குறுங்காடாக மாறிய குப்பைமேடு!



பொதுவாக, ஒரு ஊரில் குப்பைமேடாக மாறிப்போன ஓர் இடம் பழைய நிலைக்கு திரும்புவது அத்தனை சாத்தியமில்லாத காரியம். ஆனால், நினைத்தால் எதையும் சாதிக்கமுடியும் என நிரூபித்திருக்கிறார்கள் நீடாமங்கலத்தைச் சேர்ந்த கிரீன்நீடா அமைப்பினர். தங்கள் ஊரின் குப்பைமேட்டை சிறந்ததொரு குறுங்காடாக மாற்றியுள்ளனர்.   

தஞ்சாவூரிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் நெடுஞ்சாலையில் இருக்கிறது நீடாமங்கலம் பேரூராட்சி. இங்கே தென்னக ரயில்வேக்கும், இந்து அறநிலையத்துறைக்கும் சொந்தமான இடத்தில் பொதுமக்கள் நீண்டநாளாக குப்பையைக் கொட்டி வந்தனர். இதனால் துர்நாற்றம் ஏற்பட, அதனருகில் உள்ள பகுதியினர் வசிக்க முடியாமல் பலமுறை போராட்டங்களும் கோரிக்கை மனுக்களும் அளித்திருக்கின்றனர். இந்நிலையில்தான், அந்த இடம் இப்போது குறுங்காடாக மாறி வருகிறது.   

‘‘கடந்த 25 ஆண்டுகளாக மக்கள் அங்க குப்பை கொட்டிட்டு இருந்தாங்க. பேரூராட்சி சேகரிக்கும் குப்பைகள் தவிர, திருமண மண்டபங்கள் மற்றும் ஹோட்டல்கள்ல உள்ள எச்சில் இலைகளும், வீடுகள் இடிக்கும்போது வரும் கழிவுகளும் அங்கேதான் கொட்டப்படும். இதனால, அந்த இடமே பெரிய குப்பைக்காடா மாறிடுச்சு. மொத்தம் ரெண்டு ஏக்கர் நிலம். அதை மாத்தணும்னு நிறைய பேர் சொன்னாங்க. அதனால, களத்தில் இறங்கி வேலையைச் செய்தோம்...’’ என யதார்த்தமாகப் பேசுகிறார் கிரீன்நீடா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு.   

‘‘ஆரம்பத்துல அந்த இடம் விவசாய நிலமா இருந்துச்சு. இந்து அறநிலையத்துறைக்கான இடத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் பண்ணிட்டு இருந்தாங்க. இதையொட்டி தென்னக ரயில்வே இடம் வரும். பக்கத்திலுள்ள விவசாய நிலங்களை தனியார்கள் பிளாட் போட்டதால் இந்த இடமும் விவசாயம் செய்யப்படாம அப்படியே கிடந்தது.

இதனால, மக்கள் கொஞ்சம் கொஞ்சமா அங்க குப்பைகளைக் கொட்ட ஆரம்பிச்சாங்க. இதுக்குக் காரணம் பேரூராட்சியின் குப்பைகளுக்கான திடக்கழிவு மேலாண்மை பகுதி பக்கத்துல இருந்ததுதான். ஆனா, அந்த இடம் 2 ஆயிரம் சதுரஅடிதான் இருக்கும். அந்தச் சின்ன இடத்துல பேரூராட்சி திடக்கழிவு மேலாண்மை மூலம் உரம் தயாரிக்கிறாங்க. மக்களும் பக்கத்துல குப்பைகள் கொட்ட, ஒருகட்டத்துல குப்பைமேடாகி துர்நாற்றம் வீச ஆரம்பிச்சது.

இதனால, பக்கத்து பகுதி மக்களால் வசிக்க முடியல. ஒருசிலர் இந்தக் குப்பைமேட்டுல தீ வைச்சு கொளுத்திட்டு போயிடுவாங்க. அப்ப அந்தப் பகுதியே புகைமண்டலமா காட்சியளிக்கும். யாராலும் வரவோ, போகவோ முடியாது. இதனால, அந்தப் பகுதி மக்கள் போராட்டம் பண்ணினாங்க. மாவட்ட ஆட்சியரைச் சந்திச்சு மனு கொடுத்தாங்க. ஆனா, நடவடிக்கை எடுக்கப்படல.

