ரத்த மகுடம்-43



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

முழுமையான அசுவமாக சிவகாமி மாறியிருந்தாள். அதுவும் நாவாயிலிருந்து அப்போதுதான் இறங்கிய புத்தம் புது அரபு நாட்டுப் புரவியாக. மல்லைக் கடற்கரையில்தான் இதற்கு முன்பு இப்படிப்பட்ட காட்சியைக் கண்டிருக்கிறான். நாவாயிலிருந்து இறக்கப்படும் அரபு அசுவங்கள் கடற்கரை மணலில் திமிறிக் கொண்டிருக்கும். புதிய சூழலும் அறிமுகமாகாத மனிதர்களும் அவற்றின் இருப்பை கேள்விக்குள்ளாக்கி இருக்கும். எல்லா இடங்களிலும் பரவியிருக்கும் மணல் மட்டுமே அதன் ஒரே பிடிப்பாகத் தென்படும்.

எனவே, அம்மணல் பரப்பை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும், அறிமுகமற்ற மனிதர்களை வீழ்த்தவும் மூர்க்கமாக முயற்சிக்கும். இதன் ஒரு படியாக பாயவும் தறிகெட்டு ஓடவும் முயலும். அதை அடக்குவதற்காக வீரர்கள் அரணமைத்து சூழ்வார்கள். முன்னங்கால்களை மணலில் உதைத்தபடி தன் நாசியை அப்படியும் இப்படியுமாக அசைக்கும். பின்னங்கால்களை பின்னோக்கி ஓரடியும் முன்னோக்கி இரண்டடியும் வைத்து, சூழ்ந்திருக்கும் வீரர்களைக் குழப்பும். குளம்புகளால் மணலில் தடங்களைப் பதித்தபடியே இருக்கும். ஓரிடத்தில் நிற்காது. அரை வட்டமும் முழு வட்டமுமாக அப்பரப்பை தன் ஆளுகைக்குள் கொண்டுவர முயலும்.

அத்துடன் அரணமைத்தபடியே தன்னருகில் வரும் வீரர்களை நோக்கி முன்னங்கால்களை உயர்த்தும். சிலிர்க்கும் பிடரியை மேலும் உதறியபடி உயர்த்திய குளம்புகளை வீரர்கள் மேல் இறக்கவும் உதைக்கவும் மிதிக்கவும் முயற்சிக்கும்.வேறு வழியின்றி அச்சத்துடன் வீரர்கள் விலகுவார்கள். அமைத்த அரணும் கலையும். பிறகென்ன... அச்சூழல் அப்புரவியின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். இதன்பின்னர் என்னதான் வீரர்கள் கைகோர்த்தாலும் வியூகம் வகுத்தாலும் அந்த அசுவத்தை ஒருபோதும் அவர்களால் நெருங்கவும் முடியாது; அடக்கவும் இயலாது.

எனவேதான், தேர்ந்த அசுவ சாஸ்திரி, புரவிகளைப் பழக்கும்வரை தன் கட்டுப்பாட்டிலேயே சூழலை வைத்திருப்பார். விரல் நகம் அளவுக்குக் கூட அசுவத்தின் கை ஓங்க அனுமதிக்க மாட்டார். இந்த யுக்தியை சாளுக்கிய வீரர்கள் அறியாமல் இருந்தது சிவகாமிக்கு வசதியாகப் போயிற்று. கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு அந்தச் சிறை அறையை முழுவதுமாகத் தன் கட்டுப்பாட்டுக்குள் அவள் கொண்டுவந்திருந்தாள்.

சாளுக்கிய மன்னர் கொடுத்த கயிற்றைப் பிடித்தபடி இறங்கிய கரிகாலனுக்கு நடப்பது அனைத்தும் புரிந்தது. குறிப்பாக நாவாயிலிருந்து இறக்கப்பட்ட புதிய அசுவமாக சிவகாமி மாறியிருந்த விதம்.சுரங்கத்திலிருந்து, தான் பார்த்த காட்சியை மெல்ல அசைபோட்டான்.உருவிய வாட்களுடன் சாளுக்கிய வீரர்கள் சூழ ஆரம்பித்ததுமே சிறிதும் தாமதிக்காமல் அவன் தந்தையின் அருகில் சென்றாள். தன் இடுப்பிலிருந்து குறுவாளை எடுத்து அவரது தொண்டைக் குழியில் பதித்தாள்.

