவும் ஃபேன் தேவை. சாமியும் அப்படித்தான் கண்ணா... எல்லா இடத்துலயும் அவர் இருந்தாலும் கோயில்லதான் பரிபூரணமா அவரை உணர முடியும்!’’ தாத்தாவின் பதில் அவனை அசரவைத்தது. இருந்தாலும் அவரை அவன் விடுவதாக இல்லை. “அப்ப கோயில்ல எப்படி சிலையை திருடறாங்க? சாமி இருந்தா எப்படி திருட முடியும்?’’

‘‘நேத்து நீ சாமி ரூம்ல பல்பு மாத்தின இல்லையா..?’’
‘‘ஆமா...’’‘‘அப்ப உன்னால மின்சாரத்தை தொடவோ மாத்தவோ முடிஞ்சதா..?’’‘‘இல்ல...’’‘‘சாமி சிலையும் அப்படித்தான் கண்ணா! யார் வேண்டுமானாலும் அதைத் தூக்கலாம். மாத்தியும் வைக்கலாம். ஆனா, இறை சக்தியை அவங்களால மாத்த முடியாது!’’

கண்ணன் பதில் பேசாமல் அமைதியாக இருந்தான். மேற்கொண்டு என்ன கேட்பது என்று அவனுக்குத் தெரியவில்லை.‘‘இந்தா...’’ என்றபடி ஒரு தட்டில் ஸ்நாக்ஸ் அயிட்டங்களை அவனிடம் கொடுத்தாள் ஆனந்தவல்லி பாட்டி.மவுனமாக அதை சாப்பிடத் தொடங்கினான்.தாத்தா அவனை அருகில் இழுத்து அணைத்தார். ‘‘கோயில்லயும் சரி... வீட்லயும் சரி... சாமிக்கு ஏன் பூஜை பண்றோம் தெரியுமா? உலகமும் இந்த உடம்பும் பஞ்சபூதங்களால ஆனது. இதைக் கொடுத்ததும் அவன்தான். எதை நமக்கு அந்த தெய்வம் கொடுத்ததோ அதையே பூஜை செய்யறப்ப நாம திருப்பி சாமிக்கே தர்றோம்! தெய்வத்துக்கு நாம சாத்தக்கூடிய சந்தனம், மண் தத்துவம்.

காட்டற தீபாராதனை, அக்னி. படைக்கும் நைவேத்தியம், நீர். எல்லா உணவும் நீராலானதுதானே? ஊதுவத்தியும் சாம்பிராணியும் வாயு. பூ, ஆகாயம்!’’

ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு தன்னை மறந்து கண்ணன் கைதட்டினான். ‘‘சூப்பர் தாத்தா...’’

‘‘சரி... அதையும் கேட்டுடு!’’‘‘எதைப் பாட்டி..?’’ ஆச்சர்யத்துடன் ஆனந்தவல்லியை கண்ணன் ஏறிட்டான்.‘‘அதான்... உள்ளுக்குள்ள ஏதோ இருக்கே... அதையும் கேளு! தாத்தா சொல்வார்!’’வெட்கத்துடன் தலைகுனிந்தான்.
‘‘தயங்காம கேளு கண்ணா...’’ நாகராஜன் ஊக்கப்படுத்தினார்.

‘‘அது வந்து தாத்தா... அப்புறம் ஏன் சிவவாக்கியர் ‘நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையிலே’னு சொன்னாரு?”
“உனக்கு பகவத் கீதை தெரியும் இல்லையா..?’’‘‘தெரியும் தாத்தா... தினமும் நீங்களும் பாட்டியும் எனக்கு சொல்றீங்களே!’’

