ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துகிறீர்களா..? எச்சரிக்கை ரிப்போர்ட்...!



இந்தியாவில் சமையல் எண்ணெய் நுகர்வு ஆண்டுக்கு சுமார் 22.5 மில்லியன் மெட்ரிக் டன் என்கிறது ஆய்வு. இப்படி இருக்க, பயன்படுத்திய சமையல் எண்ணெயுடன் புதிய எண்ணெயை கலப்படம் செய்து பயன்படுத்துவது பெரிய சுகாதார ஆபத்து என கண்டறியப்பட்டுள்ளது. வறுப்பதற்கு பயன்படுத்தும் போது வெப்ப நிலை அதிகரிப்பதால் எண்ணெய் சிதைவுக்கு உட்படுகிறது.
இதனால் எண்ணெயின் ஊட்டச்சத்து பண்புகள் பாதிக்கப்படுகின்றன. எனவே ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால் பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்படும் என மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.

இருப்பினும் உணவகங்கள், அனைத்து வகை விடுதிகள், கல்லூரி கேண்டீன்கள், இனிப்பகங்கள், ஃபாஸ்ட் ஃபுட் எனப்படும் துரித உணவகங்கள்... என அனைத்திலும் ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயே மீண்டும் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. அங்கு பல முறை பயன்படுத்திய எண்ணெய் மீண்டும் சிறு கடைகளுக்கு விற்பனையும் செய்யப்படுகிறது.
2011 உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி சீல் செய்யப்பட்ட நிலையில்தான் சமையல் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும் என்றிருக்கிறது. ஆனால், இன்று வரை பயன்
படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் பல தளங்களில் விற்கப்படுவதை A B C D என நான்கு நிலைகளாக ஓர் ஆய்வு பிரித்துள்ளது.

அதாவது, குளிரூட்டப்பட்ட உயர்தர உணவகம் பயன்படுத்திய எண்ணெயை 2 நாட்களுக்குள் அங்கிருந்து வெளியே அனுப்பு கிறார்கள். இது A நிலை. அங்கிருந்து B இடத்தில் ஐந்து நாட்களுக்கு பயன்பாட்டுக்கு வந்துவிடுகிறது. அங்கிருந்து பத்து நாட்களுக்குள் C இடத்திற்கு போகும் அந்த எண்ணெய், 15 நாட்களுக்குள் D என்கிற சாலையோர கடைகளுக்குப்
போகிறது. இது ஒருசில இடங்களில் முழுமையாக அப்புறப்படுத்தப்படாமல் மீண்டும் மீண்டும் அதன்மேலேயே ஊற்றிவிடுகிறார்கள். ஆகவே, இந்த எண்ணெய் ஆறு மாதங்கள் கூட பயன்படுத்தப்படுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.  

அதேபோல் இதன் நான்கு நிலைகளுக்கு ஏற்றாற்போல் விலையும் நிர்ணயிக்கப்படுகிறது. உதாரணமாக உயர்தர உணவகம் ரூ.150க்கு வாங்கிய எண்ணெயை பயன்பாட்டிற்குப் பிறகு ரூ.100க்கு விற்பனை செய்கிறது. ரூ.100க்கு வாங்கியவர் ரூ.70க்கு விற்கிறார். ரூ.70க்கு வாங்கியவர் ரூ.50க்கு விற்கிறார். கடைசியாக ரூ.50க்கு வாங்கியவர் ரூ.30க்கு விற்கிறார்.

பொதுவாக எண்ணெய் பயன்பாடு சிறிய அளவில் விற்பனை செய்பவர்கள், பெரிய அளவில் விற்பனை செய்பவர்கள், வீட்டில் பயன்படுத்துபவர்கள் என மூன்று வகை பயன்பாட்டில் உள்ளது. அப்படி பெரிய அளவில் இருப்பவர்கள் சிலர் பயோ டீசல் ஆஃப் இந்தியா மற்றும் சோப்பு தயாரிப்புக்கு அனுப்பிவிடுகிறார்கள். ஆனால், அப்படி அனுப்பப்படுவது 40%தான், மீதமுள்ள 60% மீண்டும் சமையலுக்குத்தான் பயன்படுத்தப்படுகிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