அதுவரை அந்தரங்கமாகத் தன்னுடன் உரையாடிக் கொண்டிருந்தவள் சட்டென இப்படிச் செய்ததைக் கண்டு அவன் தந்தை அதிர்ச்சியடையவில்லை. ஆமாம். அவர் முகத்தில் அப்படிப்பட்ட ரேகைகள் எதுவும் படரவில்லை. சூழும் ஆபத்திலிருந்து தப்பிக்க அவள் இப்படிச் செய்கிறாள் என்பதை உணர்ந்தவர் அதற்கு ஏற்ப தன் பங்குக்கு தானும் நாடகத்தைத் தொடர்ந்தார். அச்சப்படுவதுபோல் நடித்தார்.

இதுவரைதான் கரிகாலன் கவனித்திருந்தான். இதன் பிறகுதான் மறைவிலிருந்து சாளுக்கிய மன்னர் வெளிப்பட்டார். அவனுடன் பேசினார். சிவகாமியை நம்பாதே என முன்பு சொன்னதற்கு மீண்டும் அழுத்தம் கொடுத்துவிட்டு, ‘உன் தந்தையைக் கொலை செய்யத்தான் உன் உதவியுடன் சிறைக்குள் இறங்கியிருக்கிறாள்!’ எனச் சொல்லிவிட்டு அகன்றார்.

இதனை அடுத்துதான் சாளுக்கிய மன்னர் கொடுத்த கயிற்றைப் பிடித்தபடி சிறைக்குள் அவனும் இறங்கினான்.இடைப்பட்ட பொழுதில் அசுவமாக மாறி அச்சூழலைத் தன் கட்டுப்பாட்டுக்குள் சிவகாமி கொண்டு வந்துவிட்டாள்.எப்படி இதைச் சாதித்தாள் என்பது ஊகிக்காமலே கரிகாலனுக்குப்புரிந்தது.

அவன் தந்தையின் கழுத்தில் குறுவாளைப் பதித்து அவர் பின்னால் நின்றவள் நிச்சயம், ‘‘யாரும் அசையவேண்டாம்... நெருங்கினால் சோழ மன்னரின் சடலத்தைத்தான் நீங்கள் எடுத்துச் செல்ல நேரிடும்...’’ என மிரட்டியிருப்பாள்.என்ன செய்வதென்று தெரியாமல் இதைக் கேட்டு சாளுக்கிய வீரர்கள் அதிர்ச்சியுடன் நின்றிருப்பார்கள்.பதித்த குறுவாளை விலக்காமல் மெல்ல சிவகாமி அவன் தந்தையின் அருகில் வந்திருப்பாள்.

இந்த அசைவு வீரர்களின் அதிர்ச்சியைப் போக்கியிருக்கும். எப்படியும் அவளையும் சிறை செய்யும் நோக்கத்துடன் அரணமைத்து இருவரையும் சூழ முயற்சி செய்திருப்பார்கள்.இப்படி அவர்கள் அரண் அமைக்கவேண்டும் என்பதற்காகவே காத்திருந்த சிவகாமி, இதன்பிறகு தன் ருத்திர தாண்டவத்தை அரங்கேற்றியிருப்பாள். அசுவம் போலவே தன் கால்களை உயர்த்தி இடியாக வீரர்களின் தலையில் இறக்கியிருப்பாள்.

எப்படி அரபுப் புரவிகளுக்கு கடற்கரை மணலோ அப்படி சிவகாமிக்கு சிறைச்சாலையில் இருந்த மண் தரையும் பாறைகளும்! தனது ஆட்சிக்கு உட்பட்ட அப்பிரதேசங்களில் புகுந்து விளையாடியிருக்கிறாள்!கயிற்றைப் பிடித்தபடி சிறைக்குள் அவன் இறங்கியபோது கண்ட காட்சியே இதற்கு சாட்சி. சூழ்ந்திருந்த வீரர்களை அந்தரத்தில் பறந்தபடி பாய்ந்து பாய்ந்து தன் கால்களால் உதைத்துக் கொண்டிருந்தாள். பாய்வதற்கு ஏதுவாக சிறைச்சாலைச் சுவர்களில் பதிந்திருந்த பாறைகள் அவளை வரவேற்றன; உதவின.

