இந்து பக்திப் பாடல்களுக்கு இசையமைத்தவர்தான், நாகூர் ஹனிபாவின் ஏராளமான இஸ்லாமிய கீதங்களுக்கும் இசையமைத்துள்ளார்!



ஆலமர நிழலில் எதுவும் வளராது என்பார்கள். ஆனால், அதிலிருந்து எத்தனையோ செடிகள் தப்பிப் பிழைத்து தழைத்து வளர்வது இயற்கை விதி. அதுபோலத்தான் ஓர் ஆளுமையின் நிழலில் இருந்து தங்களை, தங்கள் திறமைகளை வெளிப்படுத்திக்கொள்வது ஆகச் சிரமமான காரியம். இதில் சிலர் வெற்றி பெறுகிறார்கள். சிலர் அடையாளமிழந்து போயிருக்கிறார்கள். அப்படி அடையாளமிழந்து போன மகா கலைஞன்தான் இவர்.

தமிழ்த் திரையிசை வரலாற்றில் இசைமேதை ஜி.ராமநாதனுக்கு, சுந்தரம், டி.பி.ராமச்சந்திரன்; திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவனுக்கு, புகழேந்தி; மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு, ஜி.எஸ்.மணி, ஜி.கே.வெங்கடேஷ், ஆர்.கோவர்த்தனம், ஹென்றி டேனியல், ஜோசப் கிருஷ்ணா; மெல்லிசை மன்னர் டி.கே.ராமமூர்த்திக்கு, ஸ்ரீ ராமுலு போன்றவர்கள் உதவியாளர்களாக தங்கள் பெயர்களை அழுத்தமாகவே பதிவு செய்துள்ளனர். அவர்கள் பல்வேறு இசைக்கருவிகளை வாசிக்கத் தெரிந்ததுடன் பின்னணி இசை ஒருங்கிணைப்பாளர்களாகவும் இருந்துள்ளனர். பின்னாளில் சிலர் தனியாக படங்களுக்கு இசையமைத்து முத்திரை பதித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் மெல்லிசை என்றால் நம் எல்லோர் நினைவிற்கு வரும் பெயர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், டி.கே.ராமமூர்த்திதான். அது போல தமிழ் சினிமாவில் பக்தி இசை என்றால் கண்களை மூடிக்கொண்டு குன்னக்குடி வைத்தியநாதன் என்ற பெயரைச் சொல்லி விடலாம்.வயலின் கலைஞராக அறியப்பட்ட குன்னக்குடி வைத்தியநாதன், மேடை நிகழ்ச்சிகளில் மட்டுமின்றி திரையிசையிலும் தனது முத்திரையைப் பதித்துள்ளார்.

மேடை மற்றும் கோயில்களில் பாடிக்கொண்டிருந்த கலைஞர்கள் பலரை திரையிசைப் பாடகர்களாக மிளிரச் செய்தார்.‘வா ராஜா வா’, ‘தெய்வம்’, ‘திருமலை தென்குமரி’, ‘நம்ம வீட்டு தெய்வம்’, ‘கண்காட்சி’, ‘அகத்தியர்’, ‘வாழையடி வாழை’, ‘அன்னை அபிராமி’, ‘ராஜராஜசோழன்’, ‘திருமலை தெய்வம்’, ‘காரைக்கால் அம்மையார்’, ‘சிசுபாலன்’, ‘குமாஸ்தாவின் மகள்’, ‘மனிதனும் தெய்வமாகலாம்’, ‘நவரத்தினம்’, ‘கந்தர் அலங்காரம்’, ‘உலா வந்த நிலா’... என்று விரல் விட்டு எண்ணக்கூடிய  படங்களுக்குத்தான் அவர் இசையமைத்தார்.

