சொல்லத்தான் நினைக்கிறேன்
அவனுக்கான டோக்கன் எண் பெற்றுக்கொண்டு காத்திருப்போர் பகுதியில் இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்தான் தியாகு.கையில் இருந்த மூன்றாம் எண் டோக்கனைப் பார்த்துவிட்டு தலை நிமிர்ந்தபோது, எதிரே சுவரில் பொருத்தப்பட்டிருந்த தொலைக்காட்சியில் ஒரு பெண் பற்களை நறநறவென்று கடித்தபடி பேசிக்கொண்டிருந்தாள். நிச்சயம் நடிப்புக்காக செய்யப்படும் பாவனையாகத்தான் இருக்கும். நிஜவாழ்வில் எப்போதும் அப்படிக் கடித்தபடி பேசிக்கொண்டிருந்தால், இந்நேரம் இரண்டு மூன்று பற்களாவது விழுந்திருக்கும்.
 காத்திருப்போர் பகுதிகளில் இந்த மாதிரி தொலைக்காட்சியைப் பொருத்துவது இப்போதெல்லாம் வெகு சகஜமாகக் காண முடிகின்றது. மற்ற இடங்களிலெல்லாம் அதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எதுவானாலும், பார்ப்பவர்க்கு அது ஒரு நேரம் கடத்தும் செயல். ஆனால், மருத்துவமனை போன்ற இடங்களில், அதுவும் மனம் சார்ந்த சிகிச்சைக்காக வரும் ஆட்களின் மனங்களை குஷிப்படுத்தும் நிகழ்ச்சியாக வைக்காமல் இதுபோன்ற பற்களைக் கடித்தபடி வசனம் பேசும் தொடர்கள் ஓடிக்கொண்டிருக்குமாறு செய்வது சரியா..?
 உள்ளே இருக்கும் டாக்டருக்கு இதெல்லாம் தெரியுமா என்று தெரியவில்லை.டாக்டர் இருந்த அறையின் கதவு திறந்து மூடும்போது தெரிந்த முகத்தில் அவ்வளவு கனிவு சாந்தம். அந்தக் கனிவுக்கும் சாந்தத்துக்கும் அங்கு வந்திருந்த நோயாளிகள் கூட்டம் நிச்சயம் குறைவுதான். ஒருவேளை அநேகம் பேர் மனதிற்கு எதற்கு ஆலோசனை அல்லது சிகிச்சை என்று வருவதே இல்லையோ? இப்போது, தான் வந்திருப்பதே கூட சிகிச்சைக்காகவா என்று நினைத்த தியாகு அப்படியே எழுந்து போய்விடலாமா என்று கூட நினைத்தான்.
அப்போது டாக்டர் அறைக்கதவு திறந்து, ஒருவர் வெளியேற, அந்த இடைவெளியில் தியாகுவால் டாக்டரை நன்றாகப் பார்க்க முடிந்தது. தானியங்கி கதவு மூடிக்கொள்ளும் முன் இரண்டாவது டோக்கன் ஆள் உள்ளே நுழைந்தான்.இப்போது அந்த வரவேற்பறையில் தியாகு மட்டும் தனியாக உட்கார்ந்திருந்தான். உள்ளே போன ஆள் வெளியே வர எப்படியும் ஒரு இருபது நிமிடங்களாவது ஆகும். அதற்கு மேலும் ஆகலாம். இப்போது கூட தாமதமில்லை. அமைதியாக எழுந்து வெளியே போய்விடலாம். சுந்தரியிடம் சொல்லாமல் வந்திருந்தால் கிளம்பிப் போயிருக்கலாம்.
“வணக்கம் டாக்டர்...’’ “வணக்கம்... உட்காருங்க... சொல்லுங்க...” “என் பேர் தியாகு. ஒரு கன்சல்டிங் கம்பெனியில டிசைன் எஞ்சினியரா ஒர்க் பண்றேன்...” “டிசைன்னா எந்த மாதிரி?”
“ப்ராஜக்ட்ஸ் டிசைன். அதுல சிவில் சம்பந்தப்பட்ட எல்லா டிசைனும்...” “சரி, விசயத்துக்கு வாங்க. என்ன உங்க பிரச்னை?”
“முதல்ல அது பிரச்னையா இல்லையானு தெரியல டாக்டர். நடந்ததை எல்லாம் அப்படியே சொல்றேன். அப்புறம் நீங்க சொல்லுங்க அது உண்மையிலேயே பிரச்னைதானான்னு?” “….”“நான் சென்னை வந்து ஒரு வருஷம்தான் ஆவுது டாக்டர். இதுக்கு முன்னால ஒரு மூணு வருஷம் அயல்தேசத்துல வேலை செஞ்சுட்டு இருந்தப்போ நடந்தது இப்ப நான் சொல்லப்போறது எல்லாம்...”“அந்த அயல்தேசம்?”
“துபாய்...” “சரி, மேல சொல்லுங்க...”“என் முதல் கம்பெனி ஒரு ஜப்பான் கட்டுமான நிறுவனம். அதில டிசைன் வேலைக்கு வாவென்று சொல்லி வரவழைக்கப்பட்டேன். ஆனால், கொடுக்கப்பட்ட வேலையோ பொருட்கள் வாங்கும் கண்ட்ரோல் டிபார்ட்மெண்டில். அதுகூட பரவாயில்லை... ஒருமாதிரி சமாளித்துவிடலாம் என்று இருந்த என் நினைப்பில் மண் அள்ளிப் போடுவதுபோல இருந்தவன், அவன் பெயரை... ஒரு மாங்கா மடையன் என்று வைத்துக்கொள்வோம். அவன் பேரை இப்ப நினைக்கக்கூட எனக்குப் புடிக்கலை. அப்படி ஒரு டார்ச்சர்...” “அப்படி என்ன பண்ணுவான்..?”
