கொரோனா காலத்திலும் முன்களப் பெண் பணியாளார்களை அலட்சியப்படுத்தும் ஒன்றிய அரசு!
ஏற்கெனவே அதிகப் பணிச்சுமை, குறைவான பணியாளர்கள், குறைவான வளங்கள் எனத் தடுமாறிக்கொண்டிருக்கும் இந்திய மருத்துவ அமைப்பு இந்த கொரோனாவால் கடுமையான நெருக்கடியைச் சந்தித்துக்கொண்டிருப்பது ஓர் அவலமான உண்மை. இந்த கொரோனாவால் இந்தியா முழுதுமே உள்ள பல்வேறு துறை சார்ந்த பெண் முன்களப் பணியாளர்களுக்கு அரசின் பல்வேறு திட்டங்களில் பங்கேற்று பணிபுரிவதற்கான வாய்ப்பு என்னவோ கணிசமாக அதிகரித்திருக்கிறதுதான். இவர்கள் இந்தியாவை கொரோனாவின் கோரப்பிடியிலிருந்து மீட்க கடுமையாகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
 ஆனால், இப்படிப் பணியாற்ற வந்த பெரும்பான்மை பெண் முன்களப் பணியாளர்களை தன்னார்வலர்களாகத்தான் கருதுகிறார்களே அன்றியும் அரசு ஊழியர்களாக மக்களோ அரசோ கருதுவதில்லை என்பது இன்னொரு எதார்த்தம். மாதச் சம்பளத்துக்கு பதிலாக பலருக்கும் மதிப்பூதியம் அல்லது பணி சார்ந்த ஒப்பந்தத் தொகையே பெரும்பாலும் வழங்கப்படுகிறது. இவையும் மிகச் சொற்பத் தொகையே என்பது குறிப்பிடத்தக்கது.
 கடந்த மார்ச் 2020ல் கொரோனாவின் கோரப்படி இறுகத் தொடங்கியதுமே இந்தப் பெண் முன்களப் பணியாளர்கள் களமிறங்கினார்கள். இவர்கள் சேவை சர்வேக்கள் எடுப்பது, வீடுதோறும் சென்று கொரோனா விழிப்புணர்வில் ஈடுபடுவது, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிவதில் அரசுக்கு உதவுவது, கொரோனா பரிசோதனைகள் நடத்துவது, டேட்டாக்களை தொகுப்பது, ஆன்லைனில் அப்டேட் செய்வது எனப் பலதரப்பட்டதாக இருந்து வருகிறது.
 நகரங்களில் மட்டுமல்லாது கிராமப்புறங்களிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால் சிகிச்சை கிடைக்க உதவுவது முதல் வராமல் தடுக்க போடப்படும் தடுப்பூசி கிடைக்க உதவுவது வரை இவர்கள் செய்துகொண்டிருக்கும் முன்களப் பணி தன்னலம் கடந்த அற்புதமான மானுட சேவை.அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதாரக் களப்பணியாளர்கள் (ASHA), அங்கன்வாடி பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட (ICDS) பணியாளர்கள், துணை செவிலியர்கள் (ANMs) போன்றோர் இந்தியா முழுதுமே இந்த கொரோனா காலத்தில் பணிச்சுமையால் தள்ளாடுபவர்களாகவும் மறுபுறம் மிகச் சொற்பத் தொகையே ஊதியமாகப் பெறுபவர்களாகவும் இருக்கிறார்கள் என்கின்றன சமீபத்திய களப்பணி ஆய்வுக் கட்டுரைகள்.
இந்தப் பெருந்தொற்று காலத்தில் முன்பைவிட பணிச்சுமை அதிகரித்திருந்தாலும் பணியாற்றுவதற்கான கவசங்கள், போக்குவரத்துக்கான வண்டி வாகன உதவிகள் போன்றவை மேல்மட்டப் பணியாளர்களுக்குக் கிடைத்ததைவிட குறைவாகவே நேரடியாகக் களத்தில் இறங்குபவர்களுக்கு கிடைக்கிறது என்கிற குற்றச்சாட்டு பரவலாக ஒரு சர்வேயில் முன்வைக்கப்பட்டிருக்கிறது.
இதில் தமிழ்நாட்டின் நிலை நன்றாக உள்ளது. ஆனால், பீகார் போன்ற மாநிலங்களில் இந்த வசதிகள் மிக மோசமான நிலையில் இருக்கின்றன. இதனால் ஆஷா எனப்படும் அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதாரக் களப்பணியாளர்கள் சேவைதான் பாதிக்கப்படுகிறது. அவர்கள் தங்களுக்கு வரும் அழைப்புகளை முறையாக எதிர்கொள்ள இயலாமல் போகிறது. இந்தியா முழுதும் இந்தப் பெண் முன்களப் பணியாளர்களுக்கு ஊதியம் குறைவு என்றாலும் ஊட்டச்சத்துக் குறைபாடு முதல் கல்வி வளர்ச்சி வரை சகலத்திலும் பின்தங்கியுள்ள பீகார் போன்ற வட மாநிலங்களில் உள்ள பெண் முன்களப் பணியாளர்களுக்கு ஊதியம் அதைவிடக் குறைவு. உதாரணமாக, தெலுங்கானாவில் இவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தோடு ஒப்பிடும்போது கிட்டத்தட்ட பாதி ஊதியம்தான் பீகாரில் வழங்கப்படுகிறது என்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
அங்கன்வாடி பணியாளர்களுக்கு கொரோனா காலத்துக்கு முன்பு இருந்தே பணிச்சுமை அதிகம்தான். நம் தேசத்தின் சுகாதாரத்துறையின் முதுகெலும்பு என்று அவர்களையே சொல்ல வேண்டும். இப்படிச் சொல்வதால் மற்ற சுகாதாரத் துறையினரைக் குறைத்து மதிப்பிடுவது ஆகாது. அவர்கள் பணி அப்படி பொன்னானது என்று உயர்வு நவிற்சிக்காகவே சொல்கிறோம்.
