கடந்த 30 ஆண்டுகளாக சிறுபான்மை சமூகத்தின் மத்தியில் கலாசாரத்திற்கும், மதத்திற்கும் வித்தியாசம் தெரியாத போக்கு உருவாகியிருக்கிறது...



அழுத்தமாகச் சொல்கிறார், போட்டியின்றி வெற்றி பெற்ற திமுக மாநிலங்களவை உறுப்பினரான எம்.எம்.அப்துல்லா

திண்ணைப் பிரசாரம், தெருமுனை விளக்க பொதுக்கூட்டம், பயிற்சிப் பட்டறை, படிப்பகங்கள் என அன்றைய சூழலில் நிலவிய அனைத்தையும் தன் கொள்கைக்கான பாசறைகளாக மாற்றி தொடக்ககாலத்தில் திமுக இயங்கியது. அன்று மட்டுமல்ல... இன்றும் இந்த வழிமுறைதான் திமுகவின் பாணி.வேறு எந்தக் கட்சிக்கும் இல்லாத சிறப்பு இது. அறிவியலும் தொழில்நுட்பங்களும் வளர வளர அதற்கேற்ப தன் கட்சியின் பாசறைத் தளங்களையும் விரிவுபடுத்துவதில் இந்திய ஒன்றியத்துக்கே திமுகதான் முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருகிறது.அந்த வகையில்தான் சில ஆண்டுகளுக்கு முன் திமுக சார்பில் தகவல் தொழில்நுட்ப அணி உருவாகியது.

இந்தத் தகவல் தொழில்நுட்ப அணியின் ஓர் அங்கமாகத் திகழ்ந்து கட்சியின் கொள்கைகளை சமூகவலைத்தளங்கள் வழியே இளைய தலைமுறைகளுக்கு எடுத்துச் சென்றதுடன் அவர்களையும் கட்சி உறுப்பினர்களாக மாற்றி வளர்த்தெடுத்ததில் முக்கிய பங்காற்றிய எம்.எம்.அப்துல்லாதான் இப்போது திமுக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வாகியிருக்கிறார்.
அரசியல் பாதைக்கு திமுகவை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?அப்பா புதுக் கோட்டையில் பிசினஸ்மேன். அங்கு முதல் எலக்ட்ரிக்கல்ஸ் கடையை 1956லேயே ஆரம்பித்தவர். பேர் சொன்னா எல்லோருக்கும் தெரிகிற மாதிரி கடை. வீட்டில் யாருக்கும் எந்தவிதமான அரசியல் ஈடுபாடும் கிடையாது.

அப்படி இருக்க, எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்தவர் கீரை தமிழ்ச்செல்வன். புதுக்கோட்டையில் பெரிய தலைவர். அவருடைய பையனும் நானும் சின்ன வயதிலிருந்தே நெருங்கிய நண்பர்கள். ஒன்றாகப் படித்து வளர்ந்தோம். கீரை தமிழ்ச் செல்வன் நிறைய படிப்பதால் அதிக அளவில் புத்தகங்கள் வைத்திருப்பார். அங்கு விளையாடப் போகும் நேரங்களில் புத்தகங்களை எடுத்து படிப்பேன். அந்த நேரங்களில் அவரைப் பார்க்க ஆட்கள் வருவதும் போவதுமாக இருப்பார்கள். வருபவர்களுக்கு நல்லது செய்பவராக அவர் இருந்தார். அப்படி நல்லது செய்ய வேண்டுமென்றால் அரசியலில் ஈடுபட வேண்டும் என்பதை கண் முன் நிறுத்தினார். இந்த மாதிரி ஒரு நல்ல மனுஷன் இருக்கிறார் என்றால் அந்த இயக்கம் நல்ல இயக்கமாகத்தான் இருக்கும் என்கிற எண்ணம் எட்டாம் வகுப்பு படிக்கும் போதே தோன்றியது. அவர் இருந்த இயக்கம் திமுக.