ஆனால், மூர்த்தி சிறிது என்றாலும், கீர்த்தி பெரிது என்பதைப் போல அவர் இசையமைத்த படங்களில் இடம் பெற்ற  பாடல்கள், காலம் கடந்தும் இசைத்தமிழைப் பரப்பி வருகின்றன.
‘குருவாயூரப்பா...’, ‘மதுரை அரசாளும்...’, ‘சிந்தனையில் மேடைகட்டி...’, ‘திருப்பதி மலைவாழும்...’, ‘முத்தமிழில் பாட வந்தேன்...’, ‘மருதமலை மாமணியே...’, ‘நாடறியும் மலை நான் அறிவேன்...’, ‘திருச்செந்தூரில் போர் புரிந்து...’, ‘திருச்செந்தூரின் கடலோரத்தில்...’, ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்...’, ‘வருவாண்டி தருவாண்டி...’, ‘காணும் கலையெல்லாம்...’, ‘குறவர் குலம் காக்கும்...’, ‘உலகம் சமநிலை...’, ‘வென்றிடுவேன் உன்னை...’, ‘தாயிற்சிறந்த கோவிலும் இல்லை...’, ‘கண்ணைப் போல மண்ணைக் காக்கும்...’, ‘நடந்தாய் வாழி காவேரி...’, ‘தலைவா தவப்புதல்வா...’, ‘இசையாய் தமிழாய்...’, ‘எனக்காகவா நான் உனக்காக...’, ‘தென்றலோடு உடன் பிறந்தாள்...’, ‘தஞ்சை பெரியகோவில்...’, ‘மயக்கும் மனம்...’, ‘நாதனைக் கண்டனடி...’, ‘மாதென்னை படித்தான்...’, ‘ஏடு தந்தாரடி...’, ‘மாலே மணிவண்ணா மாயவனே...’, ‘தகதகதக தகவென ஆடவா...’, ‘எழுதி எழுதி பழக வந்தேன்...’ என குன்னக்குடி போட்ட மெட்டுக்கள் அத்தனையும் தேன்சொட்டு.

குன்னக்குடி வைத்தியநாதனிடம் இசை உதவியாளர்களாக எம்.முத்து, சேது, ராகவன் என்ற மும்மூர்த்திகள் இருந்தனர். மிகத்திறமை வாய்ந்த கலைஞர்களான இவர்கள் பெயர் படத்தின் டைட்டில் கார்டுகளைத் தவிர எங்கும் இல்லை. இதில் ஒருவர் இசையமைத்த பாடல்கள் கடல் கடந்தும் ரசிர்களால் இன்றும்  நேசிக்கப்படுகிறது என்றால் நம்ப முடிகிறதா?  
இசை முரசு இ.எம்.நாகூர் ஹனிபாவின் பெரும்பாலான பாடல்களுக்கு இசையமைத்தவர் இன்பராஜ் என்று சொல்லப்படுகிறது.

ஆனால், குன்னக்குடி வைத்தியநாதனிடம்  இந்து பக்திப்பாடல்களுக்கு இசையமைத்த ஒருவர்தான், நாகூர் ஹனிபாவின் ஏராளமான இஸ்லாமிய கீதங்களுக்கும் இசையமைத்துள்ளார் என்பது  அறிந்து கொள்ள வேண்டிய வரலாறு. அந்த இசையமைப்பாளர் பெயர் எம்.முத்து.

இறைவா உன்னைத் தேடுகிறேன் அந்த ஏக்கத்திலேதான் வாடுகிறேன்
ஆசையுடன் உன்னை நாடுகிறேன் அந்த ஆர்வத்தில்தான் பாடுகிறேன்...

என்று நாகூர் ஹனிபா உள்ளம் உருகி உருகிப் பாடும் பாடலுக்கு இசையூட்டியவர் இந்த எம்.முத்துதான்.

அண்ணல் நபி
பொன் முகத்தை
கண்கள் தேடுதே
அந்த ஆவலினால்
காவலின்றி
இதயம் வாடுதே...

என்று நாகூர் ஹனிபா  பாடிய பல்லவிக்கு மெட்டமைத்தவரும் எம்.முத்துதான்.

அல்லாஹு அக்பர் அல்லாஹு
அல்லாஹு அக்பர் அல்லாஹு
அல்லாஹு அக்பர்
என்று முழங்கும்
அழகிய இடமே
பள்ளிவாசல்...
என்ற  அழகிய ரமலான் கீதத்தை வழங்கியவரும் எம்.முத்துதான். இசைமுரசு நாகூர் ஹனிபா இசைநிகழ்ச்சிகளில் தவறாமல் பாடும் -

கருணைக் கடலாம்
காதர் வலியின்
காரண சரிதம் கேளுங்கள்,
அருமை நாதர்
சாகுல்ஹமீது ஒலி
அற்புத சரிதம் கேளுங்கள்
- பாடலுக்கு எம்.முத்துதான் மெட்டமைத்தார்.

அல்லாஹு அல்லாஹ்
அல்லாஹு அல்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்
ஆளுகின்ற வல்லாஹ்
ஆற்றல் மிகும் அல்லாஹ்
உன்னைப் போற்றுகின்றேன்
அல்லாஹ் அல்லாஹு
அல்லாஹ் அல்லாஹு...
என்ற அற்புதமான பாடலை இசையமைத்தவர் எம்.முத்து.

