மலையாளம் பேசும் தமிழ் நூல்கள்!



நூற்றுக்கணக்கான இலக்கியங்களை மொழிபெயர்த்த  கூலித் தொழிலாளி

தமிழ் இலக்கியம் குறித்து நமக்கு இருக்கும் பெருமிதம் கொஞ்ச நஞ்சமல்ல. சுமார் இரண்டாயிரம் ஆண்டுக்கால இலக்கிய வளம் இருந்தால் யாருக்குத்தான் பெருமிதம் இருக்காது?நம் பெருமிதங்கள் எல்லை தாண்டுவதில்லை என்று சொன்னால் நம்புவீர்களா? ஆனால், அதுதான் எதார்த்தம்.

இன்றைய சூழலில் உலக இலக்கியம் தமிழுக்குள் வந்துவிட்டது. தமிழ் இலக்கியம்தான் இன்னமும் உலகுக்குள் செல்லவில்லை! இப்படிச் சொல்வதன் பொருள் தமிழில் உலகத் தரமான இலக்கியங்கள் எழுதப்படுவதில்லை என்பதல்ல. எழுதப்படுபவை எதுவும் அதற்கான உயரத்துக்குச் செல்லவில்லை என்ற ஆதங்கத்திலேயே இப்படிச் சொல்கிறோம். பிற மொழிகளிலிருந்து தமிழுக்கு வரும் இலக்கியங்களோடு ஒப்பிடும்போது தமிழிலிருந்து பிற மொழிகளுக்குச் செல்லும் இலக்கியங்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பமாக இருக்கிறது.

இப்படியான சூழலில்தான் ஒருவர் தமிழ் இலக்கியங்களை மலையாளத்துக்கு மொழி பெயர்த்துக்கொண்டிருக்கிறார். ஷஃபி செருமாவிலாயிக்கு 54 வயது. கேரளத்தின் கண்ணூர் அருகே உள்ள செருமாவிலாயி கிராமம்தான் பூர்வீகம். பெயரின் பின்பகுதியில் ஒட்டிக்கொண்டிருப்பது ஊர் பெயர்தான்.

சுமார் முப்பது வருடங்களாக தமிழ் இலக்கியத்தோடு நெருக்கமாக இருக்கும் ஷஃபி, இதுவரை இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பத்துக்கும் மேற்பட்ட நாவல்கள், நூற்றுக்கணக்கான கவிதைகள் ஆகியவற்றை தமிழிலிருந்து மலையாளத்துக்கு மொழிபெயர்த்திருக்கிறார். சரி, ஷஃபி யார்..? பேராசிரியரா? இல்லை. பல்கலைக் கழகங்களால் நியமிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளரா? அதுவும் இல்லை.

ஒரு கூலித் தொழிலாளி! தினமும் கட்டட வேலைக்குச் சென்றால்தான் அன்றைய பிழைப்பை ஓட்ட முடியும் என்ற நிலையில் இருக்கும் அடிமட்டப் பணியாளர். இவ்வளவு வறுமையான சூழலில் அமர்ந்துகொண்டுதான் ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய வேலையைத் தனி ஒரு மனிதனாகச் செய்துகொண்டிருக்கிறார். லட்சங்களில் சம்பளம் வாங்கும் பேராசிரியர்கள் செய்ய வேண்டிய கடமை இது.

எந்தவிதமான பெரிய பொருளாதாரப் பலன்களும் இன்றி இலக்கியத்தின் மீதும் தமிழின் மீதும் கொண்டுள்ள காதலால் இதை தன் வாழ்நாள் கடமையாகச் செய்துகொண்டிருக்கிறார் ஷஃபி. ‘‘பிறந்தது, வளர்ந்தது எல்லாம் செருமாவிலாயி கிராமத்தில்தான். பத்தாம் வகுப்பு வரை படிச்சேன். படிக்க ஆர்வம் இருந்தாலும் குடும்பத்தில் இருந்த வறுமை அதற்குமேல் அனுமதிக்கவில்லை. அப்பாவுக்கு மீன் பிடித்தல்தான் தொழில். பக்கத்தில் உள்ள ஆற்றுக்குப் போய் மீன்களைப் பிடித்து சந்தையில் விற்று வருவார்.

