இந்த மேஜிக் சன் டிவி கொடுத்ததுதான்!விஜய் சேதுபதி Exclusive
ஒரே மாதத்தில் மூன்று படங்கள் ரிலீஸ். தொடர்ந்து ஷூட்டிங் என ஆல் டைம் பிஸியாக இருக்கிறார் விஜய் சேதுபதி. ‘‘ஏதோ நான் மட்டுமே ராவும் பகலுமா வேலை செய்கிற மாதிரி செய்திகள் பார்க்கறேன்.
 அப்படி எதுவும் கிடையாது. நிறைய படங்கள் ரிலீசுக்கு ரெடி. ஆனா, சூழல் கொடுத்த பயம் இன்னமும் தயக்கம் போகலை. அந்தத் தயக்கத்தை நாங்களே உடைக்கிற ஆரம்பப் புள்ளியா எங்க படங்கள் வெளியாக ஆரம்பிச்சிருக்கு. இதிலே சில படங்கள் முடிஞ்சே நாலஞ்சு வருடங்கள் ஆச்சு...’’ புன்னகைக்கிறார் வி சே.‘லாபம்’, ‘துக்ளக் தர்பார்’, ‘அனபெல் சேதுபதி’... இதைப்பத்தி சொல்லுங்க... 
‘லாபம்’ல நான் ஒரு விவசாயிகள் நலச் சங்கத் தலைவர். ‘துக்ளக் தர்பார்’ல கேடி அரசியல்வாதி. ‘அனபெல் சேதுபதி’ல ஒரு மன்னர். மூன்றுமே மூன்று விதமான வெரைட்டி. இது மட்டுமில்ல... அடுத்தடுத்து வரப்போற படங்களும் ஒண்ணுக்கு ஒண்ணு தொடர்பில்லாமதான் இருக்கும்.
 சன் டிவியோட உங்க பயணம் எப்படியிருக்கு..? இருப்பதிலேயே தொகுத்து வழங்குவதுதான் கஷ்டமான வேலை. ‘சீதக்காதி’ படத்துல ஒரே ஷாட்ல 8 நிமிடங்கள் நடிச்சேன். அது சினிமா. டிவி அப்படியில்ல. ஒரு ஆக்ஷனுக்கும், கட்டுக்கும் இடைல குறைஞ்சது 30 நிமிடங்கள் வரை கூட கேமரா முன்னாடி நிக்கணும். இதனால கேமரா பயம், தயக்கம் சுத்தமா போயிடுது. தவிர நிகழ்ச்சியை தொகுத்து வழங்கறப்ப நாமதான் முழு நிகழ்ச்சியையும் எடுத்துட்டுப் போகணும். இதனால ஆன் த ஸ்பாட் சவால்கள் நிறைய. அதேபோல நாம நினைப்பதை பளிச்சுனு தயங்காம நிகழ்ச்சில பேசணும்.இதெல்லாம் இப்ப சாத்தியமாகியிருக்கு. இந்த மேஜிக் சன் டிவி கொடுத்ததுதான்! உங்ககிட்ட இருந்து இளைஞர்கள் நிறைய கத்துக்கிட்டு இருக்காங்க... எந்த விஷயத்தை கத்துக்கக்கூடாதுனு நினைக்கிறீங்க?
எதையுமே கத்துக்க வேண்டாம்! உங்களுக்கு என்ன தோணுதோ அதை செய்யுங்க. சுயமா சிந்திக்க கத்துக்கங்க. பெரிய பெரிய தத்துவஞானிகள், தலைவர்கள் இருக்காங்க. அவங்க சொல்லிக் கொடுத்த விஷயங்களைக் கத்துக்கோங்க. நான் அவ்வளவு பெரிய ஆள் கிடையாது. என்னை ஏதோ மோட்டிவேஷன் பேச்சாளர் மாதிரி பார்க்கறாங்க. அப்படி எல்லாம் எதுவும் கிடையாது. சுய சிந்தனையே பல அனுபவங்களைக் கொடுக்கும். கமல்ஹாசன் எப்படியிருக்கார்..?
