ஆப்கன்: கல்லறை தேசத்தின் கதை!



மினி தொடர் 4

ஆப்கனை விட்டு அமெரிக்கா வெளியேறியதை பல்வேறு கருத்தியல் மற்றும் அரசியல் கோணங்களில் விளக்கலாம். குற்றம் சாட்டலாம் அல்லது பாராட்டலாம் .

ஆனால், இதில் எந்த தரப்புமே மறுக்க முடியாத இரண்டு முக்கியமான காரணங்கள் அடங்கியுள்ளன. அமெரிக்கா இதுவரை ஆப்கான் யுத்தத்தின் பொருட்டு செலவழித்த தொகை கிட்டத்தட்ட 2.2 டிரில்லியன் டாலர்.
இந்திய மதிப்பில் சொல்ல வேண்டும் என்றால் அமெரிக்கா இதுவரை ஆப்கானிஸ்தானில் இருந்த இருபது வருடங்களில் நாளொன்றுக்கு தோராயமாக 2000 கோடி ரூபாய் செலவழித்திருக்கிறது. இந்தப் பணத்தில் பாதியை செலவழித்தால் கூட அமெரிக்காவில் உள்ள அனைத்து பள்ளிக் குழந்தைகளுக்கும் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு முற்றிலும் இலவசமாக, மிகத் தரமான கல்வியை வழங்கமுடியும்.

ஆனால், இன்று ஒருவர் ஆப்கானிஸ்தானில் ஒரு சில கிலோமீட்டர் பயணம் செய்தால் கூட, இந்த நாட்டிலா தினமும் 2000 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது என்று பெருமூச்சு விடுவார். அந்தப் பணம் செலவளிக்கப்பட்ட சுவடே எங்கும் இருக்காது. இந்தப் போரில் செலவளிக்கப்பட்ட ஒவ்வொரு டாலரும் சராசரி அமெரிக்கன் பாக்கெட்டில் இருந்து வருவது. ஆற்றில் கொட்டினாலும் அளந்துதானே போட வேண்டும்? இந்த இருபது வருடத்தில் சாதிக்காத ஒன்றை இருபத்து ஒன்றாம் வருடத்தில் செய்து விடுவோம் என்று எந்த நம்பிக்கையுடன் ஓர் அதிபர் கூடுதல் நிதி கோர முடியும்?மற்றுமொரு காரணம், இதனைவிட விலைமதிப்பு மிக்கது - உயிர்.

கடந்த இருபது வருடங்களில் மொத்தம் 2 லட்சத்து 40 ஆயிரம் பேர் இந்தப் போரினால் உயிரிழந்திருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் 12 ஆயிரம் பேர் என்ற விகிதத்தில். இதில் அதிகம் பாதிக்கப்பட்டது ஆப்கன் பொதுமக்களே. யாரைக் காக்க படைகள் தொடர்ந்து களத்தில் நின்றார்களோ அவர்கள். அதுமட்டுமல்லாது, இந்தப் போரினால் இதுவரை அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறிய ஆப்கானியர்கள் எண்ணிக்கை மட்டுமே 25 லட்சத்தைத் தொடுகிறது.

இதில் உயிரிழந்த அமெரிக்க வீரர்கள் இரண்டாயிரத்து சொச்சம் பேர்தான் என்றாலும் ஒவ்வொரு கூடுதல் அமெரிக்க உயிரிழப்பும் அரசுக்கு புதிய நெருக்கடியே.
இப்படி எல்லா தரப்புக்குமே இழப்பென்றால் யாருக்குத்தான் இந்தப் போர்களை தொடர்ந்து நடத்துவதில் லாபம்? அது ஒரே ஒரு தரப்புதான் - ஆயுத உற்பத்தியாளர்கள்.
உலக அளவிலான ஒட்டுமொத்த ஆயுத ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்கு 37% . ஆயத ஏற்றுமதி தொடர்பான கறாரான சட்டதிட்டங்கள், கெடுபிடிகள் இருந்தாலும் உலகில் எங்கு சண்டை நடந்தாலும் எப்படியோ சுற்றி வளைத்து அமெரிக்க ஆயுதம் அங்கு நுழைந்து விடும்.

இன்றும் ஏமனில் நடக்கும் உள்நாட்டுப் போரில் அமெரிக்க ராணுவ வாகனங்கள், நம்ம ஊர் செகண்ட் ஹேண்ட் அம்பாசிடர்களைப் போல சரளமாக புழங்கிக்கொண்டுதான் உள்ளன்.
ஆனால், இது எதுவுமே அமெரிக்காவிடம் இருந்து அவர்கள் நேரடியாக வாங்கியதில்லை.Military - Industrial - Congressional Complex என்று ஒரு விஷயம் சுட்டுவார்கள். அதாவது ராணுவத்திற்கும், ஆயுதங்களை உற்பத்தி செய்து அளிக்கும் ஒப்பந்ததாரர்களுக்கும், அரசாங்கத்தில் திட்டங்களை வகுப்போருக்கும் உள்ள நெருக்கமான உறவைக் குறிக்கும் சொற்றொடர்.

இதில் உள்ள மூன்று தரப்புமே ஒன்றை ஒன்று சார்ந்து இயங்கும் நெருக்கமாக பிணைக்கப்பட்ட வலுவான தரப்புகள் என்பது கொஞ்சம் சிந்தித்துப்பார்த்தால் பிடிபடும்.
சண்டையே கூடாது, ராணுவமே அவசியமில்லை என்பதல்ல நான் சொல்வது. சமகால சர்வதேச அரசியல் சூழலில் அது சாத்தியமே இல்லை. ராணுவ பலம் என்பது கண்டிப்பாக ஒரு deterrant. பல சாத்தியமான அத்துமீறல்களை அது அளிக்கும் Show of Strength தடுத்திருக்கிறது. ஆனால், இப்படி பல பத்தாண்டுகளாக இழுபறியில் இருக்கும் ராணுவ நடவடிக்கையில் லாபமடையும் ஒரே தரப்பு ஆயுத உற்பத்தியாளர்கள் மட்டுமே.

