துக்கம் விசாரித்தல் என்னும் துக்கம்!



வேண்டாவெறுப்பாக ஓர் இழவு வீட்டிற்குச் சென்றிருக்கிறீர்களா? நமக்கு சுத்தமாக செட்டாகாத சூழல்களில் அதுவும் ஒன்று. இறந்துபோன நபரை நம் வாழ்நாளில் பார்த்திருக்கவே மாட்டோம். ஆனாலும் சொந்தக்காரர்தான் என்று சத்தியம் செய்து போய்வரச் சொல்வார்கள். நாமும் மறுக்க ஒரு காரணமுமின்றி கிளம்பிப்போவோம். தெருமுக்கினை அடைந்ததுதான் தாமதம், அதுவரை அனிருத் பாடல்களை ஹெட்போனில் உற்சாகமாய் கேட்டுக்கொண்டிருந்த நாம் சட்டென அதையெல்லாம் அப்புறப்படுத்திவிட்டு முகத்தை சோகமாக வைத்துக்கொள்ள வேண்டும். முடிந்தால் கண்களை கட்டாயப்படுத்தி கலங்கச்செய்யலாம்.

தெருவுக்குள் நுழைகிறீர்கள், வீட்டின் முன் நின்றிருந்த ஒட்டு மொத்தக் கூட்டமும் உங்களை ஒருமுறை திரும்பிப்பார்க்கும். அவர்கள் ஒருவேளை இளையராஜா பாடல்களை அப்புறப்

படுத்திவிட்டு வந்திருக்கலாம். சோகமான முகத்தை இன்னும் சோகமாக வைத்துக்கொள்வது கொஞ்சம் கடினம்தான், ஆனாலும் வேறு வழியில்லை. செருப்பை வெளியிலேயே கழற்றியாக வேண்டும்.

மொதுமொதுவென கிடந்திருக்கும் செருப்புகளில் நம் செருப்பை எவன் தூக்குவானோ என்கிற பீதி எட்டிப்பார்த்தாலும் ‘ச்சேச்சே... எல்லாம் துக்கத்துல இருக்கானுக. அதெல்லாம் செய்ய மாட்டானுக...’ என்றும், ‘நம்ம சொந்தக்காரனுகளாச்சே... செஞ்சாலும் செய்வானுக...’ என்றும் நிகழும் மனப்போராட்டத்தை கட்டுப்படுத்தியபடி வீட்டிற்குள் நுழையவேண்டும்.

இப்போது ஒரு சம்பவம் நிகழும் பாருங்களேன்...
இறந்தவரின் மனைவியும் மகனும் அமைதி யாகத்தான் அழுதுகொண்டிருப்பார்கள். எங்கிருந்துதான் அந்த அத்தையோ சித்தப்பாவோ வருவார்கள் என்று தெரியாது, ஜல்லிக்கட்டில் திறந்துவிட்ட காளை போல் சீறிப்பாய்ந்து உங்களைக் கட்டிக்கொண்டு ‘கே முறே’ என்று கதற ஆரம்பிப்பார்கள். நீங்களோ, ‘Why Me?’ என்றவாறு பேய்முழி முழித்துக்கொண்டிருப்பீர்கள்.
இதில் பர்ஃபாமென்ஸ் என்பது மிக முக்கியம். நம்மைக் கட்டிக்கொண்டோ அல்லது கையைப்பிடித்துக்கொண் டோ அழுபவர்களுக்கு ஈக்வலாக நாமும் அழ அல்லது கத்த வேண்டும். எதுவும் வரவில்லையெனில் அட்லீஸ்ட் தோளைக் குலுக்கி விசும்பவாவது செய்தாக வேண்டும்.

அதிகபட்சம் இரண்டிலிருந்து ஐந்து நிமிடங்கள். அதற்குள் அடுத்த ஆள் வந்துவிட, நம்மை உதறிவிட்டு அவர்களிடம் பர்ஃபாமென்ஸ் செய்ய ஓடிவிடுவார்கள். இதுதான் சாக்கென நாம் பெருமூச்செல்லாம் விட்டுவிட முடியாது. இப்போதுதான் நாம் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மூக்கை உறிஞ்சியபடி ஒரு ஓரமாய் நிற்க அல்லது உட்கார இடம் தேடி செட்டிலாக வேண்டும். மறக்காமல் முகத்தை அதே சோகத்துடன் மெய்ன்டெய்ன் பண்ண வேண்டும்.

