பாக்கெட் உணவுகளை உண்பவரா... இந்த 8 பக்கங்கள் உங்களுக்குத்தான்!



ஃபைவ் ஸ்டார் ஹோட்டல், ஃபோர் ஸ்டார் கார், த்ரீ ஸ்டார் ஏசி... மாதிரி இனிமேல் பாக்கெட் உணவுகளுக்கும் விரைவில் ஸ்டார் ரேட்டிங் முறை வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இந்தியாவின் உணவுத் தரத்தை கண்காணித்து கட்டுப்படுத்தும் அமைப்பு, ‘எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ’ (FSSAI) என்ற உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம். பாக்கெட் உணவுகள் குறித்து இந்தியாவில் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில்தான் இப்படிப்பட்ட முடிவுக்கு வந்திருக்கிறது ஆணையம்.

நுகர்வோர் அமைப்புகள் இந்த ஸ்டார் ரேட்டிங் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்கிறது ஆணையம். ஆனால், இந்தியாவில் அண்மைக்காலமாக சைக்கிள் கேப்பில் பல விஷயங்கள் சட்டமாகியதுபோல இதுவும் கைமீறிப்போகலாம் என்பதற்காக நுகர்வோர் அமைப்புகள் கடுமையாக இந்த தீர்மானத்தை எதிர்த்து வருகிறார்கள்.  
பொதுவாக இந்திய பாக்கெட் உணவுகளின் பின்பக்கத்தில் அந்த உணவில் உள்ள இடுபொருட்கள் (ingredients) அல்லது ஊட்டச்சத்து (nutrition) பற்றிய பட்டியல் விவரங்கள் யாருக்குமே புரியாத மொழியில்  அச்சிடப்பட்டிருக்கும்.

இதை எல்லாம் ஒரு நுகர்வோன் படித்துப் பார்த்து ஒரு பாக்கெட் உணவை வாங்கவேண்டுமென்றால் ஒருவர் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில்தான் படித்து வரவேண்டும்.
இதை கருத்தில் கொண்ட ஆணையம், இந்தப் பிரச்னை குறித்து ஆராயும்படி அகமதாபாத்தில் உள்ள ‘இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்’ (ஐ.ஐ.எம்) நிறுவனத்தை அண்மையில் கேட்டுக்கொண்டது. அதனடிப்படையில் சுமார் 20 ஆயிரம் நுகர்வோர்களிடம் சர்வே எடுத்தது ஐஐஎம்.

இந்த சர்வேயின்படி பாக்கெட்டின் பின்புறமுள்ள இடுபொருட்களின் தராதரத்தின் அடிப்படையில் பாக்கெட்டின் முன்பக்கத்தில் ஸ்டார் முறையைப் பின்பற்றினால் பாக்கெட் உணவுகளின் கெடுதல்களை ஒழிக்கலாம் என்றும் சிபாரிசு செய்தது ஐஐஎம். இந்த ஸ்டார் முறை ½ ஸ்டார் முதல் 5 ஸ்டார் வரை இருக்கலாம் என்றும் குறிப்பிட்டிருந்தது. அதுவும் கம்பெனிகளே இந்த ஸ்டார் முறையைப் பின்பற்றவேண்டும் என்பதுதான் காமெடியின் உச்சகட்டம்.

பொதுவாக இடுபொருள் பட்டியலில் ஊட்டச்சத்துகளின் மளிகை விவரங்கள்தான் இருக்கும். உதாரணமாக, புரோட்டின் எவ்வளவு, கார்போஹைட்ரேட் எவ்வளவு, கொழுப்பு எவ்வளவு... போன்ற விவரங்கள்தான் இருக்கும். இவையும் மிக டெக்னிக்கலான வார்த்தைகளில்தான் அச்சிடப்பட்டிருக்கும். உதாரணமாக, ‘ப்ரிசர்வேடிவ்’ எவ்வளவு என்று எழுதப்படலாம். ப்ரிசர்வேடிவ் என்றால் ஒரு உணவு கெட்டுப்போகாமல் இருக்க சேர்க்கப்படக்கூடிய இரசாயனம். இந்த இரசாயனம் நம் உடலுக்கு என்ன செய்யும் என்று யாருக்குமே தெரியாது.

