பெத்தவங்க படிக்க ஆரம்பிச்சா குழந்தைகளும் படிப்பாங்க...
சொல்கிறார் 2020ம் ஆண்டுக்கான தமிழ் மொழி பிரிவில் ‘பால சாகித்ய புரஸ்கார் விருது’ பெற்ற யெஸ்.பாலபாரதி
“சின்ன வயசுல வாசகனா இருந்த நானேதான் புத்தகம் வாங்குபவனாகவும் இருந்தேன். இப்ப புத்தகங்களை வாங்கறவங்க பெற்றவர்களாகவும் படிக்கிறவங்க அவங்க பிள்ளைகளாகவும் இருக்காங்க. இவங்க ரெண்டு பேரையும் திருப்திப்படுத்த வேண்டிய நெருக்கடில சிறார் இலக்கியம் இருக்கு...’’புன்னகையுடன் சொல்கிறார் 2020ம் ஆண்டுக்கான தமிழ் மொழி பிரிவில் ‘பால சாகித்ய புரஸ்கார் விருது’ பெற்ற ஊடகவியலாளரும், எழுத்தாளருமான யெஸ்.பாலபாரதி.
 ‘‘ராமேஸ்வரத்துல பிறந்தேன். சின்ன வயசுல கவிதை எழுதுவேன். அஞ்சல் அட்டைல கவிதை எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்புவேன். அது சில பிரசுரமாகியிருக்கு. ஊர்ல இருந்தப்ப நண்பர்களோடு சேர்ந்து ‘பிரகடனம்’ சிறு பத்திரிகையையும், மும்பைல வாழ்ந்தப்ப எழுத்தாளரும் கவிஞரும் மொழிபெயர்ப்பாளரும் திரைப்பட இயக்குநருமான மதியழகன் சுப்பையாவுடன் சேர்ந்து ‘குயில்தோப்பு’ பத்திரிகையையும் நடத்தினேன்...’’ என்கிற யெஸ்.பாலபாரதி, மும்பை, சென்னை, புதுதில்லி போன்ற நகரங்களில் பத்திரிகையாளராகப் பணியாற்றியுள்ளார்.
 ‘‘மும்பைல இருந்தப்ப கட்ச் பூகம்பம், கோத்ரா ரயில் எரிப்பும் அதனை ஒட்டி நடந்த கலவரம் பத்தியும் நேரடி ரிப்போர்ட் கொடுத்திருக்கேன். இப்படி செய்தி சேகரித்த ஒரே பத்திரிகையாளர் நான்தான். 2005ல சென்னை வந்தவன் பல்வேறு தொலைக்காட்சி செய்திப் பிரிவுல பணியாற்றினேன். அப்ப இணையத்துல வலைப்பூ என்கிற ப்ளாக் அறிமுகமான நேரம். அதுலயும் கால் பதிச்சு பயணிக்க ஆரம்பிச்சேன்.
முதல் கவிதைத் தொகுப்பு 1994ல பிரசுரமாச்சு. 2000ல ‘இதயத்தில் இன்னும்’ என்ற ஹைக்கூ கவிதைகள் நூலானது. அப்புறம் சிறுகதைகள்ல கவனம் செலுத்த ஆரம்பிச்சேன்...’’ என்கிற யெஸ்.பாலபாரதியின் ‘சமத்துவபுரம் கழிவுநீர் சுத்தம் செய்ய’, ‘அதே கருப்பன்’ என்ற ஹைக்கூ புத்தகங்கள் மிகவும் பிரபலமானவை.
2008ம் ஆண்டு திருநங்கைகளின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட ‘அவன் அது அவள்’ என்ற நாவலை எழுதி உள்ளார். வறுமையின் காரணமாக அடிமைப்படுத்தப்பட்டு, மும்பையில் வேலை செய்யும் சிறுவனைப் பற்றிய ‘துரைப்பாண்டி’, 1993ல் மும்பையில் ஏற்பட்ட மதக்கலவரத்தை அடிப்படையாகக் கொண்ட ‘கடந்து போதல்’, கிராமங்களில் ஊடுருவியுள்ள சாதி வேறுபாடுகள் பற்றி பேசும் ‘சாமியாட்டம்’ ஆகிய இவரது சிறுகதை நூல்கள் பலத்த வரவேற்பு பெற்றவை.