அடி தாங்காமல் வீரர்கள் மூலைக்கு ஒருவராகச் சிதறினார்கள்.இதையெல்லாம் கவனித்தபடி இறங்கி நின்றவனுக்கு ஒரு விஷயம் மட்டும் தொண்டையில் சிக்கிய முள்ளாக உறுத்தியது. சாளுக்கிய வீரர்களைத் தாக்கினாள்; பந்தாடினாள்; அடித்தாள்; உதைத்தாள்; சிதறடித்தாள். ஆனால், அவர்களிடம் இருந்து வாட்களைத் தட்டிப் பறிக்கவும் இல்லை. அதை வைத்து அவர்களை வீழ்த்தவும் முயற்சிக்கவில்லை!

‘‘முதலில் அவளிடம் கொடுத்த சுவடிக் கட்டுகளை வாங்கு! அத்துடன் உன் தந்தையைக் காப்பாற்று! உண்மையில் சிவகாமி உன் தந்தையைக் கொலை செய்யத்தான் உன் துணையுடனேயே சிறைக்குள் இறங்கியிருக்கிறாள்!’’சில கணங்களுக்கு முன் சுரங்கத்தில் அவனிடம் எச்சரித்த சாளுக்கிய மன்னரின் குரல் இப்போதும் அவனுக்குள் ஒலித்து அதிர வைத்தது.

அதன்பிறகு துளியும் அவன் தாமதிக்கவில்லை. நடக்கும் சண்டையில் கலந்துகொள்ளாமல் தனியாக நின்று அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த தன் தந்தையின் அருகில் சென்றான்.‘‘என் மருமகள் எப்படிப்பட்ட வீராங்கனை என்பதைப் பார் கரிகாலா!’’ உணர்ச்சியுடன் அவனை அணைத்துக் கொண்டார் சோழ மன்னர்.

கரிகாலனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அகம் கொந்தளிப்பதை புறத்தில் வெளிப்படுத்தாமல் அவர் கரங்களை இறுகப் பற்றினான்.
‘‘வீரனுக்கு அழகு சக வீரனைக் காப்பாற்றுவது! ஆனால், சிவகாமி அதற்கு இடம் தரவில்லை... பார்த்தாயா... உன் உதவியோ என் உதவியோ இல்லாமல் தனி ஆளாக, வந்த வீரர்கள் அனைவரையும் செயலிழக்கச் செய்துவிட்டாள்!’’

ஆமாம்... சாளுக்கிய வீரர்கள் அனைவரும் செயலிழந்து மயக்கத்தில் ஆழ்ந்து தரையில் வீழ்ந்து கிடந்தார்கள். அத்துடன் வாட்கள் அனைத்தும் அவர்கள் கரங்களிலேயே இருந்தன!தன் வலது கை ஆள்காட்டி விரலால் நெற்றியில் பூத்த வியர்வை முத்துக்களைத் துடைத்தபடி அவர்கள் அருகில் வந்தாள் சிவகாமி.‘‘இப்படியொரு வீரத்தை இதற்குமுன் நான் கண்டதில்லை மருமகளே!’’ மலர்ச்சியுடன் சோழ மன்னர் அவளை வரவேற்றார்.

நாணத்துடன் அவரை நோக்கிப் புன்னகைத்துவிட்டு கரிகாலனைப்பார்த்தாள். அவன் கண்களில் வெளிப்பட்ட வெறுமை அவளை நிதானப்பட வைத்தது. ‘‘சுரங்கத்தில் சாளுக்கிய மன்னர் உங்களைச் சந்தித்தாரா..?’’ எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் கேட்டாள். கரிகாலன் பதிலேதும் சொல்லவில்லை.‘‘இந்தாருங்கள்...’’ தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த சுவடிக் கட்டுகளை எடுத்து அவனிடம் நீட்டினாள்.
பெற்றுக் கொள்ளாமல் அவளையே கரிகாலன் பார்த்துக் கொண்டிருந்தான்.