வீடு வீடாகச் சென்று சுகாதாரக் கணக்கெடுப்புகளை நடத்துவது, அதற்கான கோப்புகளை, தரவுகளைப் பராமரிப்பது, அங்கன்வாடி மையங்களை நடத்துவது, மக்களிடையே சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வை உருவாக்க பாடுபடுவது, ஊட்டச்சத்து, குடும்பக் கட்டுப்பாடு, குழந்தைகள் நலம் தொடர்பான விழிப்புணர்வை உருவாக்குவது, தடுப்பூசிகளைப் போடுவதற்கு உதவுவது என்று அவர்கள் பணி விரிவானது. பெண் குழந்தைகள் பருவம் எய்தும் வயது வந்ததும் கற்றுத்தரவேண்டிய சுகாதார நடவடிக்கைகள் மற்றும் அது தொடர்பான திட்டங்களை அமலாக்க வேண்டியதும் இவர்களே.
சுகாதாரம் தொடர்பான முன்களப் பணியில் இந்தப் பெருந்தொற்று காலத்தில் ஆஷா பணியாளர்களின் சேவையும் அபரிமிதமானது. அரசின் சுகாதாரக் கட்டுமானங்களுக்கும் மக்களுக்கும் இடையே நல்லதொரு பாலமாக இருப்பது இவர்கள்தான். தேசிய சுகாதார நடவடிக்கையின் வழிகாட்டுதல் அறிக்கையின்படி இவர்களின் முதன்மையான பணி என்பது, சமூகத்தின் ஊட்டச்சத்து, சுத்தமான கழிப்பிடம், சுகாதாரம், குடும்பக் கட்டுப்பாடு மற்றும் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வுகளை உருவாக்குவதுதான்.
குழந்தை பிறப்பு தொடர்பாக கர்ப்பிணிகளுக்கு விழிப்புணர்வு தருவது, அவர்களைப் பிரசவத்துக்கு உடலாலும் மனதாலும் தயாராக்குவது, பாலூட்ட உதவுவது, குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் போன்ற பணிகளும் இவர்களுடையதே. இவர்கள் ஒவ்வொருவருமே ஒரே சமயத்தில் பல்வேறு பணிச்சுமைகளைத் தாங்கிச் செயலாற்ற வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.
சில மாநிலங்களில் இவர்கள் தங்களுக்கு வரையறுக்கப்பட்ட வேலைகளைக் கடந்தும் பணியாற்ற வேண்டியதாய் இருக்கிறது. அரசின் கணக்கெடுப்புகள், தேர்தல் பணிகள்கூட சில மாநிலங்களில் இவர்களுக்கு வழங்கப்படுகின்றன. தெலுங்கானாவில் மழைக் காலத்தில் மலேரியா, டெங்கு அதிகமாகிறதென அங்கு இந்த நோயைப் பரப்பும் லார்வாக்கள் அதிகம் உள்ள நீர்நிலைகளில் குறிப்பிட்ட ஒரு மீனைக் கொண்டு போய் போட மீன் பிடிக்க உத்தரவிட்டதாக ஒருவர் தெரிவித்திருக்கிறார். இப்படி விநோதமான வேலைகள்கூட இவர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன.
ஆஷா பணியாளர்களுக்கு தினசரி தோராயமாக ஆறு மணி நேரத்துக்கு மேல் வேலை இருப்பதாகச் சொல்கிறார்கள். இதனால் அவர்களால் வேறு வேலைக்கும் போக முடிவதில்லை. எனவே, ஒரே வருமானமாக இதனை நம்பியே இருக்க வேண்டியதுள்ளது. அரை நாள் வேலைதானே என்று சிலர் அலட்சியமாக சொல்லக் கூடும். ஆனால், அது பல சமயங்களில் நேரம் சார்ந்ததாக இருப்பதில்லை. எனவே, ஒரு நாள் வேலை போலத்தான் அது ஆகிவிடுகிறது என்று பெருமூச்சு விடுகிறார்கள் ஆஷா பணியாளர்கள்.
அரசு என்றாவது நம்மை பணி நிரந்தரம் செய்துவிடும் என்ற நம்பிக்கையிலும், நாம் என்றாவது அரசு ஊழியர்களுக்கான மரியாதையான ஊதியம் பெறுவோம் என்ற நம்பிக்கையிலும் இந்தப் பணியாளர்கள் இதைப் பிடித்துக்கொண்டு தன்னலம் கடந்து பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அரசுகள் புதிய பணியாளர்களை நியமிப்பதன் மூலம் இவர்களின் பணிச்சுமையைக் குறைப்பது, இவர்களுக்கான ஊதியத்தை அதிகரித்து பொருளாதாரத்தை மேம்படுத்துவது போன்றவற்றை செய்துகொடுக்க வேண்டியது அவசியம்.
நம் தமிழகத்தில் புதிதாக இந்த கொரோனா காலத்தில் இப் பணியாளர்கள் அதிகம் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்பது இவர்களுக்கு ஓரளவு ஆறுதலான செய்திதான். ஆனால், ஊதிய உயர்வும் அரசு ஊழியர் என்ற முறையான அங்கீகாரமும் இவர்களின் நியாயமான எதிர்பார்ப்புகள். இதையும் அரசுகள் செய்துகொடுக்க முன்வந்தால் இவர்கள் சேவை மேலும் சிறப்பாகும்.
இளங்கோ கிருஷ்ணன்
|