அமெரிக்கா பின் லேடனையும், அல் கொய்தாவையும் அழிக்கும் நோக்கத்துடனேயே ஆப்கானுக்குள் நுழைந்தது. 2011ல் பின் லேடன் கொல்லப்பட்ட வரை கூட அந்த ஆக்கிரமிப்புக்கு ஒரு நியாயமும் தேவையும் இருந்தது எனலாம். அதன் பின் சடுதியில் வெளியேறியிருக்க வேண்டும். ஆனால், ஆப்கானிஸ்தானைக் கட்டமைத்தல், ஆப்கன் ராணுவத்தை பயிற்றுவித்தல் என்று Nation building வகை லட்சியத்தை வரிந்துகொண்டதுதான் ஒரு பெரிய சறுக்கல் என்று சொல்ல வேண்டும்.

அமெரிக்காவும் ஆப்கானும் chalk & cheese போல முற்றிலும் வேறான, கிட்டத்தட்ட எதிரும் புதிருமான சமூகங்கள். இவ்விரண்டும் ஒன்றை ஒன்று அதே தளத்தில் நேருக்கு நேர் நின்று நோக்கும் தன்மை கொண்டவை அல்ல. இவை இருவேறு உலகங்கள். இந்த ‘ஊர் திரும்புதலை’ அமெரிக்கா கற்ற கடினமான பாடமாகக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். அமெரிக்காவின் இதே அணுகுமுறை தென் கொரியாவை அவர்கள் ஆக்கிரமித்த போது பயனளித்தது. ஆனால், ஆப்கான் தென் கொரியா அல்ல.

இம்முறை தாலிபான் அரசின் கீழ் ஆப்கான் எப்படி செயல்படப்போகிறது என்று தெரியவில்லை. போனமுறைக்கும் இந்த முறைக்கும் பெரிய வித்தியாசம் இருக்கும் என்று தோன்றவில்லை.

ஆனால், உலகம் மாறிவிட்டது. கடந்த இருபது வருட காலத்தில் ஓரளவு கல்வி கற்ற, உலகம் அறிந்து ஒரு புதிய தலைமுறை ஆப்கனில் தோன்றியுள்ளது. அவர்கள் மீண்டும் பழையபடி தாலிபானிய கெடுபிடிகள் வந்தால் எப்படி எதிர்கொள்வார்கள் என்று அச்சமாக இருக்கிறது.

ஆப்கானின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்றும் சொல்ல முடியவில்லை. சராசரி மக்கள் வலுவிழந்து, நம்பிக்கை இழந்து விதி விட்ட வழி என்றிருக்கும் ஒரு சூழலில் வளர்ச்சி குறித்தோ எதிர்காலம் குறித்தோ பொருட்படுத்தும்படி எதையும் நாம் சொல்லிவிட முடியாது.இப்படிச் சொல்வது சற்று குரூரமாகத் தோன்றலாம். ஆனால், அவர்களின் எதிர்காலத்தை ஆப்கன் மக்களாக சேர்ந்து முடிவு செய்வதுதான் சரியாக வரும் என்று தோன்றுகிறது. The pendulam has to swing back.வெளியேறுவது வேறு. ஆனால், எது எப்படியானாலும் சர்வதேச சமூகம் ஆப்கனை கைவிட்டுவிடக்கூடாது என்றே நினைக்கிறேன். தாலிபான் வேறு ஆப்கான் வேறு என்ற புரிதல் முக்கியம்.

மற்ற நாடுகள் ஏதோ ஒரு விதத்தில் தாலிபான் அரசுடன் தொடர்புகளைப் பேணுவதே ஆப்கன் மக்களுக்கும் நல்லது. சிறு அழுத்தங்கள், பேரங்கள் மூலமாவது ஆப்கான் மக்களுக்கு சில நல்லவைகளைச் செய்ய வாய்ப்பு கிட்டலாம்.உடனடியாகச் செய்வதென்றால் - ஆப்கானில் அமெரிக்க மற்றும் அதன் நேச நாடுகளுக்கு உதவி செய்த ஆப்கானியர்களை உடனடியாக பாதுகாப்பாக வெளியேற்றி புகலிடம் அளிக்க வேண்டும். பெரிதும் ரிஸ்க் எடுத்து அமெரிக்கர்களுக்கு உதவியோருக்கு கைமாறு செய்யும் முக்கிய தார்மீக கடமை அமெரிக்காவுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் உள்ளது.

அதேபோல போரில் ஈடுபட்ட நாடுகளுக்கு அகதிகளாக வரும் ஆப்கானியர்களை முடிந்த அளவு ஏற்கும் கடமையும் உள்ளது.மக்கள் நலம் நாடும் அரசுகள் இந்த பொறுப்பில் இருந்து தம்மை முற்றாக விடுவித்துக்கொண்டால், அதிகாரத்தை நாடும் அரசுகள் ஆப்கனை சூழும். அந்த இருளுக்குள் ஆப்கான் விழுவது யாருக்குமே நல்லதல்ல.

(தொடர் முற்றும்... ஆனால், ஆப்கன் பிரச்னை..?)
 
கார்த்திக்வேலு