நாகூர் ஹனிபா பாடிய ‘தாயப் நகரத்து வீதியிலே எங்கள் காலசூரல் நடக்கையிலே...’, ‘உலக மக்கள் யாவருக்கும் வந்தது குரான்...’, ‘விண்ணகமும் மண்ணகமும் வியக்க வைக்கும் பாத்திமா...’, ‘உன் வாசல் தேடி வந்தோம் சாகே மீரானே...’, ‘அன்பு மிகும் தீனோரே ஆற்றல் மிகும் தீனோரே...’, ‘ஜிந்தாபாத்...’, ‘எங்கும் நிறைந்த இறையோனே...’, ‘மதீனா நகருக்குப் போக வேண்டும்...’, ‘எல்லா உலகும்...’ போன்ற இனிய பாடல்களுக்கு இசையமைத்தவர் குன்னக்குடி வைத்தியநாதனின் உதவியாளரான எம்.முத்துதான்.

நாகூர் ஹனிபாவுடன் கே.ராணி, பி.வசந்தா, சரளா ஆகியோரும் எம்.முத்து இசையில் ஏராளமான இஸ்லாமிய பாடல்களைப் பாடியுள்ளனர். செனாய், வயலின், கீ போர்டு, தபேலா, டோலக் போன்ற குறைந்த இசைக்கருவிகளைக் கொண்டு எம்.முத்து வழங்கிய இசைவடிவம் உண்மையில் அதிசய வைக்கிறது.நாகூர் ஹனிபா பாடிய பாடல்களிலேயே மாஸ்டர்பீஸ் என்று சொல்லப்படுவது மயிலாடு துறையைச் சேர்ந்த கவிஞர் ஆர்.அப்துல் சலாம்

எழுதிய -
இறைவனிடம்
கையேந்துங்கள் - அவன்
இல்லையென்று
சொல்லுவதில்லை
பொறுமையுடன்
கேட்டுப் பாருங்கள் - அவன்
பொக்கிஷத்தை
மூடுவதில்லை...

எல்லா மதத்தினரும் விரும்பிக் கேட்கும் இந்தப் பாடலுக்கு இசை வழங்கியவர் பழம் பெரும் இசையமைப்பாளரான எம்.வி.வெங்கட்ராமன் என்று சொல்லப்படுகிறது. ஆனால், சிலர் இன்பராஜ் இசையமைத்ததாகக் கூறுகிறார்கள். ஆனால், 1976ம் ஆண்டு இப்பாடலுக்கு எம்.முத்து இசையமைத்து ரிக்கார்டாக வந்துள்ளது. நாகூர் ஹனிபாவின் ஓங்கி ஒலிக்கும் குரலில் இருக்கும் கம்பீரம் கேட்போரைக் கட்டிப்போடும். ஆனால், அதே நேரத்தில் அவர் சுருதியைக் குறைத்து பாடும் சில பாடல்கள் மெல்லிசையின் உச்சம் என்றே சொல்லலாம்.

அப்படியொரு பாடல், ‘கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள், நம் கண்மணியாம் பாத்திமாவின் சரிதம் கேளுங்கள்...’ பாடல். நாகூர் ஹனிபா இந்தப் பாடலைப் பாடப் பாட நாமும் அக்கதையைக் கேட்கத் துவங்கி விடுவோம். காரணம், ஹனிபாவின் குரலோடு ஒலிக்கும் எம்.முத்துவின்  மெல்லிசை.

தீன் கொடி நாட்டிய
தேவா  - இறைத்
தூதரே யா முஸ்தபா...
என்ற அழகிய பாடலின் மெட்டுக்குச் சொந்தக்காரரான எம்.முத்து, இருகுரலிசைக்காக போட்ட மெட்டு இன்றளவும் புகழப்படுகிறது. நாகூர் ஹனிபா,
பி.வசந்தா பாடிய அந்தப் பாடல் -
ஏகன் உண்மை
தூதரே
யா நபியே
யா ரசூலே
யா ஹபீபே
யா முஸ்தபா
எங்கள் சலாம்
எங்கள்
அன்பின் சலாம்...

இஸ்லாமிய பாடல்களுக்கு மட்டுமின்றி கிறிஸ்தவ பாடல்களுக்கும் எம்.முத்து இசை மீட்டியுள்ளார். எல்.ஆர்.ஈஸ்வரி, டேப் ராதாமாணிக்கம், சீர்காழி கோவிந்தராஜன், கே.ஜே.ஜேசுதாஸ் உள்பட பலர் அவரது இசையில் பாடியுள்ளனர். மலையாளத்தில் இஸ்லாமிய கீதங்களை ரேணுகா சங்கர், எம்.பி.உம்மர்குட்டி குரல்களில் எம்.முத்து இசையமைத்து வெளியிட்டுள்ளார்.

இத்தனை இனிய பாடல்களுக்கு இசையமைத்த எம்.முத்துவின் பெயர் திரையிசை உலகில் உதவி இசையமைப்பாளர் என்றே இன்றும் அறியப்படுகிறது. எவ்வளவு பெரிய வேதனை!

ப.கவிதா குமார்