கண்களில் குறுஞ்சிரிப்பு மின்ன அக்கட்டுகளை அவன் இடுப்பு வஸ்திரத்தில் கட்டினாள். ‘‘திரும்பவும் விக்கிரமாதித்தரைச் சந்திக்க நேர்ந்தால் அர்த்த சாஸ்திர சுவடி உங்களிடமே இருப்பதாகத் தெரிவியுங்கள்!’’‘‘என்னம்மா நடக்கிறது இங்கே!’’ சோழ மன்னர் இருவரையும் மாறி மாறிப் பார்த்தார்.
‘‘ஒன்றுமில்லை...’’ சொல்லும்போதே சிவகாமியின் குரல் கம்மியது.

‘‘என்னிடம் சொல்லக் கூடாதா..?’’
‘‘அப்படியெல்லாம் எதுவுமில்லை...’’
‘‘கரிகாலா! நீயாவது சொல்...’’
‘‘அவரை வற்புறுத்தாதீர்கள்...’’
‘‘ஏன்? சொல்ல மாட்டானா..?’’

‘‘சொல்லும் நிலையில் அவர் இல்லை...’’ கரிகாலனைப்பார்த்தபடியே சோழ மன்னருக்கு பதிலளித்தாள்.
‘‘ஏன், மயக்கத்தில் இருக்கிறானா..?’’
‘‘இல்லை. எச்சரிக்கையுடன் இருக்கிறார்!’’
‘‘எச்சரிக்கையா..?’’ சோழ மன்னர் வியந்தார். ‘‘என்னம்மா சொல்கிறாய்..?’’
‘‘சாளுக்கிய வீரர்களைப் பந்தாடி செயலிழக்கச் செய்திருக்கிறேன் அல்லவா..?’’
‘‘ம்...’’

‘‘ஆனால், அவர்களிடம் இருந்து வாட்களை நான் பறிக்கவில்லை...’’‘‘கவனித்தேன். சுவற்றில் அவை மோதாமலும் பார்த்துக் கொண்டாய். இதன் மூலம் வாயிலில் நிற்கும் காவலர்களுக்கு எந்த ஓசையும் கேட்காதபடி கவனமாக சண்டையிட்டாய்...’’‘‘அப்படிச் சொல்ல முடியாதே... வீரர்கள் கீழே விழுந்த ஒலி கேட்காமலா இருந்திருக்கும்..?’’

‘‘வாய்ப்பில்லை சிவகாமி! நான் அடைபட்டிருக்கும் இந்த அறையின் வாயில் தொலைவில் இருக்கிறது. அதற்கான பாதை வளைந்து வளைந்து செல்லும். சொல்லப் போனால் நாம் இங்கே நிற்பது கூட காவலுக்கு நிற்கும் வீரர்களுக்குத் தெரியாது...’’‘‘அப்படியா..?’’

‘‘ஆம் மகளே! அரச குடும்பத்தினரை அடைத்து வைக்கும் சிறை இது. பொதுவாக தனியாக யாரையும் இங்கு அடைக்க மாட்டார்கள். குடும்பமாகத்தான் இவ்விடத்தில் வசிக்க விடுவார்கள். அப்போது அவர்கள் அந்தரங்கமாக உரையாட வேண்டும் என்பதற்காக
பல்லவ மன்னர் செய்த ஏற்பாடு இது. கரிகாலன் நன்றாகவே இதை அறிவான்...’’
‘‘அறிந்ததால்தான் ஐயப்படுகிறாரோ என்னவோ..?’’
‘‘என்ன ஐயம்..?’’

‘‘உங்களை நான் கொலை செய்து விடுவேனோ என்றுதான்...’’
கரிகாலனின் தந்தைக்கு ஒன்றும் புரியவில்லை. புருவங்கள் முடிச்சிட தன் மகனையும் சிவகாமியையும் மாறி மாறிப் பார்த்தார்.‘‘உன்னால் எப்படி என்னைக் கொல்ல முடியும்..?’’‘‘இதோ... இப்படித்தான்..!’’ என்றபடி தன் கையிலிருந்த குறுவாைள அவர் வயிற்றில் செருகினாள்!

(தொடரும்)

அட்டையில்: கீர்த்தி சுரேஷ்

படம்: ஜேடி ஜெர்ரி

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்