பிரமிக்க வைக்கறார். ‘விக்ரம்’ படத்துக்கான ஷூட்டிங் ஆரம்பிச்சு ஒரு வாரம் முடிஞ்சிருக்கு. இன்னமும் கமல் சாரை நான் பார்த்து ஆச்சரியத்தில் மட்டுமே இருக்கேன். இந்த ஆச்சர்யத்துல இருந்து நான் வெளில வந்தபிறகுதான் அவர்கிட்ட என்னால கத்துக்க முடியும். ‘விக்ரம்’ல எனக்காக ஒரு ஆக்டிங் கோச் கூட வச்சிருக்கேன். அவங்க பூஜா தேவரியா! அவங்கதான் எனக்கு ஒவ்வொரு ஷாட்டுக்கு நடுவிலேயும் தனித்துவமான நடிப்பை சொல்லிக் கொடுக்கறாங்க.
நிறைய புதுமுக இயக்குநர்களை அறிமுகம் செய்துட்டே இருக்கீங்க... எதுவும் காரணம் இருக்கா?
நல்ல கதைகள்தான் காரணம். சுவாரஸ்யமா கதை சொல்கிற யாரா இருந்தாலும் நிச்சயம் அந்த படத்தில் நடிக்கணும்னு ஆர்வம் வந்துடுது. எல்லா படங்களிலும் நடிக்கணும்... எல்லாருடைய கதைகளிலும் நடிக்கணும்... எல்லா இயக்குநர்களுடைய நடிகனாகவும் இருக்கணும்... இந்தியாவில் இருக்கிற அத்தனை பெரிய நடிகர்கள் கூடவும் நடிக்கணும்... இதெல்லாம் பேராசை இல்ல... என் இலக்கு!
நடிகர், தயாரிப்பாளர்... அடுத்து இயக்குநரா..?
இப்போதைக்கு அந்த எண்ணம் வரல. இயக்குநராகும் அளவுக்கு எனக்கு அனுபவம் பத்தாது. வருங்காலத்தில் வரலாம்.
இயக்குநர் ஜனநாதன் மறைவுக்குப் பிறகு ‘லாபம்’ படம் முழுமையானது எப்படி?
எங்களுக்கு எந்த வேலையுமே அவர் வைக்கல. கடைசி ரீல் வரைக்கும் வேலை செய்துட்டு சாப்பிடப் போனவர் அப்படியே விழுந்துட்டார். என்னுடைய டப்பிங் போர்ஷன்ஸைக் கூட நான் பேசி முடிச்சுட்டேன். என் நண்பர் ஆறுமுகமும் அவருடைய பல வருட நண்பரும் உதவி இயக்குநருமான ஆலயமணியும் சேர்ந்து பேலன்ஸ் வேலைகளை முடிச்சிருக்காங்க. நாம ஆயிரம் கணக்கு போடலாம். ஆனா, எல்லாமே ஒரு செகண்ட்ல முடிஞ்சிடும்னு ஜனநாதன் சார் மறைவு உணர்த்தியிருக்கு. எந்த உயரத்துக்கு போனாலும் அடுத்த நிமிஷம் நமக்கானது இல்ல.
ஜனநாதன் சார் மாதிரி ஒருத்தரை திரும்ப கொண்டு வர முடியாது; அவரை மாதிரி படங்கள் கொடுக்கவே முடியாது.பிற மொழிகளில் நிறைய படங்கள் நடிக்க ஆரம்பிச்சிட்டீங்களே..? எங்க போனாலும் தமிழ் மண்ணை விட்டுக் கொடுக்கவே முடியாது. இது என் சொந்த மண். இங்கே நான் என்ன செஞ்சாலும் அதற்கான விளைவு என்னனு எனக்குத் தெரியும். ஆனா, மற்ற மொழிகள்ல நடிக்கிறப்ப அவங்க கலாசாரம் முதல் உணவு முறை வரை எல்லாத்தையும் புதுசா கத்துக்கறேன். புதுசு புதுசா கத்துக்கறப்ப நான் இளமையாகறேன்!
ஷாலினி நியூட்டன்
|