அடுத்தடுத்த பர்ஃபாமென்ஸ்களை வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்கும்போதே ‘கிளம்பலாமா?’ என்று நினைப்பீர்கள். ம்ஹூம், அதுதான் முடியாது. ‘எடுக்குறவரைக்கும் இருந்தாகணும், மூடிட்டு நில்லு’ என்று மண்டைக்குப் பின் குரல் கேட்கும். எல்லாச்சடங்கும் முடிந்து வெளியேறி நம் செருப்பை நாமே அணியும்போது எழும் ‘அப்பாடா’வை விட, தெருமுக்கு தாண்டியதும் மிக அமைதியாக ஒரு பெருமூச்சு விடுவோம் பாருங்கள்... அதுதான் பரம நிம்மதி.

இது கொஞ்சம் கடினம்தான். ஆனால், இதைவிட கடினமான காரியம் என்று ஒன்றுண்டு. இறந்ததற்குப் போகாமல், ஒருவாரம் கழித்து சம்பந்தப்பட்ட வீட்டிற்குச் சென்று நலம் விசாரிப்பது.
“உங்க சித்தப்பா மாமனாரோட அண்ணன் மகனாம்... இறந்ததுக்கும் போகல. சித்தப்பா முகத்துக்காகவாவது ஒரெட்டு வீட்டுக்குப்போய் விசாரிச்சுட்டு வந்துடு...’’
அசரீரி ஒலிக்கும். டேய்... யார்ரா இவனுகளெல்லாம்?!

நேரில் பார்க்கும்போது விசாரித்துக்கொள்ளலாம் என்று அசட்டை செய்தீர்களெனில், கல்யாணத்திலோ காதுகுத்திலோ சந்தித்து, ‘‘அன்னிக்கு ஒருவார்த்தை விசாரிச்சியா? அவ்வளவு வேண்டாதவங்களா போய்ட்டோமா?” என்று இங்கிதமின்றி கூட்டத்திற்கு நடுவே கேட்பார்கள். “உன்ன முன்னபின்ன கூட பார்த்ததில்லியேடா...” என்று நம்மால் பதில் சொல்லவும் முடியாது. பெட்டர், வீட்டிற்கே சென்றுவிடலாம் என்று முடிவெடுப்போம்.அதுதான் சோதனைக்காலம்.

இறந்த அன்றைக்கே சென்றிருந்தால் முகத்தை சோகமாய் வைத்துக்கொண்டு ஓரமாக நின்றுகொண்டால் போதும். இங்கு அப்படி தப்பிக்க முடியாது. இறந்துபோனவர் பற்றி, அவர் இறப்பு பற்றி பேசியாக வேண்டும். அவர் செய்திருந்த சாதனைகள், அடித்த பல்டிகள் எல்லாவற்றையும் காதுகொடுத்து கேட்டாக வேண்டும்.

சோலோ பர்ஃபாமென்ஸ்... செத்தான்டா சேகரு!இதில் வேடிக்கை என்னவென்றால், நம்மிடம் மூன்றே கேள்விகள்தான் கைவசமிருக்கும். அந்த விக்ஸ் டப்பாவை வைத்துத்தான் திரும்பத் திரும்ப உச்சுக்கொட்டியாக வேண்டும்.

1) உடம்பு முடியாம இருந்தாருங்களா?
2) ஓ... வயசென்ன இருக்கும்?
3) ப்ச்... பசங்க இருக்காங்
களா? என்ன பண்றாங்க?

ஒருவேளை நல்லவர் வல்லவரென யாராவது சொல்லிக்கொண்டிருக்கும் கதைகளுக்கு ‘ம்... ம்...’ கொட்டலாம். இல்லையெனில் கொஞ்சம் கஷ்டம். நடுநடுவே பேசிக்கொண்டிருப்பவர்கள் கண் கலங்குவார்கள், நாம் என்ன செய்வதெனத் தெரியாமல் மலங்க மலங்க முழித்தபடி உட்கார்ந்திருக்க வேண்டும்.குடிப்பதற்கு டீ குடுக்க வாய்ப்பிருக்கிறது. வேண்டாமென மறுத்துவிட்டு சோகமாக உட்கார்ந்திருக்க வேண்டும். அது மிக முக்கியம். ஒருவேளை அழுதுகொண்டிருப்பவர்கள் அழுகையை நிறுத்திவிட்டு சகஜமாக ஆரம்பித்தால் ‘விசாரிச்சது போதும், வேலையிருக்கு கிளம்பு’ என்று அர்த்தம்.

கடைசியாக ஒரு விசயம்.துக்கம் அனுஷ்டிக்கச் சென்ற இடத்தில், இறந்தவருக்கு தொண்ணூறு வயதிருக்கும் என்று யாராவது சொன்னால், “தொண்ணூறா? அப்ப
பரவாயில்ல...” என்று மறந்தும்கூட சொல்லிவிடாதீர்கள்!

 - இந்திரா த/பெ ராஜமாணிக்கம்