துப்புரவுப் பணி செய்துதான் அப்பா எங்களைப் படிக்கவைத்தார்!



நீட் தேர்வில் வெற்றி பெற்ற நெல்லை மருத்துவ மாணவரின் கதை

முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு சுதாகர்தான் உதாரண மாணவர். கடந்த இரண்டு வருடங்களாகப் போராடி நீட் தேர்வில் வெற்றி பெற்று இன்று மருத்துவம் படித்து வருகிறார். இதில் சிறப்பு என்னவென்றால், தமிழக அரசின் பொதுப் பாடத் திட்டத்தில் தமிழ் வழியில் படித்து தேர்வை எதிர்கொண்டவர் இவர் என்பதுதான்!

‘‘சொந்த ஊர் திருநெல்வேலி டவுன். அப்பா பாஸ்கர், இங்க மாநகராட்சியில துப்புரவுப் பணியாளரா இருக்கார். அம்மா சிவசக்தி, ஆரம்பத்துல வீடுகள்ல வேலை செய்தாங்க. இப்ப ஒரு கம்பெனில ஸ்வீப்பரா இருக்காங்க. அண்ணன் இசக்கிமுத்து தனியார் நிறுவனத்துல வேலை பார்க்கறார். வறுமையான குடும்பம். துப்புரவுப் பணி செய்துதான் அப்பா எங்கள படிக்க வச்சார்.  

இங்குள்ள சாப்டர் ஸ்கூல்ல 2016ம் வருஷம் பிளஸ் டூ முடிச்சேன். அதுல 1046 மார்க் எடுத்தேன். எஞ்சினியரிங் படிக்கணும்னு ஆசை. அதனால, கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிச்சேன். ஆனா, கவுன்சிலிங் நடக்கிற நேரம் அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக். எங்களுக்கு என்ன பண்றதுனு தெரியலை. உடனே கடனை வாங்கி அப்பாவை தனியார் மருத்துவமனைல சேர்த்தோம். எனக்காக பொறியியல் படிக்க அப்பாவும் அம்மாவும் பணம் சேர்த்து வைச்சிருந்தாங்க. அதையும் செலவழிச்சு அப்பாவைக் காப்பாத்தினோம்.

அப்பா மருத்துவமனைல இருந்தப்ப கவுன்சிலிங் ஆர்டர் வந்துச்சு. சித்தப்பா, மாமானு சொந்தக்காரங்க எல்லாம் என்னை கவுன்சிலிங்கிற்குக் கூட்டிட்டு போக ரெடியா இருந்தாங்க. ‘அப்பாவை பார்த்துக்கிறோம், கவலைப்படாதடா’னு ஆறுதல் சொன்னாங்க. ஆனாலும் எனக்கு மனசு கேட்கலை. கவுன்சிலிங் போகாம இருந்துட்டேன். அப்பா, இதயவலில துடிச்சதைப் பார்த்தப்பதான் மருத்துவரா ஆகணும்னு தோணுச்சு. எங்கள மாதிரி கஷ்டப்படுறவங்கள காப்பாத்தலாம் இல்லையா?’’ என்ற சுதாகர், இதன்பிறகே எம்பிபிஎஸ் படிக்க முயற்சி எடுத்திருக்கிறார்.

‘‘நான் பிளஸ் டூ முடிச்ச நேரம், தமிழக அரசு நீட் தேர்வுல இருந்து விலக்கு வாங்கியிருந்துச்சு. நான் முதல்லயே என் மார்க் அடிப்படைல விண்ணப்பிச்சிருந்தா கூட மெடிக்கல் கிடைச்சிருக்கும். ஆனா, எஞ்சினியரிங் விருப்பத்தால மெடிக்கலுக்கு விண்ணப்பிக்காம விட்டுட்டேன். அந்நேரம் மெடிக்கல் கவுன்சிலிங்கும் முடிஞ்சிடுச்சு. கடைசியா, பாராமெடிக்கல் கோர்ஸுக்கான கவுன்சிலிங்குக்கு விண்ணப்பிச்சேன். தென்காசியில ஒரு கல்லூரில பி.பார்ம் படிக்க இடம் கிடைச்சது. ஆனா, ஃபீஸ் கட்ட பணம் இல்லை. அதனால, திரும்பி வந்துட்டோம்.

‘வீட்டுல சும்மா இருக்காத’னுநண்பர்கள் சொன்னதால ஆர்ட்ஸ் காலேஜ்கள்ல போய் கேட்டுப் பார்த்தோம். எல்லா பக்கமும் சீட் நிரம்பிடுச்சு.
அப்படி ஒரு காலேஜ்க்கு போயிட்டு திரும்பும்போது டீக் கடையில உட்கார்ந்திருந்தேன். அங்கிருந்த பேப்பர்ல நீட் தேர்வுக்கான பயிற்சி மையத்தின் விளம்பரம் கண்ணுல பட்டுச்சு. அப்பதான், இனி படிச்சா மெடிக்கல்தான்னு முடிவெடுத்தேன். உடனே, அந்த மையத்துல சேர்ந்திட்டேன். அதுக்காக அம்மாவின் தாலிச் செயினை அடகு வச்சு பணத்தைக் கட்டினேன்...’’ என்கிற சுதாகருக்கு நீட் தேர்வின் கஷ்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்திருக்கிறது.