இந்தச் சூழலில்தான் ஒரு மாதத்திற்கு சென்னையில் மூன்று லட்சம் லிட்டரும், மதுரையில் 1,50,000 லட்சம் லிட்டரும் சமையலுக்காக எண்ணெய் பயன்படுத்தப்படுவதாக ஒரு குறிப்பு
தெரிவிக்கிறது.ஒட்டு மொத்தமாக மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தமிழகத்தில்தான் அதிகமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது. அப்படி இருந்தும் இதுபோன்று நடக்காமல் இருக்கவும், தமிழகத்தில் உணவுப் பாதுகாப்பு எவ்வாறு இருக்கிறது என்பது குறித்தும் மருத்துவர் திலீபன் துரையிடம் உரையாடினோம்.

“பொதுவாக ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை மறுமுறை பயன்படுத்துவதினால் இயற்பியல், வேதியல், ஊட்டச்சத்து பண்புகள், அதற்கான மணங்கள் எல்லாம் மாறிவிடும். அப்படி மறு சுழற்சி செய்யப்படும் எண்ணெய் ‘ட்ரான்ஸ் ஃபேட்’ (trans fat) என்று சொல்லப்படுகிறது. ‘ஃபுட் கொலஸ்ட்ரால்’ (food cholesterol) என்று சொல்வது ஒரு முறை பயன்படுத்துவது. 

மேலை நாடுகளில் சிப்ஸ் பாக்கெட்டுகளில் fat percentage போட்டிருப்பார்கள். அதனோடு ட்ரான்ஸ் ஃபேட் பர்சன்டேஜும் போடப்பட்டிருக்கும். அல்லது ‘நோ ட்ரான்ஸ் ஃபேட்’ என குறிப்பிடப்பட்டிருக்கும்.

இந்தியாவில் ட்ரான்ஸ் ஃபேட் விழிப்புணர்வு இப்போதுதான் வர ஆரம்பித்திருக்கிறது...’’ என்ற திலீபன் துரை, தமிழ் நாடு, இந்தியா என்று எடுத்துக் கொள்ளாமல் மூன்றாம் நாடுகள் என்று சொல்லப்படும் வளரும் நாடுகள் எல்லாவற்றிலும் உணவுப் பாதுகாப்பு சட்டங்கள் கண்டிப்புடன் இருப்பதில்லை என்கிறார்.

‘‘எல்லா இடங்களிலும் FSO (food safety officer) இருந்தாலும், அவர்கள் போய் ஆய்வு செய்கிறர்களா என்பது இன்னும் கேள்விக் குறியாகத்தான் இருக்கிறது.
இன்னொன்று, பொருளாதார ரீதியாக ஒரு லிட்டர் எண்ணெய் ரூ.200க்கு வாங்கி பயன்படுத்தும்போது, ஒரு முறை பயன்படுத்தி தூக்கிப் போடுவது அவர்களுக்கு பெரிய பாதிப்பு. குறைந்தது அதை ஐந்து முறை பயன்படுத்தும்போது அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் குறைகிறது.  

அதே வேளையில் மக்களிடமும் பொருளாதாரத்தில் முன்னேறிய வகுப்பினருக்கு இருக்கும் விழிப்புணர்வு கீழ்நிலையில் இருப்பவர்களுக்கு இருப்பதில்லை.‘நான் எந்த மாதிரி உணவு சாப்பிடுகிறேன்’ என்று யோசிக்கும் அளவுக்கு நேரம் இருந்தால்தான் இந்த மாதிரி எண்ணெய் பற்றி எல்லாம் யோசிக்க முடியும். ரூ.20 க்கு 4 இட்லி என்றால் அதே விலையில் 2 பூரியும் சாலைக் கடைகளில் கிடைக்கிறது. அங்கு சாப்பிட வரும் தினக் கூலிகளுக்கு உணவுத் தேர்வு என்பது பொருளாதாரத் தேர்வுதான்.

அதாவது, என்னிடம் இவ்வளவு காசு இருக்கிறது, அந்த காசிற்கு சாப்பிட்டால் எது நன்றாக இருக்கும் அல்லது எவ்வளவு நேரம் தாங்கும் என்னும்போது அங்கு தேர்வு பூரியாகத்தான் இருக்கிறது.