‘‘இவை ஒரு பாக்கெட் உணவின் முழுமையான தராதரத்தைக் காட்டாது. ஊட்டச்சத்து என்பது பாதி கிணறு தாண்டுவது மட்டுமே. ஓர் உணவின் கெடுதியைத் தீர்மானிப்பது அதில் உள்ள உப்பு, சர்க்கரை, கொழுப்புதான். இவற்றுக்கு எச்சரிக்கை செய்தால் மட்டுமே பிரச்சனை தீரும்...’’ என்று ஆணையத்தின் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் பொதுசுகாதார வல்லுனர்களும், நுகர்வோர் அமைப்பினரும். இது குறித்து நிபுணர்களிடம் பேசினோம்.

‘‘உப்பும், சர்க்கரையும், கொழுப்பும்கூட ஊட்டச்சத்துதான். ஆனால், இவற்றை கம்பெனிகள் குறிப்பிடுவதே இல்லை. இவை உணவில் கொஞ்சம் கூடினாலும் ஆபத்தானதுதான்.
ஆகவேதான் சிலி போன்ற நாடுகளில் இந்த கெடுதியான 3 பொருட்கள் அடங்கிய பாக்கெட் உணவுகளில் சில சுருக்கமான அடையாளங்களை இடுகிறார்கள்.

இது சிலியில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்திருப்பதாக பல ஆய்வுகள் சொல்கின்றன. ஆனால், இந்தியாவில் இந்த விஷயம் விக்ரமாதித்தன் கதையாக நீண்டுகொண்டே செல்கிறது...’’ என்று ஆரம்பித்தார் ஜார்ஜ் செரியன். இராஜஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் ‘கட்ஸ் இன்டர்நேஷனல்(Cuts International)’ என்ற உலகளாவிய நுகர்வோர் உரிமைக்கான அமைப்பின் இயக்குநர் இவர்.  

‘‘2013ல் தில்லி உயர்நீதிமன்றம் ஜங்க் ஃபுட் எனப்படும் துரித உணவு தொடர்பாக ஒரு தீர்ப்பை வழங்கியது. உடனடியாக அரசு இதற்குத் தீர்வு காணவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது. ஆணையமும் இந்த விஷயத்தில் குதித்தது. 2014ல் ஆணையத்தின் ஒரு கமிட்டி பாக்கெட் உணவின் முன்பக்கத்தில் விவரங்கள் இருக்க வேண்டும் என்று முதல் அடியை எடுத்து வைத்தது. இதன்படி 2018ல் ஆணையம் ஒரு வரைவுச் சட்டத்தை கொண்டுவந்தது. இந்தச் சட்டத்தின் பெயர் ‘லேபலிங் மற்றும் டிஸ்பிளே’. அதாவது பட்டியல் விவரமும், வரைபடமும் என்று இதை மொழிபெயர்க்கலாம்.

ஆனால், இதிலுள்ள பிரிவுகளைப் பார்த்த தொழிலதிபர்கள் கடுமையாக அதை எதிர்க்க ஆரம்பித்தனர். 2019ல் இன்னொரு வரைவுச் சட்டத்தையும் கொண்டுவந்தது ஆணையம். அதுவும் கிடப்பில் இருந்தது. கடைசியில் 9 வருட இழுபறிக்குப் பின்பு கடந்த பெப்ரவரி மாதம் ஆணையமானது ஐஐஎம் சிபாரிசு செய்திருக்கும் தோல்விகரமான ஒரு திட்டமான ஸ்டார் ரேட்டிங் திட்டத்தை நுகர்வோர் மேல் திணிக்க முயற்சிக்கிறது...’’ என்கிற ஜார்ஜ், ஸ்டார் ரேட்டிங் முறையின் குளறுபடிகளை விவரித்தார்.