‘‘நீட் தேர்வின் கேள்வித்தாள் எல்லாம் சிபிஎஸ்இ பாடத்திட்டம் சார்ந்தது. இதனால ரொம்ப கஷ்டப்பட்டேன். நான் தமிழ் மீடியம் வேற. ஆரம்பத்துல கேள்வித்தாள் எல்லாம் ஆங்கிலத்துல இருந்தது. முதல்ல எனக்கு பிளஸ் டூ பாடங்கள ஆங்கிலத்துல உள்வாங்குறதே சிரமமா இருந்துச்சு. தமிழ்ல எல்லா பாடங்களையும் படிச்சிட்டு திடீரென அதை ஆங்கிலமா நினைவு வச்சிக்கிறது பெரும் கஷ்டம்.

ஆனாலும் நம்பிக்கையோடு டிக்‌ஷனரியை துணைக்கு வச்சிட்டு படிச்சேன். எனக்கு உயிரியல் ரொம்பப் பிடிக்கும். ஆர்வமா படிப்பேன். என்னோட ஸ்கூல் விலங்கியல் டீச்சர் ஜோஸ்லின் எனக்கு ரொம்ப உதவினாங்க. பயிற்சி மையத்துல இருந்த டீச்சர்ஸும் எப்படி படிக்கணும்னு சொல்லிக் கொடுத்தாங்க.

2017ல் நடந்த தேர்வுல 161 மார்க் வாங்கினேன். மெடிக்கலுக்கும் விண்ணப்பிச்சேன். கவுன்சிலிங்ல ஒரே ஒரு சீட் புதுக்கோட்டை மெடிக்கல் காலேஜ்ல இருந்தது. கிடைச்சிரும்னு நம்பிக்கையா உட்கார்ந்திருந்தேன். ஆனா, அதை 162 மார்க் வாங்கின ஒரு பொண்ணு எடுத்துட்டாங்க...’’ என்ற சுதாகரைத் தொடர்கிறார் அம்மா சிவசக்தி.

‘‘அப்ப இவன் அழுத அழுகை இருக்கே... என்னால தேத்தவே முடியலங்க. என்ன சொன்னாலும் மனநிம்மதி அடையலை. பிறகு, ஒருவழியா அவனே சமாதானமாகி மறுபடியும் படிக்க ஆரம்பிச்சான். எங்களுக்கு இந்தப் படிப்ப பத்தியெல்லாம் எதுவுமே தெரியாது. ஆனா, எங்கள மாதிரி அவனும் வந்திரக்கூடாதுனு மட்டும் உறுதியா நின்னு படிப்புக்கு மெனக்கெட்டோம். மூத்தவன் படிப்புல சுமார்தான். இவன் ரொம்ப நல்லா படிப்பான்...’’ என அம்மா சிவசக்தி நெகிழ, சுதாகர் தொடர்ந்தார்.

‘‘அப்புறம் இன்னும் உறுதியோட படிக்க ஆரம்பிச்சேன். இப்ப பயிற்சி மைய ஆசிரியர்கள் நிறைய ட்ரெய்னிங் தந்தாங்க. எப்படியும் இந்தமுறை அதிக மார்க் வாங்கி மெடிக்கல் போயிடணும்னு இருந்தேன். நினைச்ச மாதிரியே என் உழைப்பு வீண் போகல. 2018ல் மறுபடியும் எழுதி 303 மார்க் வாங்கினேன். இப்ப கவுன்சிலிங் போனப்ப எல்லா காலேஜ்லயும் சீட் இருந்தது. அம்மாதான், ‘உள்ளூர்லயே படிப்பா’னு சொன்னாங்க. அதனால திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியைத் தேர்ந்தெடுத்தேன்.

இப்ப மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் மேடம் படிப்பதற்கான உதவிகளைச் செய்திருக்காங்க. மாநகராட்சி ஆணையர், அதிகாரிகள்னு எல்லோரும் கூப்பிட்டு வாழ்த்தினாங்க. அப்பாவுக்கும், அம்மாவுக்கும் அண்ணனுக்கும் ரொம்ப சந்தோஷம்...’’ என்ற சுதாகர், நீட் தேர்வுக்கு படிப்பவர்களுக்கு சில டிப்ஸ் தந்தார்.

‘‘நீட் தேர்வைப் பார்த்து பயப்பட வேண்டியதில்ல. புரிஞ்சு படிச்சாலே போதும். ஆனா, நிறைய உழைக்கணும். திரும்பத் திரும்ப என்.சி.இ.ஆர்.டியின் பாடப் புத்தகத்தை படிக்கணும்.இப்ப தமிழக அரசு என்.சி.இ.ஆர்.டி தரத்துக்கு பாடப்புத்தகங்களைக் கொண்டு வந்துட்டாங்க. தவிர, தமிழ்ல கேள்வித்தாளும் வந்திடுச்சு.

அதனால, மனப்பாடம் செய்யாமல், புரிஞ்சுகிட்டு பதிலளிக்கிற வகையில் தேர்வுக்குத் தயாராகணும். நம்பிக்கையோடு எழுதுங்க...’’ என்ற சுதாகருக்கு எதிர்காலத்தில் கார்டியாலஜி படிக்க வேண்டும் என்பதே ஆசை. ‘‘எம்பிபிஎஸ் முடிச்சதும் எம்டி கார்டியாலஜி படிக்கணும். சிறந்த இருதய நோய் நிபுணரா வரணும். இதுதான் என் லட்சியம்...’’ சுதாகரின் லட்சியம் ஈடேறட்டும்!

பேராச்சி கண்ணன்

ரவிச்சந்திரன்