நாங்க ரெண்டு ஆண்டுகளுக்கு முன்னாடி இந்தப் பகுதிக்கு அருகில் இருக்கிற பாலாஜி நகர்ல குறுங்காடு அமைச்சிருந்தோம். அதுல நட்டிருந்த செடிகள் இன்னைக்கு மரங்களாகி பசுமையா அந்தப் பகுதி காணப்படுது.

அதைப் பார்த்திட்டு சிலர் இந்தப் பகுதியையும் கொஞ்சம் மாத்துங்களேன்னு கேட்டாங்க. நாங்களும் இதை கடந்த ஜூன் மாசம் பேரூராட்சியின் கவனத்துக்கு எடுத்திட்டுப் போனோம். பிறகு, ரயில்வே மற்றும் அறநிலை யத்துறைக்கு இமெயில் மூலம் கோரிக்கையை அனுப்பினோம். அவங்க அனுமதி தந்தாங்க. உடனே வேலை தொடங்கினோம்...’’ என்கிறவர், சந்தித்த எதிர்ப்புகள் பற்றி தொடர்ந்தார்.

‘‘இந்நேரம், நீடாமங்கலம் ஊர்ல இருந்தே எதிர்ப்புகள் கிளம்புச்சு. இதை நாங்க கொஞ்சமும் எதிர்பார்க்கல. ‘ஊர்ல குப்பை கொட்ட இடமேயில்ல. இருக்கிற இடத்திலும் இப்படி குறுங்காடு அமைச்சால் எப்படி’னு கேள்வி கேட்டாங்க. அப்புறம், பேரூராட்சியில் பணி செய்கிற துப்புரவுப் பணியாளர்களும், ‘குப்பை கொட்ட இடமில்ல.

அதனால, வீடுகளுக்குப் போய் குப்பைகளை அள்ளமுடியாது’னு போராட்டத்துல இறங்கினாங்க. நான்கு நாட்கள்ல தெருமுனைகளில் குப்பைகள் சேர்ந்திடுச்சு.
இத்துடன் பிரச்னை நிற்கல. அதிமுக சார்பில் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் குப்பை அள்ளும் போராட்டம்னு போஸ்டர் ஒட்டினாங்க. ஆனா, அவர் போராட்டத்துக்கு வரல. போராட்டமும் நடக்கல.

நாங்க, எதைப்பத்தியும் கவலைப்படாமல் ஊர் நல்லாயிருக்கணும்னு அந்த இடத்தைச் சுற்றி வேலி போட்டோம். இதுக்கு சென்னையில் உள்ள எஸ்னோரா அமைப்பு 70 ஆயிரம் ரூபாய் நிதியுதவி தந்தாங்க. உடனே பிரச்னை பெரிசாச்சு. பிறகு, மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அமைதிக் கூட்டம் நடந்துச்சு.

‘வேறொரு இடத்துல குப்பை கொட்டுவதற்கு இடம் பார்த்தபிறகு இந்த இடத்துல குறுங்காடு அமைக்கலாம்’னு ஒருதரப்பினர் சொன்னாங்க. ‘பேரூராட்சி பாதாள சாக்கடை திட்டத்துக்காக 4 ஏக்கர் நிலம் ஊருக்கு வெளியே வாங்கி வைச்சிருக்கு. பாதாள சாக்கடைதான் வரலை யே… அங்க குப்பை கொட்டலாமே’னு குறுங்காட்டை ஆதரிக்கிறவங்க பேசினாங்க.
இதுக்கிடையில், இந்த இடத்தை வயலாக இருந்தபோது ஒருவர் குத்தகைக்கு எடுத்திருந்தார். நாங்க சுத்தம் பண்ணி குறுங்காடு அமைக்கிறோம்னு தெரிஞ்சதும் அவர், ‘இது என் இடம். எப்படி குறுங்காடு அமைக்கலாம்’னு ஓடோடி வந்திட்டார். அப்புறம், அவர்கிட்ட மரம்தான் நடப்போறோம்னு பேசி புரிய வச்சோம்.

