சினிமாவை உலுக்கும் வண்ணத்துப்பூச்சி விளைவு!



சமீபத்தில் வெளியான ‘கசட தபற’ படத்தை வண்ணத்துப்பூச்சி விளைவு திரைப்படம் என்று விமர்சகர்கள் சொல்கின்றனர். இதன் திரைக்கதையில் ‘வண்ணத்துப்பூச்சி விளைவு’ எனும் அறிவியல் கருத்தாக்கம் அழகாக செயல்படுவதாக பாராட்டுகின்றனர். ‘கசட தபற’விற்கு முன்பே ‘தசாவதாரம்’, ‘12பி’, ‘மாநகரம்’ போன்ற தமிழ்ப்படங்களிலும்; ‘டெர்மினேட்டர்’, ‘ ஜுராசிக் பார்க்’ ஆகிய ஹாலிவுட் திரைப்படங்களிலும் இந்தக் கருத்தாக்கம் செல்வாக்கு பெற்றிருந்தது.
சினிமா மட்டுமல்லாமல் இலக்கியம், வீடியோ கேம்ஸ், மார்க்கெட்டிங் உட்பட ஏராளமான துறைகளிலும் இந்த வண்ணத்துப்பூச்சி விளைவின் பாதிப்பு உள்ளது என்கின்றனர் நிபுணர்கள். இது குறித்த தகவல்கள் இதோ...

‘கேயாஸ் தியரி’ எனும் கணிதவியல் சோதனை கருத்தாக்கத்தின் ஒரு பகுதிதான் இந்த வண்ணத்துப்பூச்சி விளைவு. 1890களில் ஹென்றி பாய்ன் என்பவர்தான் முதன்முதலில் கேயாஸ் கோட்பாட்டைப் பற்றிப் பேசினார்.

பிரபஞ்சமும், இயற்கையும் ஒரு குழப்பமான, தாறுமாறான, கணிக்கமுடியாத ஓர் அமைப்பைக்கொண்டது என்பது கேயாஸ் கோட்பாட்டின் அடிப்படை. இந்தக் கோட்பாட்டை மக்கள் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், கேயாஸ் தியரி யின் ஒரு பகுதியான வண்ணத்துப்பூச்சி விளைவை கலைகளும், பல்வேறு துறைகளும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டன.

வண்ணத்துப்பூச்சி விளைவின் பிதாமகர் எட்வர்ட் லாரன்ஸ். இவர் 1972ல் அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் கட்டுரை ஒன்றை வாசித்தார். அந்தக் கட்டுரையின் தலைப்பு, ‘பிரேசிலில் இருக்கும் ஒரு வண்ணத்துப்பூச்சியின் சிறகடிப்பு, அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் புயலை ஏற்படுத்துமா?’ என்பது. அவர் கட்டுரையை வாசித்துவிட்டு மேடையிலிருந்து இறங்குவதற்குள் அதில் சொல்லப்பட்ட கருத்துகள் ‘வண்ணத்துப்பூச்சி விளைவு’ எனும் பெயரில் தீயாகப் பரவியது. இந்தச் சம்பவத்திலிருந்துதான் பல துறைகளிலும் தனது முத்திரையைப் பதிக்க ஆரம்பித்தது வண்ணத்துப்பூச்சி விளைவு.

லாரன்ஸ் ஒரு கணிதவியல் மற்றும் வானிலை தொடர்பான அறிஞர். கணித சூத்திரத்தைப் பயன்படுத்திபுயலைக் கணிக்க முடியுமா என்ற கோணத்தில் கட்டுரையை எழுதியிருந்தார். ‘‘உலகம் குழப்பமானது. அது ஒழுங்கற்றதாக உள்ளது. அந்த ஒழுங்கற்றதின் ஆரம்பத்தைக் கண்டுபிடித்து அதில் சிறிய மாற்றத்தை செய்தால்கூட அதன் முடிவுகளை மாற்றலாம்...’’ என்பதே அந்தக் கட்டுரையின் சாரம்.

சிறிய மாற்றத்தைத்தான் வண்ணத்துப்பூச்சியின் சிறகடிப்பாக உருவகித்திருந்தார். புயலைப் பொறுத்தளவில் ஒரு வண்ணத்துப்பூச்சியின் சிறகடிப்பு கூட புயலாக உருமாறும்; உருமாறாமலும் போகும். சிறு சலனங்கள் காலப்போக்கில் பெரிய மாறுதல்களை உண்டாக்கும் என்பது சரிதான். ஆனால், எல்லா நேரமும் இது பலிக்காது அல்லது விளைவுகளை கணிக்க முடியாது.