‘‘அதேதான். அதுல தன்னை அடைய பல வழிகளை பகவான் கிருஷ்ணன் சொல்றார். ஒண்ணு, அஷ்டாங்க யோகம். இன்னொண்ணு பக்தி மார்க்கம். சிவவாக்கியர் அஷ்டாங்க யோகம் செய்யறவர். அந்த நிலையை அடையறது கஷ்டம். அதனாலதான் கிருஷ்ணரே,  ‘இது ரொம்ப கஷ்டம் அர்ஜுனா... உன்னால முடியாது’னு சொல்றார்...’’

‘‘...’’
‘‘நம்மை மாதிரி சாதாரண மனிதர்களுக்கு பக்தி மார்க்கம்தான் சரி. அதுதான் ஈசி. இதனோட ஒரு பகுதியாதான் கோயிலுக்குப் போறோம்... பூஜைகள் செய்யறோம்! யோசிச்சுப் பாரு. போகர் என்கிற சித்தர்தானே பழனில கோயில் கட்டினார்? இன்னொரு சித்தரான சிவவாக்கியர் சொன்னதுக்கு மாறா அவர் ஏன் அப்படி செஞ்சார்?’’

‘‘...’’
‘‘ஆக, சிவவாக்கியர் சொன்னதும் சரி... நாம கோயிலுக்குப் போய் வணங்கறதும் சரி!’’கண்கள் மின்ன தாத்தாவின் மார்பில் கண்ணன் ஒண்டினான்.அப்போது காலிங் பெல் அடித்தது.ஆனந்தவல்லி பாட்டி கதவைத் திறந்தாள்.பதற்றத்துடன் அங்கே பூ விற்கும் சரோஜா நின்று கொண்டிருந்தாள். ‘‘என்னம்மா இந்த நேரத்துல..? முதல்ல உள்ள வா...’’

‘‘ஐயா இருக்காராமா..?’’ கேட்டபடியே உள்ளே வந்த சரோஜா, சோபாவில் அமர்ந்திருந்த நாகராஜ தாத்தாவைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டாள்.
‘‘முதல்ல உட்காரு...’’ எதிரிலிருந்த சோபாவில் அவளை அமர வைத்த ஆனந்தவல்லி பாட்டி, ‘‘இந்தா... தண்ணீர் குடி...’’ என சொம்பைக் கொடுத்தாள்.மடமடவென்று அதைக் குடித்து முடித்த சரோஜா, கண்கலங்க தாத்தாவைப் பார்த்தாள்.

‘‘சொல்லும்மா...’’‘‘என்னனு சொல்லுவேன்... பொறந்ததுலேந்தே கஷ்டம்தான்... வந்த இடமும் வாய்ச்ச இடமும் சரியில்ல. புருஷன் ஒரு விதத்துல பிரச்னைனா... புள்ளைங்க இன்னொரு விதத்துல. இன்னிக்கி கூட...’’ மேற்கொண்டு பேச முடியாமல் அழ ஆரம்பித்தாள்.
கண்களை மூடி சில நொடிகள் தியானத்தில் அமர்ந்த தாத்தா, ஒரு முடிவுடன் இமைகளைத் திறந்தார்.

அவரையே கண்கொட்டாமல் கண்ணன் பார்த்துக் கொண்டிருந்தான். ‘‘ஒரு கோயில் சொல்றேன். அங்க போயிட்டு வா... உன் கஷ்டம் எல்லாம் தீர்ந்துடும்...’’‘‘வந்து... பூஜை செய்யணுமா..?’’

‘‘அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். அங்க போய் சாமியை வணங்கினா போதும்...’’
‘‘செலவாகுமா ஐயா?’’‘‘வெறும் பஸ் செலவுதான். அது கூட வெளியூர் இல்ல... உள்ளூர்தான். நம்ம சென்னையேதான்...’’கண்களைத் துடைத்தபடி நம்பிக்கையுடன் சரோஜா அவரைப் பார்த்தாள்.
‘‘என்ன கோயில் ஐயா..?’’

(கஷ்டங்கள் தீரும்)

- ஜி.மகேஷ்
ஓவியம்: ஸ்யாம்