ஏனெனில் இன்று இட்லி என்பது உடல் நிலை சரியில்லாதவர்களுக்கும், வயதானவர்களுக்குமான உணவாக மாறி உள்ளது.தேங்காய் எண்ணெய் நல்லது என்கிறார்கள். ஆனால், விலை அதிகமாக இருப்பதால் அதை அதிகம் பயன்படுத்துவதில்லை. சூரிய காந்தியோடு ஒப்பிடும் போது தேங்காய் அளவு இங்கு அதிகம். நிறைய காய்க்கிறது. ஆனால், சூரிய காந்தியிலிருந்து எண்ணெய் எடுக்கும் அளவிற்கு தேங்காயிலிருந்து எடுப்பதில்லை! அதனால்தான் விலை அதிகமாக இருக்கிறது.

இரு மாதங்களுக்கு முன்பு கூட செக்கு எண்ணெய் குறித்தான மசோதா ஒன்றினை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. அதில், உதிரியாக இல்லாமல் பாக்கெட்டில் மட்டும்தான் கொடுக்க வேண்டும் என்றிருக்கிறது. இங்கு நம் கண் முன் செக்கில் கொடுக்கும் எண்ணெயில் கலப்படம் இருக்கலாம் என்பவர்கள், ஏற்கனவே பாக்கெட்டில் இருக்கும் எண்ணெய்கள்எவ்வளவு தூரம் ஃபுட் சேஃப்ட்டியில் பாஸ் ஆகியிருக்கிறது என்பதை தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது...” என்கிற மருத்துவர் திலீபன் துரை, உணவு மாற்றங்களினால் 18 வயதுக்கு மேல் இருக்கும் எல்லோருக்கும் பிரஷர் பார்க்கப்படுகிறது என்கிறார்.  

“இரண்டு ஆண்டுகளுக்கு முன் வரை எந்த அரசு மருத்துவமனைக்குப் போனாலும் 30 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு பிரஷர், சுகர் பார்ப்பார்கள். இப்போது யுனிவர்சல் ஹெல்த் கைட் லைன் 18 வயதுக்கு மேல் இருக்கும் எல்லோரையும் பிபி, சுகர் பார்க்க அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை VHN என சொல்லப்படும் வில்லேஜ் ஹெல்த் நர்ஸ் 18 வயதுக்கு மேல் இருக்கிற எல்லோருக்கும் பிபி பார்த்துக் கொண்டிருந்தனர்.

18 - 30 வயதிலிருப்பவர்களுக்கு பிரஷர் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் உணவுதான். இதுநாள் வரை தெரியாமல் இருந்திருக்கிறது. அந்த வயதில் சிம்ப்டம்ஸ் அவ்வளவு சீக்கிரம் வராது. மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு ஸ்நேக்ஸ் என பாக்கெட் உணவுகளைத்தான் கொடுக்கிறோம்.

அதிகமாக பயன்பாட்டில் வந்து கொண்டிருக்கும் ஷவர்மா, மைனீஸ் பற்றி ஒரு விவாதம் சமீபத்தில் வந்தது. முட்டை மற்றும் எண்ணெயிலிருந்து எடுக்கப்படும் மைனீஸ் மிகப்பெரிய ட்ரான்ஸ் ஃபேட். அதை பெரிய உணவகங்களில் எப்படி செய்கிறார்கள், கிராமத்தில் இருப்பவர்கள் எப்படி செய்கிறார்கள் என்பதை ஆராய வேண்டும்.        

எனவே, உணவகங்களுக்கு உரிமம் கொடுக்கும்போதே காசு கொடுத்து சாப்பிடும் வாடிக்கையாளர்களுக்கு ஆரோக்கியமானதாகக் கொடுப்பதற்கு சில கட்டுப்பாடுகளை அரசு முன்வைக்க வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரை மூன்று ஏஜென்சிகள் பயோ டீசலுக்காக, பயன்படுத்திய எண்ணெயை ரூ 30 - ரூ.50க்கு வாங்குகிறார்கள். எனவே, இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்து வதோடு, பயன்படுத்திய எண்ணெயினை மீண்டும் மீண்டும் பயன்படுத்தினால் வரும் பக்க விளைவுகள் குறித்து தொடர்ந்து பரப்புரை செய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்...” என்கிறார் மருத்துவர் திலீபன் துரை.

அன்னம் அரசு