இப்படித்தான் அரசியல் மற்றும் புத்தக வாசிப்பிற்கான முகவரியாக கீரை தமிழ்ச் செல்வன் இருந்தார். அவர் மூலமாகவே பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போது நகர மாணவர் அணியில் அமைப்பாளராக பொறுப்பு வந்தது. அவரைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர் பெரியண்ணன் அரசு போன்றோரின் வழிகாட்டலில் கிளைச்செயலாளராகி, 32 வயதில் பொதுக்குழு உறுப்பினராகி, சிறுபான்மை அணியில் மாநில துணைச் செயலாளர், ஐடி விங் மாநில துணைச் செயலாளர், என்ஆர்ஐ விங்கில் துணை செயலாளர் என தொடர்ந்து இப்போது மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வாகியுள்ளேன்.  சமூகவலைத்தளங்களில் எப்பொழுது முதல் இயங்குகிறீர்கள்..?

இணையத்தில் தமிழ் அறிமுகமான காலகட்டத்திலேயே இணையத்திற்குள் வந்துவிட்டேன். யாகு மெயிலில் ஆரம்பித்து, 2003 காலகட்டங்களில் வலைப் பூக்கள் (பிளாக்), அடுத்து கூகுள் பஸ் - பிளஸ், ஃபேஸ்புக், டுவிட்டர் என தொடர்ச்சியாக ஒவ்வொரு தொழில்நுட்பம் வர வர அதனுடைய வடிவத்திற்கு ஏற்றாற்போல் நானும் மாறிக் கொண்டிருக்கிறேன்.
எந்த விஷயத்திலும் நிலைத்த தன்மை அவசியம். அரசியலாக இருந்தாலும் சரி, மற்ற துறைகளாக இருந்தாலும் சரி. வடிவம் மாறினாலும், நான் ஏற்றுக் கொண்ட கருத்தில், அந்த கருத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்கிற நோக்கில் தொடர்ந்து இயங்குகிறேன்.

‘சிறுபான்மையினருக்கு என்ன செய்தது திமுக?’ புத்தகம் எழுத என்ன காரணம்?
‘திமுக ஓட்டு வங்கியாகத்தான் சிறுபான்மையினரைப் பயன்படுத்திக் கொண்டிருந்தது, அவர்களுக்காக ஏதும் செய்யவில்லை’ என்கிற குற்றச்சாட்டினை தொடர்ந்து வைத்துக் கொண்டிருந்தார்கள்.

எந்த ஒரு விஷயமும் ஆவணப்படுத்தினால்தான் அது சாட்சியாகும். அண்ணா, பெரியார், கலைஞர் எழுதியது எல்லாம் சின்னச் சின்ன புத்தகங்களாக இருக்கும். அவை அந்த நாட்களின் ஆவணங்கள். அவர்கள் எழுதிய புத்தகங்களை விட அவர்கள் வெளியிட்ட ஏடுகள்தான் அதிகம்.

முன்பெல்லாம் இந்த மாதிரி புத்தகங்களை நூலகங்களில் தேடிப் போய் பார்க்க வேண்டியிருந்தது. ஆனால், இன்று இணையம் என்ற ஒன்று வந்துவிட்டது. எனவே சாட்சிகளை இணையத்தில் ஆவணப்படுத்துகிறோம்.  இஸ்லாமியர்களை இட ஒதுக்கீட்டில் கொண்டு வந்ததே திமுகதான். இந்த விஷயமே தெரியவில்லை என்பது வேதனையாக இருந்தது. 15 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் ஒரு நாளிதழை எடுத்தால், ஏதோ ஓர் இடத்தில் காவல் துறையால் பெட்டி கேஸ் போட்டு கைது செய்யப்பட்ட ஐந்து பேரில் இருவரது பெயர் இஸ்லாமியர் பெயராக இருக்கும். இன்னும் கொஞ்சம் கூர்ந்து பார்த்தால் அவர்களில் இருவர் பட்டியல் சமூகத்தவராக இருப்பார்கள்.