இதையும் லாரன்ஸ் ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால்,  கைமீறிப்போனது. லாரன்ஸின் கருத்து பிரபலமானதும் அதை ஆதரித்தும், எதிர்த்தும் பல கருத்துகள் வெளிவந்தன. இதில் முக்கியமானது இல்யா பிரிகோஜினின் கருத்து. இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர் இல்யா.

இவரது ‘ஆர்டர் அவுட் ஆஃப் கேயாஸ்’ (குழப்பத்திலிருந்து ஒழுங்கிற்கு) என்ற புத்தகம் வண்ணத்துப்பூச்சி விளைவைத் தவறாகப் பிரயோகித்த அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று. குழப்பமும், ஒழுங்கும் சேர்ந்த கலவைதான் உலகம். ஆனால், இதில் மனிதனின் பங்கும் இருக்கிறது. பிரபஞ்சத்தில் சில விஷயங்களை சரிசெய்யலாம். சிலவற்றை சரி செய்யமுடியாது.

உதாரணமாக, பாலில் கலந்த தண்ணீரைப் பிரிக்க முடியாது. ஆனால், சில தனிம சேர்க்கையைப் பிரிக்க முடியும். குழப்பத்தை மேலும் குழப்பமாக்கும் முயற்சிகளைக் கைவிட்டுவிட்டு, ஒழுங்கை உண்டாக்கும் முயற்சிகளில் மனிதன் ஈடுபடுவதுதான் குழப்பங்களிலிருந்து தப்பிக்க வழி என்றார் அவர். வண்ணத்துப்பூச்சி விளைவுக்கு இல்யாவின் கருத்து முடிவு கட்டினாலும் அது புற்றீசல் போல பல இடங்களில் தொற்றிக்கொண்டது. இதில் நல்லதும் நடந்தன; கெட்டதும் அரங்கேறின. நல்லதுக்கு உதாரணமாக உலகளவில் மெகா ஹிட் அடித்த ‘பேபல்’ (Babel) என்னும் ஆங்கிலப்படத்தைச் சொல்லலாம். கெட்டதுக்கு நல்ல உதாரணம், ஹிட்லர்.

ஓவியம் வரைவதில் ஆர்வமுடையவர் ஹிட்லர். இளம் வயதில் ஒரு ஓவியக் கல்லூரியில் சேர்வதற்காக விண்ணப்பித்தார். ஆனால், அங்கிருந்த ஒரு யூதப் பேராசிரியர் ஹிட்லரின் விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டார். ஹிட்லருக்கு இடம் கிடைத்திருந்தால் யூதர்களைப் படுகொலை செய்த நாசிசமே நிகழ்ந்திருக்காது என்று சொல்கிறார்கள் வண்ணத்துப்பூச்சி விளைவை ஆதரிப்பவர்கள்.

அடுத்து காந்தி. தென்னாப்பிரிக்காவில் ஒரு வெள்ளையனால் வலுக்கட்டாயமாக ரயிலிலிருந்து கீழே இறக்கப்பட்டார் காந்தி. இந்தச் சம்பவம் மட்டும் நடக்கவில்லை என்றால் இந்தியாவுக்கு சுதந்திரமே கிடைத்திருக்காது என்கின்றனர் வண்ணத்துப்பூச்சி விளைவை நம்புகிறவர்கள்.

தவிர, இரண்டாம் உலகப்போரில் ஹிரோஷிமா, நாகசாகி மீது வீசப்பட்ட குண்டுவீச்சு; செர்னோபில் சம்பவத்தில் கூட வண்ணத்துப்பூச்சி விளைவை பிரயோகிக்கின்றனர் இந்த
வ.பூ.வி. ரசிகர்கள்.சில விஷயங்களில் சின்ன காரியங்கள் பெரிய பலனைத்தரும். உதாரணமாக சிறு சேமிப்பு, மதுப்பழக்கத்திலிருந்து விடுபடல் போன்றவை.

கோவிட் லாக்டவுனில் உலகம் முழுவதும் காற்றில் நச்சுக்குறைவு ஏற்பட்டதாகச் சொன்னார்கள். வாகனப்பயன்பாடு குறைவுதான் இதற்கு மூலகாரணம். இனிமேலும் வாகனத்தைக் குறைவாகப் பயன்படுத்துவது நாம் செய்யவேண்டிய ஒரு சிறு காரியம். ஆனால் எல்லாவற்றுக்கும் சிறிய மாற்றங்கள் உதவாது.

டி.ரஞ்சித்