“கத்துவான்... எல்லாத்துக்கும் கத்துவான். நம்ம சைடு தப்பு இருக்கறப்போ கத்துனா பொறுத்துக்கலாம். நிறைய நேரம் எதுக்கு கத்தறான்னே தெரியாது...’’ “சரி...”“எனக்கு முன்னால அந்த வேலைக்கு வந்த மூணு பேர் ஒரே மாசத்துல வேலையை விட்டுட்டு போய்ட்டாங்களாம். அந்த அளவுக்கு அவன் டார்ச்சர்...” “நீங்க எவ்வளவு நாள் தாக்கு...” “அது இப்ப முக்கியம் இல்ல டாக்டர்...” “சரி... சொல்லுங்க...”
“நான் அந்த வேலையில ஒண்ணரை வருசத்துக்கு மேல வேலை செஞ்சேன். ஆனா, அந்த ஒண்ணரை வருசமும் அவன் டார்ச்சரை நினைச்சி மனசுக்குள் வருத்தப்படாத நாளே இல்லை. திடீர்னு ஒரு மூணு நாளா அவன் வேலைக்கு வரக் காணோம். ஹெட் ஆபீஸ்ல வேலைக்கு அனுப்பிட்டாங்கன்னு பேசிக்கிட்டாங்க. இது முதல் சம்பவம். அடுத்த சம்பவம் ஒரு வருஷம் கழிச்சு நடந்துச்சு...”“…” “ஏறக்குறைய அடுத்த சம்பவமும் அதே மாதிரி ஒருத்தனால... ஆனா, இவன் வேற நாடு...””இவனையும் நாடு கடத்திட்டாங்களா?””இல்லை டாக்டர்... வேற துறைக்கு இன்சார்ஜா... எனக்கு சம்பந்தமே இல்லாத துறைக்கு... மாத்திட்டாங்க...’’“சரி... உங்க பிரச்னை என்னானு...”“சொல்றேன் டாக்டர்... இன்னும் ரெண்டு மூணு இருக்கு... மொத்தமா... எல்லா சம்பவங்களையும் வச்சு பார்த்ததுல... ஒண்ணு நல்லா தெரியுது டாக்டர்... நான் மனசு நொடிஞ்சு ஃபீல் பண்ணினா... எதிர்த்தரப்பு ஆளுக்கு ஏதாவது ஒண்ணு நடந்துருது...’’ “…”
“நேரா விசயத்துக்கு வந்திர்றேன் டாக்டர்... நான் ஒரு பொண்ணை விரும்புறேன்...” “சரி...”“ஆனா, அவ அவங்க அப்பாவுக்கு ரொம்ப பயப்படுறா... ‘இப்ப சொல்றேன், அப்ப சொல்றேன்... அவர் ஒரு ஹார்ட் பேஷண்ட்..’. அப்படினு சொல்லிட்டு இருக்காளே தவிர, தைரியமா அவர்கிட்ட பேசற மாதிரி தெரியல...’’“நீங்க போய் பேச வேண்டியதுதானே?”“அதுக்கும் விடமாட்றா... அவருக்கு ஏதாவது ஆயிடுமாம்... இது ஒரு வருசமா நடந்துட்டு இருக்கு டாக்டர்... எனக்கு என்னன்னா... இதுவரைக்கும் நடந்த, நான் சொன்ன சம்பவங்களை மாதிரி... என்னோட மனவருத்தம்... அவருக்கு ஏதாவது நடந்துருமோனு?” “இதெல்லாம் என்கிட்டே ஏன் சொல்றீங்கன்னு தெரியல... நான் என்ன செய்ய முடியும்னு?” “செய்ய முடியும் டாக்டர்...”
“எப்படி..?” “பொண்ணு பேர் சுந்தரி...” “யூ மீன்..?”“எஸ்... உங்க அண்ணன் மகள் சுந்தரியேதான்...” “நீங்க இங்க வர்றது அவளுக்குத்...”“தெரியும் டாக்டர்... இதெல்லாம் ஏன் பண்றேன்னு உங்களுக்கு..?’’ “புரியுது... எங்க சுந்தரி இப்பிடி... எனக்கே இது கொஞ்சம் ஷாக்தான்... நான் அவகிட்ட பேசறேன்... நீங்க கிளம்புங்க...” “சுந்தரி...”
“சொல்லுங்க சித்தப்பா...” “இப்பதான் நீ சொன்ன பையன் வந்துட்டு போனான்...” “ஆள் எப்படி?”“இன்ஜினீயர் வேலையைவிட்டுட்டு கதை எழுத சொல்லு... நல்லாவே கதை விடறாப்ல...” “…..”“எனக்கு ஓகே. உங்க அப்பன்கிட்ட எப்படி கதாசிரியரை அறிமுகப்படுத்தறதுன்னுதான் தெரியல. பார்ப்போம்...” அவர் சுந்தரியின் அப்பாவிடம் எதுவும் சொன்னமாதிரி தெரியவில்லை.
தியாகு சொன்னமாதிரியும் எதுவும் நடக்கவில்லை. மாறாக வேறொன்று நடந்தது.அடுத்த முறை ஒரு வெளிநாட்டு அசைன்மென்ட்டில், தியாகு போய்த் திரும்ப ஆன நான்கு மாதத்தில் சுந்தரிக்கு வேறொருவருடன் திருமணம் நடந்து முடிந்திருந்தது.
- செல்வராஜ் ஜெகதீசன்
|