இதை யார் வேண்டுமானாலும் ஆய்வுக்கு எடுக்கலாம். இப்போது நிலைமை அப்படியில்லை.3.5% இட ஒதுக்கீடு வந்தபின் கான்ஸ்டபிளில் ஆரம்பித்து எஸ்ஐ, இன்ஸ்பெக்டர், டிஎஸ்பி... என யாரோ ஓர் இஸ்லாமியர் காவல்துறையில் இருக்கிறார். கேள்வி கேட்க முடியாத சிறுபான்மையினர் இருவரை கணக்குக்கு பிடித்து வரும் போது, அங்கிருப்பவர் ‘இவர் நல்லவர் ஆச்சே, இவரை எதுக்கு கூட்டிட்டு வர்றீங்க’ என உண்மையுடன் கேட்க ஆரம்பித்ததும் ‘இப்படி பிடித்து வருவது’ குறைந்தது.இப்படியாக ஒரு நவீன குற்றப் பரம்பரை உருவாக முயற்சித்ததை தலைவர் கலைஞர் கொண்டு வந்த இட ஒதுக்கீடு தடுத்தது.

இதுபோன்ற எண்ணற்ற விஷயங்களை உணராமல் மீண்டும் மீண்டும் ‘திமுக என்ன செய்தது’ என்ற கேள்வி வருவதால் இந்தப் புத்தகத்தைக் கொண்டு வந்தேன். PDF வடிவில் இணையத்தில் எளிதாக இப்புத்தகம் கிடைக்கிறது. இட ஒதுக்கீடு மூலமாக கல்வி கற்ற ஒரு தலைமுறை அதற்கு எதிராக இன்று சமூக வலைத்தளங்களில் பேசிவருகிறதே... திமுக அவர்களை அரசியல்படுத்தத் தவறிவிட்டதா?இந்திய அரசியலைப் பொறுத்தவரை 1991க்கு முன் - பின் என்றுதான் பிரிக்க வேண்டும்.

உலகமயமாதலுக்குப் பின் படிப்படியாக எல்லாமே வணிகமயமாக மாறியுள்ளது. 91க்கு முன் படிப்பு என்பது பெரும்பாலும் அரசு நிறுவனங்களைச் சார்ந்திருந்தது. அதனால் இடம் கிடைப்பதற்கான கஷ்டம் இருந்தது. இட ஒதுக்கீட்டின் அர்த்தம் அன்றைக்கு இருந்த மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் புரிந்தது. பத்து பேர் உயர்சாதியினர் இருந்த இடத்தில் எனக்கான ஓர் இடமும் அங்கு இருக்கிறது என அந்த இடத்தைப் பிடிப்பதன் அருமை தெரிந்தது.

91க்குப் பிறகு சுயநிதிக் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் பணம் இருந்தால் கிடைத்துவிடும் என்கிற நிலை வந்துவிட்டது. அதே போல் அரசு வேலை வாய்ப்புகளும் குறைந்துவிட்டன.

1991ல் வணிகமயமானபின் எல்லாமே பணத்தாலும் என் அறிவினாலும் கிடைக்கிறது என்று நினைக்கும் ஒரு தலைமுறையையே உருவாக்கிவிட்டது. அதனால் இட ஒதுக்கீட்டின் அவசியத்தை இன்றைய தலைமுறையினரிடம் திராவிட இயக்கங்கள் கொண்டு போய்ச் சேர்க்கவில்லை என்பதை ஒப்புக்கொள்ள மாட்டேன்.

இன்றும் இட ஒதுக்கீட்டின் அவசியம் குறித்து திராவிட இயக்கங்கள் சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றன. அதைக் கேட்டுத் தெரிந்து கொள்கிற இடம் மாறி இருக்கிறது. அதையும் புரிந்து கொள்ள வேண்டும். மேடை போட்டுப் பேசுவது, பத்திரிகையில் எழுதி கொண்டு போய் சேர்ப்பது என்கிற வடிவங்கள் மாறியுள்ளன. செய்திகள் பெருவாரியாக சமூக வலைத்தளங்களில் போய்ச் சேர்கிறது. அதுவும் போக 2000ம் ஆண்டு துவக்கத்திலும் எழுத்து பூர்வமாக இருந்தது இன்று காட்சிபூர்வமாக மாறியுள்ளது. இதற்கேற்ப அந்தந்த தளங்களில் திமுகவினர் தங்கள் கொள்கைகளை பிரசாரம் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