‘‘ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில்தான் ஸ்டார் சிஸ்டம் முறை உள்ளது. அங்குகூட இந்த முறையால் தீங்குதான் என்று பல ஆய்வுகள் சொல்கின்றன. உதாரணமாக, அங்கிருக்கும் கோகோ கோலாவை நியூட்ரி பூஸ்ட், லிக்விட் பிரேக்ஃபாஸ்ட் என்று எல்லாம் விளம்பரம் செய்கிறார்கள். இங்கே கூட டயட் கோக் என்றுதான் விளம்பரம் செய்து விற்கிறார்கள். ஆஸ்திரேலிய கோக்கில் சுமார் 22.5 கிராம் சர்க்கரை உள்ளது. ஆனால், இந்த கோக்கில் சில வைட்டமின்கள், நார்ச்சத்துகளைச் சேர்த்துவிட்டால் ஊட்டச்சத்தின் அளவை அது பிரமாதமாகக் காண்பித்துவிடும்.

ஆகவே, நம் உடலுக்குத் தீங்கான உப்பு, சர்க்கரை, கொழுப்பை மறைக்க இதுமாதிரியான ஊட்டச்சத்துகளைச் சேர்த்துவிட்டால் போதும். இதனால்தான் எங்களைப் போன்றவர்கள் ஊட்டச்சத்து பட்டியலையோ அல்லது ஊட்டச்சத்து அடிப்படையாகக் கொண்ட ஸ்டார் முறை போன்ற ஆபத்தான முறைகளையே எதிர்க்கிறோம். ஆபத்தான உணவைக் கண்டு பிடிப்பதற்கான எச்சரிக்கைக் குறிகள்தான் (warning label) பெஸ்ட் என்கிறோம். அதுவும் பாக்கெட்டின் முன்பக்கத்தில் இருந்தால் இன்னும் சிறப்பு என்கிறோம்.

ஸ்டார் சிஸ்டம் எல்லாம் ஜடப் பொருட்களுக்கு பொருந்துமே தவிர உணவுகளுக்குப் பொருந்தாது...’’ என்று ஜார்ஜ் முடிக்க, சென்னை நுகர்வோர் ஆர்வலரான சோமசுந்தரம் தொடர்ந்தார்.

‘‘நம்ம ஆட்கள் ஒரு பாக்கெட் உணவை வெறும் 2 நொடியிலே தேர்வு செய்வதாக ஓர் ஆய்வு குறிப்பிடுகிறது. இந்த நேரத்தில் ஒருவர் ஓர் உணவின் ரேட் மற்றும் டேட்டை மட்டுமே பார்ப்பதற்கு சரியாக இருக்கும். அதனால்தான் பல உலகநாடுகள் ஓர் உணவில் உப்பு, சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவுகளை நிறங்களை வைத்து அடையாளப்படுத்துகிறது. இதன் மூலம் கேடான பொருட்களைத் தவிர்க்கச் செய்கிறார்கள்.

நம்ம ஊரில்கூட பால் பாக்கெட்டுகள் பச்சை, ஆரஞ்சு, நீல நிறத்தில் கொழுப்புக்காக மட்டும் இருப்பதுபோல, அங்கேயும் சிவப்பு, பச்சை, மஞ்சள்  என பல நிறங்களில் எச்சரிக்கை செய்கின்றன. ஊட்டச்சத்து மட்டுமே ஒரு உணவின் உண்மையான ஆரோக்கியத்தைப் பிரதிபலித்துவிடாது. உதாரணமாக,  உருளைக்கிழங்கு சிப்ஸில் அதிகப்படியான உப்பைப்  போட்டுவிட்டு, அதில் ஒரு பாதாம் பருப்பைச் சேர்த்து விட்டால் அது ஊட்டச்சத்து மிக்க உணவாக மாறிவிடும். ஆனால், இது நம் ஆரோக்கியத்துக்குக் கேடானது.

இதுபோல மைசூர்பாகு, சோன்பப்படி, அதிரசம் போன்றவைகளிலும் என்ன எண்ணெய் சேர்க்கிறார்கள், என்ன வெண்ணெய் சேர்க்கிறார்கள் என்று இடுபொருள் பட்டியல் அல்லது. ஊட்டச்சத்து பட்டியலைப் பார்த்துக் கண்டுபிடிப்பது குதிரைக் கொம்புதான்.