பிறகு, இந்தியன் ஆயில் நிறுவனம் மரக்கன்றுகள் கொடுத்து உதவினாங்க. மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா சாரை அழைச்சிட்டு வந்து மரங்கள் நட வச்சோம். இப்ப புங்கை, பூவரசு, வேம்பு, தேக்கு, இலுப்பை, நீர்மருது, கொய்யா, சில்வர் ஓக், நாவல்னு சுமார் மூவாயிரம் மரங்கள் நட்டிருக்கோம். மூணு அடிக்கு ஒரு மரக்கன்றுனு வச்சிருக்கோம். இதன் பராமரிப்புக்காக ரெண்டு பெண் பணியாளர்களை மாசம் தலா 3 ஆயிரம் ரூபாய் சம்பளத்துல நியமிச்சிருக்கோம்.

இந்த ஒரு மாசத்துல மழையும் கைகொடுக்க மரக்கன்றுகள் சிறப்பா வளர்ந்திருக்கு. இப்ப அந்தப் பகுதியை கடக்கும் மக்களால் மூக்கைப் பிடிக்காமல் நிம்மதியாகப் போகமுடியுது...’’ என்கிற ராஜவேலுவைத் தொடர்ந்தார் இந்தப் பணிக்கு உதவிய நீலன் அசோகன். ‘‘நான் நீடாமங்கலத்துல நீலன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை நடத்திட்டு வர்றேன். குப்பை துர்நாற்றத்தால் அந்தப் பகுதி மக்கள் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. குப்பையை யாராவது கொளுத்தினால் ஒரு கிமீ வரை புகை பரவும்.

இங்க குறுங்காடுனு சொன்னதும் என்னால முடிஞ்ச உதவிகளைச் செய்தேன். இரண்டடி ஆழத்துக்கு நிலத்தைத் தோண்டி, அந்த இடத்தை மாற்றியிருக்காங்க. ஆக்ஸிஜன் வெளியிடக்
கூடிய மரங்களை நட்டிருக்காங்க. இருபது நாட்கள்ல பணிகளை முடிச்சது சந்தோஷமா இருக்கு. இந்தக் காலக்கட்டத்துக்கு இந்தக் குறுங்காடு ரொம்ப அவசியமானது. ஆனா, இப்ப அதுக்கு பக்கத்துலேயே மக்கள் குப்பைகளைக் கொட்ட ஆரம்பிச்சிருக்காங்க. அதனால, குறுங்காட்டின் அருகே மறுபடியும் குப்பைமேடு வந்திடுமோனு வருத்தமா இருக்கு...’’ என்கிறார் வேதனையாக.

‘‘ஆனா, இப்படி பக்கத்துல மறுபடியும் குப்பை போடுறதுக்காக தாசில்தார் சார்பில் ஒரு அமைதி பேச்சுவார்த்தை நடத்தினாங்க. அதுல ஒரு மாசத்திற்குள் அந்த இடத்தை காலி பண்ணிக் கொடுத்திடுவோம்னு உறுதியளிச்சாங்க. ஆனா, இப்ப வரை காலி பண்ணல. சிலர், அந்தப் பக்கத்து இடத்தையும் குறுங்காடாக மாத்தலாம்னு சொல்றாங்க. ஆனா, நாங்க இந்தப் பகுதியை செழுமையாக்கிக் காட்டினபிறகு கேட்கலாம்னு நினைக்கிறோம். அப்பதான் எதிர்த் தரப்பினருக்கு குறுங்காடு பற்றியும், நம் வாழ்விடம் சார்ந்த புரிதலும் தெரிய வரும்...’’ என்கிறார் ராஜவேலு.

பேராச்சி கண்ணன்