சமீப ஆண்டுகளாக இணையத்தில் புழங்கிக் கொண்டிருப்பவர்கள் பெரியார் டி-ஷர்ட் போட்டுக் கொள்கிறார்கள். ‘கோ பேக் மோடி’ என்பதை டிரெண்ட் ஆக்குகிறார்கள். ஏன், 2014ல் மோடி இருந்தாரே, அவர் 2016,17லும் வருகிறார். அப்போதெல்லாம் இல்லாத ‘கோ பேக் மோடி’ எப்படி இந்த மூன்று ஆண்டுகளில் விஸ்வரூபம் எடுத்தது..! காரணம், காலத்துக்கு ஏற்ற தளங்களில் திமுக தொடர்ந்து பிரசாரம் செய்து வருவதுதான். ஒன்றிய அரசில் பாஜக மிகப் பெரும்பான்மை பலத்துடன் இயங்கி வரும் சூழலில் சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த உங்களின் செயல்பாடு மாநிலங்களவையில் எவ்வாறு இருக்கும்..?

இதற்கான வழிகாட்டலை எங்கள் தலைவரும் இன்றைய தமிழ்நாட்டு முதல்வருமான திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் தெளிவாக வரையறுத்திருக்கிறார். ஒரு கருத்தாக்கத்தை எவ்வாறு பொதுத் தளத்தில் எதிர்க்கிறோமோ அப்படித்தான் சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் எதிர்க்க வேண்டும் எனும் கலைஞரின் அடிச்சுவட்டில் நடந்தபடி எங்களுக்கு கற்பித்திருக்கிறார். அதன்படிதான் அனைத்து திமுகவின் சட்டமன்ற, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களும் நடக்கிறோம்; நடப்போம்.தமிழ்நாட்டு அளவில் சிறுபான்மை சமூகத்தின் அரசியல், சமூக உரிமைகள் குறித்த உங்களது பார்வை?

கடந்த முப்பது ஆண்டுகளாக சிறுபான்மையினர் சமூகத்தின் மத்தியில் கலாசாரத்திற்கும், மதத்திற்கும் வித்தியாசம் தெரியாத போக்கு உருவாகியிருக்கிறது. கலாசாரம் என்பது உடை, உணவுப் பழக்கங்கள், சில வாழ்வியல் நடைமுறைகளை சார்ந்தது.

மதம் என்பது ஆன்மீகம். இறை வழிபாடு, இறைத் தத்துவம் என்பதற்கும் தனக்குமான தொடர்பு என்பது மதம். அரபு நாடுகளில் செய்வதுதான் இஸ்லாம் என்கிற தவறான ஒரு புரிதல் வந்திருக்கிறது. உதாரணமாக அரபு நாடுகளில் நடக்கும் திருமணங்களில் வாழை மரம் இருக்காது. மாவிலைத் தோரணங்கள் கட்டப்படுவதில்லை. எனவே இஸ்லாம் திருமணம் என்றால் வாழை மரம் கட்டக் கூடாது என்கிறார்கள் சிலர். இதற்கு அவர்கள் சொல்லும் காரணம், வாழை மரம்இந்துக்கள் கட்டுவது என்பது.

உண்மையில் வாழை மரம் கட்டுவதும் மாவிலைத் தோரணங்களும் தமிழர்களின் கலாசார அடையாளங்கள். அது இந்துக்களின் அடையாளம் என்றால் தமிழ்நாட்டைக் கடந்து ஏன் இந்தியா முழுவதும் வசிக்கும் இந்துக்கள் இம்முறையைப் பின்பற்றுவதில்லை..?

மொழியும் கலாசாரமும் சார்ந்த விஷயங்களை மதத்தோடு குழப்பும்போது பொதுத்தளத்தில் இருந்து விலகி தனியாக நிற்க ஆரம்பிப்போம். சிறுபான்மை என்று சொல்வதே முதலில் தவறு. இந்துவும் சரி முஸ்லீமும் சரி கிறிஸ்தவர்களும் சரி... தலைமுறை தலைமுறையாக தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் அனைவரும் தமிழர்தான். அனைவரும் திராவிடர்கள்தான். இறை நம்பிக்கை - வழிபாடுகளில் மட்டுமே வேறுபடுகிறோம்.

செய்தி: அன்னம் அரசு

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்