“நானும், பொறியாளரான லட்சுமியும் சாதி மறுப்பு திருணம் செய்துகிட்டோம். எங்க மகன் கனிவமுதனுக்கு இப்ப 12 வயசு. லட்சுமியின் சமூகம் சார்ந்த கட்டுரைகள் பல்வேறு பத்திரிகைகள்ல வெளியாகியிருக்கு. அவங்களோட ‘எழுதா பயணம்’ நூல் எல்லாராலும் இப்ப வரை பாராட்டப்படுது...’’ என குடும்பத்தை அறிமுகப்படுத்தியவர், விருது வாங்கிய புத்தகம் குறித்து பேசத் தொடங்கினார். “தன்னைச் சுத்தி நடக்கும் பாலியல் அத்துமீறல்களைக் கண்டு பயப்படாம ஒரு குழந்தை உடனே கத்தி அதை தெரியப்படுத்தணும் என்பதுதான் ‘மரப்பாச்சி பொம்மை’ நாவலின் மையம். இந்த சிறார் நாவலுக்குதான் இப்ப பரிசு கிடைச்சிருக்கு.
பாலியல் அத்துமீறல்கள்ல இருந்து தற்காத்துக்கலாம்... வெளில சொல்லி சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிக்கலாம் என்பதை இந்த நாவல்ல சொல்லியிருக்கேன். இந்த நாவலை நண்பர் மணிகண்டன் தன்னோட ‘வானம்’ பதிப்பகம் வழியா வெளியிட்டிருக்கார். பொதுவா வாசிப்பு என்பது நம்ம கற்பனைத் திறனை அதிகரிக்கும். உதாரணமா ‘பொன்னியின் செல்வன்’ நாவலை யார் படிச்சாலும் அது ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு உலகைக் காண்பிக்கும். ஒரே கதைதான். ஆனா, ஒவ்வொரு காலத்துலயும் மாறும். இதுதான் எழுத்தின் மிகப்பெரிய சக்தி.
இன்றைய தொழில்நுட்ப உலகில் எல்லாமே காட்சிகளா இருப்பதால் கற்பனைத் திறன் அடிபட்டுப் போகுது. இதுதான் சிறார் நாவல் இலக்கியத்துக்கு நேர்ந்திருக்கு. இந்த சிக்கல் பாடத்திட்டத்துல இருந்து ஆரம்பமாகுது. குழந்தைகளை மனப்பாடம்தான் செய்யச் சொல்றோம். அவங்களை கற்பனை செய்யச் சொல்லலை. அதேமாதிரி படிச்சு முடிச்சுட்டதா குழந்தை சொன்னதும் ‘எங்க பதில் சொல்லு’னு கேள்வி கேட்க ஆரம்பிக்கிறோம். இதனால, புத்தகம் படிச்சாலே அப்பா அம்மா கேள்வி கேட்பாங்க என்கிற பயம் குழந்தைகளுக்கு வருது.
பெற்றோரும் இப்ப வாசிக்கறதில்ல. அதனால பிள்ளைகளும் பாடப் புத்தகங்களைத் தவிர வேற படிக்கறதில்ல. முன்னாடி குழந்தைங்க காசை சேர்த்து வைச்சு புத்தகங்கள் வாங்குவாங்க. இப்ப குழந்தைகளின் தேவையை பெற்றோரே பூர்த்தி செய்யறாங்க. அதாவது குழந்தையா கடைக்குப் போய் தனக்கு இதுதான் வேணும்னு கேட்டு வாங்கற சூழலை நாமே துடைச்சுட்டோம்.
குழந்தைகளின் மனநிலை தேவை சார்ந்தும், பொருள் சார்ந்தும் மாற்றப்பட்டிருக்கு. இப்படியான சிக்கல்களுக்கு மத்திலதான் வாசிக்கும் பழக்கம் நிகழுது. அதனால ‘நீங்க முதல்ல படிங்க... உங்களைப் பார்த்து உங்க குழந்தைகளும் படிப்பாங்க’ என்கிற கோரிக்கையை சிறார் இலக்கிய எழுத்தாளரா எல்லோர் முன்பும் முன்வைக்கறேன்...’’ என்கிறார் யெஸ்.பாலபாரதி.
செய்தி: அன்னம் அரசு
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
|