மிகச் சொற்ப வருமானம் வரும். அரை வயிறும் கால்வயிறுமாக வளர்ந்தோம். வேலைக்குப் போகும் சூழல் வந்ததும் கட்டட வேலைதான் எனக்கு வாய்த்தது. எந்த வேலையாக இருந்தால் என்ன... நேர்மையாய் பாடுபட வேண்டும். அதுதான் முக்கியம்.எண்பதுகளின் முற்பகுதியில் வேலை விஷயமாக பெங்களூர் செல்ல நேர்ந்தது. விவேகா நகர் பகுதியில் தங்கினேன். அங்கு எனக்கு ஒரு டீக்கடையில் வேலை கிடைத்தது. அந்த ஏரியாவை ஒரு குட்டித் தமிழ்நாடு என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அங்கு தமிழர்கள் அடர்ந்திருந்தார்கள்.

என்னோடு பணியாற்றுபவர்கள் முதல் அண்டை வீட்டுக்காரர்கள் வரை பல தமிழர்கள் இருந்தார்கள். தமிழர்கள்தான் என் நண்பர்களாகவும் அமைந்தார்கள். அதனால் தமிழ் நன்றாகப் பேசிப் பழகினேன். அவர்களோடு சேர்ந்து சினிமாவுக்குப் போகும்போது அந்த போஸ்டர்களில் உள்ள தமிழ் எழுத்துகளை எழுத்துக்கூட்டிப் படிக்கத் தொடங்கினேன்.

அங்கு போஸ்டர்களில் ஆங்கிலமும் சேர்ந்தே அச்சிடப்பட்டிருக்கும் என்பதால் விரைவாகவே தமிழ் எழுத்துகளைக் கற்றேன். பிறகு, அங்கு வரும் தினத்தந்தி உள்ளிட்ட நாளிதழ்களை வாசிக்கப் பழகினேன். வாசிக்க வாசிக்க தமிழில் ஒரு ருசி உருவாகிவிட்டது...’’ என்ற ஷஃபி, சிறுவயதிலிருந்தே மலையாளத்தில் வாசிக்கும் பழக்கம் கொண்டவர்.

‘‘வீட்டுப்பக்கம் இருந்த நூலகம் என் வாசிப்பு ஆர்வத்துக்குத் தீனியாக இருந்தது. மலையாள இலக்கியங்களின் அறிமுகம் எனக்கு இருபதுகளிலேயே உருவாகியிருந்தது. வைக்கம் முகம்மது பஷீர், தகழி சிவசங்கரன் பிள்ளை, எம்.டி.வாசுதேவன் நாயர், ஓ.வி.விஜயன், காக்கநாடன் உட்பட பல முக்கியமான மலையாள எழுத்தாளர்களை நான் அப்போதே வாசித்திருந்தேன்.

இந்த வாசிப்பு பின்னணி என்னை தமிழ் இலக்கியங்கள் வாசிக்கத் தூண்டியது. ஆனால், ஆரம்பத்தில் எனக்குக் கிடைத்தவை தினசரிகள், வார இதழ்களில் வரும் சிறுகதைகள் மட்டும்தான். வெளிமாநிலச் சூழலில் நூலகங்களையும் நாட முடியவில்லை. காசு கொடுத்துப் புத்தகங்கள் வாங்கும் பொருளாதாரச் சூழ்நிலையும் இல்லை என்பதால் அந்தக் கதைகளையே அப்போது படிக்க முடிந்தது.

அதில் பிடித்தமானவற்றை மலையாளத்தில் மொழிபெயர்க்கத் தொடங்கினேன். தமிழ் நாளிதழ் ஒன்றின் இணைப்பில் வெளியான ரஷ்ய மொழிபெயர்ப்புதான் நான் தமிழிலிருந்து மலையாளத்துக்குக் கொண்டுசென்ற முதல் படைப்பு. அந்தப் படைப்பு ‘ஜனயுகம்’ இதழில் பிரசுரமாகவே, உற்சாகமாக ஒவ்வொரு சிறுகதையாக மொழிபெயர்க்கத் தொடங்கினேன்.