உதாரணமாக, ஒரு காலத்தில் வருடத்துக்கு ஒருமுறைதான் நாம் எல்லாம் பிரியாணி சாப்பிட்டோம். ஆனால், இன்று வாரத்தில் 3 நாளாவது பிரியாணி சாப்பிடும் பழக்கத்துக்கு வந்துவிட்டோம். பிரியாணி நாலு வீடு தாண்டியும் மணம் வீசுகிறது என்றால் பிரியாணியில் சைனா உப்பு எனப்படும் அஜினோமோட்டோ கலந்திருக்கிறது என்று அர்த்தம்.

அதேபோல அசைவம் மட்டுமல்லாமல் சைவத்திலும் வனஸ்பதி எனும் டால்டாவைச் சேர்க்கிறார்கள். வனஸ்பதி நம் உடலுக்குக் கேடானது என்று எத்தனையோ நிபுணர்கள் ஆதாரங்களுடன் அலறுகிறார்கள்.

இவற்றை எல்லாம் நீக்கவேண்டுமென்றால் ஸ்டார் சிஸ்டம் போன்ற போலியான முத்திரைகளுக்குப் பதிலாக உண்மையைப் போட்டுடைக்கும் எச்சரிக்கை வாசகம் அல்லது சிகரெட் பெட்டியில் உள்ளது போன்று மண்டையோட்டுப் படங்களே சரியான தீர்வாக இருக்கும்...’’ என்று சோமசுந்தரம் முடிக்க, உப்பு, சர்க்கரை, கொழுப்புக்கு எதிராக இன்னொரு வாதத்தையும் முன்வைக்கிறார் சென்னையின் சி.ஏ.ஜி என்ற நுகர்வோர் அமைப்பின் புரொெஜக்ட் மேனேஜரான சவீதா.

‘‘ஐ.ஐ.எம் சர்வேயிலேயே எச்சரிக்கை குறியீடுகள் பற்றி மக்கள் கருத்து சொல்லியிருந்தாலும் ஸ்டார் சிஸ்டம் முறையை ஏன் ஆணையம் கொண்டுவர முயற்சிக்கிறது என்று தெரியவில்லை.

சர்வேயில் ஸ்டார் சிஸ்டம் முதலிடம் பெற்றிருந்தாலும் அந்த சர்வே எப்படி எடுக்கப்பட்டது என்ற சந்தேகம் எங்களைப் போன்றவர்களிடம் இருக்கிறது. அகமதாபாத் ஐஐஎம்மி-ன் சர்வேக்கு எதிரான ரிசல்டுகளை அண்மையில் எய்ம்ஸ் எடுத்த சர்வேயும், நாங்கள் கர்நாடகாவில் எடுத்த சர்வேயும் காண்பிக்கிறது.

எய்ம்ஸ் சர்வேயில் நுகர்வோர் எச்சரிக்கைக் குறியீடுகள்தான் வேண்டும் என்று பெரும்பாலானவர்கள் கேட்டிருக்கிறார்கள். சர்க்கரை, உப்பு, கொழுப்பு ஆகிய இந்த மூன்று பொருட்களால்தான் தொற்றில்லாத நோய்களான சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தம், இருதய நோய்கள் வருவதாகச் சொல்கிறார்கள். இந்தியாவில் வருடத்துக்கு சுமார் 60 ஆயிரம் பேராவது இந்த தொற்றில்லாத நோய்களால் இறப்பதாக ஒரு அரசு புள்ளிவிவரம் சொல்கிறது. ஏழைகள், படிக்காதவர்களுக்கு மட்டுமல்ல... எல்லோருக்கும் இந்த அவசர யுகத்தில் தேவைப்படுவது ஓர் எச்சரிக்கைக் குறியீடுதான்...’’ என்று முடித்தார் சவீதா.

டி.ரஞ்சித்