ஆரம்ப காலங்களில் நான் மலையாளத்துக்குக் கொண்டு சென்ற பல கதைகள், கவிதைகள் அப்போதைக்கு அப்போது இதழ்களில் பிரசுரமானதே தவிர நூலாக மாறவில்லை. நூலாக்கம் பெற்ற முதல் நூல் என்றால் அது தோப்பில் முகம்மது மீரானின் ‘அனந்தசயனம் காலனி’ சிறு
கதைத் தொகுப்புதான். அதைத் தொடர்ந்து பலரின் நாவல்களையும் மொழிபெயர்க்கத் தொடங்கினேன்.

இதுவரை சல்மா, குட்டி ரேவதி, மாலதி மைத்ரி, சுகிர்தராணி, மனுஷி, நாச்சியாள் சுகந்தி உட்பட பலரின் கவிதைகளை மலையாளத்துக்கு மொழிபெயர்த்திருக்கிறேன். கவிதைகளைத் தொகுப்பாக மொழிபெயர்க்கவில்லை. ஆனால், பல சிறுகதைகள், நாவல்கள்நூலாக்கம் பெற்றுள்ளன. சா.கந்தசாமியின் ‘விசாரணை கமிஷன்’, மேலாண்மை பொன்னுச்சாமியின் ‘மின்சாரப்பூ’, திலகவதியின் ‘கல் மரம்’ ஆகியவை சாகித்ய அகாடமிக்காக தமிழிலிருந்து மலையாளத்துக்கு மொழி பெயர்த்தவை.

இதைத் தவிர பெருமாள் முருகனின் ‘அர்த்தநாரி’, சோ.தர்மனின் ‘கூகை’, ஆ.மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’, யெஸ்.பாலபாரதியின் ‘அவன் - அது =அவள்’, எம்.ஜி.சுரேஷின் ‘37’, சுப்ரபாரதிமணியனின் ‘சுடுமணல்’, ‘கோவணம்’ ஆகிய நாவல்களை மொழிபெயர்த்திருக்கிறேன்.

சல்மாவின் ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பையும் மொழிபெயர்த்தேன். இதைத் தவிர, சுஜாதா, எஸ்.ராமகிருஷ்ணன், மீரான் மைதீன் உட்பட பிரபல எழுத்தாளர்களின் சிறுகதைகளையும் அவ்வப்போது மொழிபெயர்த்திருக்கிறேன். இவற்றில் பல இன்னமும் நூலாக்கம் பெறவில்லை.

இதுவரை என் மொழிபெயர்ப்பு கணக்கில் சிறுகதை, நாவல் எல்லாம் சேர்ந்து பதினான்கு நூல்கள் உள்ளன. இப்போது, சாகித்ய அகாடமிக்காக எம்.வி.வெங்கட்ராமின் ‘காதுகள்’ நாவலை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன்...’’ என்ற ஷஃபி, தனக்கான அங்கீகாரம் இப்போதுதான் தமிழிலும் மலையாளத்திலும் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது என்கிறார்.

‘‘சமீபத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் என் பணிகளைப் பாராட்டி வாழ்த்துச் சொல்லி மேடையில் கவுரவித்தார். தமிழ்நாட்டின் நல்லி திசையெட்டும் மொழிபெயர்ப்பு விருதும், திருப்பூர் தமிழ்ச் சங்க விருதும் என்னை பெருமைப்படுத்தியுள்ளன.

டீக்கடை முதல் நடைபாதை வியாபாரம் வரை பல்வேறு தொழில்கள் செய்தாலும் வயிற்றுப்பாட்டுக்கு இப்போதைக்கு கட்டட வேலைதான். கடுமையான பணிச் சூழல். நாற்பது கிலோ வரை செங்கற்களை சுமந்து கொண்டு செல்ல வேண்டும். மாலையில் வேலை முடிந்து வீட்டுக்குச் சென்றால் எப்போது படுக்கையில் விழுவோம் என்று இருக்கும்.

ஆனாலும் பின்னிரவில் அமர்ந்து தினமும் இரண்டு மணி நேரம் மொழிபெயர்க்கிறேன். என் ஆன்மாவுக்கான தாகம் என்றே இதைச் சொல்ல வேண்டும். என் வாழ்நாள் முழுக்க எவ்வளவு முடியுமோ அவ்வளவு மொழிபெயர்ப்பேன்..!’’ லட்சியவாதத்தின் கனவு சொற்களில் மின்ன
உணர்வுபூர்வமாகச் சொல்கிறார் ஷஃபி.

வணங்குகிறோம் சேட்டா!

இளங்கோ கிருஷ்ணன்